பழநி - 0151. கொந்துத் தருகுழல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொந்துத் தரு (பழநி)

முருகா!
திருவடியைத் தியானித்து உய்ய, உபதேசப் பொருளை அருள்

தந்தத் தனதன தனனா தனனா
     தந்தத் தனதன தனனா தனனா
          தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான


கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
     விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
          கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ......விழிவேலோ

கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
     வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
          கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ......எனுமாதர்

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
     தந்தித் திரிகட கிடதா எனவே
          சிந்திப் படிபயில் நடமா டியபா ......      விகள்பாலே

சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
     வந்தித் தருள்தரு மிருசே வடியே
          சிந்தித் திடமிகு மறையா கியசீ ......      ரருள்வாயே

வெந்திப் புடன்வரு மவுணே சனையே
     துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
          வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ......தவவாழ்வே

விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
     கஞ்சத் தயனுட னமரே சனுமே
          விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய்

தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
     செங்கட் கருமுகில் மருகா குகனே
          சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா

சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
     இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
          துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொந்துத் தருகுழல் இருளோ? புயலோ?
     விந்தைத் தருநுதல் சிலையோ? பிறையோ?
          கொஞ்சிப் பயில்மொழி அமுதோ? கனியோ? ......விழி வேலோ?

கொங்கைக் குடம் இரு கரியோ? கிரியோ?
     வஞ்சிக் கொடி இடை துடியோ? பிடியோ?
          கொங்கு உற்று அயர் அல்குல் அரவோ? ரதமோ? ......எனும் மாதர்

திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
     தந்தித் திரிகட கிடதா எனவே
          சிந்திப் படி பயில் நடமாடிய பா ......விகள் பாலே,

சிந்தைத் தயவுகள் புரிவேன், னையே
     வந்தித்து அருள் தரும் இரு சேவடியே
          சிந்தித்திட மிகு மறை ஆகிய சீர் ......அருள்வாயே.

வெந்திப்பு உடன் வரும் அவுண ஈசனையே
     துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய்!
          வென்றிக்கு ஒருமலை எனவாழ் மலையே! ...... தவவாழ்வே!

விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய்,
     கஞ்சத்து அயனுடன் அமர ஈசனுமே
          விந்தைப் பணிவிடை புரிபோது அவர்மேல் ...... அருள்கூர்வாய்.

தொந்திக் கணபதி மகிழ் சோதரனே!
     செங்கண் கருமுகில் மருகா! குகனே!
          சொந்தக் குறமகள் கணவா! திறல்சேர் ......கதிர்காமா!

சொம்பில் பலவளம் முதிர் சோலைகள்சூழ்
     இஞ்சித் திருமதிள் புடை சூழ் அருள்சேர்
          துங்கப் பழநியில் முருகா! இமையோர் .....பெருமாளே.


பதவுரை


      வெந்திப்புடன் வரும் --- உடைவாள் அம்பராத் தூணி முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த,

     அவுண ஈசனை --- அசுரர் தலைவனாகிய சூரபன்மனை,

     துண்டித்திடும் --- பிளந்த,

     ஒரு கதிர்வேல் உடையாய் --- ஒப்பற்ற ஒளி மிகுந்த வேற்படையை உடையவரே!

      வென்றிக்கு ஒரு மலை என வாழ் மலையே --- வெற்றிக்கு ஒரு மலை என்று புகழும்படி வாழ்கின்ற மலையே!

         தவ வாழ்வே --- தவஞ் செய்வோர்க்கு வாழ்வாக விளங்குபவரே!

         விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் --- ஞான வித்தைக்கு உடையவர்கள் பணிய வந்து அருள் புரிபவரே!

      கஞ்சத்து அயனுடன் --- தாமரை மலர் மீது உறையும் பிரமதேவரும்,

     அமர ஈசனும் --- தேவேந்திரனும்,

     விந்தை பணிவிடை புரிபோது --- அழகிய திருத்தொண்டுகள் செய்யும்போது

     அவர் மேல் அருள் கூர்வாய் --- அவர் மீது அருள் மிகுதியாகச் செய்பவரே!

