அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கோல மதிவதனம் (பழநி)
முருகா!
மாதர் ஆசை வெள்ளத்தில்
மயங்கி விழுந்தாலும்,
உனது திருவடியை
மறவேன்.
தான
தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன ...... தனதான
கோல
மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ......முகையான
கோக
னகவுபய மேரு முலையசைய
நூலி னிடைதுவள வீறு பறவைவகை
கூற யினியகள மோல மிடவளைகள் ......
கரமீதே
காலி
னணிகனக நூபு ரமுமொலிக
ளோல மிடஅதிக போக மதுமருவு
காலை வெகுசரச லீலை யளவுசெயு ......மடமானார்
காதல்
புரியுமநு போக நதியினிடை
வீழு கினுமடிமை மோச மறவுனது
காமர் கழலிணைக ளான தொருசிறிது ......மறவேனே
ஞால
முழுதுமம ரோர்கள் புரியுமிக
லாக வருமவுணர் சேர வுததியிடை
நாச முறஅமர்செய் வீர தரகுமர ......
முருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
நாணம் வரவிரக மோது மொருசதுர ......
புரிவேலா
மேலை
யமரர்தொழு மானை முகரரனை
யோடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை யுலகைவல மாக வருதுரக ......மயில்வீரா
வீறு
கலிசைவரு சேவ கனதிதய
மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் ......பெருமாளே.
பதம் பிரித்தல்
கோல
மதிவதனம் வேர்வு தர, அளக
பாரம் நெகிழ, விழி வேல்கள் சுழல, நுவல்
கோவை இதழ்வெளிற, வாய்மை பதறி,இள ......முகையான
கோகனக
உபய மேரு முலைஅசைய,
நூலின் இடை துவள, வீறு பறவை வகை
கூற, இனிய களம் ஓலம் இட, வளைகள் ...... கரமீதே
காலின்
அணி கனக நூபுரமும் ஒலிகள்
ஓலம் இட, அதிக போகம் அது மருவு
காலை, வெகுசரச லீலை அளவுசெயும் ......மடமானார்,
காதல்
புரியும் அநுபோக நதியின் இடை
வீழுகினும், அடிமை மோசம் அற, உனது
காமர் கழல் இணைகள் ஆனது ஒருசிறிதும்
......மறவேனே.
ஞால
முழுதும் அமரோர்கள் புரியும், இகல்
ஆக வரும் அவுணர் சேர, உததி இடை
நாசம் உற, அமர்செய் வீரதர குமர! ...... முருகோனே!
நாடி
ஒரு குறமின் மேவு தினைசெய் புனம்
மீதில் இயல் அகல் கல் நீழல் இடைநிலவி,
நாணம் வர, விரகம் ஓதும் ஒரு சதுர ...... புரி வேலா!
மேலை
அமரர் தொழும் ஆனை முகர், அரனை
ஓடி வலம்வரு முன், மோது திரை மகர
வேலை உலகை வலமாக வரு துரக ......மயில்வீரா!
வீறு
கலிசை வரு சேவகனது இதய
மேவும் முதல்வ! வயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் ......பெருமாளே.
பதவுரை
ஞால முழுதும் --- உலக முழுதும்,
அமரோர்கள் புரியும் --- தேவர்களுடன் போர்
செய்யும்படி,
இகலாக வரும் அவுணர் சேர --- மாறுபாடாக வந்த
அவுணர் யாவரும் ஒருமிக்க,
உததியிடை நாசம் உற --- கடலிடையே அழியும்படி,
அமர் செய்த வீரதர குமர --- போர் புரிந்த
வீரத்தைத் தரித்த குமாரக் கடவுளே
முருகோனே --- முருகப் பெருமானே
நாடி --- தேடிச் சென்று, ஒரு குறமின் மேவு --- ஒப்பற்ற
வள்ளியம்மை இருந்த,
தினை செய் புனமீதில் --- தினை விளைந்த
கொல்லையில்,
இயல் அகல் கல் நீழல் இடை நிலவி --- ஒழுங்கு
மிக்க மலைக்கல்லின் நிழலிலே இருந்து,
நாணம் வர --- வள்ளியம்மை நாணுமாறு,
விரகம் ஓதும் --- ஆசை மொழிகளைக் கூறிய,
ஒரு சதுரபுரி வேலா --- ஒப்பற்ற சதுரகிரியில்
வாழும் வேலாயுதரே!
