திருக் கஞ்சனூர்





திருக் கஞ்சனூர்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதியுள்ளது. திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள தலம்.

     மயிலாடுதுறை - கல்லணை சாலையில், அஞ்சவார்த்தலை என்னும் இடத்தில், பிரியும் பந்தநல்லூர் - கும்பகோணம் நாலையில் செறன்று, கதிராமங்கலத்தை அடைந்து, அங்கிருந்து இடப்புறம் கும்பகோணம் செல்லும் சாலையில் சென்று, திருக் கோடிகாவல் என்னும் திருத்தலத்தைத் தாண்டி, கோட்டூர் கஞ்சனூர் என்று கைகாட்டிப் பலகை உள்ள திசையில், வலப்புறமாகத் திரும்பிச் சென்றால் தெருக்கோடியில் திருக்கோயிலைக் காணலாம்.

இறைவர்                   : அக்கினீசுவரர்.

இறைவியார்               : கற்பகாம்பிகை

தல மரம்                   : பலாச மரம் (புரசு)

தீர்த்தம்                    : அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : அப்பர் - மூவிலைவேல் சூலம்


          முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்க தாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை, தந்தை எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். (இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராசர் சந்நிதியிலும் உள்ளது.) இறைவன் தட்சிணாமூர்த்தியாக வந்து சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தார். மேலும், இங்கு ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி தான் அவ்வுணவை உண்ணும் காட்சியைத் தருவார். ஒரு நாள் அக்கனவு தோன்றவில்லை; காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழை அந்தணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட, செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து, அச்செல்வர் அவரை நாடிச் சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

          இவ்வூரில் பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்பக்தர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒருபாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு" என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள் புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது. இதன் தொடர்பாகவே இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று.

          இங்குள்ள நந்தி புல் உண்ட வரலாறு - அந்தணர் ஒருவர் புல்லுக்கட்டொன்றைத் தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக் கன்று ஒன்று இறந்து விட்டது. இதனால் பசுத்தோஷம் அவருக்கு நேர்ந்தது என்று பிராமணர்கள் அந்த ஏழை அந்தணரை விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாது ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார் - அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தைச் சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாகச் சொன்னார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்கட்கு நேரடிச் சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அவ்வந்தணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்தக் கல் நந்தியிடம் தருமாறு பணித்தார். அவ்வந்தணரும் அவ்வாறே செய்து, "கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நிங்கும் " என்று சொல்லிப் புல்லைத்தர, அந்த நந்தியும் உண்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. (இந்நந்தி புல் உண்டதால் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை).

          பலாசவனம், பராசரபுரம், பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திபுரி என்பன இத்தலத்திற்குள்ள வேறு பெயர்கள்.

          பராசரருக்குச் சித்தப்பிரமை நீங்கியதும்; பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்ததும்; அக்கினிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்ததும்; சந்திரனின் சாபம் நீங்கியதும்; கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி (மூத்திர திருச்சிர நோய்) நீங்கியதும்; மாண்டவ்ய புத்திரர்களுக்கு மாத்ருகத்தி தோஷம் நீங்கியதும்; விருத்த காளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்காய் முனிவர் ஆகியோர் அருள் பெற்றதும்; கலிக்காமருக்குத் திருமணம் நடந்ததும்; மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினதும் ஆகிய பல்வகைப் பெருமைகளையும் உடையது இத்தலம். மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்களை அடுத்து, பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சித் தருகின்றார்.

மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

         மானக்கஞ்சாற நாயனார் நாயன்மார்களில் ஒருவர். கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் தோன்றினார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார்.

         மானக்கஞ்சாறர் மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தவர். பணிவு உடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும்பொருள் எல்லாம் சிவனடியார்க்கு உரியன எனும் தெளிவால் சிவனடியார் வேண்டுபவற்றை அவர் வேண்டுமுன் குறிப்பு அறிந்து கொடுப்பவர்.

         கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறை ஒன்று இருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். பெற்றோரின் பிறப்பு ஒழிக்கப் பிறந்த அப்பெண் கொடி, பேரழகுடன் வளர்ந்து திருமணப் பருவம் எய்தினார்.

