அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சகடத்திற் குழை
(பழநி)
முருகா!
அழிகின்ற உடம்பை விரும்பாமல்,
அழியாத பதம் தரும் உன்னை
விரும்பி உய்ய அருள்
தனனத்தத்
தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத்
தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத்
தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான
சகடத்திற்
குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக்
குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற்
பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான
தனதுத்திப்
படிகப் பொற்பிட்
டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட்
டிடையிற் பட்டைத்
தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக்
கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர்
சுகமுற்றுக்
கவலைப் பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத்
தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத்
திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ......
கிடைநாளிற்
சுழலர்ச்சக்
கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற்
பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச்
சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ......
சடமாமோ
திகுடத்திக்
குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட்
டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச்
செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி
திமிலைக்கைத்
துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக்
கடல்வற் றித்தித்
தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச்
சிரமிற் றுட்கச்
சுரர் பொற்புச் சொரியக் கைத்தொட் ......
டிடும்வேலா
பகலைப்பற் சொரியத் தக்கற்
பதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக்
கழைவிற் புட்பச்
சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட்
பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித் ......
தருள்வோனே
பவளப்பொற்
கிரிதுத் திப்பொற்
றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக்
கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப்
பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சகடத்தில்
குழை இட்டு, எற்றிக்
குழலுக்குச் சரம்வைத்து, எற்றிப்
புளகித்துக்
குவளைக் கண் பொற்
கணை ஒத்திட்டு உழல, சுத்தித்
தரளப்பற்
பவளத்து ஒட்டக்
களப அப்பு ஒட்டுதல் இட்ட அத்திக் ...... குவடு
ஆன
தன
துத்திப் படிகப் பொற்பு இட்டு
அசையப் பெள் பசளைத் துப்புக்
கொடி
ஒத்திட்டு, இடையில் பட்டைத்
தகையில் தொட்டு, களப் பச்சைச்
சரணத்துக்கு
இயலச் சுற்றிச்
சுழல் இட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர்,
சுகம்
உற்று, கவலைப் பட்டு,
பொருள்கெட்டு, கடை கெட்டு, சொல்
குளறிட்டு, தடி தொட்டு எற்றி,
பிணி உற்று, கசதிப் பட்டு,
சுக
துக்கத் திடர் கெட்டு உற்று,
தளர்பட்டு, கிடைபட்டு உப்பிக் ...... கிடைநாளில்
சுழலர்ச்
சக்கிரியைச் சுற்றிட்டு,
இறுகக் கட்டு உயிரைப் பற்றிக்
கொளுகப்
பற் பலரைக் கட்டி,
கரம்வைத்து, தலையிற் குத்தி,
சுடுகட்டைச்
சுடலைக் கட்டைக்கு
இரையிட்டு, பொடிபட்டு உட்கு இச் ...... சடம் ஆமோ?
திகுடத்திக்
குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட்
டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச்
செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி
திமிலைக்
கைத்துடி தட்டு எக்கைப்
பகடி இட்டுப் பறையொத்த, கண்
திகை
எட்டுக் கடல் வற்றி, தித்
தர, உக்க, கிரி எட்டு, தைத்
தியருக்குச்
சிரம் இற்று உட்க,
சுரர்பொற்புச் சொரியக் கைத் தொட் ......
டிடும்வேலா!
பகலைப்
பல் சொரிய, தக்கன்
பதி புக்கு அட்டு அழல் இட்டு, திண்
புரம்
மட்கி, கழை வில் புட்பச்
சரனைச் சுட்டு, அயனைக் கொத்திப்
பவுரிக் கொள் பரமர்க்கு, சற்-
குரு ஒத்துப் பொருளைக் கற்பித்து ...... அருள்வோனே!
