திருப் பந்தணை நல்லூர்




திருப் பந்தணைநல்லூர்
(பந்தநல்லூர்)

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் பந்தநல்லூர் என்று வழங்குகிறது.

     கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர்              : பசுபதீசர்.

இறைவியார்          : வேணுபுஜாம்பிகைகாம்பனதோளியம்மை.

தல மரம்               : சரக்கொன்றை.

தீர்த்தம்                : சூரியதீர்த்தம்.


தேவாரப் பாடல்கள்         : 1. சம்பந்தர் - இடறினார் கூற்றைப்.
                                            2. அப்பர்   -  நோதங்க மில்லாதார்.

        
          உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்து உதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் அஸ்தமிக்காதிருந்தான். காலநிலை மாறுவதுகண்டு தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக் கொண்டிருந்தாள். அஃதறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றிட்டார். பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையை பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப்பந்து விழும்தலத்தில், கொன்றையின்கீழ் தாம் வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.

     பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம்.

          காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

          தென்கயிலை, கோவூர், கொன்றைவனம், விஷ்ணுபுரி, இந்திரபுரி, கணவராச்சிரமம், வாலிநகர், பானுபுரி, ஆவூர், கந்துகபுரி என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

          மூலவர் - புற்று - சுயம்பு மூர்த்தி.

          (விநாயகர் - பக்கதில் சுவர் ஓரத்தில் இவ்வூர்க்கோட்டையில் புதைந்து கிடந்து கண்டெடுக்கப்பட்ட பலரகமான குண்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்து யவனப் பொறிகளை எறிவதற்காகச் சேகரித்த குண்டுகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.)

          தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.

          சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞான சம்பந்தர் திருவாயில் " என்று பெயரிடப்பட்டுள்ளது.

          இருபுறங்களிலும் தலப்பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன.

          கோயிலுள் பிரமன், வாலி முதலியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

          நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையாக காட்சியளிக்கின்றன.

          புற்றில் பால்சொரிந்து சொரிந்து வெண்மையாகியதால் இலிங்கத் திருமேனி வெண்ணிறமாக உள்ளது; மூலவர் புற்றாதலின் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகின்றது.

          அம்பாள் தவம் செய்யும் கோலமாதலின் இருபுறமும் ஐயனாரும் காளியும் காவலாகவுள்ளனர்.

          கோயிலுக்கு சுமார் 900 ஏக்கர் நிலம் இருக்கின்றது. (இவ்வளவு நிலமிருந்தும் பயனின்றியுள்ளது; வழிபாடு நடப்பதே சிரமமாகவுள்ளதாம்)

          சோழர், விசயநகரர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பசுபதிதேவர் என்றும், முதலம் இராசராசன் கல்வெட்டில் இத்தலம் 'பந்தணைநல்லூர் ' என்றும் குறிக்கப்படுகின்றது.

          இங்குள்ள கல்வெட்டொன்று முதலாம் இராசராசன் அரியணையேறிய 11-ஆம் ஆண்டில் செம்பியன்மாதேவி, ஒருவிளக்குக்குப் பன்னிரண்டு கழஞ்சு பொன்வீதம் மூன்று விளக்குகளுக்கு நிபந்தம் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தடம் பொழிலில் கொந்து அணவும் கார்குழலாள் கோலமயில் போல் உலவும் பந்தணைநல்லூர்ப் பசுபதியே" என்று போற்றி உள்ளார்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 249
இன்னிசை வண்தமிழ் பாடி ஏத்தியே,
நல்நெடும் பதிஉளோர் நயக்க வைகிய
பின்னர்,வெண் பிறைஅணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.

         பொழிப்புரை : பிள்ளையார், இனிய இசையமைப்புடைய இவ்வண்டமிழ்ப் பதிகத்தைப் பாடிப் போற்றினார்; மிகுந்த பழைமையுடைய அத்திருப்பதியில் உள்ளவர்கள் விரும்பியதால் அங்குத் தங்கினார்; பின்பு வெண்மையான பிறையைச் சூடிய செஞ்சடையார் எழுந்தருளியிருக்கும் திருப்பனந்தாளுக்குச் சென்று வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 250
ஆங்குஅணி சொல்மலர் மாலை சாத்தி,அப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்,
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம்புலி யூர்வந்து உற்றனர்.

