அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கோல குங்கும (பழநி)
முருகா!
மாதர் ஆசை அற,
பண் தவறாது உன் திருப்புகழ்
பாடிப் பரவித் துதி செய்யும் அன்பை
வயலூரில் தந்தவன் நீயே முருகா!
தான
தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான
கோல
குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின்
கோதை
சங்கிலி யுற்றக ழுத்தும்
பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர்
பாலு
டன்கனி சர்க்கரை சுத்தந்
தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே
பாத
பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே
தால
முன்புப டைத்தப்ர புச்சந்
தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச்
சாடு
குன்றது பொட்டெழ மற்றுஞ்
சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந்
...... தனிவேலா
ஆல
முண்டக ழுத்தினி லக்குந்
தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா
ஆட
கம்புனை பொற்குடம் வைக்குங்
கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
காவி னன்குடி வெற்பினி னிற்கும் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கோல
குங்கும கற்புரம், எட்டு ஒன்று
ஆன, சந்தன வித்துருமத்தின்
கோவை, செண்பகம் தட்ப மகிழ்ச்செங் ...... கழுநீரின்
கோதை, சங்கிலி உற்ற கழுத்தும்,
பூஷணம் பல ஒப்பனை மெச்சும்
கூறு கொண்ட பணைத் தனம் விற்கும் ......பொதுமாதர்,
பால்
உடன் கனி, சர்க்கரை, சுத்தம்
தேன் எனும்படி மெத்த ருசிக்கும்
பாதகம் பகர் சொற்களில் இட்டம் ...... பயிலாமே,
பாத
பங்கயம் உற்றிட உட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்புஅது செய்ப் பதியில் தந்
......தவன் நீயே.
தால
முன்பு படைத்த ப்ரபுச் சந்-
தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும்
சாகரம் சுவறக் கிரி எட்டும் ...... தலைசாய,
சாடு
குன்றது பொட்டு எழ, மற்றும்
சூரனும் பொடி பட்டிட, யுத்தம்
சாதகம் செய்து இருக்கை விதிர்க்கும்
......தனிவேலா
ஆலம்
உண்ட கழுத்தினில் அக்கும்
தேவர் என்பு நிரைத்து எரியில் சென்று
ஆடுகின்ற தகப்பன் உகக்கும் ...... குருநாதா!
ஆடகம்
புனை பொற்குடம் வைக்கும்
கோபுரங்களின் உச்சி உடுத் தங்கு
ஆவினன்குடி வெற்பினில் நிற்கும் ......
பெருமாளே.
பதவுரை
தாலம் முன்பு படைத்த ப்ரபு --- உலகத்தை
முன்பு படைத்த தலைவனாகிய பிரமதேவன்,
சந்தேகம் இன்றி மதிக்க --- ஐயந்தீர்ந்து
உண்மைப் பொருளை உம்மால் அறிந்தேன் என்று மதிக்கவும்,
அதிர்க்கும் சாகரம் சுவற --- ஒலிக்கின்ற கடல்
வற்றிப் போகவும்,
கிரி எட்டும் தலை சாய --- எண் திசைகளில் உள்ள
எட்டு மலைகளும் நிலை குலையவும்,
காடு குன்றது மொட்டு ஏழு --- பலரையும்
வஞ்சனையால் கொன்றை கிரவுஞ்சமலை தூளாகவும்,
மற்றும் சூரனும் பொடி பட்டிட --- மற்றுள்ள
சூரபன்மனும் பொடியாகி அழியவும்,
யுத்தம் சாதகம் செய் --- போரில் பயிற்சிகொண்ட,
திருக்கை விதிர்க்கும் --- திருக்கரத்தை
அசைத்துச் செலுத்திய,
தனி வேலா --- ஒப்பற்ற வேலாயுதரே!
ஆலம் உண்ட கழுத்தினில் --- ஆலகால
விடத்தை உண்ட திருக்கழுத்தில்,
அக்கம் --- உருத்திராக்க மாலையும்,
தேவர் என்பும் --- தேவர்களுடைய எலும்பு
மாலைகளையும்,
நிரைத்து --- வரிசையாகத் தரித்து,
எரியில் சென்று ஆடுகின்ற --- சுடலை
நெருப்பின் இடை நின்று நடம்புரிகின்ற,
தகப்பன் உகக்கும் --- தந்தையாகிய சிவபெருமான்
மகிழ்கின்ற,
குருநாதா --- குருமூர்த்தியே!