பவளப்பொன்
கிரி துத்திப் பொன்
தன கொச்சைக் கிளி சொல் பற்றிப்
பரிவு
உற்றுக் கமலப் புட்பத்து
இதழ் பற்றிப் புணர், சித்ரப் பொன்
படிகத்துப்
பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.
பதவுரை
திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட்
டமடட் டிக்குட் டிமிடிட்டிட்டிமிட்டிக்குத் தொகு தொக்குத்தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு இடிபேரி ---
திகுடத்தித்.........தட்டுட்டு என்று ஒலித்து இடிபோல் முழங்கும் பேரி வாத்தியமும்,
திமிலை --- திமிலை என்ற பறையும்,
கை துடி --- சிறிய உடுக்கையும்,
தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த --- தட்டி
எழுகின்ற ஒலி வன்மை கொண்ட பறையும்,
ஆகிய
இவை முழங்க,
கண்திகை எட்டு கடல் வற்றி --- இடம் அகன்ற
எட்டு திசைகளிலும் உள்ள சமுத்திரமானது வற்றிப் போகுமாறும்,
தி தர --- தீயைத் தரவும்,
கிரி எட்டு உக்க --- எட்டு மலைகளும் நிலை
குலையவும்,
தைத்தியருக்குச் சிரம் இற்று உட்க ---
அசுரர்கள் தலை அற்று ஒழியவும்,
சுரர் பொன்பு சொரிய --- தேவர்கள் பொன்
மலர்களை பொழியவும்,
கை தொட்டிடும் வேலா --- திருக்கரத்திலிருந்து
தொடுத்த வேலாயுதரே!
பகலை பல் சொரிய --- சூரியனுடைய பற்களைத்
தகர்த்தும்,
தக்கன் பதி புக்கு --- தக்கனுடைய நகரில்
சென்று,
அட்டு இழல் இட்டு --- அவனைக் கொன்று அவன்
தலையை நெருப்பில் இட்டும்,
திண்புரம் மட்கி --- வலிய திரிபுரத்தை
எரித்தும்,
கழை வில் புட்பரசனை சுட்டு --- சுரும்பும்
வில்லும் மலர்கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும்,
அயனைக் கொத்தி --- பிரமனது தலையை அரிந்தும்,
பவுரி கொள் --- திருநடனம் புரிகின்ற,
பரமர்க்கு --- பெரிய பொருளாகிய, சிவபெருமானுக்கு,
சற்குரு ஒத்து --- உத்தமமான குருநாதராக
நின்று,
பொருளை கற்பித்து அருள்வோனே --- பிரணவப்
பொருளை உபதேசித்து அருளியவரே!
பவள பொன்கிரி --- பவளமலை போலும் பொன்
மலை போலும்,
துத்தி --- தேமலுடன் கூடிய,
பொன் தன --- அழகிய கொங்கைகளையும்,
கொச்சை கிளிசொல் பற்றி --- திருந்தாத கிளி
போன்ற மொழியையும் உடைய வள்ளிபிராட்டியை விரும்பி,
பரிவு உற்று --- அப்பிராட்டி மீது அன்பு
வைத்து,
கமல புட்பத்து இதழ் பற்றி --- தாமரை
மலர்போன்ற இதழமுதைப் பற்றியுண்டு,
புணர் சித்ர --- கலந்து மகிழ்ந்த அழகரே!
பொன் படிகத்து பவள பச்சை பதமுத்து ---
பொன்னும் பளிங்கும் பவளமும் மரகதமும் இனிய முத்தும் உடைய
பழநி சொக்க பெருமாளே --- பழநிமலை மீது
எழுந்தருளியுள்ள தூய பெருமையிற் சிறந்தவரே!