         பொழிப்புரை : அத்திருப்பதியில் அழகிய சொல்மலர்களால் ஆன பதிகமாலையைச் சாத்தியபின், அருகில் உள்ள `திருப்பந்தணை நல்லூரைப்\' பணிந்து பாடிப் போற்றி, மேற்செல்கின்றவர், தீமையை நீக்கும் பெருமறைபயிலும் வேதியர்கள் விளங்கி உயர்வதற்கு இடமான `திரு ஓமாம்புலியூரினில்' வந்து சேர்ந்தார்.

         குறிப்புரை : திருப்பனந்தாளில் இறைவர் திருமுன்பு அருளியது, `கண்பொலி நெற்றியினான்' (தி.3 ப.62) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். தாடகையீச்சரம் என்றது அப்பெயருடைய பெருமாட்டி வழிபட்டமையால் ஏற்பட்ட கோயில் பெயர் ஆகும்.

         பந்தணைநல்லூரில் பாடியது, `இடரினார் கூற்றை'(தி.3 ப.121) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.



3. 121   திருப்பந்தணைநல்லூர்                பண் - புறநீர்மை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
இடறினார் கூற்றை, பொடிசெய்தார் மதிலை,
         இவைசொல்லி உலகுஎழுந்து ஏத்த,
கடறினார் ஆவர், காற்றுளார் ஆவர்,
         காதலித்து உறைதரு கோயில்,
கொடிறனார், யாதும் குறைவுஇலார், தாம்போய்க்
         கோவணம் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை : திருப்பந்தணைநல்லூர் என்ற திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியாராகிய சிவபெருமான் காலனை உதைத்து அழித்தவர், அசுரர்களின் முப்புரங்கள் பொடியாகும்படி எரித்தவர், என்பன போன்ற புகழ்மொழிகளாகிய இவற்றைச் சொல்லி உலகத் தவர் மிகவும் துதிக்கும்படியாகக் காட்டில் உள்ளவராவர். காற்றில் எங்கும் கலந்துள்ளார். உறுதிப்பாடுடையவர். எதனாலும் குறை வில்லாதவர். கோவணம் தரித்துக் கூத்தாடும் வஞ்சகரும் ஆவார்.


பாடல் எண் : 2
கழிஉளார் எனவும், கடல்உளார் எனவும்,
         காட்டுஉளார், நாட்டுஉளார் எனவும்,
வழிஉளார் எனவும், மலைஉளார் எனவும்,
         மண்உளார், விண்உளார் எனவும்,
சுழிஉளார் எனவும், சுவடுதாம் அறியார்,
         தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழிஉளார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை :இறைவன் கடற்கழியில் உள்ளார். கடலிலே உள்ளார், காடுகளில் உள்ளார். நாடுகளில் உள்ளார். விண்ணுலகத்திலே உள்ளார். நீர்ச்சுழிகளில் உள்ளார். இவ்வாறு அவர் எல்லா இடத்திலும் இருப்பவர் என்று சொல்லப் பெற்றாலும், அவ்வாறு இருக்கும் அடையாளம் பிறர் எவராலும் அறியப்படாத தன்மையர் ஆவார். இவ்வாறு தொண்டர்களின் போற்றுதலுக்கும், வணக்கத்திற்குமுரிய சிவபெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.


பாடல் எண் : 3
காட்டினார் எனவும், நாட்டினார் எனவும்,
         கடுந்தொழில் காலனைக் காலால்
வீட்டினார் எனவும், சாந்த வெண்நீறு
         பூசிஓர் வெண்மதி சடைமேல்
சூட்டினார் எனவும், சுவடுதாம் அறியார்,
         சொல்லுஉள சொல்லும்நால் வேதப்
பாட்டினார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை : இறைவர் காட்டில் வசிப்பவர். நாட்டில் உள்ளவர். கொடுந்தொழில் செய்யும் இயமனைக் காலால் உதைத்தவர். நறுமணம் கமழும் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சடைமேல் அணிந்துள்ளவர். இவ்வாறு எத்தனை புகழ்ச்சொற்கள் உண்டோ அத்தனையும் சொல்லப் பெற்ற நால் வேதங்களாகிய பாட்டின் பொருளானவர். அப்படித் தாம் எல்லாமாய் இருக்கின்ற அடையாளம் பிறரால் அறியப்படாத தன்மையர்.


