அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடிமா மலர்க்குள்
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
உடலை விட்டு
உயிர் பிரியும் முன்,
அடியேன் பாடலுக்கு
இரங்கி என் முன் வந்து அருளவேண்டும்.
தனனா
தனத்த தந்த தனனா தனத்த தந்த
தனனா தனத்த தந்த ...... தனதான
கடிமா
மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா
வடிவார்
குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து ...... பணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே
அடியேனு
ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து ...... வரவேணும்
செடிநேரு
டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ
திறமாத
வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடிமா
மலர்க்குள் இன்பம் உளவேரி கக்கு நண்பு
தருமா கடப்பு அமைந்த ...... தொடைமாலை,
கன
மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த
கருணாகர! ப்ரசண்ட ...... கதிர்வேலா!
வடிவார்
குறத்தி தன்பொன் அடிமீது நித்தமும் தண்
முடியானது உற்று உகந்து ...... பணிவோனே!
வளவாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து,
மலர்வாய் இலக்கணங்கள் ...... இயல்பு ஓதி,
அடிமோனை சொற்கு இணங்க, "உலகாம் உவப்ப"
என்று,உன்
அருளால் அளிக்கு கந்த! ...... பெரியோனே!
அடியேன்
உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் தண்
அருளே தழைத்து உகந்து ...... வரவேணும்.
செடிநேர்
உடல் குடம்பை தனில் மேவி உற்று, இடிந்த
படிதான் அலக்கண் இங்கண் ...... உறலாமோ?
திறமாதவர்க்
கனிந்து உன் இருபாத பத்மம் உய்ந்த
திருவேரகத்து அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
கடி மா மலர்க்குள் இன்பம் உள --- வாசனை
தங்கியதும், பெருமை பொருந்தியதும், புட்பங்களுக்குள் இன்பத்தைத் தருவதும்,
வேரி கக்கு --- தேன் துளிப்பதும்,
நண்பு தரு --- அருச்சிப்பதனால் உம்முடைய நட்பைத்தர
வல்லதும் ஆகிய,
மா கடப்பு அமைந்த தொடை மாலை --- பெரிய கடப்ப
மலர்களாகக் கொண்டு புனைந்த, தொடுக்கப்பெற்ற
திருமாலைகளை,
கனமேரு ஒத்திடும் --- பொன் மேருமலையை யொத்து
விளங்கும்
மா பன்னிரு புயத்து அணிந்த --- பெருமை தங்கிய
பன்னிரண்டு தோள்களிலும் அணிந்து கொண்டுள்ள
கருணை ஆகர --- கருணைக்கு உறைவிடமானவரே!
ப்ரசண்ட கதிர் வேலா --- மிகுந்த
வேகமுடையதும்,ஞான ஒளியை
வீசுவதுமாகிய வேற்படையை உடையவரே!
வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடிமீது ---
சிறந்த அழகு நிரம்பிய வள்ளியம்மையாருடைய பொற்பிரகாசம் பொருந்திய திருவடிக்
கமலங்களின் மீது,
நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே
--- நாள்தோறும் குளிர்ந்த மணிமகுடமானது பொருந்த மகிழ்ச்சியுடன் பணிபவரே!
வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து
--- வளம் பெற்றதும், சொல்லழகு நிரம்பிய
நூல்களை இயற்றுவதில் வல்லமையும் உடைய நக்கீரதேவருக்கு மகிழ்ச்சியுற்று,
இலக்கணங்கள் இயல்பு மலர்வாய் ஓதி --- தமிழ் இலக்கணங்களின்
இயல்புகளை மலர் போன்ற திருவாக்கால் ஓதுவித்து,
அடி மோனை சொற்கு இணங்க --- அடி, மோனை, சொல் என்னும் யாப்புக்கு இணங்குமாறு,
"உலகாம் உவப்ப" என்று உன் அருளால்
அளிக்கு கந்த --- "உலகம் உவப்ப" என்று தேவரீர் திருவருளால்
அடியெடுத்துத் தந்த கந்தப் பெருமானே!
பெரியோனே --- பெரியவரே!