      தொந்திக் கணபதி மகிழ் சோதரனே --- பெரிய வயிற்றைவுடைய கணேச பெருமான் மகிழ்கின்ற துணைவரே!

      செங்கண் கருமுகில் மருகா --- சிவந்த கண்களையுடைய நீலமேக வண்ணராம் திருமாலின் திருமருகரே!

      குகனே --- உயிர்களின் இதய குகையில் இருப்பவரே!

      சொந்தக் குறமகள் கணவா --- சொந்தமாகிய வள்ளிபிராட்டியின் கணவரே!

      திறல் சேர் கதிர்காமா --- அருள் வலிமையுடைய கதிர்காமத்தில் எழுந்தருளியிருப்பவரே!

      சொம்பில் பவளம் முதிர் --- அழகு வாய்ந்த பல வளமைகள் நிறைந்த;

     சோலைகள் சூழ் --- சோலைகள் சூழ்ந்ததும்,

     இஞ்சி திரு மதிள் புடைசூழ் --- கோட்டையும் திருமதில்களும் அருகில் சுற்றியிருப்பதும்,

     அருள் சேர் துங்க --- அருள் சேர்ந்ததும் பரிசுத்தமானதும் ஆகிய,

     பழநியில் முருகா --- பழநிப்பதியில் வீற்றிருக்கும் முருகக் கடவுளே!

     இமையோர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமை மிகுந்தவரே!

      கொந்து தரு குழல் இருளோ புயலோ-- - பூங்கொத்துகள் உள்ள கூந்தல் இருளோ? மேகமோ?

     விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ --- விசித்திரமான நெற்றி வில்லோ? பிறைச் சந்திரனோ?

     கொஞ்சிப் பயில் மொழி அமுதோ கனியோ --- கொஞ்சிப் பேசுகின்ற சொற்கள் அமுதோ? பழமோ?

     விழி வேலோ --- கண்கள் வேலாயுதமோ?

     கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ --- தனங்களாகிய குடங்கள் இரு யானைகளோ? மலையோ?

     வஞ்சிக் கொடி இடை துடியோ பிடியோ --- வஞ்சிக்கொடி போன்ற இடை உடுக்கையோ! ஒரு பிடியில் அடங்குவதோ?

     கொங்கு உற்று உயர் அல்குல் அரவோ ரதமோ --- வாசனை கொண்டு உயர்ந்துள்ள அல்குல் பாம்பின் படமோ தேரோ?

     எனும் மாதர் --- என்று உவமை கூறிப் புகழப்படுகின்ற பொதுமாதர்கள்,

     திந்தித் திமி திமிதிமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா எனவே --- திந்தித் திமிதிமி என்பனவாதி ஒலியுடன்,

     சிந்து  இப்படி பயில நடம் ஆடிய --- சிந்து எனப்படும் இசைப்பாடல்களை இவ்வண்ணம் பயின்று அதற்கேற்ப நடனம் புரிகின்ற,

     பாவிகள் பால் --- பாவியராம் பொதுமாதரிடத்தே,

     சிந்தை தயவுகள் புரிவேன் --- மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன்,

     உனையே வந்தித்து --- தேவரீரையே வணங்கி,

     அருள் தரும் இரு சேவடியே சிந்தித்திட --- திருவருளைப் பாலிக்கும் இரு சிவந்த திருவடிகளைத் தியானிக்குமாறு,

     மிகு மறையாகிய சீர் அருள்வாயே --- மிகுந்த இரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்புரிவீர்.


பொழிப்புரை


         போருக்குரிய கட்டுக்களுடன் வந்த சூரபன்மனைப் பிளந்த ஒப்பற்ற ஒளியுடைய வேலாயுதரே!

         வெற்றிக்கு ஒருமலை போல் விளங்கும் கருணைமழையே!

