அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கறை படும் உடம்பு
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
உமது திருவடி
மலரை, ஞானமலர்களால் அர்ச்சித்து
வீடு பெற அருள்.
தனதனன
தந்த தானனத்
தனதனன தந்த தானனத்
தனதனன தந்த தானனத் தனதான
கறைபடுமு
டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக்
கவலைபடு
கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக்
குறைவறநி
றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா
குமரசர
ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப்
பதயுகள புண்ட ரீகமுற் ...... றுணர்வேனோ
சிறைதளைவி
ளங்கு பேர்முடிப்
புயலுடன டங்க வேபிழைத்
திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித்
திமிரமிகு
சிந்து வாய்விடச்
சிகரிகளும் வெந்து நீறெழத்
திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும்
பிறைமவுலி
மைந்த கோவெனப்
பிரமனைமு னிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப்
பெருகுமத
கும்ப லாளிதக்
கரியெனப்ர சண்ட வாரணப்
பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கறைபடும்
உடம்பு இராது எனக்
கருதுதல் ஒழிந்து, வாயுவைக்
கரும வசனங்களால் மறித்து, ...... அனல்ஊதிக்
கவலை
படுகின்ற யோக, கற்-
பனை மருவு சிந்தை போய்விட,
கலகமிடும் அஞ்சும் வேர் அற, ...... செயல்மாள,
குறைவுஅற
நிறைந்த மோன நிர்க்-
குணம் அது பொருந்தி வீடு உற,
குருமலை விளங்கு ஞான சற்- ...... குருநாதா!
குமர!
சரண் என்று, கூதளப்
புதுமலர் சொரிந்து, கோமளப்
பத யுகள புண்டரீகம்உற்று ...... உணர்வேனோ
சிறை
தளை விளங்கு பேர் முடிப்
புயலுடன் அடங்கவே பிழைத்து
இமையவர்கள் தங்கள் ஊர்புகச் ...... சமர்ஆடி,
திமிர
மிகு சிந்து வாய்விட,
சிகரிகளும் வெந்து நீறு எழத்
திகிரி கொள் அநந்த சூடிகைத் ...... திருமாலும்
பிறை
மவுலி மைந்த! கோ எனப்
பிரமனை முனிந்து காவல்இட்டு,
ஒருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருது ஏறிப்
பெருகு
மத கும்ப லாளிதக்
கரி என ப்ரசண்ட வாரணப்
பிடிதனை மணந்த சேவகப் ...... பெருமாளே.
பதவுரை
திகிரி கொள் அநந்த சூடிகை திருமாலும் ---
சக்ராயுதத்தை உடையவரும் ஆதிசேடன் முடியில் விளங்குபவருமாகிய --- நாராயண
மூர்த்தியும்,
பிறை மவுலி மைந்த --- பிறைச் சந்திரனைச்
சடையில் தரித்த சிவகுமாரரே!
கோ என --- முறையோ என்று முறையிட,
பிரமனை முனிந்து காவல் இட்டு --- (பிரணவப்
பொருளையறியாது விழித்த) நான்முகனைக் கோபித்து, (குட்டி நெட்டிச்) சிறையிலிட்டும்,
சிறை தளை விளங்கு பேர் முடி புயல் உடன் ---
சிறைச்சாலையில் தளைப்பட்டுத் துன்புற்றுக் கொண்டிருந்த மேகவாகனனாகிய பெரிய
இந்திரனுடனே,
இமயவர் அடங்கவே --- தேவர்கள் எல்லோரும்,
பிழைத்து --- சிறையினின்று நீங்கி உய்ந்து,
பிழைத்து --- சிறையினின்று நீங்கி உய்ந்து,
தங்கள் ஊர் புக --- தங்களுடைய பொன்னகரத்திலே
புகுந்து இன்புறுமாறு,
சமர் ஆடி --- அசுரர்களுடன் போர் புரிந்து,
திமிர மிகு சிந்து வாய் விட --- இருள்
நிறைந்த கடல் ஓலமிட்டலறவும்,
சிகரிகளும் வெந்து நீறு எழ --- குலமலைகளும்
தீய்ந்து பொடியாகவும்,
மண்டு சூரனை --- வந்த சூரபன்மனை,
ஒரு நொடியில் பொருது ஏறி --- ஒரு
கணப்பொழுதுக்குள் போர் புரிந்து வெற்றி பெற்று,
பெருகு மத கும்ப லாளித கரி என ---
ஊற்றெடுக்கின்ற மதம் பொருந்திய மத்தகத்தினுடைய அழகிய யானை என்று சொல்லும்படி,
பிரசண்ட வாரண பிடி தனை மணந்த சேவக ---
வலிமையுடைய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தெய்வயானை அம்மையைத் திருமணம் செய்து கொண்ட
வீரரே!