         கஞ்சாறர் குடிக்கு ஒத்த சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவநேசச் செல்வருக்கு, அச்செல்வ மகளை மணம் பேசி, முதியவர்கள் சிலர் வந்தனர். கஞ்சாறர் மனம் மகிழ்ந்து மணத்திற்கு இசைந்தார்.  திருமண நாள் குறித்தனர். கஞ்சாறு மணக்கோலம் பெற்றது. மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார்.

         திருமண ஊர்வலம் கஞ்சாறு நகருள் வருவதற்கு முன், கஞ்சாறரது சிந்தையுள் உறையும் சிவபெருமான் மாவிரதி வேடம் பூண்டு அவர்தம் திருமனைக்கு எழுந்தருளினார். நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பொக்கணம், பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்றவாறு அவர் திருக்கோலம் பொலிந்தது. மாவிரதிக் கோலத்துச் சிவனடியார் அம்மங்கல நாளில் எழுந்தருளியது கண்டு மானக்கஞ்சாறர் மனம்மிக மகிழ்ந்தார். அவரை அன்போடு பணிந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து இன்மொழி கூறி ஆசனமளித்தார். மாவிரதியார் 'இங்கு நிகழும் மங்கலச் செயல் என்ன?' என்று கேட்டார். 'அடியேன் பெற்ற மகளது திருமணம்' எனக் கஞ்சாறர் கூறினார். உடனே 'மங்கலம் உண்டாகுக' என மாவிரதையார் வாழ்த்தினார். கஞ்சாறனார் திருமணக்கோலம் பூண்டிருந்த மகளை அழைத்து வந்து மாவிரதியாரை வணங்கச் செய்தார். திருவடியில் வீழ்ந்து வணங்கிய மணமகளது கருமேகம் போன்ற கூந்தலைப் பார்த்து மாவிரதியார் 'இது நமது பஞ்சவடிக்கு ஆகும்' எனக் கூறினார். அது கேட்ட கஞ்சாறர் பிறப்பு அறுப்பவர் போன்று தம் மகள் கூந்தலை உடைவாளால் அடியோடு அரிந்து, அடியவரிடம் கொடுத்தார். அடியவரும் அதனை வாங்குவார் போன்று மறைந்தருளி வானிலே உமையம்மையாரோடும் வெள்ளை எருதின்மேல் தோன்றினார். அது கண்டு மெய்மறந்து வீழ்ந்து கும்பிட்டு எழுந்து நின்ற கஞ்சாறர்க்கு "உமது மெய்யன்பை உலகமெல்லாம் விளங்கச் செய்தோம்" என அருளினார். உச்சிமேற் குவித்த கையராய் பெருமானது பெருங்கருணைத் திறத்தைப் போற்றும் பேறு பெற்றார் மானக்கஞ்சாற நாயனார். கஞ்சாறர்க்கு அருள் செய்து கண்ணுதலார் மறைந்தருள், ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணமற் போனதற்கு மனந்தளர்ந்தார். இறைவர் அருளிய சோபன வார்தையின் திறம் கேட்டு தளர்ச்சி நீங்கினார். வானவர் நாயகர் அருளால் மலர் புனைந்த கூந்தல் வளரப்பெற்ற பூங்கொடி போல்வாளாகிய மங்கையை மணம் புனர்ந்து தம் மூதூருக்குச் சென்றணைந்தார்.

     தந்தையின் விருப்பத்திற்கு ஏற், மானக்கஞ்சாறர் மகள் தனது தலைமுடியைத் தர இசைந்ததால், மானக்கஞ்சாறர் பேறு பெற்றார்.  பெண் குயந்தையைப்பெற்றாலும் வீடுபேறு உண்டு என்பதைத் தெய்வச் சேக்கிழார் பெருமான், பெரியபுராணத்தில் பின்வருமாறு பாடிக் காட்டிஉள்ளார் என்பதை அன்பர்கள் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.