திற மாதவர் கனிந்து --- பொறிபுலனடக்குந்
திறமையுடைய பெருந்தவ முனிவர்கள் மனங்கனிந்து உருகி அன்பு செய்து
உன் இருபாத பத்மம் உய்ந்த --- உமது இரண்டு
திருவடிக்கமலங்களால் உய்வு பெற்ற,
திரு ஏரகத்து அமர்ந்த பெருமாளே ---
சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
செடிநேர் குடம்பை உடல் தனின் மேவி உற்று
--- பாவத்திற்கு உறைவிடமாகிய பறவை முட்டைக்கு நிகராகிய உடம்பில் விரும்பி பொருந்தி
உறைந்திருந்து,
இடிந்த படி தான் இங்கண் அலக்கண் உறலாமோ ---
அம்முட்டை திடீரென்று உடைந்த படி, இவ்விடத்தில்
மரணமாகிய துன்பத்தை அடியேன் அடையலாமோ? (அங்ஙன
மடையாவண்ணம்)
அடியேன் உரைத்த புன் சொல் அது மீதும் நித்தமும்
--- அடியேன் பாடிய அற்புதமான சொற்களாகிய பாடலின் மீதும் நாள்தோறும்,
தண் அருளே தழைத்து உகந்து வரவேணும் ---
குளிர்ந்த திருவருள் மணங்கமழச் செய்து மகிழ்ச்சியுடன் வந்தருள் புரிவீர்.
பொழிப்புரை
வாசனை தங்கியதும் பெருமை பொருந்தியதும்
மலர்களுக்குள் இன்பத்தைத் தருவதும் தேன் துளிப்பதும் அணிவிப்பதனால் தேவரீரது
நட்பைத் தரவல்லதுமாகிய பெரிய கடப்ப மலர்களைத் தொடுத்துச் செய்த திருமாலையை, பொன்மேருமலை போன்ற பன்னிரு
புயாசலங்களிலும் தரித்துக் கொண்டுள்ள கருணைக்கு உறைவிடமானவரே!
மிக்க வேகத்தை உடையதும் ஞானப்ரகாசத்தை
வீசுவதும் ஆகிய வேலாயுதத்தை உடையவரே!
அழகு நிரம்பிய வள்ளியம்மையாருடைய
பொன்னடிக் கமலங் களின் மீது, குளிர்ந்த
மணிமகுடமானது பொருந்த மகிழ்ச்சியுடன் நாளும் பணிபவரே!
செம்பாகமான சொல்லமைப்பு மிக்க நூல்களைப்
பாடும் திறமுடைய நக்கீரதேவருக்கு,
தமிழிலக்கணங்களின்
இயல்புகளை செங் கனிவாய் மலர்ந்து ஓதுவித்து, அடி மோனை சொல் என்ற யாப்புக்கு இணங்க
“உலகம் உவப்ப” என்று அடியெடுத்துத் தந்து, திருமுருகாற்றுப் படையெனும் சீரிய
நூலைப் பாடச் செய்த கந்தப் பெருமானே!
பெரியவரே!
இந்திரியங்களை வெல்லவல்ல மாதவர்கள்
மனங்கசிந்து உருகி வழிபட்டு உமது இரு கமலப் பாதங்களில் உய்வுபெற்ற சுவாமிமலை
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
பாவத்திற்கு உறைவிடமாகிய பறவை முட்டையை
யொத்த உடம்பில், பொருந்தி இருந்து
முடிவில் அப்பறவை முட்டையுடைந்தாற்போல், உடலைவிட்டு
உயிர் நீங்குவதாலாகிய துன்பத்தை இங்கு அடியேன் அடையலாமோ? அங்ஙனம் அடையாவண்ணம் அடியேன் பாடிய
புன்சொற்களையுடைய பாடலின் மீதும் தேவரீருடைய தண்ணருள் மனங்கமழச் செய்து
மகிழ்ச்சியுடன் நாளும் வந்து அருள்புரிவீர்.
விரிவுரை
கடி
மாமலர்க்குள்
---
மலர்களுக்குள்
மிகவும் சிறந்தது கடப்ப மலரே என்பதும் அம்மலர் கொண்டு அர்ச்சிக்கில் அப்
பரமபதியின் நட்பு உண்டாகும் என்பதும் இதனால் தெரிய வருகிறது.
வடிவார்........பணிவோனே ---
வள்ளி
நாயகியை முருகவேள் தொழுதார் என்பது ஆண்டவன் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் எளிமையைத்
தெரிவிக்கின்றது.
உலகாம்
உவப்ப
---
“உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க
உகந்த”
என்று
பிரித்துப் பொருள் கொள்வாரும் உளர்.
இந்த அடி நக்கீரருடைய வரலாற்றைத்
தெரிவிக்கின்றது. கீரம்-சொல், நக்கீரர்-நல்ல இனிய
சொற்களை உடையவர். இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர்.
அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.
சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி
ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண் பூதம் இருந்தது. அதன் பேர்
கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு
போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்துவைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர்
குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.
