அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடாவினிடை
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
எந்நாளும்
உன்னை ஓதி உய்ய அருள்.
தனாதனன
தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் ...... தனதான
கடாவினிடை
வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் ...... சமனாருங்
கடாவிவிடு
தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும்
இடாதுபல
தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் ...... படிபாராய்
விடாதுநட
நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே
விகாரமுறு
சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் ...... கெறிவோனே
தொடாதுநெடு
தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம் ...... புலனோடுஞ்
சுபானமுறு
ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடாவின்இடை
வீரம் கெடாமல் இனிது ஏறும்
கடாவின் நிகர் ஆகும் ...... சமனாரும்,
கடாவி
விடு தூதன் கெடாத வழி போலும்,
கனாவில் விளையாடும் ...... கதைபோலும்,
இடாது
பல தேடும் கிராதர் பொருள் போல், இங்கு
இராமல், உயிர் கோலிங்கு ...... இதம் ஆகும்
இது
ஆம் என் இரு போதும் சதா இன்மொழியால்,இன்று
யானும் உனை ஓதும்- ...... படி பாராய்.
விடாது
நடம் நாளும் பிடாரியுடன் ஆடும்
வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே!
விகாரம்உறு
சூரன் பகாரம் உயிர் வாழ்வும்
விநாசம்உற வேல்அங்கு ...... எறிவோனே!
தொடாது
நெடு தூரம் தடாது மிக ஓடும்
சுவாசம் அது தான் ஐம் ...... புலனோடும்
சுபானம்
உறு ஞானம் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பதவுரை
விடாது நடம் நாளும் பிடாரி உடன் ஆடும் ---
எந்நாளும் விட்டுக்கொடுக்காதபடி நடனத்தை காளிதேவியுடன் ஆடுகின்ற,
வியாகரண ஈசன் பெரு வாழ்வே --- நாடக
இலக்கணத்தை அறிந்த சிவபெருமானுடைய சிறந்த புதல்வரே!
விகாரம் உறு சூரன் --- மாறுபட்ட
குணமுடைய சூரபன்மனுடைய
பகாரம் உயிர் வாழ்வும் விநாசம் உற --- அலங்கார
வாழ்வு அழியுமாறு,
வேல் அங்கு எறிவோனே --- அவ்விடத்தில் வேலை
விடுத்தவரே!
தொடாது நெடுதூரம் தடாது மிக ஓடும் --- தொட
முடியாமல் நெடுந்தூரம் ஓடுகின்ற
சுவாசம் அது தான் ஐம்புலனோடும் --- வாயுவையும், ஐம்புலன்களையும்,
சுபானம் உறு ஞானத் தபோதனர்கள் சேரும் --- நல்லபடி உள்ளே அடங்குகின்ற ஞானத் தவசீலர்கள்
சேருகின்ற
சுவாமிலை வாழும் பெருமாளே --- சுவாமிமலையில்
எழுந்தருளி இருக்கின்ற பெருமையிற் சிறந்தவரே!
கடாவின் இடை --- எருமைக் கடாவின் மீது,
வீரம் கெடாமல் இனிது ஏறும் --- தனது வீரமானது
குன்றாமல் இனிதாக ஏறுகின்றவனும்,
கடாவின் நிகர் ஆகும் சமனாரும் கடாவைப்போன்ற
முரட்டுத்தனம் உடையவனுமாகிய இயமன்
கடாவி விடு தூதன் --- தூண்டி விடுத்த தூதன்,
கெடாத வழி போலும் --- தவறாத வழியில்
வருவதுபோல் வந்து,
கனாவில் விளையாடும் கதை போலும் --- கனவில்
விளையாடுகின்ற கதைபோலவும்,
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் ---
அறஞ்செய்யாது பலப்பல தேடிச் சேகரிக்கும் கொடியார் பொருள் போலவும்,
இங்கு இராமல் உயிர் கோலிங்கு --- இங்கு
நிலைத்து இராவண்ணம் உயிரைக் கவர்ந்து போகின்ற,
இதம் ஆகும் இது ஆம் என --- சுகந்தான் இந்த
வாழ்க்கை என்று உணர்ந்து,
இருபோதும் சதா இன்மொழியால் --- காலையும்
மாலையும், மற்று எப்போதும் இனியமொழிகளால்,
இன்று யானும் உனை ஓதும்படி பாராய் --- இன்று
அடியேனும் தேவரீரை ஓதும்படி திருக்கண்ணால் பார்த்தருள்வீர்.
