சுவாமி மலை - 0207. ஒருவரையும் ஒருவர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஒருவரையும் ஒருவர் (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
மலமாயையால் மயங்குகின்ற அடியேனுடைய மயக்கம் தீர்த்து,  
உண்மைப் பொருளை உபதேசித்து ஆட்கொள்.


தனதனன தனதனன தான தந்தனம்
     தனதனன தனதனன தான தந்தனம்
     தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான


ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
     திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
     துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் ...... சனையாலே

ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
     கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
     தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் ......திடுவேனைக்

கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
     செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
     கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென்

கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
     தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
     கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய்

திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
     தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
     திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத

சிவயநம நமசிவய கார ணன்சுரந்
     தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
     திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் ...... புதல்வோனே

குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
     புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
     குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ......     திடுவோனே

குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
     பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
     குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து,
     இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்து நொந்து,
     உலையில் இடு மெழுகு அது என வாடி முன்செய் வஞ்- ......சனையாலே

ஒளிபெறவெ எழுபு மர பாவை துன்றிடும்
     கயிறு விதம் என மருவி ஆடி விண்பறிந்து
     ஒளிரு மினல் உரு அது, என ஓடி அங்கம் வெந் ......திடுவேனைக்

கருதி, ஒரு பரமபொருள் ஈது என்று, என்
     செவிஇணையின் அருளி உருவாகி வந்த, என்
     கருவினையொடு அருமலமும் நீறு கண்டு, தண் ...... தரு மாமென்

கருணைபொழி கமலமுகம் ஆறும் இந்துளம்
     தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண்
     கலகல என மயிலின்மிசை ஏறி வந்துஉகந்து ...... எனை ஆள்வாய்.

திரிபுரமும் மதன்உடலும் நீறு கண்டவன்,
     தருணமழ விடையன், டராஜன், ங்கணும்
     திகழ் அருணகிரி சொருபன் ஆதிஅந்தம் அங்கு ...... அறியாத

சிவயநம, நமசிவய காரணன், சுரந்து
     அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன்
     திருவுருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் .....புதல்வோனே!

குருகு கொடியுடன் மயிலில் ஏறி, மந்தரம்
     புவன கிரி சுழல, மறை ஆயிரங்களும்
     குமரகுரு என, வலிய சேடன் அஞ்ச வந் ......   திடுவோனே!

குறமகளின் இடைதுவள பாத செஞ்சிலம்பு
     ஒலிய, ஒரு சசிமகளொடே கலந்து திண்
     குருமலையின் மருவு குருநாத! உம்பர்தம் ...... பெருமாளே.


பதவுரை

      திரிபுரமும் மதன் உடலும் நீறு கண்டவன் --- திரிபுரத்தையும் மன்மதன் உடலையும், சாம்பலாகும்படிச் செய்தவரும்,

     தருண மழ விடையன் --- மிகவும் இளமைப் பருவத்தையுடைய இடபத்தை வாகனமாக உடையவரும்,

     நடராஜன் --- சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரிபவரும்,

     எங்கணும் திகழ் --- அங்கிங்கென்னாதபடி எங்கும் தன்னருட்ஜோதி வீசுமாறு,

     ஆதி அந்தம் அங்கு அறியாத --- முதலும் முடிவும் அவ்விடத்தில் (திருமாலும் திசைமுகனும்) காண முடியாதவாறு,

     அருணகிரி சொருபன் --- சிவந்த அனல் மலைவடிவாக நின்றவரும்,

     சிவய நம --- சூக்கும ஐந்தெழுத்தானவரும்,

     நமசிவாய --- தூல ஐந்தெழுத்தானவரும்,

     காரணன் --- காரண ஐந்தெழுத்தானவரும்,

     அமுதம் அதை சுரந்து அருளி --- திருவருளாகிய அமுதத்தைச் சுரந்து அருள் புரிந்து,

     எமை ஆளும் எந்தை தன் --- அடியேங்களை யாட்கொள்ளும் எமது பிதாவாகிய சிவபெருமானுடைய,

     திருவுருவின் மகிழ் --- திருமேனியில் ஒரு பாதியைக் கொண்டு மகிழ்கின்ற,

     எனது தாய் பயந்திடும் புதல்வோனே --- அடியேனுடைய அன்னையாராகிய உமாதேவியார் ஈன்றருளிய திருக்குமாரரே!

      குருகு கொடியுடன் மயிலில் ஏறி --- சேவல் கொடியுடன், மயில் வாகனத்தின் மீது ஆரோகணித்து,

     மந்தரம் புவன கிரி சுழல --- மந்தர கிரியும், புவனங்களும், ஏனைய மலைகளும், மயில் சிறகினால் உண்டாகும் காற்றின் வேகத்தால் சுழலவும்,

     மறை ஆயிரங்களும் குமரகுரு என --- ஆயிரம் வேதங்களும் குமரகுரு என்று துதித்து ஓலமிடவும்,

     வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே --- வலிபெற்ற ஆதிசேடன் அஞ்சி நடுங்கவும், பவனி வருகின்றவரே!