பாடல் எண் : 4
முருகின்ஆர் பொழில்சூழ் உலகினார் ஏத்த,
         மொய்த்தபல் கணங்களின் துயர்கண்டு,
உருகினார் ஆகி, உறுதிபோந்து உள்ளம்
         ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த,
         கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப்
பருகினார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை : இறைவன் அழகிய சோலைகள் சூழ்ந்த உலகத்தார் போற்றி வணங்க, நெருங்கிய பலவகைக் கணங்களின் துயரினைக் கண்டு உருகி, உள்ள உறுதியோடு, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற தங்கள் உடல்கள் கருநிறம் அடையப் பெற்றாராகிய திருமால் முதலிய தேவர்களெல்லாம் கைதொழுது வணங்க, அவரது துன்பத்தினைப் போக்கக் கடலுள் எழுந்த நஞ்சினை அமுதம்போல் வாங்கிப் பருகினவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.


பாடல் எண் : 5
பொன்னின்ஆர் கொன்றை, இருவடம் கிடந்து
         பொறிகிளர் பூணநூல் புரள,
மின்னின்ஆர் உருவின் மிளிர்வதுஓர் அரவம்,
         மேவுவெண் நீறுமெய் பூசி,
துன்னினார் நால்வர்க்கு அறம்அமர்ந்து அருளி,
         தொன்மையார் தோற்றமும் கேடும்
பன்னினார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை :இறைவர் பொன்போன்ற பெரிய கொன்றை மாலையை வண்டுகள் கிளர்ந்து ஒலிக்கும்படி மார்பில் அணிந்துள்ளவர். அத்துடன் முப்புரி நூலும் அணிந்துள்ளவர். மின்னல் போன்று ஒளியுடைய பாம்பை அணிந்துள்ளவர். திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். தம்மை வந்தடைந்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறப்பொருள் உபதேசித்தவர். தொன்மைக்கோலம் உடையவர். மாறி மாறி உலகைப் படைத்தலும், அழித்தலும் செய்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.


பாடல் எண் : 6
ஒண்பொனார் அனைய அண்ணல்வாழ்க எனவும்,
         உமையவள் கணவன்வாழ்க எனவும்,
அண்பினார் பிரியார் அல்லும்நன் பகலும்
         அடியவர் அடியிணை தொழவே,
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த,
         அல்லவர் தீயர்என்று ஏத்தும்,
பண்பினார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை : அன்பர்கள் இறைவனை, `ஒளிமிக்க பொன் போன்ற தலைவரே வாழ்க` எனவும், `உமையவள் கணவனே வாழ்க` எனவும் போற்றுவர். அவரை நெருங்கி அணுகப்பெற்று, இரவும், பகலும் பிரியாராகித் திருவடிகளைத் தொழுவர். பத்தர்களெல்லாரும் அவர் நன்மையைச் செய்பவர் என்று போற்ற, மற்றவர்கள் தீமையைச் செய்பவர் என்று சொல்லும் தன்மையினையுடையவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவர்.


பாடல் எண் : 7
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை,
         இருநிலம் வானுலகு எல்லை,
தெற்றினார் தங்கள் காரண மாகச்
         செருமலைந்து அடியிணை சேர்வான்,
முற்றினார் வாழு மும்மதில் வேவ
         மூஇலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை :தமக்கு எத்தகைய துன்பமும் செய்யாத தேவர்களையும், மண்ணுலக மாந்தர்களையும் துன்புறுத்தி, மோதி அழித்தலைச் செய்த பகைவர்கள் காரணமாகப் போர் செய்து, தம் திருவடிகளைச் சேரும் பொருட்டுத் தவம் முற்றினார்களாகிய மூவர்கள் வாழ்கின்ற முப்புரங்களும், (அம்மூவர் தவிர) வேகும்படி செய்து மூவிலைச் சூலமும், மழுவாயுதமும் ஏந்தியவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் ஆவார்.