     குழைக்குஅலையும் வடிகாதில்
                  கூத்தனார் அருளாலே
         மழைக்குஉதவும் பெருங்கற்பின்
                  மனைக்கிழத்தி யார்தம்பால்
         இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த
                  இப்பிறவிக் கொடுஞ்சூழல்
         பிழைக்கும்நெறி தமக்கு உதவப்
                  பெண்கொடியைப் பெற்று எடுத்தார்.

         பஞ்சாட்சர மகிமையை வெளிபடுத்திய ஹரதத்த சிவாசாரியார் அவதரித்த தலம். இவருக்கு இறைவன் அருள் செய்த வரலாறு தனிப்பெருமையுடையது. ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.
         
          நடராச சபையில் நடராசர் மூலத் திருமேனியில் சிவகாமியுடன் (சிலாரூபமாக) இருப்பது தனிச் சிறப்பு; இம்மூர்த்தியே பராசரருக்கு தாண்டவக் காட்சித் தந்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது.

          மூலவர் சுயம்பு மூர்த்தி - உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார். அம்பாள் திருமணக் கோலக் காட்சி தருகிறார்.

          நாடொறும் ஆறு கால வழிபாடுகள்.

          சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக் கஞ்சனூர் ' என்றும்; இறைவன் பெயர் 'அக்னீஸ்வரம் உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கந்தமலர் அஞ்சனூர் செய்த தவத்தால் அப் பெயர் கொண்ட கஞ்சனூர் வாழும் என் தன் கண்மணியே" என்று போற்றி உள்ளார்.

     இத் திருத்தலத்திற்கு, திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளியதாக, பெரிய புராணத்தில் காணப்பட்டாலும், திருப்பதிகம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 292
திருக்கோடி காவில் அமர்ந்த
         தேவர் சிகாமணி தன்னை,
எருக்கோடு இதழியும் பாம்பும்
         இசைந்துஅணிந் தானை,வெள்ஏனப்
பருக்கோடு அணிந்த பிரானைப்
         பணிந்து,சொல் மாலைகள் பாடி,
கருக்கோடி நீப்பார்கள் சேரும்
         கஞ்சனூர் கைதொழச் சென்றார்.

         பொழிப்புரை : திருக்கோடிகாவில் அமர்ந்திருக்கும் தேவர்களின் தலைவரான இறைவரை, எருக்கு மலருடனே கொன்றை மலரையும் அணிந்தவரை, வெள்ளைப் பன்றியான திருமாலின் பருத்த கொம்பைப் பூண்ட பெருமானாரைப் பணிந்து சொல்மாலைகளாலான திருப்பதிகங்களை பாடி, பிறப்பு அறுக்கலுற்றோர் அடைவதற்கு இடமான திருக்கஞ்சனூரை வணங்குவதற்குச் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 293
கஞ்சனூர் ஆண்டதம் கோவைக்
         கண்ணுற்று இறைஞ்சி,முன் போந்து,
மஞ்சுஅணை மாமதில் சூழும்
         மாந்துறை வந்து வணங்கி,
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி,
         அங்குஅகன்று, அன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
         திருமங் கலக்குடி சேர்ந்தார்.

         பொழிப்புரை : திருக்கஞ்சனூரை ஆண்டருளுகின்ற தம் இறைவரைக் கண்டு கும்பிட்டு மேற்சென்று, மேகம் தவழ்கின்ற மதில் சூழ்ந்த `திருமாந்துறை\' என்ற பதிக்குச் சென்று வணங்கிச் சொல் மாலைபாடி, அங்கிருந்து புறப்பட்டு அன்பர்கள் எதிர்கொள்ளச் சிவந்த சடையையுடைய அந்தணரான சிவபெருமான் நிலையாக வீற்றிருக்கின்ற `திருமங்கலக்குடியை\' அடைந்தார்.

         குறிப்புரை : திருக்கஞ்சனூர், திருமாந்துறை ஆகிய பதிகளுக்குரிய திருப்பதிகங்கள் கிடைத்தில.

         திருமங்கலக்குடியில் அருளிய பதிகம் `சீரினார் மணியும்\' (தி.2 ப.10) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

---------------------------------------------------------------------------------------------------------



திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சி,
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்,
எங்கும் நிறைந்த புகழாளர்,
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ள,
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : திருப்பழையாற வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.