மேலை அமரர் தொழும் --- மேலுலகில் வாழும்
தேவர்கள் வணங்குகின்ற,
ஆனைமுகர் --- விநாயகக் கடவுள்,
அரனை ஓடி வலம் வருமுன் --- சிவபெருமானை
விரைந்து வலம் வருவதற்குள்,
மோது திரை மகர வேலை --- அலை மோதுகின்றதும்
மகர மீன்களையுடையதுமாகிய கடல் சூழ்ந்த,
உலகை வலமாக வரு --- உலகத்தை வலமாக வந்த,
துரக மயில் வீரா --- குதிரை போன்ற மயிலையுடைய
வீரமூர்த்தியே!
வீறு கலிசை வரு சேவகனது ---
விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற மன்னருடைய,
இதயமேவும் முதல்வ --- உள்ளத்தில் வாழ்கின்ற
தலைவரே!
வயல் வாவி புடை மருவு --- வயல்களும்
குளங்களும் அருகில் சூழ்ந்துள்ள,
வீரை வரும் --- வீரை என்னுந்தலத்தில்
எழுந்தருளியுள்ள,
பழநி ஞானமலையில் வளர் --- பழநியாகிய
ஞானமலையின்மீது வளர்கின்ற,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
கோல மதிவதனம் வேர்வு தர - அழகிய
சந்திரனையொத்த முகம் வேர்வை அடையவும்,
அளகபாரம் நெகிழ --- கூந்தலின் கட்டு அவிழவும்,
விழிவேல்கள் சுழல --- கண்களாகிய வேல்
சுழலவும்,
நுவல் கோவை இதழ் வெளிற --- உவமை கூறப்படும்
கொவ்வைக் கனிபோன்ற இதழ் வெளுக்கவும்,
வாய்மை பதறி --- சொற்கள் பதற்றமுறவும்,
இள முகையான கோகனக --- இளம் அரும்பாக உள்ள
தாமரை போன்ற,
உபய மேருமுலை அசைய --- இரண்டு மேரு மலையையொத்த
முலைகள் அசையவும்,
நூலின் இடை துவள --- நூல் போன்ற இடை துவளவும்,
வீறு பறவை வகை கூற இனிய களம் ஓலம் இட ---
பெருமையுடைய கிளி, புறா முதலிய
பட்சிகளின் குரல் வகைபோல், இனிமையுடைய
கண்டத்தின் இன்சொல் வெளிப்படவும்,
வளைகள் கர மீதே --- கரங்களில் வளைகள்
ஒலிக்கவும்,
காலின் அணி கனக நூபுரமும் ஒலிகள் ஓலமிட ---
காலில் அணிந்துள்ள பொன்னாலாகிய சிலம்பின் ஒலிகள் ஒலிக்கவும்,
அதிக போகம் அது மருவு காலை --- மிகுந்த
போகத்தை அநுபவிக்கும்போது,
வெகு சரச லீலை அளவு செயு மடமானார் ---
பலவிதமான இன்ப லீலைகளைத் தாம் பெற்ற பொருளுக்குத் தக்க அளவில் புரிகின்ற அழகிய
பொதுமாதர்களின் மீது,
காதல் புரியும் அநுபோக நதியின் இடை அடிமை
வீழுகினும் --- காதல் செய்கின்ற தொடர்ந்த போக வெள்ளத்திலே அடியேன்
வீழ்ந்திருந்தாலும்,
மோசம் அற --- சிறிதும் அழிவு இன்றி,
உனது காமர் கழலக் இணைகள் ஆனது ஒரு சிறிதும்
மறவேனே க்--- அழகிய உமது திருவடிகளை ஒரு சிறிதுகூட அடியேன் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
தேவர்களுடன் போர் புரியும்படி
உலகமுழுவதும் நிறைந்து வந்த அசுரர்கள் யாவரும் ஒரு சேர கடலிடை யழியுமாறு போர்
புரிந்த வீரத்தையுடைய குமாரக் கடவுளே!
முருகப் பெருமானே!