  
பாடல் எண் : 8
ஒலிசெய்த குழலின் முழவம் அதுஇயம்ப,
         ஓசையால் ஆடல் அறாத
கலிசெய்த பூதங் கையினால் இடவே,
         காலினால் பாய்தலும், அரக்கன்
வலிகொள்வர், புலியின் உரிகொள்வர், ஏனை
         வாழ்வுநன் றானும்ஓர் தலையில்
பலிகொள்வர் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை : குழலும், முழவும் ஒலிக்க அவற்றின் ஓசையோடு ஆடலும் நீங்காத மகிழ்ச்சியுடைய திருக்கயிலாய மலையைப் பெயர்க்க இராவணன் அதன் கீழ்க் கையைச் செலுத்த, அது கண்டு இறைவன் தம் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமையை அழியுமாறு செய்தார். அவர் புலியின் தோலை ஆடையாக உடுத்தவர். நல்ல வாழ்வு உடையவர் எனினும் பிரம கபாலத்தைக் கையிலேந்திப் பிச்சை ஏற்பவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.


பாடல் எண் : 9
சேற்றினார் பொய்கைத் தாமரை யானும்
         செங்கண்மால் இவர்இரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை அறியார்,     
       துணைமையும் பெருமையும தம்மில்
சாற்றினார், சாற்றி ஆற்றலோம் என்னச்
         சரண்கொடுத்து, அவர்செய்த பாவம்
பாற்றினார் போலும், பந்தணை நல்லூர்
         நின்றஎம் பசுபதி யாரே.

         பொழிப்புரை : சேறு நிறைந்த பொய்கையில் மலரும் தாமரைமேல் வீற்றிருக்கும் பிரமனும், சிவந்த கண்களையுடைய திருமாலும் முறையே அன்ன உருவெடுத்து மேல்நோக்கி வானிலும், பன்றி உருவெடுத்துக் கீழ்நோக்கிப் பாதாளத்திலும் இறைவனின் முடியையும், அடியையும் தேடிச்செல்ல, அறியாது தோற்றனர். இறைவனின் தொன்மைத் தோற்றத்தை அறியாது துணையையும், பெருமையையும் தமக்குள் பேசித் தாமே பரம் எனப் பேசினர். பின் இறைவனிடம் யாம் வலியில்லோம் என்று முறையிட்டுத் தம் பிழையை மன்னிக்க வேண்ட, அவர் அவர்கட்குச் சரண் கொடுத்து அவர்களது பாவத்தை மாற்றியருளினார். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.

பாடல் எண் : 10
* * * * * * * * *

பாடல் எண் : 11
கல்இசை பூண, கலைஓலி ஓவாக்
         கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன், புல்இசை கேளா
         நல்தமிழ் ஞானசம் பந்தன்,
பல்இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி
         மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்
         தொல்வினை சூழகி லாவே.

         பொழிப்புரை : கற்கும் ஓசைகள் நிறைந்து கலைகளின் ஒலி நீங்காத திருக்கழுமலம் என்னும் பழமையான நகரில் அவதரித்த நல்ல பெருமையினையுடையவனும், அற்பர்களான புறச்சமயிகளின் மொழியைக் கேளாதவனுமாகிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பற்களுடன் கூடிய பிளந்த வாயினையுடைய மண்டை ஓட்டை ஏந்தியவனான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற திருப் பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தைப் போற்றி அருளிய பாடல்கள் பத்தினையும் ஓதவல்லவர்களைத் தொல்வினை வந்து சூழாது.

                                             திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------

         திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருப்பந்தணைநல்லூர்த் திருத்தாண்டகத் திருப்பதிகம் குறித்த வரலாறு ஏதும் பெரியபுராணத்தின் வாயிலாக அடியேனால் அறியப்படவில்லை.


                           6. 010    திருப்பந்தணைநல்லூர்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நோதங்கம் இல்லாதார், நாகம் பூண்டார்,
         நூல்பூண்டார், நூல்மேல்ஓர் ஆமை பூண்டார்,
பேய்தங்கு நீள்காட்டில் நட்டம் ஆடி,
         பிறைசூடும் சடைமேல்ஓர் புனலும் சூடி,
ஆதங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்,
         அனல்கொண்டார், அந்திவாய் வண்ணம் கொண்டார்,
பாதஅங்கம் நீறுஏற்றார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும் , மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர் . அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு , பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து , கையில் தீயினைக் கொண்டு , பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர் .