         தவமுனிவர்க்கு வாழ்வு தருபவரே!

         வித்தையில் வல்லவர் தொழ வருபவரே!

         தாமரையில் வாழும் பிரமதேவரும் இந்திரனும் அழகிய பணிவிடைகள் புரிகின்றபோது அவர்கட்கு அருள் மிகுதியாகச் செய்பவரே!

         பெருவயிறுடைய விநாயகர் மகிழ்கின்ற சகோதரரே!

         சிவந்த கண்களை உடைய நீல மேக வண்ணருடைய மருகரே!

         உயிர்களுடைய இதய குகையில் இருப்பவரே! 

         சொந்தமாகிய வள்ளியம்மையின் கணவரே!

         அருள் வலிமை மிக்க கதிர்காமக்கடவுளே!

         அழகிய பல வளம் பொருந்திய சோலைகளும், கோட்டை மதில்களும் சூழ்ந்த, திருவருள் நிறைந்த புனிதமான பழநிமலையில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானே!

         தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!

         பூங்கொத்துக்களுடன் கூடிய கூந்தல் இருளோ, மேகமோ? அதிசயமான நெற்றி வில்லோ, பிறைமதியோ? கொஞ்சிப் பேசும் மொழி அமுதமோ, பழமோ? கண் வேலாயுதமோ? குடம் போன்ற தனம் யானையோ? மலையோ? வஞ்சிக்கொடி போன்ற இடை உடுக்கையோ, ஒருபிடிதானோ? வாசனையுடன் உயர்ந்த அல்குல் பாம்பின் படமோ, தேரோ? என்று கூறிப் புகழப்பெறுகின்ற பொதுமாதர்கள், திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற தாள ஒலியுடன் சிந்து என்ற இசைப்பாடல்களைப் பயின்று அதற்கு ஏற்றவாறு நடனமாடும் பாவியராம் வேசையரிடத்தில், மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்கின்ற அடியேன் தேவரீரை வணங்கி, அருள் புரிகின்ற சிவந்த இருபாத கமலங்களைத் தியானித்து உய்யுமாறு மிகுந்த இரகசியமான உபதேசத்தை அருள் புரிவீராக!


விரிவுரை

இந்தத் திருப்புகழில் முதல் இரண்டு அடிகள் மகளிரது அவயவ நலங்களை அவாவினோர் உள்ளத்தில் எழும் உவகையால் கூறும் உவமை நயங்களைச் சுவாமிகள் கூறுகின்றனர்.

கரியோ கிரியோ” “துடியோ பிடியோ” என்ற சொற்றொடர்கள் மிக்க அழகாக அமைந்திருப்பதைக் காண்க.

பிடியோ என்பது ஒரு பிடியில் அடங்குவது என்ற பொருளில் வந்துள்ளது. மூன்றாவது அடியில் அம்மகளிருடைய நடனமாடுந் திறமையைக் கூறுகின்றார்.

சிந்திப் படி பயில் ---

"சிந்து இப்படி பயில்" என பதப்பிரிவு செய்து கொள்க. சிந்து என்ற வகைப்பாடல்களில் நொண்டிச் சிந்து, காவடிச்சிந்து, வழிநடைச் சிந்து என்று பல வகைகள் உண்டு.

நடமாடிய பாவிகள் பாலே ---

இசையும் இசைக் கூத்தும் மனிதனுக்கு கஞ்சா, அபினியைப் போல் போதையை - மயக்கத்தை உண்டாக்குவன. இவற்றை நம் ஆன்றோர்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்தார்கள். ஆனால் பலர் இவற்றை வெறும் இன்பத்துக்கு என எண்ணி மையல்பட்டு அழிவர்; மாதவியின் ஆடலில் மயங்கிய கோவலன், அவள் மீது காதலுற்றுக் கண்ணகியைக் கைவிட்டு, ஆடம்பர வாழ்வில் வாழ்ந்து வறுமையாம் சிறுமைப்பட்டு, வாழ்வு அவல முற்றதை உன்னி உணர்க.