தேடிச் சென்று ஒரு குறமகள் இருந்த
தினைப்புன மீது ஒழுங்குடைய மலைக்கல் நிழலில் இருந்து நாணம் உண்டாக அன்புரை கூறிய
சதுர கிரியினரே!
வேலாயுதரே!
மேலுலகத் தேவர்கள் தொழும் ஆனைமுகமுடைய
விநாயகர் சிவபெருமானை விரைந்து வலம்
வருமுன்பே, அலை மோதுகின்ற மகர
மீன்களையுடைய கடல் சூழ்ந்த உலகை வலமாக வந்த குதிரை போன்ற மயிலையுடைய வீரரே!
பெருமையுடைய கலிசையென்னும் பதியில்
வாழும் சேவகராகிய அடியவருடைய உள்ளத்தில் எழுந்தருளியிருக்குந் தலைவரே!
வயல்களும், குளங்களும் பக்கங்களில் சூழ்ந்துள்ள
வீரை என்ற ஊரிலும், பழநி என்ற ஞான
மலையிலும், வீற்றிருக்கின்ற
பெருமிதம் உடையவரே!
அழகிய சந்திரனைப் போன்ற முகத்தில்
வேர்வை தோன்றவும், பெரிய கூந்தல்
அவிழ்ந்து நெகிழவும், கண்களாகிய வேல்கள்
சுழலவும், கொவ்வைப்பழம் போன்ற இதழ் வெளுக்கவும், சொற்கள் பதவும், தாமரையின் இளம் அரும்பு போன்றவையும்
இரண்டு மலை போன்றவையுமான தனங்கள் அசையவும், நூல் போன்ற இடை துவளவும், இனிய பறவைகளின் ஒலி வகைகள் குரலில்
ஒலிக்கவும், கரங்களில் வளைகள்
ஒலிக்கவும், பாதத்தில் அணிந்துள்ள
பொற்சிலம்புகள் ஒலி செய்யவும், மிகுந்த கலவி
புரியும்போது பல வகையான இன்ப விளையாடலைப் பொருளுக்கு ஏற்பச் செய்யும் பொதுமகளிர்
மீது ஆசை கொண்டு, அந்த அநுபோக நதி
வெள்ளத்தில் அடியேன் வீழ்ந்தாலும்,
உமது
அழகிய திருவடிகளை ஒரு சிறிதும் மறவேன்.
விரிவுரை
கோல
மதிவதனம் வேர்வு தர ---
கலவி
நலம் தோய்வதனால் மகளிர்க்கு உண்டாகும் மெய்ப்பாடுகளை இப்பாடல் விரித்து
உரைக்கின்றது. முகத்தில் வியர்வை அரும்புதல், குழல் நெகிழ்தல், விழி சிவந்து சுழலுதல், இதழ் வெளுத்தல், சொல் குழறுதல் முதலிய தோன்றும்.
சகுந்தலையைச்
சந்தித்து விட்டுத் துஷ்யந்தன் சென்ற பின், சகுந்தலையைக் கண்ணுவ முனிவர்
காண்கின்றார். அங்கே அவளுடைய மெய்ப்பாட்டைக் கவி கூறுகின்றது.
வெளுத்த
இதழும், வியர் முகமும்,
விழியில் சிவப்பும், நகக் குறியும்,
அளித்த
அளகம் கலைந்து ஒளிரும்
ஆர்வங்களும், ஆலிலை வயிற்றில்
ஒளித்த
மகவும், உடல் அயர்வும்,
உடனே தோன்ற நாண் தலைக்கொண்டு,
அளக்குங்
கல்விப் பேரறிவோன்
அடியில் தாழ்த்தாள் அவன்உணர்ந்தான்.
நூலின்
இடை துவள
---
“தனபாரங்களைத்
தாங்க மாட்டாது, நூல்போன்ற இடை
வருந்துகின்றது” என்று நயமாகக் கூறுகின்றனர்.
வீறு
பறவை வகைகூற இனியகளம் ஓலமிட ---
பெருமை
மிகுந்த மணிப்புறா. பைங்கிளி, வானம்பாடி, குயில் முதலிய பறவைகளின் இனிய ஒலிகள்
பெண்களின் குரலில் இருந்து வெளிப்படும்.