பொழிப்புரை
விட்டுக் கொடுக்காது எந்நாளும்
காளிதேவியுடன் நடனம் ஆடுகின்ற, நாடக இலக்கணத்தை
யுணர்ந்த சிவபிரானுடைய பெரிய வாழ்வே!
மாறுபட்ட சூரபன்மனுடைய அலங்காரம்
நிறைந்த உயிர்வாழ்க்கை அழியுமாறு வேலை விடுவித்தவரே!
தொட முடியாமல் நீண்டதூரம் தடைபடாது
ஓடுகின்ற பிரணவாயுவையும் ஐம்புலன்களையும் யோகநெறியால் உள்ளுக்குள் ஒடுக்குகின்ற
ஞானத் தவசீலர்கள் உறைகின்ற சுவாமிமலையில் வாழும் பெருமிதம் உடையவரே!
வீரம் குன்றாமல் எருமைக் கடாவின் மீது
ஏறுகின்ற அக் கடாவைப் போன்ற முரட்டுக் குணமுடைய இயமன் கட்டளை இட்டு அனுப்பிய
தூதர்கள் தவறாத வழியில் வருவதுபோல் வந்து, கனாவில் விளையாடிய கதை போலவும், அறம் புரியாது பலப் பலவாகத் தேடிய
கொடியாருடைய செல்வம் போலவும், இங்கு நிலைத்திராத
வண்ணம் உயிரைக் கொண்டு போகும் சுகந்தான் இந்த வாழ்க்கை என்பதை உணர்ந்து, காலையும் மாலையும் மற்றெப்போதும்
இனியமொழியால் அடியேனும் தேவரீரை ஓதும்படி திருக்கண்ணால் பார்த்து அருள்புரிவீராக.
விரிவுரை
கடாவினிடை
வீரம் கெடாமல்
---
இயமனுடைய
வாகனம் எருமைக்கடா. அது மிகவும் கடுங் கொடுந் தீரமுடையது. அது கால்களைப்பெயர்த்து
வைக்கும் போது இடி இடிப்பது போன்ற பேரொலியுண்டாகும். அதன் உடம்பு உகாந்த காலத்து
இருளின் குழம்பால் அமைத்தது போலவும்இருக்கும். அதன் கண்களில் நெருப்பு மழை சிந்திய
வண்ணம் இருக்கும். காற்றினும் வேகமுடையது.
“தமர குரங்களும்
காரிருட் பிழம்பு
மெழுகிய அங்கமும் பார்வையிற் கொளுந்து
தழலுமிழ் கண்களுங் காளமொத்த கொம்பும்
உளகதக்
கடமாமேல்” --- திருப்புகழ்
இத்தகைய
எருமைக் கடாவின் மீது வீரங் கெடாமல் ஆரோகணித்து வருபவன் இயமன்.
சமனார் ---
எல்லா
உயிர்களிடத்திலும் சமமாக நடப்பவன்,
ஆதலின்
சமன் எனப் பேர் பெற்றான்.
ஏழை
தனவந்தன், கற்றவன், கல்லாதவன், அரசன், ஆண்டி, இளையவன், முதியவன் என்று பார்க்காமல் ஒன்று போல்
பார்த்து உயிரை உடம்பிலிருந்து பிரிப்பவன் எமன்.
எப்போதுஆயினும்
கூற்றுவன் வருவான்,
அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும்
போகான், பொருள் தரப் போகான்,
சாற்றவும்
போகான், தமரொடும் போகான்,
நல்லார்
என்னான், நல்குரவு அறியான்,
தீயார்
என்னான், செல்வர் என்று உன்னான்,
தரியான்
ஒருகணம் தறுகணாளன்,
உயிர்
கொடு போவான், உடல் கொடு போகான்,
ஏதுக்கு
அழுவீர், ஏழைமாந்தர்காள்!. --- கபிலர்
அகவல்.
கடாவி
விடு தூதர்
---
அளவற்ற
புண்ணியமும், அத்துடன் சிறிது
பாவமும் உள்ள உத்தம ஆன்மாக்களைப் பற்ற இயமனே வருவான். மற்றவர்களைப் பற்ற
இயமதூதர்கள் வருவார்கள்.
மார்க்கண்டேயர், சத்தியவான் இவர்களைப் பற்ற இயமனே
வந்தான்.
இன்றும்
பெரிய மனிதர்களைப் பற்ற காவல் தலைவரே வருவார்.
இயமன்
- அடக்குபவன். எல்லா உயிர்களையும் அடக்குபவன். அவனுடைய ஆணையின்படி
எண்ணில்லாததூதர்கள் உலகில் உள்ள உயிர்களை அவ்வுயிர்களின் விதிப்படி வந்து பற்றி
இழுத்துக் கொண்டுசெல்வார்கள்.