சகடத்தில் குழை இட்டு --- சக்கரம் போன்ற
வட்டவடிவுள்ள தோட்டினை,
எற்றி --- கண்டோர் மனத்தைத் தாக்கியும்,
குழலுக்கு சரம் வைத்து எற்றி ---
கூந்தலில் பூமாலை வைத்துத் தாக்கியும்,
புளகித்து --- புளகாங்கிதங் கொண்டு,
குவளை கண் --- குவளை மலர் போன்ற கண்கள்,
பொன் கணை ஒத்து உழல --- அழகிய அம்புக்கு
நிகராகிச் சுழல,
சுத்தி தரள பல் பவளத்து ஒட்ட --- மாசில்லாத
முத்துபோல் பற்கள் பவளம் போன்ற இதழுக்கு அருகில் விளங்க,
களப அப்பு ஒட்டுதல் இட்ட அத்தி குவடு ஆன ---
சந்தனக் கலவை அப்பி ஒட்டுதலுற்ற யானையையும் மலையையும் சமானமென்று கூறுகின்ற,
தன துத்தி --- தனங்களானது தேமலுடன்,
படிக பொற்பு இட்டு அசைய --- படிகத்தின்
அழகைப் பூண்டு அசைய,
பெள் பசளை துப்பு கொடி ஒத்திட்டு இடையில் ---
விரும்பத்தக்க பசளைக் கொடியையும், பவளக் கொடியையும், நிகர்க்கும் இடுப்பில்,
பட்டை தகையில் தொட்டு --- பட்டாடையைத்
தக்கபடி தொடும்படி,
உகள பச்சை சரணத்துக்கு இயல சுற்றி சுழல்
இட்டு --- இரு பசிய பாதம் வரை தொங்குமாறு பொருந்தச் சுற்றி வளைய உடுத்து,
கடனைப் பற்றிக் கொள்ளும் மாதர் --- தங்கள்
பெறக்கூடிய பொருளைக் கைப்பற்றிக் கொள்ளும் பொதுமகளிரின்,
சுகம் உற்று --- சுகத்தை அடைந்து,
கவலைபட்டு --- பின்னர் கவலைபட்டு,
பொருள் கெட்டு --- கையிலிருந்த பொருள் யாவும்
அழிந்துபோக,
கடை கெட்டு --- முடிவு வரை கெட்டு,
சொல் குளறிட்டு --- சொற்கள் குழறிப்போய்,
தடி தொட்டு எற்றி 00- ஊன்றுகோல் பிடித்து
தடுமாறி நடந்து,
பிணி உற்று --- நோய் உற்று,
கசதி பட்டு --- துன்பப்பட்டு
சுகத்துக்க திடர் கெட்டு உற்று --- சுக
துக்கங்களாகிய மேடு பள்ளங்களை அடைந்து துன்புற்று,
தளர் பட்டு --- தளர்ச்சியடைந்து,
கிடை பட்டு உப்பி --- படுக்கையில் கிடந்து
உடல் வீங்கி,
கிடை நாளில் --- கிடக்கும் நாளில்,
சுழலர் --- சுழன்று வரும் காலதூதர்கள்,
சக்கிரியைச் சுற்றிட்டு - பாம்பு போன்ற பாசக்
கயிற்றால் சுற்றிப் பிடித்து,
இறுகக் கட்டி --- என் உயிரை அழுத்திக் கட்டி,
உயிரைப் பற்றிக் கொளுக --- உயிரைக்
கொண்டுபோம் பொழுது,
பற்பலர் - உறவினர் பலரும் வந்து,
கட்டி --- கைகளால் என் உடலைக் கட்டித்
தழுவியும்,
கரம் வைத்து தலையில் குத்தி --- கைகளால்
தலையில் அடித்துக்கொண்டும்,
சுடுகட்டை --- சுடுதற்குரிய என் உடம்பாகிய
கட்டையை,
சுடலை கட்டைக்கு இரை இட்டு --- மயானத்தில்
உள்ள கட்டைகளுக்கு இரையாக ஆக்கி,
பொடிபட்டு உட்கு --- சாம்பலாகி ஒழியும்,
இச் சடம் ஆமோ --- இந்த உடல் விரும்பத் தக்கது
ஆகுமோ?