      குறமகளின் இடை துவள --- வள்ளிநாயகியாரது மெல்லிய இடை துவண்டு நெளியவும்,  

     பாத செம் சிலம்பு ஒலிய --- அவருடைய திருவடியில் அணிந்துள்ள சிறந்த பொற்சிலம்பு ஒலிக்கவும் (கலந்து),

     ஒரு சசிமகளொடே கலந்து --- ஒப்பற்ற இந்திராணியின் குமாரியாக வந்தருளிய தெய்வயானை அம்மையாரையும் கலந்து,

     திண் குருமலையின் மருவு குருநாத --- தெரிசித்தவர்களது பாவத்தை விலக்கும் விறலுடைய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள குருநாதரே!

      உம்பர் தம் பெருமாளே --- தேவர்களுக்கெல்லாம் பெருமையின் மிக்கவரே!

      ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து --- மாயையாகிய திரையால் மூடப்பட்டு முற்பிறப்பின் உணர்ச்சியின் மையால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள முடியாமல் அலைந்து திரிந்தும்,

     இருவினையின் இடர் கலியொடு ஆடி --- நல்வினை தீவினைகளின் பயனால் வரும் சுக துக்கத்தால் மயங்கி யுலாவி,

     நொந்து நொந்து --- அதனால் மிகவும் உடலும் உள்ளமும் வருந்தியும்,

     உலையில் இடு மெழுகது என வாடி --- உலைக்களத்திலிட்ட மெழுகைப் போல் உருகி வாட்டத்தை யடைந்தும்,

     முன் செய் வஞ்சனையாலே --- முற்பிறப்பிற் செய்த பாவ கன்மத்தாலே,

     மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி --- பொம்மலாட்டத்தில் மரப் பதுமையை நெருங்கிய கயிற்றைக் கொண்டு (சூத்திரதாரி ஆட்டுகின்ற) வகையாக உலக விஷயத்தில் கலந்து ஆடியும்,

     விண் பறிந்து ஒளிரும் மினல் உருவது என ஓடி --- ஆகாயத்தில் வெளிப்பட்டு ஒளி செய்யும் மின்னலைப்போல் ஒரு நொடியில் வாழ்நாள் கடந்து போக,

     அங்கம் வெந்திடுவேனை கருதி --- உடல் வெந்து அழியப் படுவேனாகிய அடியேனை தேவரீரது அடியார் குழாத்துள் ஒருவனாக எண்ணி,

     ஒரு பரம பொருள் ஈது என்று --- ஒப்பற்ற பெரிய பொருள் இதுவே என்று,

     என் செவி இணையில் அருளி --- அடியேனுடைய இரு செவிகளிலும் உபதேசித்து,

     உருவாகி வந்த --- வினைப்பயனால் உடலெடுத்து வந்த,

     என் கருவினையொடு --- அடியேனுடைய கொடிய வினையையும்,

     அரு மலமும் நீறு கண்டு --- அரிய மும்மலங்களையும் பொடி ஆகும்படிச் செய்து,

     தண் தரு மா மென் --- குளிர்ச்சியைத் தருவதும், பெருமை பொருந்தியதும், மேன்மையுடையதும்,

     கருணை பொழி கமல முகம் ஆறும் --- திருவருளைப் பொழிகின்ற தாமரை மலரை ஒத்ததுமாகிய தேவரீருடைய ஆறு திருமுகங்களும்,

     இந்துளம் தொடை --- கடப்ப மலர் மாலையும்,

     மகுட முடியும் --- இரத்தினமணி மகுடங்களும் தோன்றவும்,

     ஒளிர் சரண் நூபுரம் கலகல என --- ஒளி செய்கின்ற பாதத்திலணிந்துள்ள நூபுரங்கள், கலகல என்று ஒலிக்க,

     மயிலின் மிசை ஏறி வந்து --- மயில் வாகனத்தின் மீது எழுந்தருளி வந்து,

     உகந்து எனை ஆள்வாய் --- மகிழ்ச்சியுடன் அடியேனை ஆட்கொண்டருள்வீர்.