இசைக்கலை, நாடகக்கலை, இவை எல்லாம் தெய்வ சம்பந்தம் அடையாத போது மணம் பெறுவதில்லை.

மிகு மறையாகிய சீர் ---

குருநாதன் கூறும் உபதேச மொழி பக்குவ ஆன்மாக்களுக்கே கூறும் தன்மையுடையது. பெண் மணிகள் அணிகலன்கள் அனைத்தும் பிறர் காண வெளிப்படையாக இருக்கும். அத்தனை நகைகளுக்கும் ஆதாரம் திருமாங்கல்யம். அது இருந்தால்தான் எல்லா அணிகலன்களும் அணிய முடியும். ஆதலால் அணிகளுக்கெல்லாம் மூலாதாரமாகத் திகழ்வது திருமாங்கல்யம். ஆனால் அது பிறர் கண்ணுக்குத் தெரியாமல் ஆடைக்குள் மறைந்திருக்கும். உயர்ந்த பொருள்கள் மறைமுகமாகத் தான் இருக்கும். உயிர் உடம்புக்குள் மறைந்திருக்கின்றது. காது மூக்கு சிகை இவை வெளிப்படையாக இருக்கின்றன, உயிர் இல்லாத போது காதும் மூக்கும் இருந்து என்ன பயன்? அதுபோல் உயர்ந்த பொருளாகிய உபதேசப் பொருள் மிக்க இரகசியமானது. செவியில் ஆசிரியர் சிறந்த நேரத்தில் மெல்லக் கூறும் திறமுடையது.

வெந்திப்புடன் ---

'பெந்திப்பு' என்பது 'வெந்திப்பு' எனத் திரிந்தது. பகரம் வகரமாகத் திரிவது இயல்பு. பண்டி வண்டி என வருவதையும் காண்க. சூரபன்மன் அம்பறாத் தூணி, கவசம் முதலியவற்றை உடம்பில் கட்டிக்கொண்டு போருக்கு வந்தான்.

விஞ்சைக்குடையவர் ---

வித்தைகளில் வல்லவர்க்கு இறைவன் அருள்வான்.

வேதம் 4. அங்கம் 6. உபாங்கம் 4. ஆக வித்தை பதினான்கு.

வேதம்:-ருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆக நான்கு.

அங்கம்-சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆக ஆறு.

உபாங்கம்:- மீமாம்ஸை, நியாயம், புராணம், தருமசாஸ்திரம், ஆக நான்கு. இந்தப் பதினான்கும் வித்தை யெனப்படும். “வித்தை விரும்பு” என்று ஒளவையார் கூறுவது இதனைத்தான். இதில் வல்லவர்கள் வித்யாதரர். இவர்கள் பதினெண் கணங்களுள் ஒருவர்.

தொந்திக் கணபதி ---

விநாயகருடைய பெரு வயிறு, அகில உலகங்களும் அவருடைய திருவுதரத்தில் அடங்கி இருக்கின்றன என்ற குறிப்பை உணர்த்துகின்றது.

கருவுற்ற பெண்ணின் வயிறு கனத்து இருப்பது அழகு செய்யும். அது தாய்மையைக் குறிக்கும். ஒரு குழந்தைக்குத் தாயாகும் பெண்மணியின் வயிறு கனத்து இருப்பதுபோல், அகில உலகங்களுக்கும் அன்னையான கணபதி பெருவயிறுடையராகக் காட்சி தருகின்றார்.

சொந்தக் குறமகள் ---

தாய்மாமன் மகள் என்பதைக் குறிக்கச் சொந்தம் என்று கூறினார்.

கருத்துரை

பழநியாண்டவனே; திருவடித் தியானத்தைத் தந்தருள்வாய்.



No comments:

44. இன்னின்னார்க்கு இதுவிது இல்லை

 “உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம், பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள், - முற்றும் மவுனத்தோர்க்கு இல்லை வருகலகம், துஞ்சாப் பவனத்த...