சுவாமிமலை - 0210. கதிரவன் எழுந்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கதிரவன் எழுந்து (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
உலோபிகளிடம் சென்று பாடி அழிவுறாமல் காத்தருள்


தனதனன தந்த தான தனதனன தந்த தான
     தனதனன தந்த தான ...... தனதான


கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
     கடலளவு கண்டு மாய ...... மருளாலே

கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
     கவினறந டந்து தேயும் ...... வகையேபோய்

இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
     மிடமிடமி தென்று நோர்வு ...... படையாதே

இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச
     லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ

மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
     மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே

வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
     மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே

அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
     அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே

அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை
     அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு, மோது
     கடல் அளவு கண்டு, மாய ...... மருளாலே,

கணபண புயங்க ராஜன் முடிஅளவு கண்டு, தாள்கள்
     கவின் அற நடந்து தேயும் ...... வகையேபோய்,

இதம் இதம் இமு என்று நாளும் அருகுஅருகு  இருந்து கூடும்
     இடம் இடம் இது என்று நோர்வு ...... படையாதே,

இசையொடு புகழந்த போது, நழுவிய ப்ரசண்டர் வாசல்,
     இரவுபகல் சென்று வாடி ...... உழல்வேனோ?

மதுகரம் மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூகம்
     மலர் வளம் நிறைந்த பாளை ...... மலர்ஊடே

வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட,
     மதி நிழல் இடும் சுவாமி ...... மலைவாழ்வே!

அதிரவரு சண்ட வாயு என வரு கருங் கலாப
     அணிமயில் விரும்பி ஏறும் ...... இளையோனே!

அடைவொடு உலகங்கள் யாவும் உதவி, நிலை கண்ட பாவை
     அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.


பதவுரை


      மதுகரம் மிடைந்து --- வண்டுகள் நிறைந்து கூடி,

     வேரி தரு நறவம் உண்டு --- வாசனையுள்ள தேனை உண்டு,

     பூக மலர் வளம் நிறைந்த பாளை மலர் ஊடே --- கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே,

     வகை வகை எழுந்த - வகை வகையான நாதத்துடன் எழுந்த,

     சாம அதி மறை வியந்து பாட --- சாமம் என்ற சிறந்த வேதமோ என்று வியக்குமாறு ஒலிக்க,

     மதி நிழல் இடும் --- சந்திரனைப் போன்ற குளிர்ச்சியைத் தரும்,

     சுவாமி மலை வாழ்வே --- சுவாமி மலையில் வாழ்கின்றவரே!

      அதிர வரு சண்ட வாயு என வரு --- உலகெலாம் அதிர்ச்சியடையும்படி பெரிய வேகமுள்ள காற்றைப் போல் பறந்து வருகின்ற,

     கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே --- நீலத் தோகையால் அழகிய மயிலில் விரும்பி ஏறுகின்ற இளையவரே!

      அடைவோடு உலகங்கள் யாவும் உதவி --- முறையாக உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து,  

     நிலை கண்ட பாவை அருள் புதல்வ --- அவைகளை நிலைத் திருக்கச் செய்த உமாதேவியார், அருளிய புதல்வரே!

      அண்ட ராஜர் பெருமாளே --- தேவ மன்னர்களின் பெருமை மிகுந்தவரே!

      கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு --- சூரியன் உதித்துச் செல்லும் திசைகளின் அளவைச் சென்று கண்டும்,

     மோது கடல் அளவு கண்டு --- அலைகள் மோதுகின்ற கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும்,

     மாய மருளாலே --- உலக மாயை என்னும் மயக்கத்தால்,

     கணபண புயங்க ராஜன் முடி அளவு கண்டும் --- கூட்டமான படங்களையுடைய நாகராஜனாகிய ஆதிசேடனுடைய முடி எல்லை அளவைப் போய்க் கண்டும்,

     தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் --- அழகு குலைய நடந்து, கால்கள் தேயுமாறு அங்கங்கே போய்,

     இதம் இதம் என்று --- இது நல்ல இடம் இது நல்ல இடம் என்று நினைத்து,

     நாளும் அருகு அருகு இருந்து --- உலோபிகளுடைய சமீபத்தில் அணுகி இருந்து,

     கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே --- சேர்ந்து அணுகத் தக்க இடம் இதுதான், இடம் இதுதான் என்று எண்ணி தளர்ச்சியடையாமல்,

     இசையோடு புகழ்ந்த போதும் நழுவிய ப்ரசண்டர் --- இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் அவர்களைப் புகழ்ந்து கூறிய போதும் மெல்ல நழுவிப் போகும் பெரிய ஆட்களாம் அந்த லோபியர்களது,

     வாசல் இரவு பகல் சென்று வாடி உழல்வேனோ --- வீட்டு வாசலை இரவு பகலாகச் சென்று வாடி அடியேன் திரியலாமோ?