பாடல் எண் : 2
காடுஅலால் கருதாதார், கடல்நஞ்சு உண்டார்,
         களிற்றுஉரிவை மெய்போர்த்தார், கலன் அதுஆக
ஓடுஅலால் கருதாதார், ஒற்றி யூரார்,
         உறுபிணியும் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
பீடுஉலாம் தனைசெய்வார், பிடவ மொந்தை
         குடமுழவம் கொடுகொட்டி குழலும் ஓங்கப்
பாடலார், ஆடலார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து, களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து, மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு, ஒற்றியூரை உகந்து, அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து, பிடவம், மொந்தை, குடமுழா, கொடுகொட்டி, குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது, அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர்.


பாடல் எண் : 3
பூதப் படைஉடையார், பொங்கு நூலார்,
         புலித்தோல் உடையினார், போர்ஏற் றினார்,
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்,
         விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி
ஓதத்து ஒலிகடல்வாய் நஞ்சம் உண்டார்,
         உம்பரோடு அம்பொன் உலகம் ஆண்டு
பாதத் தொடுகழலார் பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப் பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர் . விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர் . வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர் . திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் .


பாடல் எண் : 4
நீ்ர்உலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்,
         நெருப்புஏற்றார் அங்கையில், நிறையும் ஏற்றார்,
ஊர்எலாம் பலிஏற்றார், அரவம் ஏற்றார்,
         ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்,
வார்உலா முலைமடவாள் பாகம் ஏற்றார்,
         மழுஏற்றார், மான்மறிஓர் கையில் ஏற்றார்,
பார்உலாம் புகழ்ஏற்றார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர் . மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று , ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று , பிச்சையிட வந்த மகளிரின் நிறை என்ற பண்பினைக் கவர்ந்தவர். அவர் மழு ஏந்தி , உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் .


பாடல் எண் : 5
தொண்டர் தொழுதுஏத்தும் சோதி ஏற்றார்,
         துளங்கா மணிமுடியார், தூய நீற்றார்,
இண்டைச் சடைமுடியார், ஈமஞ் சூழ்ந்த
         இடுபிணக்காட்டு ஆடலார் ஏமம் தோறும்,
அண்டத்துக்கு அப்புறத்தார், ஆதி ஆனார்,
         அருக்கனாய், ஆர்அழலாய், அடியார் மேலைப்
பண்டை வினைஅறுப்பார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவராய் , எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து , அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர் . நடுங்காத அழகிய தலையை உடையவர் . தூய நீறணிந்தவர். சடையில் முடிமாலை சூடியவர். இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடு காட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர் . அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார்.


பாடல் எண் : 6
கடம்மன்னு களியானை உரிவை போர்த்தார்,
         கானப்பேர் காதலார், காதல் செய்து
மடமன்னும் அடியார்தம் மனத்தின் உள்ளார்,
         மான்உரிதோல் மிசைத்தோளார், மங்கை காண
நடமன்னி ஆடுவார், நாகம் பூண்டார்,
         நான்மறையோடு ஆறுஅங்கம் நவின்ற நாவார்,
படம்மன்னு திருமுடியார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும் , உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான் , மத யானைத் தோலைப் போர்த்தவர் . எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர் . மான் தோலைத் தோளில் அணிந்து , நாகத்தைத் திருமேனியிற் பூண்டு , முடியிலும் பாம்பினைச் சூடி , நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓது கின்ற நாவினை உடையவர் . அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர் .


பாடல் எண் : 7
முற்றா மதிச்சடையார், மூவர் ஆனார்,
         மூவுலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்,
கற்றார் பரவுங் கழலார், திங்கள்
         கங்கையாள் காதலார், காம்புஏய் தோளி
பற்றுஆகும் பாகத்தார், பால்வெண் நீற்றார்,
         பான்மையால் ஊழி உலகம் ஆனார்,
பற்றார் மதில்எரித்தார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர் . அவர் பிறை சூடிய சடையினர் . மூவுலகும் துதிக்கும் முதல்வர் . சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர் . பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர் . வெள்ளியநீறு அணிபவர் . தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர் . பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார் .