பொழிப்புரை
திகுடத்திக் குகுடட்டுட்டுட்
டமடட்டட்டமடட்டிக் குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகு தொக்குத் தொகுதத்
தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு என்று இடிபோல்
முழங்கும் பேரி வாத்தியமும், திமிலை, சிறிய உடுக்கை தட்டுகின்ற பறை முதலிய
வாத்தியங்கள் முழங்கவும், இடம் அகன்ற எட்டுத்
திக்குகளிலும் உள்ள கடல்கள் வற்றி நெருப்பைத் தரவும், எட்டு குலமலைகள் நிலை குலையவும், அசுரர்களுடைய தலைகள் முறிந்து மாளவும், அமரர்கள் கற்பக மலர் மழை பொழியவும், திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தை
விடுத்தவரே!
தக்கனது தலைநகரில் சென்று சூரியனுடைய
பற்களை உதிர்த்தும், தக்கனைக் கொன்று
தலையை நெருப்பில் இட்டும், வலிமையுடைய
முப்புரத்தை எரித்தும், கரும்பு வில்லையும்
மலர்க் கணைகளையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனது தலையைக் கிள்ளியும், நடனம் புரிந்த பரமசிவனுக்கு, சற்குருவாய் அமர்ந்து பிரணவப் பொருளை
உபதேசித்தருளியவரே!
பவள மலை போலவும், பொன்மலை போலவும், உயர்ந்து தேமலுடன் கூடியுள்ள அழகிய
தனங்களை உடையவளும் கிளியன்ன கொச்சை மொழியை உடையவளும் ஆகிய வள்ளியம்மையின் மீது
அன்பு வைத்து, தாமரை மலர் போன்ற
இதழைப் பற்றிக் கலந்த அழகரே!
பொன்னும், பளிங்கும், பவளமும், மரகதமும், இனிய முத்தும் உடைய பழநிமலைமீது
எழுந்தருளியுள்ள தூய பெருமிதம் உடையவரே!
சக்கரம் போன்ற வடிவுள்ள குழையைப் பூண்டு, கண்டோர் மனத்தைத் தாக்கியும், கூந்தலில் பூச்சரம் வைத்து மயக்கித்
தாக்கியும், புளகாங்கிதம் அடைந்து, அழகிய அம்புக்கு நிகராகும்படி கண்கள்
சுழலவும் தூய முத்து போன்ற பற்கள் பவளம் போன்ற இதழுக்கு அருகில் விளங்கவும், கலவைச் சந்தனத்தை அப்பி, யானை போன்றதும் மலை போன்றதுமான தனங்கள்
தேமலுடன் பளிங்கு என அழகுடன் அசையவும், விரும்பத்தக்க
பசலைக் கொடியையும், பவளக் கொடியையும், ஒத்த இடையில் பட்டாடையைத் தக்கபடி
எடுத்து, இருபசிய பாதங்கள்
வரையில் தொங்குமாறு வளைத்துச் சுற்றியுடுத்தும், தாங்கள் பெறவேண்டிய பொருளைக்
கைப்பற்றிக் கொள்ளும் பொதுமாதரின் சுகத்தைப் பெற்று, பின்னர் துக்கப்பட்டு கைப் பொருள் யாவும்
அழிந்து போக, முடியவும் கெட்டு
சொற்கள் குழறி, தடிகொண்டு நடந்து
நோயுற்று, வேதனைப் பட்டு, இன்ப துன்பமாகிய மேட்டில் ஏற்றுண்டு, உணர்ச்சியற்று, தளர்ச்சியடைந்து, படுக்கையில் கிடந்து உடல் வீங்கிக்
கிடக்கும் நாளில், சுழன்று வரும்
காலதூதர்கள், பாம்பு போன்ற பாசக்
கயிற்றால் அழுந்தக் கட்டி உயிரைப் பற்றிக்கொண்டு போகும் பொழுது உறவினர் பலரும்
வந்து உடம்பைக் கட்டி அழுது தலையில் அடித்துக்கொண்டு வருந்தி, சுடத்தக்க உடம்பை மயானத்திற் கொண்டு
போய் விறகில் வைத்துச் சுட, சாம்பலாகி ஒழிந்து
போகும் இந்த உடம்பு விரும்பத் தக்கது ஆகுமோ? (ஆகாது).