ஆடகம் புனை பொற்குடம் வைக்கும் ---
தங்கத்தால் அலங்கரித்துள்ள அழகிய கலசங்கள் வைத்துள்ள,
கோபுரங்களின் உச்சி உடு தங்குகின்ற ---
கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் தங்குகின்ற,
ஆவினன்குடி வெற்பினில் நிற்கும் ---
திருவாவினன்குடி மலையில் எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கோல குங்கும --- அழகிய குங்குமம்,
கற்புரம் --- பச்சைக் கற்பூரம்,
எட்டொன்று --- ஒன்பது மணிகள்,
ஆன சந்தனம் --- தகுதியான சந்தனம்,
வித்துருமத்தின் கோவை --- பவள மாலை,
செங்கழு நீரின் கோதை --- செங்கழு நீர்ப்
பூமாலை,
சங்கிலி உற்ற கழுத்தும் --- தங்கச் சங்கிலி
என்ற இவைகளை அணிந்துள்ள கழுத்துடன் கூடியவராய்,
பூஷணம் --- அணிகலன்களையும்,
பல ஒப்பனை மெச்சும் கூறுகொண்ட --- பலவகையான அலங்காரங்களையும் மெச்சுகின்ற
தன்மையில் உள்ள,
பணை தனம் விற்கும் --- பருத்த கொங்கைகளை
விற்கின்ற,
பொதுமாதர் --- பொதுமகளிருடைய,
பாலுடன் கனி சர்க்கரை --- பால் பழம் சர்க்கரை,
சுத்த தேன் எனும் படி --- பரிசுத்தமான தேன்
என்று சொல்லுமாறு,
மெத்த ருசிக்கும் --- மிகவும்
இனிக்கின்றவையும்,
பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே ---
பாவத்தைத் தருகின்றவையுமான சொற்களில் அடியேன் ஆசை கொள்ளாமல்,
பாத பங்கயம் உற்றிட உட்கொண்டு --- தேவரீருடைய
திருவடித் தாமரைகளை அடைய அவ்வடிமலரைச் சிறியேனுடைய உள்ளத்தில் கொண்டு,
ஒதுகின்ற திருப்புகழ் --- ஓதுவதற்குரிய
திருப்புகழை,
நித்தம் பாடும் அன்பு அது --- தினந்தோறும்
பாடுகின்ற அன்பினை,
செய்ப் பதியில் தந்தவன் நீயே --- வயலூரில்
அருள் புரிந்து அளித்தவர் நீரேயாகும்.
பொழிப்புரை
உலகங்களை முன்பு படைத்த தலைவராகிய
பிரமதேவர், தனது ஐயப்பாடு அகன்று
உண்மைப் பொருளை இவரால் அறிந்தோம் என்று உம்மை மதிக்கவும், ஒலிக்கின்ற கடல் வற்றவும், எட்டுத் திசைமலைகள் நிலைகுலையவும், பலரையும் வஞ்சனையால் கொன்ற கிரவுஞ்ச மலை
துகள்படவும் சூரபன்மனும் பொடிபட்டு அழியவும், போரில் பயில்கின்ற திருக்கரத்தால்
அசைத்து விடுத்த ஒப்பற்ற வேலாயுதரே!
ஆலகால விடத்தை உண்ட கழுத்தில்
உத்திராக்க மாலையும் தேவர்களுடைய எலும்பு மாலையும் தரித்தவரும், சுடலையில் நெருப்புக் கிடையில் நடனம்
புரிகின்றவரும், தந்தையாரும் ஆகிய
சிவபெருமான் மகிழ்கின்ற குருநாதரே!
பொன்னால் அலங்கரித்த அழகிய கலசங்கள்
அமைந்த கோபுரங்களின் உச்சியில்,
நட்சத்திரங்கள்
தங்குகின்ற திருவாவினன்குடி மலையினில் விளங்குகின்ற பெருமிதம் உடையவரே!