பாடல் எண் : 8
கண்அமரும் நெற்றியார், காட்டார், நாட்டார்,
         கனமழுவாள் கொண்டதுஓர் கையார், சென்னிப்
பெண்அமருஞ் சடைமுடியார், பேர்ஒன்று இல்லார்,
         பிறப்புஇலார், இறப்புஇலார், பிணிஒன்று இல்லார்,
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
         மறையவரும் வந்துஏதிரே வணங்கி ஏத்தப்
பண்அமரும் பாடலார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும் , பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும் , நில உலகத்தவரும் வானுலகத்தவரும் , பிரமன் உபபிரமர்களும் , உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர் . கண் பொருந்திய நெற்றியை உடையவர் . கையில் மழு ஏந்தியவர் . காட்டிலும் , நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார் .


பாடல் எண் : 9
ஏறுஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார்,
         இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்,
நீறுஏறு மேனியார், நீலம் உண்டார்,
         நெருப்புஉண்டார், அங்கை அனலும் உண்டார்,
ஆறுஏறு சென்னியார், ஆனஞ்சு ஆடி
         அனல்உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்,
பாறுஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர். தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர். நீறணிந்த மேனியர். விடத்தை உண்டவர். வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர். உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர். கங்கை தங்கு சடையினர். ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர். தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர். புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர்.


பாடல் எண் : 10
கல்ஊர் கடிமதில்கள் மூன்றும் எய்தார்,
         காரோணம் காதலார், காதல் செய்து
நல்லூரார், ஞானத்தார், ஞானம் ஆனார்,
         நான்மறையோடு ஆறுஅங்கம் நவின்ற நாவார்,
மல்ஊர் மணிமலை யின்மேல் இருந்து
         வாள்அரக்கர் கோன்தலையை மாளச் செற்று,
பல்ஊர் பலிதிரிவார், பைங்கண் ஏற்றார்,
         பலிஏற்றார், பந்தணை நல்லூ ராரே.

         பொழிப்புரை :ஞானத்தை அடியார்க்கு வழங்குபவராய்த் தாமே ஞானவடிவாகி, நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய், நாகை, குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான். அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர். வலிமை மிகுந்த அழகிய கயிலாய மலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன் தலைகள் சிதறுமாறு கோபித்த அப்பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர். அவர் பைங்கண் ஏறு இவர்ந்து பணி ஏற்றவர்.
                                             திருச்சிற்றம்பலம்
   

          பட்டீச்சுரம் மவுன சுவாமிகள் பாடி அருளிய காம்பன தோளி பதிகத்தில் இருந்து, இத் திருத்தலத்து அம்பிகை மீது ஒரு பாடல்...

மருந்து ஒன்றும் இல்லையோ பொருந்து நோய் தீர்க்கவும்,
          மனம் அதில் கருணை இலையோ?
     வஞ்சனேன் என்னினும் அஞ்சினேன் அஞ்சினேன்,
          வன் பிணிக்கு ஆற்றகில்லேன்,
அரும் தவர்க்கு இரங்கி நல்லருள் புரியும் அம்பிகை!
          அமரர் பணிகின்ற அம்மே!
     அன்று வளர் காழியர் கவுசியக் கன்றினுக்கு
          அருள்ஞான அமுதம் உதவி,
இருந்தமிழ் வேதமுறை பாடிடக் கேட்டு நல்
          இன்புற்று இருந்த தாயே!
     எளியனுக்கு இரங்கியே கருணை நோக்கினால் எனக்கு
          உறுபிணி அகற்றி அருள்வாய்.
பரிந்து நாவரையர் உறு சூலைமுன் தீர்த்தநின்
          பட்சம் அது எனக்கும் வையாய்,
     பந்தணை நல்லூரில்அமர் காம்புஅனைய தோளியே!
          பரம சுகம் அருளும் உமையே.

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...