பொழிப்புரை


         திரிபுரத்தையும் மன்மதனுடைய உடலையும் சாம்பலாக எரித்தவரும், மிக்க இளம் பருவமுடைய இடபத்தின் மீது எழுந்தருளி வருபவரும், சிதாகாசப் பெருவெளியில் ஆனந்தத் தாண்டவம் புரிபவரும், யாண்டும் நீக்கமற நிறைந்து தன்னருட் ஜோதிப் பிழம்பு வீசுமாறு, மாலும் அயனும் மேலும் கீழும் தேடி அடியையும் முடியையும் அறியாமல் திகைக்கும் வண்ணம் சிவந்த நெருப்பு மலை வடிவாக நின்றவரும், தூலசூக்கும காரண பஞ்சாக்கரப் பொருளாக விளங்குபவரும், திருவளர் அமிர்தத்தைச் சுரந்து, அடியோர்களுக்கு அருளி ஆட்கொள்ளும் எமது பரமபிதாவாகிய சிவபெருமானுடைய திருமேனியில் ஒரு பாதியைப் பெற்று மகிழ்கின்ற, அடியேனுடைய தாயாராகிய பார்வதி தேவியார் பயந்தருளிய திருக்குமாரரே!

         சேவற் கொடியுடன் மரகத மயிலின் மீது ஆரோகணித்து, மந்தர மலையும் புவனங்களும் மற்றைய மலைகளும் மயிலினது சிறகின் காற்றின் வேகத்திற் காற்றாது சுழலவும், ஆயிரம் வேதங்களும் “குமரகுரு” என்று ஓலமிடவும், வலிமைமிக்க ஆதிசேடன் அச்சமுறவும் பவனி வருகின்றவரே!

         வள்ளியம்மையாருடைய மெல்லிய இடை துவளவும், அவருடைய தாமரைத் தாளில் அணிந்துள்ள சிறந்த பொற் சிலம்புகள் ஒலிக்கவும் அவரைக் கலந்து, இந்திராணிக்குத் திருமகள் எனத் திருஅவதரித்த, ஒப்பற்ற தேவகுஞ்சரி அம்மையாரையும் மருவி, வந்தவர் வினை தீர்க்க வல்லதாகிய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள ஞானகுரு மூர்த்தியே!

     தேவர்கட்கெல்லாம் பெருமையின் மிக்கவரே!

         அறியாமையாகிய திரையினால், முற்பிறப்பின் உணர்ச்சி இன்மையால், ஒருவரை வருவர் இன்னார் இனியாரென அறிந்து கொள்ள முடியாமல் திரிந்தும், நல்வினை தீவினை என்ற இருவினைகளின் பயனாகவும், இன்ப துன்பங்களினால் ஆடி மிகவும் வருந்தியும், உலையிலிட்ட மெழுகைப்போல் உருகி வாடியும், முற்பிறப்பில் செய்த வஞ்சனையால் பாவைக் கூத்தில் சூத்திரதாரி பல கயிறுகளைக் கொண்டு ஆட்டும் மரப்பாவை போல் (உள்ளே உயிருக்குயிரா யுள்ள இறைவனால் ஆட்டப் பெற்று) ஆடியும், ஆகாயத்தில் ஒரு கணத்தில் ஒளிசெய்து மறையும் மின்னலைப்போல் நிலையற்ற வாழ்நாள் கழிந்தவுடன் உடல் வெந்து அழியப்படுவேன் ஆகிய அடியேனை, தேவரீரது அடியார் குழாத்துள் ஒருவனாகக் கருதி, ஒப்பற்ற பெரிய பொருள் இதுவே என்று அடியேனுடைய இருசெவியிலும் உபதேசித்து, வினைப்பயனால் உடலோடு கூடி வந்துள்ள அடியேனுடைய கொடிய வினையும் அரிய மும்மலங்களும் பொடிபட்டு ஒழியவும், குளிர்ந்ததும் பெருமை பெற்றதும் மேன்மை உடையதும் ஆகிய தேவரீருடைய கருணை பொழிகின்ற ஆறு திருமுகங்களும், கடப்பமலர் மாலையும் இரத்தின மணி முடிகளும் தோன்றவும், ஒளிசெய்கின்ற திருவடிகளில் அணிந்துள்ள நூபுரங்கள் கலகல என்ற ஒலி செய்யவும், மாமயிலின் மீது எழுந்தருளி வந்து, உவப்புடன் அடியேனை ஆட்கொண்டு அருள்வீர்.

விரிவுரை

 
ஒருவரையும் ஒருவர் அறியாமல் ---

மாயையானது அறிவை மறைப்பதால் முற்பிறப்பின் உணர்ச்சி கெடுகின்றது. அதனால் முன் பகைவராயினோர் இப்பிறப்பில் உடன் பிறந்தாராதலும், நண்பர் அயலாராக ஆதலும், மனைவி தாயாதலும், தாய் மனைவியாதலுமாக மாறி மாறி வந்தும், அதனை உணர முடியாமல் ஜீவர்கள் உழன்று வருந்துகின்றனர்.