அழகிய குங்குமம், பச்சைக் கர்ப்பூரம், நவமணிகள், தகுந்த சந்தனம், பவளமாலை, செண்பக மலர், குளிர்ந்த மகிழமலர், செங்கழுநீர்ப் பூமாலை, தங்கச் சங்கிலி இவைகள் அணிந்த கழுத்தினை
உடையவராய், அநேக அணிகலங்களால்
அலங்கரித்துக் கொண்டு, மெச்சும் படியுள்ள
பருத்த தனங்களை விற்கின்ற பொது மாதருடைய, பால்
பழம் சர்க்கரை தூய தேன் என்று கூறும்படி மிகவும் இனிக்கின்றவையும் பாவங்களுடன்
கூடியவையும் ஆகிய வார்த்தைகளில் ஆசை கொள்ளா வகையில், உமது திருவடித் தாமரையை உள்ளத்தில்
கொண்டு ஏனோரும் ஓதுமாறு திருப்புகழை நாடோறும் பாடுகின்ற அன்பை, வயலூரில் அடியேனுக்குத் தந்தருளியவர்
நீரேயாகும்.
விரிவுரை
பாதபங்கயம்
உற்றிட
---
ஆன்மாக்கள்
அனைவரும் முருகனுடைய சரண கமலத்தை அரணாக அடையும் பொருட்டே அருணகிரிநாதர்
திருப்புகழைப் பாடியருளினார்.
உட்கொண்டு
ஓதுகின்ற திருப்புகழ் ---
அருணகிரிநாதர்
ஆண்டவனுடைய திருவடி மலரை மனத்துள் கொண்டு, அருள் மயமாக இருந்து திருப்புகழைப்
பாடினார்.
ஓதுவது
வேறு;
பாடுவது
வேறு;
உணர்ச்சி
இன்றி பாடலைக் கூறுதல் பாடுதலாகும்.
காதலாகிக்
கசிந்து கண்ணீர் மல்கிக் கூறுவது ஓதுவதாகும்.
கோயிலில்
தமிழ் மறை பகரும் அன்பர்களை ஓதுவார் என்று கூறுகின்ற தமிழ் மரபை உன்னுக.
திருப்புகழை
ஓதுதல் வேண்டும்.
பாடும்
என்பது செய்ப் பதியில் தந்தவன் நீயே ---
அருணகிரிநாதருக்கு
திருப்புகழ் பாடுகின்ற அன்பையும்,
தன்மையையும், வன்மையையும், தந்தவர் வயலூர் முருகப் பெருமான்.
வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருத்தலம். இங்கு முருகர் பரம வரதர்.
வழிபடுவோர்க்கு சகல நலன்களையும் தருபவர். ஏகாந்தமான அழகிய தலம். செய்- வயல்
பதி-ஊர். செய்ப்பதி: வயலூர்.
தாலமுன்பு
படைத்த ப்ரபுச்சந் தேகமின்றி மதிக்க ---
உலகங்களைப்
படைத்த பிரமதேவர், ஓம் என்ற முதல்
எழுத்துக்குப் பொருள் அறியாது மயங்குதலும், எம்பெருமான் அவரைக் குட்டிச் சிறையில் இருத்தினார்.
பின்னர் அவர் விடுதலை பெற்று முருகனை நோக்கித் தவஞ்செய்து, பிரணவப் பொருளைச் சந்தேகமின்றிக் கேட்டு
உணர்ந்து, ‘முருகனே முழுமுதற்
கடவுள்’ என்று மதித்து வணங்கினார். ப்ரபு-தலைவன்.
தகப்பன்
உகக்கும் குருநாதா ---
தந்தை
மெச்சிய மைந்தனுமாக விளங்குபவர் வேலவனார்.
உடுத் தங்கு ஆவினன்குடி ---
திருவாவினன்குடி
கோபுரங்கள் மிகவும் உயரமானவை. அதன் நுனியில் நட்சத்திரங்கள் தங்குமாறு
உயர்ந்துள்ளன. இது உயர்வு நவிற்சியணி. உயர்ந்த கோபுரம் என்று கொள்ள வேண்டும்.
கருத்துரை
சூரசங்கார மூர்த்தியே! சிவகுருவே! திருவாவினன்குடி
குடியில் எழுந்தருளியவரே! மாதராசை அறத் திருப்புகழ் பாடும் அன்பை நீர் வயலூரில்
அருள் புரிந்தீர்.
No comments:
Post a Comment