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
கறைபடும் உடம்பு இராது என கருதுதல்
ஒழிந்து --- இரத்தம் நிறைந்த, உடம்பு நிலைத்திராது
அழிந்துபோம் என்று எண்ணுவதை விட்டு,
வாயுவை கரும வசனங்களால் மறித்து --- (உடல்
நெடுநாளிருக்கும் பொருட்டு) பிராண வாயுவை ஆகருஷண தம்பனாதி மந்திரங்களால்,
கும்பித்து அனல் ஊதி --- அவ்வாயுவை
உடம்பெங்கும் பரவும்படிச் செய்து அதனால் மூலாக்கினியை எழுப்பி,
கவலைப் படுகின்ற --- சித்தியடைய வேண்டுமே என்று
நெஞ்சங் கவல்கின்ற,
யோக கற்பனை மருவு சிந்தை போய்விட --- அடயோகம்
முதலியவைகளின் கட்டளைகள் நிரம்பிய மனமானது நீங்கவும்,
கலகம் இடும் அஞ்சுகம் வேர் அற --- ஒருவழிப்பட
வொட்டாமல் கலகம் புரிகின்ற ஐம்புலன்களின் வழிச் செல்லும் சப்தம் பரிசம் ரூபம் ரசம்
கந்தம் என்னும் தன் மாத்திரைகளான ஆசைகள் ஐந்தும் வேருடன் அற்றுப் போகவும்,
செயல் மாள --- என் செயல் என்பது ஒழிந்து
போகவும்,
குறைவு அற நிறைந்த மோன நிர்க்குணம் அது
பொருந்தி வீடு உற --- குறைவில்லாமல் பரிபூரணமாக உள்ள மௌன நிலையை அடைந்து முக்குணங்களை
ஒழித்து அருட்குணங்களைப் பொருந்தப் பெற்று, முத்தியை அடையவும்,
குருமலை விளங்கு ஞானசற்குரு நாதா ---
சுவாமிமலையில் எழுந்தருளியிருக்கும், -
உத்தமமான ஞான குருமூர்த்தியே!
குமர --- குமாரக் கடவுளே!
சரண் என்று --- தேவரீர் திருவடியே
அடியேனுக்கு அடைக்கலம் என்று கூறி,
கூதள புதுமலர் சொரிந்து -- புதிய கூதளம் என்ற
மலர்களைத் திருவடியில் அர்ச்சித்து,
கோமள யுகள பத புண்டரீகம் உற்று --- இளமையான, இரண்டு திருவடித் தாமரைகளையும் அடைந்து,
உணர்வேனோ --- அத்திருவடி இன்பத்தினை அறிந்து
உய்வு பெறுவேனோ?
பொழிப்புரை
சக்ராயுதத்தை உடையவரும், ஆதிசேடன் முடியில் விளங்குபவரும், ஆகிய விஷ்ணுமூர்த்தி (தன் மகன்
பிரமதேவர் தலையில் குட்டுவதைக் கண்டு) “சந்திர சேகரரது, திருக்குமாரரே! முறையோ” வென்று ஓலமிட, பிரணவத்தின் பொருள் உரைக்காது விழித்த
பிரமதேவனைக் குட்டிச் சினந்து, சிறையில் அடைத்து, சிறையிலிருந்து துன்புறுகின்ற
மேகவானனாகிய இந்திரன் முதலிய இமயவர்கள் சிறையினின்று, நீங்கித் தங்கள் பொன்னுலகஞ் சேர்ந்து
இன்புறவும், இருள் நிறைந்த கடல்
ஓலமிட்டலறவும், குலமலைகள் வெந்து
நீறாகவும், நெருங்கி வந்த சூரனை
ஒரு நொடிப் பொழுதில் போர்புரிந்து வென்று, மதம் பொழிகின்ற மத்தகத்தையுடைய அழகிய
யானையென்று கூறுமாறு மிகுந்த வலிமையுடைய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தெய்வ
குஞ்சரியம்மையை மணந்துகொண்ட வீரரே!
பெருமிதம் உடையவரே!
இரத்தம் நிறைந்த உடம்பு நிலைத்திராது
என்று எண்ணுவதைத் தவிர்த்து, நிலைத்திருக்குமென்று
எண்ணி, பிராணவாயுவை ஆகருஷண
ஸ்தம்பனாதி மந்திரங்களால் கும்பித்து, அப்பிராணவாயுவால்
குண்டலிசத்தியை எழுப்பி, “சித்தியடைய வேண்டுமே”
என்று கவலைப்படுகின்ற ஹட யோகம் முதலியவைகளின் கட்டளைகளை நினைக்கின்ற சிந்தனை
தொலையவும், (ஒருமுகப்பட்டுத்
தியானிக்க வொட்டாமல்) கலகம் புரிகின்ற ஐவாய் வழிச் செல்லும் சத்தாதி ஐந்தும்
அடியோடு அழியவும், ‘என்செயல்‘ என்பது
நீங்கவும், குறைவில்லாத நிறைந்த
மௌனத்தையடைந்தும் சத்துவரஜஸ்தமஸ் என்ற முக்குணங்கள் நீங்கி அருட்குணம் பெற்று
முக்தியை யடையவும், “சுவாமிமலையில்
எழுந்தருளியுள்ள ஞானசற்குருநாதரே! குமாரக் கடவுளே,” என்று துதித்து, புதிய கூதள மலர்களால் அருச்சித்து, தேவரீருடைய இளமை பொருந்திய இரண்டு
திருவடித் தாமரைகளை யடைந்து அத்திருவடி இன்பத்தை உணர்ந்து உய்வேனோ?