“காலனார் வெங்கொடுந்
தூதர் பாசங்கொடென்
காலினார் தந்துடன் கொடு போக” --- திருப்புகழ்
கெடாத
வழிபோலும்:-
தவறுதலின்றி
நேர்வழியில் வருவதுபோல கால தூதர் வந்து பற்றுவர்.
இந்த
உலக வாழ்க்கையின் இன்பம் நிலையில்லாதது என்று அருணகிரிநாதர் இங்கேகுறிப்பிடுகின்றார்.
இதற்கு இரண்டு உவமைகள் கூறுகின்றார்.
கனாவில்
விளையாடும் கதைபோலும் ---
கனா
நிகழ்ச்சி. கனவில் கண்ட அத்தனையும் விழித்தவுடன் மறைவதுபோல் இவ்வாழ்வு
மறையத்தக்கது.
இடாது
பலதேடும் கிராதர் பொருள் போலும் ---
ஏழைகட்கு
இடாமல் நிலம், புலம், வீடு, மாடு, வண்டி, வாகனம், பொன், மணியென்று பலப்பலதேடிவைப்பர். அப்படித்
தேடி வைத்த கொடியவருடைய பொருள்கள் விரைவில் பல வழியிலும் சென்று மறைந்து போகும்.
வேடிச்சி
கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால்
பாடிக்
கசிந்து, உள்ள போதே கொடாதவர், பாதகத்தால்
தேடிப்
பதைத்து, திருட்டில் கொடுத்து, திகைத்து இளைத்து
வாடிக்
கிலேசித்து, வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. --- கந்தரலங்காரம்
எனவே
கனாவைப் போலவும், அறஞ் செய்யார்
பொருளைப் போலவும் அழியும் இயல்புடையது வாழ்வு. இவ்வாழ்வினைச் சதமென நினைத்தல்
அறிவின்மையாகும்.
சதா
இன்மொழியால் இங்கு யானும் உனை ஓதும்படி பாராய்:-
சதா
இன் மொழியால் இங்கு எனப் பதப்பிரிவு செய்க.
எந்நாளும்
முருகனை இனிய சொற்களைத் தொடுத்துப் பாடி ஓதுதல்வேண்டும். காதல்
மீதூர்ந்துஉள்ளங்கசிந்து, கண்ணீர் பெருகி இறைவனைத்
துதிப்பதற்கு ஓதுவது என்று பேர்.
“காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது” --- தேவாரம்
“பாதபங்கயம் உற்றிட
உட்கொண்டு ஓதுகின்ற திருப்புகழ்”
--- (கோலகுங்கும)
திருப்புகழ்
விடாது
நடநாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன்:-
சிவபெருமான்
காளியுடன் நடனம் புரிந்ததை இங்கே கூறுகின்றார். காளி ஒரு காலத்தில் உலகைநடுக்கிய
போது திரு ஆலங்காட்டில் இறைவர் அவளுடன் சண்ட தாண்டவம் ஆடி அவளை அடக்கியருளினார்.
அம்பிகையின்
சகஸ்ரநாமங்களில் பட்டாரிகா என்று ஒரு நாமம் வரும். இது படாரிகா என மருவிபிடாரி என
மருவியது. தமிழ் சாசனங்களில் படாரி மான்யம் என இருக்கிறது.
விகாரம்உறு
சூரன் பகாரம்உயிர் வாழ்வு விநாசமுற ---
பகாரம்-பகரம்
என்ற சொல் சந்தத்தை நோக்கி பகாரம் எனவந்தது. பகரம்-அலங்காரமாக.விகாரம்-வேறுபாடு.
அறநெறிக்கு வேறுபட்ட சூரபன்மன் அலங்காரமாக ஆடம்பரமாக வாழ்ந்தான். அவன்வாழ்க்கைக்கு
வேல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
தொடாது
நெடுதூரந் தடாது...........ஞானத் தபோதனர்கள் ---
பிராணவாயு
தொட முடியாதது; தடுக்க முடியாதது.
தொடாது தடாது என்ற சொற்களால் இதனை நினைவுபடுத்துகின்றார்.
நீளமாக
ஓடுகின்ற அவ் வாயுவை யோகநெறியால் ஞானிகள் அடக்குவர். அத்துடன் சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களையும்
அடக்குவர்.
“சுவைஒளி ஊறு ஓசை
நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு”.
“உரன்என்னும்
தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்புக்கு ஓர் வித்து” --- திருக்குறள்
கருத்துரை
சுவாமிமலை
முருகா! சதா உனை ஓத அருள்செய்
No comments:
Post a Comment