பொழிப்புரை

         வண்டுகள் நிறைந்து கூடி வாசனையுள்ள தேனைக் குடித்து, பாக்கு மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே சாமவேத கானம்போல் வகை வகையான ஒலிகளைச் செய்ய, சந்திரனைப்போல் குளிர்ந்துள்ள சுவாமிமலையில் எழுந்தருளி உள்ளவரே!

         உலகம் அதிரும்படி கடும் வாயு வேகமாக வருகின்ற நீலத்தோகையால் அழகுடைய மயிலில் விரும்பி ஏறுகின்ற இளம் பூரணரே!

         முறையோடு எல்லாவுலகங்களையும் படைத்து, அவற்றை நிலைபெறச் செய்கின்ற உமாதேவியார் ஈன்ற புதல்வரே!

         இந்திரர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!

         சூரியன் உதித்துச் செல்லுகின்ற திசைகளின் அளவைச் சென்று கண்டும், அலைகள் மோதுகின்ற கடல் மீது பயணம்போய் அதன் எல்லையைக் கண்டும், உலக மாயையால் மருண்டு, பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் முடி காணும்படி, பூமி தேயவும் கால்கள் தேயவும் அழகு குலையுமாறு அலைந்து, இது நல்ல இடம் இது நல்ல இடம் என்று நாடோறும் உலோபிகளுடைய அருகில் சேர்ந்து, தக்க இடம் இதுதான் என்று தளர்ச்சியடையாமல் அந்த உலோபியரை இசைப்பாட்டாலும் உரைநடையாலும் புகழ்ந்தபோது, மெல்ல நழுவுகின்ற அந்த உலோபர்களின் வீடுகளில் இரவு பகலாகச் சென்று வாட்டமடைந்து உழலுவேனோ? (உழலக்கூடாது என்பது பொருள்.)

விரிவுரை

தமிழ்ப் புலவர்கள் பரமலோபிகளை நாடி ஆங்காங்கு சென்று உழல்வதைக் குறித்து அடிகளார் இப்பாடலில் கூறுகின்றார்.

கதிரவன் எழுந்துலாவு திசையளவு கண்டு ---

சூரியன் கிழக்கே உதித்து மேற்கே செல்லும் திசைகளின் முடிவு வரை செல்வரை நாடியலைவர்.

வெகுவாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
   திக்கோடு திக்குவரை மட்டு ஓடி மிக்க பொருள்தேடி” ---  (இத்தாரணி) திருப்புகழ்.

மோது கடலளவு கண்டு ---

தரையில் சென்றதுடன் அமையாமல், திரைகடலிலும் சென்று திரிவர்.

கணபண புயங்கராஜன் முடியளவு கண்டு ---

கணம்-கூட்டம். பணம்-பணாமுடி. ஆதிசேடனுடைய ஆயிரம் பணாமகுடங்கள், பூமி தேய்ந்து ஆதிசேடன் முடி தெரியுமாறு நடந்து திரிவர்.

                                                       அடிகள் முடியே தெரிந்து
 வரினும் இவர்வீதம் எங்கள் இடமாக
 வருவதுவொ போதும் என்று ஒருபணம் உதாசினம் சொல்
 மடையர் இடமே நடந்து                    மனம் வேறாய்”     ---  (தருவரிவ) திருப்புகழ்.

இதம் இதம் இதென்று ---

இதம் இதம் இது என்று; இது நல்ல இடம் இது நல்ல இடம் என்று எண்ணித் திரிவர்.

அருகு அருகு இருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே ---

தனவந்தருடைய அருகில் சென்று நல்ல இடம் நல்ல இடம் என்று நினைத்து நடந்து நடந்து தளர்ச்சியுறுவார்கள்.

இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் ---

இசையுடன் பாடினாலும், அவ்வுலோபியர் மெல்ல நழுவிச் சென்று மறைவார்கள்.

வாசல் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ? ---

தானதருமம் கனவிலுமறியாத வஞ்சக லோபியருடைய வீடுகள் தோறும் இரவு பகலாகச் சென்று சென்று அலைவது கூடாது.

அடவொடு உலகங்கள் யாவும் உதவி நிலைகண்ட பாவை ---

அகில வுலகங்களை ஈன்று காத்தருள்பவர் உமாதேவியார்.

அகிலதலம் பெறும் பூவை சக்தி அம்பை”      ---    (தமரகுரங்களும்) திருப்புகழ்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
    காத்தவளே”                          ---  அபிராமி அந்தாதி

உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும்
   உகமுடிவில் வைக்கும் உமையாள்”        ---  திருவகுப்பு.


கருத்துரை

சுவாமிமலை மேவும் உமை மைந்தரே! எம்மை உலோபிகளிடம் உழலாமல் காத்தருள்.


No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...