நக்கீரர் ஒரு சமயம் தல யாத்திரை
மேற்கொண்டு சென்றார். ஒரு குளக் கரையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பூதம்
அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி
நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும்
மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர்
பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை
எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற
எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம்
குளித்து விட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.
அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர்
அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தனை; நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை
இப்போது உண்ணமாட்டாதே; பால் பழம் முதலிய
உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை
விழுங்குமே? என் செய்வோம்” என்று
கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக்
கண்டு இரங்கினார். “நீவிர் அஞ்சற்க. முன் இலக்கத்தொன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம்
என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால் அவன்
வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப்
பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக்
காத்தருள்வாய்” என்று வேண்டினார் .
'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை
என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய
அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை
விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி
என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையுங்
காத்தருளியது.
“அருவரை திறந்துவன்
சங்க்ராம கற்கிமுகி
அபயமிட அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி” --- பூதவேதாள
வகுப்பு
பழுத்தமுது
தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை
இடித்துவழி
காணும் --- வேல்வகுப்பு.
ஓராயிரம்
பேரை வருடத்தில் ஒருநாளில்
உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று
குறை யாகிவிடும் அன்று நக்கீரர்வர
ஓடிப் பிடித்து அவரையும்
காராய
குன்றத்து அடைத்துஉரிய நியதிக்
கடன் துறை முடிக்க அகலக்
கருதி
"முருகாறு" அவர் உரைத்தருள நீலக்
கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான
குன்றந் திறந்து,இவுளி முகியைப்
பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல்
கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
பிரான் முகலி நதியின் மேவச்
சீராய
திருவருள் புரிந்த கரன் ஊராளி
சிறுதேர் உருட்டி அருளே
செய
செய என அமரர் தொழ, அசுரர் மிடி சிதறு முனி
சிறுதேர் உருட்டி அருளே. --- திருவிரிஞ்சை முருகன்
பிள்ளைத் தமிழ்.
செடிநேர்
உடல் குடம்பை
---
குடம்பை
என்பதற்குப் பரிமேலழகர் உரை செய்திருக்கும் திறனை நோக்குக.
குடம்பை
தனித்து ஒழியப் புள்பறந்து அற்றே
உடம்போடு
உயிரிடை நட்பு. --- திருக்குறள்.
முன்
தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளு, பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து
உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. (பரிமேலழகர்)
உடம்பும்
உயிரும் ஒன்றாகவே உண்டாகிப் பிறந்து, வளர்ந்து
இருந்து, உண்டு உவந்து பின்
உடம்பைவிட்டு உயிர்மட்டும் நீங்கி விடுகின்றது. முட்டையும் அதனுள் பறவையும்
ஒன்றாகவே பிறந்து, பறவை வளர்ந்தபின்
முட்டையை உடைத்துக்கொண்டு பறந்துபோய் விடுகின்றது. உயிர் பறவையையும் உடம்பு
முட்டையையும் ஒப்பாகுமாறு உணர்க. முட்டையில் பிறக்கும் உயிர்கள் பாம்பு எறும்பு
முதலிய பிற உயிர்களும் உளவேனும்,
பறக்கும்
இயல்பு பறவைக்கே உளவாதலின், பறவையை உவமித்தனர்.
உடைத்துக் கொண்டேகிய பறவை அம்முட்டையில் பின் புகாதவாறுபோல் உடம்பினின்றும் ஏகிய
உயிர் மீண்டும் இவ்வுடம்பை யடையாதென்றறிக. நட்பு என்றது நட்பின்றிப் போதலை உணர்த்துகின்றது.
“குடம்பை
தனின் மேவியுற்று இடிந்த படிதான் அலக்கண் இங்ஙன் உறலாமோ” என்ற நம் சுவாமிகளது
திருவாக்கின் அமைப்பையும் அழகையும் ஆழத்தையும் அருமையையும் அன்பர்கள் உற்று நோக்கி
உள்ளம் மகிழ்க. மேற்போந்த திருக்குறளோடு ஒப்புநோக்கி உவப்புறுக.
கருத்துரை
கடப்ப
மாலையை அணிபவரே! கதிர்வேலவரே! குறமகள் கொழுநரே! நக்கீரரை ஆண்ட நல்லிசைப் புலவரே!
சுவாமிமலைத் தலைவரே! உடலை விட்டு நீங்கித் துன்புறா முன், அடியேனுடைய பாடலுக்கு இரங்கி வரவேணும்.
No comments:
Post a Comment