மர பாவை......................ஆடி ---

பழைய காலத்தில் பொம்மலாட்டம் (பாவைக் கூத்து) என்ற ஒரு கூத்துண்டு. அதில் பொம்மை ஆடும். அதனை பல கயிறுகளால் ஆட்டுபவனுக்கு சூத்திரதாரி என்று பெயர். பாடுபவன் வேறு. காண்கின்றவர்க்கு பொம்மை பாடி ஆடுவதாகவே தோன்றும். அது மரப்பாவை. இவ்வுடம்பு மாமிசப் பாவை. இதனை உள்ளிருந்து ஆட்டுகின்றவன் குகக் கடவுள்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே    --- அப்பர்.

பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
    பணிகின்றேன், பதியே! நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
    குழைகின்றேன், குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
     உறங்குகின்றேன், உறங்காது என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ! இச்
     சிறியேனால் ஆவது என்னே.            --- திருவருட்பா.
 

இடைபிங்கலை கழுமுனை முதலிய எழுபத்தீராயிரம் நாடிகளென்கிற கயிறுகளைக் கொண்டு இவ்வுடம்பை இயக்குகின்றனன்.

வளிகயிறின் உடனு ஆடி”   --- (பனியின் விந்துளி) திருப்புகழ்

கரு வினை ---

கருவுற்றுப் பிறத்தற்கு ஏதுவாகிய வினை என்றும் பொருள்படும்.

அருமலம் ---

நீக்குதற்கு அரியமலம். அவை: ஆணவம், மாயை கன்மம் என்பன.

தண்தரு மாமென் ---

முருகவேளுடைய திருமுகங்கள் குளிர்ந்திருக்கின்றன. பிறவி வெப்பத்தை நீக்கித் தண்மையை யருள்கின்றன.

கருணை பொழி ---

எம்பிரானுடைய முகங்கள் உயிர்களின் துன்பமகல கருணை மழை பொழிகின்றன.

முகம்பொழி கருணை போற்றி”        --- கந்தபுராணம்

உனதுமுக கருணைமலர் ஓர் ஆறும்”      --- (உறவின் முறை) திருப்புகழ்.

திரிபுரம் ---

மும்மல காரியம்.

அப்பு அணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாரே.            --- திருமூலர்.

தருண மழ விடையன் ---

தருமமே இடப வடிவாகி சிவபெருமானை வாகனமாகத் தாங்குகின்றது. தருமம் ஒருபோதும் முதுமையை அடையாது. என்றும் நிலைத்து இளமையாகவே இருக்கும் என்பதனைத் தெரிவிக்கவே, “தருண மழவிடை”யன் என்றனர்.

திகழ் அருணகிரி சொரூபன் ---

திருவண்ணாமலைச் சரித்திரத்தைக் குறிக்கின்றது.

சிவயநம:- சூட்சும பஞ்சாக்ஷரம்.
நமசிவய:- தூல பஞ்சாக்ஷரம்.

காரணன் ---

காரண பஞ்சாக்ஷரம். இதனைக் குருநாதர் மூலம் முறைப்படி கேட்டுணர்க.

குருகு கொடி ---

சேவற்கொடி, இது பெருமானுடைய வருகையைத் திசையெலாம் செவிபடும்படி ஒலித்துத் தெரிவிப்பது (காரில் வருபவன் “ஹாரன்‘ மூலம் வருகையைத் தெரிவிப்பது போலென்றறிக.)

சென்றே இடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்”           --- (அன்பாக வந்து) திருப்புகழ்

மறை ஆயிரம் ---

முற்காலத்தில் ஆயிர வேதங்கள் இருந்தன. துவாபரயுக முடிவில் அவைகள் கலிக்குத் தக்கவாறு கிருஷ்ண த்வைபாயனரால் நான்காகத் தொகுக்கப்பட்டன.

நீயயன்-முதற்குல மிதற் கொருவனின்றாய்
   ஆயிர மறைப்பொரு ளுணர்ந்தறி வமைந்தாய்”

என்ற கம்பராமாயணப் பாடலாலும் இதனைத் தேர்ந்து தெளிக.

குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நீர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் என்கொல் புகாததே”

என்ற திருநாவுக்கரசு சுவாமிகளது திருவாக்கும் இதனை வலியுறுத்துமாறு காண்க.

கருத்துரை

சிவகாம சுந்தரியின் திருக்குமாரரே! வேதம் புகழ, சேவற்கொடியுடன் மயிற்பரி ஊர்ந்து பவனி செய்பவரே! வள்ளி தேவசேனா சமேதரே! சுவாமிமலைக்கு அரசே! வஞ்ச மாயையால் மயங்கி அலையும் அடியேனுக்கு உண்மைப் பொருளை உபதேசித்து, மல மாசு அகல எழுந்தருளி வந்து ஆட்கொண்டருள்வீர்.

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...