விரிவுரை
கறை
படும் உடம்பு
---
கறை-என்பதற்கு
நிறம் என்றும் பொருள் கொள்ளலாம். உடல் நீர்மேற் குமிழிக்கு நிகரானது. எத்துணை
நாளிருப்பினும் ஒரு நாளைக்கு அழிந்து ஒழியும்.
“குடம்பை தனித்து ஒழிய
புள்பறந்து அற்றே
உடம்போடு உயிரிடை நட்பு” --- திருக்குறள்
நிலையற்ற
உடம்பை நிலைப்படுத்த வேண்டும் என்று எண்ணி ஹடயோகஞ்செய்து துன்புறுவதை சுவாமிகள் இத்திருப்பாடலால்
கண்டிக்கின்றனர்.
“அனித்த மான ஊன் நாளும்
இருப்பதாகவே நாசி
அடைத்து வாயு வோடாத வகை சாதித்து” --- திருப்புகழ்.
கரும
வசனங்கள் ---
ஆகருஷண
ஸ்தம்பனாதி மந்திரங்கள்.
அனலூடு ---
பிராணவாயுவினால்
மூலக் கனலை மூட்டி எழுப்புதல்
“நாளுமதி வேக கால்கொண்டு
தீமண்டு” --- (மூளும் வினை) திருப்புகழ்
“மூலாதாரத்தின்
மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே” --- விநாயகரகவல்
கவலை
படுகின்ற ............ போய்விட ---
யோக
நூல்களைப் படித்து, அதன்படி ரேசக பூரக கும்பகம்
முதலிய சாதனங்களைச் செய்து சித்தியடையும் பொருட்டு கவலைப்பட்டு உள்ளம் உடைபட வேண்டாம்.
முருகவேள் முளரியந்தாளில் கருத்தைப் பதித்தால் முக்தி உலகு அடைதல் எளிது.
காட்டில்
குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டில்
புகுதல் மிக எளிதே, விழி நாசி வைத்து
முட்டி, கபால மூலாதார நேரண்ட மூச்சை உள்ளே
ஓட்டிப்
பிடித்து, எங்கும் ஓடாமல்
சாதிக்கும் யோகிகளே. --- கந்தரலங்காரம்
கலகமிடும்
அஞ்சும் வேரற:-
ஒன்றுடன்
ஒன்று கூடாத ஐம்புலன்களின் வழியே செல்லும் ஐவகையான ஆசைகள் வேருடன் அழிதல்
வேண்டும்.
“.........ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய்விழி
நாசியொடுஞ் செவியாம்
ஐவாய்
வழிசெல்லும் அவாவினையே” --- கந்தரநுபூதி
சிறைதனை.......
ஊர்புக......... காவலிட்டு ---
இந்திராதி
இமையவர்கள் சிறையை விடுவித்து விண்குடியேற்றினார் முருகப்பெருமான். பிரமனைச்
சிறையிட்டு தேவர்களைச் சிறை நீக்கினார். கந்தக் கடவுள் கமலாசனனை அவன் தந்தையாகிய
திருமால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குட்டி, அத்திருமால் ஓவென்று முறையிடச்
சிறையிலிடுவித்தனர்.
“....... ....... ....... உவரியணை
கட்டினோன் பார்த்திருக்கக் காதலவன் தன்தலையில்
குட்டினோன் றானே குரு”
ஒரு
நொடியில் சூரனைப் பொருது..........மணந்த ---
சூரனைக்
கொன்றார் என்பது ஆணவமலத்தை அழித்தார்என்றும், கடலை வற்றச் செய்தார் என்பது பிறவியாகிய
பெருங்கடலை யழித்தார் என்றும், மலைகளைப்
பொடிப்படுத்தினார் என்பது அகங்காரமாகிய மலைகளைத் துகள் செய்தார் என்றும், தெய்வயானையை மணந்தார் என்பது கிரியா
சக்தியுடன் கூடி அருள்புரிகின்றார் என்றும் அகமுகத்தில் பொருள்படும்.
கருத்துரை
தேவர் சிறைவிடுத்து தெய்வானையை மணந்த
தேவதேவரே, ஹடயோகம் முதலியவைகளைச் செய்து
துன்புறாமல் தேவரீர் திருவடியைச் சிந்தித்து இன்புற அருள்வீர்.
No comments:
Post a Comment