விரிவுரை
இத்
திருப்புகழ் வல்லொற்று மிகுதியாக வந்த கடின சந்தத்தால் ஆனது. உடம்புக்கு வரும்
கொடுமையைக் கூறுவதனால் கடிய சந்தத்தால் சுவாமிகள் கூறுகின்றனர்.
சகடத்திற்
குழையிட்டு எற்றி ---
மாதர்கள்
அணியும் குழை சக்கரம்போல் வட்ட வடிவமாக இருக்கும். அந்த அழகினால் பார்த்தவர்கள்
மனத்தைத் தாக்குவர்.
குழலுக்குச்
சரம்வைத்து எற்றி ---
பொதுமகளிர்
தங்கள் கூந்தலைப் பலப்பலவாறு முடிப்பதில் வல்லவர்கள். அவ்வாறு அழகாக குழலை
முடித்து, அதில் நறுமணம் பொருந்திய
மலர் மாலையை வைத்து, கண்டவர்களின்
உள்ளத்தை மயக்கித் தாக்குவர்.
கடனைப்
பற்றிக் கொளுமாதர் ---
தம்பால்
வந்த ஆடவர்களிடமிருந்து பொருளைப் பறிப்பதுவே தமக்குச் சிறந்த கடன் என்று கருதி, இன்னுரை கூறி, அவர்களின் உள்ளத்தை
உருக்கிப் பொருளைப் பறிப்பது பொதுப் பெண்டிரின் தன்மை.
கசதி ---
கசதி
என்ற சொல் வருத்தம் என்ற பொருளில் வந்துள்ளது. இன்று கஸ்தி என்று கூறுகின்றனர்.
கிடைபட்டு
உப்பிக் கிடைநாளில் ---
முடிவில்
படுக்கையில் கிடந்து உடலில் உள்ள நல்ல உதிரங் கெட்டு, அதனால் வீக்கத்தையடைந்து நோயும்
நொடியுமாகப் பாயிற்கிடந்து வேதனை யுறுவர்.
சுழலர் ---
காலதூதர்கள்
பாவிகளின் உயிரைப் பற்றுதற் பொருட்டு இங்கும் அங்குமாகச் சுழன்று திரிவார்கள்.
ஆதலின் ‘சுழர்’ என்றனர்.
சக்கிரியை ---
சக்கிரி-பாம்பு.
இது உவமை ஆகுபெயராகக் காலபாசத்தைக் குறிக்கின்றது. காலபாசம் நீண்டநாகம் போன்றது.
அப்பாசத்தால் உயிரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு போவார்கள்.
பற்பலரைக்
கட்டி
---
பற்பலர்-உறவினர்.
ஐ-சாரியை, உறவினர்கள்
ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு "ஓ" என்று கதறி அழுது புலம்புவர்.
அழுவதற்குக் காரணம் அறியாமையே ஆகும். மரணத்தைக் குறித்து வருந்துவது பேதமை. ஒருவன்
சிறைச்சாலையில் நுழைவதற்கு முன்னரே அவன் விடுதலையாகும் தேதி உறுதி
செய்யப்படுகின்றது. அன்றியும் புகைவண்டியில் ஏறு முன்னரேயே இறங்கும் இடம்
நிச்சயமாகின்றது. அதுபோல் பிறக்கு முன்னரேயே இறக்கும் நாள் உறுதி
செய்யப்படுகின்றது.