“ஓர்மிடற்றி
லெழும்புள் குகூ குகூ என”
என்று
“ஓலமிட்ட” என்ற திருப்புகழிலும் இதனைக் கூறுகின்றார்.
சரசலீலை
அளவு செயு மடமானார் ---
தம்பால்
வரும் ஆடவர் தமக்குத் தரும் பொருளின் அளவுக்கு ஏற்ப அவர்களிடம் அன்பைச் செலுத்தி
இன்ப விளையாடல்களைப் புரிவர்.
“களவினொடு பொருள் அளவுஅளவு
அருளிய
கலவி அளறு இடை துவளுறும் வெளிறனை” --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்
அநுபோக
நதியினிடை வீழுகினும்........சிறிது மறவேனே ---
மகளிர்
உறவு ஒரு பெரிய சுழலுடைய நதி என உவமிக்கின்றார்.
நதியில்
நீராடச் சென்றவன் துறையில் இறங்கி இடையளவு நீரில் நின்று குளிக்கிறவன் நலமுறுவான்.
அவனுக்கு அபாயம் இல்லை. அதுபோல் இல்லறமாகிய துறையில் இறங்கி வாழ்க்கைத்
துணைவியுடன் வாழ்ந்து நல்லறம் புரிவோன் நலமுறுவான். பலப்பல மாதரை விரும்பியும்
பொருட்பெண்டிரைச் சேர்ந்தும் கெடுவதே அபாயமானது.
அருணகிரிநாத
சுவாமிகள், “மாதர் மயமாகிய பெரிய
ஆற்றில் வீழ்ந்து அலைப்புண்டாலும் ஆறுமுகப் பெருமானே! உமது திருவடிக் கமலங்களை ஒரு
சிறிதும் மறக்கமாட்டேன்” என்று உறுதிப்பாட்டை உரைக்கின்றார். இங்ஙனம் அடிகளார்
வேறு பல இடங்களிலும் கூறுகின்றார்.
“கண்டுஉண்ட சொல்லியர்
மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டுஉண்டு
அயர்கினும் வேல்மறவேன்.” ---
கந்தர்அலங்காரம்.
தோரண
கனக வாசலில் முழவு
தோல்முரசு அதிர, ...... முதிராத
தோகையர்
கவரி வீச,வ யிரியர்
தோள்வலி புகழ, ...... மதகோப
வாரண
ரதப தாகினி துரகம்
மாதிரம் நிறைய ...... அரசாகி
வாழினும்,
வறுமை கூரினும், நினது
வார்கழல் ஒழிய ...... மொழியேனே.. --- திருப்புகழ்
அமர்
செய் வீர தர
---
உலகம்
தோன்றிய நாள் தொட்டு நற்குணங்கட்கும் துர்க்குணங்கட்கும் போராட்டம் நிகழ்கின்றது. துர்க்குண
ஆற்றல்கள் அசுரர்கள். நற்குண ஆற்றல்கள் அமரர்கள். இறைவன் நற்குணங்கட்குத் துணை
புரிந்து துர்க்குணங்களை அழிக்கின்றனர். அதனால் அவர் வீரகுமர மூர்த்தியாக
விளங்குகின்றார்.
சதுரபுரி
வேலா ---
சதுர்-சாமர்த்தியம், சமர்த்தான கருமங்களைச் செய்தவன், அன்றி, சதுரபுரி- சதுரகிரியில் வாழ்பவன்
என்றும் பொருள்படும்.
வீறு
கலிசை வரு சேவகனது இதய மேவு ---
அருணகிரிநாதர்
காலத்தில் கலிசைச் சேவகனார் என்ற ஒரு சிற்றரசர் இருந்தார். அவர் ஒரு சிறந்த
முருகபக்தர். வரையாது வழங்கும் வள்ளல். அருணகிரிநாதருக்கு நண்பர். அவரைச்
சுவாமிகள் பல திருப்புகழ் பாடல்களில் பாராட்டிக் கூறியுள்ளார்.
அவர்
வீரை என்ற ஊரில் பழநி தண்டாயுதபாணியை எழுந்தருளப் புரிந்து வழிப்பட்டார்.
கருத்துரை
பழநியப்பா! மாதராசையில் மயங்கினாலும் உனது
மலரடியை மறவேன்.