மேலே
எறியப்பட்ட கல் கீழே விழுவதில் சந்தேகம் இல்லைதானே? அதுபோல் உடம்பு எடுத்த உடனே அது கீழே
விழுதல் உறுதியாகும். இத் தெளிவு இல்லாதவர் இறந்தவரைக் குறித்து இன்னல் படுவர்.
இச்
சடம் ஆமோ
---
நெருப்புக்கு
இரையாகின்ற இந்த உடம்பு விரும்பத் தக்கது ஆகுமோ? ஒருபோதும் ஆகாது. ஆகவே இந்த உடம்பில்
பற்று வைக்கக் கூடாது.
பிறப்பை
ஒழிக்க எண்ணுவோர்கள் கடைப் பிடிக்கவேண்டிய நெறிகளைப் பற்றி குருஞானசம்பந்தர்
கூறுகின்றார். அதில் உடம்பைப் பழித்தல் ஒன்று என உணர்க.
தன்
பெருமை எண்ணாமை, தற்போதமே இறத்தல்,
மின்
பெருமை யாசகத்தை வேண்டாமை,-தன்பால்
உடலைத்
தினம் பழித்தல், ஓங்குசிவத்து ஒன்றல்,
நடலைப்
பிறப்பு ஒழியு நாள். --- சிவபோகசாரம்.
பகலைப்
பல் சொரிய
---
தட்ச
யாகத்தில் வீரபத்திரர் சூரியனுடைய பற்களை உடைத்தனர். சூரியன் கல்வியிற் சிறந்தவர்.
படிப்பாளிக்குப் பல் முக்கியமானது. பல் போனால் சொல் போகும். ஆதலால் பகலவன் பல்லை
உடைத்தனர்.
தக்கற்
பதிபுக்கு அட்டு அழலிட்டு ---
பதி
புக்கு அட்டு அழல் இட்டு எனப் பதப்பிரிவு செய்க. சிவநிந்தை புரிந்த தக்கனது
வேள்விச் சாலைக்குச் சென்று, சிவபரம்பொருளை
இகழ்ந்த அவன் தலையை வெட்டி நெருப்பிலிட்டு, அங்கிருந்த அமரர்களை எல்லாம்
தண்டித்தனர்.
திட்புரம்
மட்கி
---
திண்-திண்ணிய, வலிமையுடைய திரிபுரங்களைப் பெருமான்
சிரித்து எரித்து விட்டனர்.
கழை
வில் புட்பச் சரனைச் சுட்டு ---
கரும்பு
வில்லையும், சுரும்பு நாணையும், அரும்பு அம்புகளையும் உடைய மன்மதன்
இரும்பையும் உருகச் செய்வான். அவனைக் கண்ணால் பார்த்து ஈசனார் எரித்தருளினார்.
ஆசையை உண்டு பண்ணுகின்ற தேவதையை எரித்தார் என்றதால், ஈசன் ஆசை அற்றார்க்கே அருள் புரிவான்
என்பது விளங்கும்.
அயனைக்
கொத்தி
---
பிரமதேவன், தான் படைக்குந் தலைவன் என்று இறுமாந்த
போது, அவனுடைய தலையை
எம்பெருமான் நகத்தால் ஒரு துரும்பைக் கிள்ளுவது போல் கிள்ளி விட்டார்.
நல்ல
மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை
அரிந்தது என்று உந்தீபற
உகிராலு
அரிந்தது என்று உந்தீபற. --- திருவாசகம்.
கிளிச்சொல்
பற்றி
---
வள்ளிபிராட்டியார்
கிளிபோல் கொஞ்சும் மொழி உடையவர். தேன், பால்
இவை யாவும் அம்மையின் மொழிக்கு இணையாகா.
கருத்துரை
வேலாயுதரே!
சிவகுருவே! பழநியாண்டவரே! இந்த உடம்பினை விரும்பாது உம்மை விரும்ப அருள்புரிவீர்.
No comments:
Post a Comment