3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.

4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.

5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.

6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.

7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.

8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.

9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.

10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.

12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.

13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.

14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை

15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.

16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.


6. 090    திருக்கஞ்சனூர்         திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மூவிலைநல் சூலம்வலன் ஏந்தி னானை,
         மூன்றுசுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை,
நாவலனை, நரைவிடைஒன்று ஏறு வானை,
         நால்வேதம் ஆறுஅங்கம் ஆயி னானை,
ஆவினில்ஐந்து உகந்தானை, அமரர் கோவை,
         அயன்திருமால் ஆனானை, அனலோன் போற்றும் 
காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை : மூவிலை கொண்ட நல்ல சூலத்தை வலக்கையில் ஏந்தினவனும், சூரியன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுடர்களாகிய கண்ணினனும் அழகிய தோற்றத்தினனும் , நாவலனும் , வெள்ளிய இடபம் ஒன்றை ஊர்பவனும் , வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆயினவனும் , பசு தரும் பஞ்சகவ்வியத்தை விரும்பியவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , பிரமனும் திருமாலும் ஆனவனும் , அக்கினியால் போற்றப்படும் காவலனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல்வரும் பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 2
தலைஏந்து கையானை, என்புஆர்த் தானை,
         சவந்தாங்கு தோளானை, சாம்ப லானை,
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
         கோள்நாகம் அசைத்தானை, குலமாம் கைலை
மலையானை, மற்றுஒப்பார் இல்லா தானை,
         மதிகதிரும் வானவரும் மாலும் போற்றும்
கலையானை, கஞ்சனூ ராண்ட கோவை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை : பிரமகபாலத்தை ஏந்திய கையினனும், எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தவனும், பிரமவிட்டுணுக்களுடைய எலும்புக் கூடுகளைத் தாங்கும் தோளினனும், வெண்ணீற்றுப் பூச்சினனும் , கொத்தாய்ப் பொருந்திய நறிய கொன்றை மலர்களை முடிமேல் கொண்டவனும் , கொடுமை வல்ல நாகத்தை உடை மேல் கட்டியவனும் , மேன்மை மிக்க கயிலை மலையவனும் , தனக்கு உவமை யில்லாதவனும் , சந்திரனும் , சூரியனும் தேவர்களும் திருமாலும் போற்றும் உருவத்திருமேனி உடையவனும் , கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும்பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 3
தொண்டர்குழாம் தொழுதுஏத்த அருள்செய் வானை,
         சுடர்மழுவாள் படையானை, சுழிவான் கங்கைத்
தெண்திரைகள் பொருதுஇழிசெஞ் சடையி னானை,
         செக்கர்வான் ஒளியானை, சேராது எண்ணிப்
பண்டுஅமரர் கொண்டுஉகந்த வேள்வி எல்லாம்
         பாழ்படுத்துத் தலைஅறுத்துப் பல்கண் கொண்ட
கண்டகனை, கஞ்சனூ ராண்ட கோவை,
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

         பொழிப்புரை :தொண்டர் கூட்டமாய்த் திரண்டு தொழுது புகழ அவர்க்கு அருள்செய்பவனும் , ஒளிரும் மழுவாயுதத்தை உடையவனும் , சுழியையுடையதும் , தெளிந்த திரைகளால் மோதி இழிவதும் ஆகிய ஆகாய கங்கையைத் தாங்கிய சடையினனும் , செவ்வானம் போன்ற ஒளியினனும் , தன்னை அடையாமல் பண்டு அமரர்கள் கூடி ஆராய்ந்து மேற்கொண்டு விரும்பிச் செய்த தக்கனுடைய வேள்வி முழுதும் பாழ் செய்து தக்கனையும் எச்சனையும் தலையறுத்துச் சூரியனைப் பல்தகர்த்துப் பகனைக் கண் பறித்துக் கொண்ட கொடியவனும் , கஞ்சனூரை ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 4
விண்ணவனை, மேருவில்லா உடையான் தன்னை,
         மெய்யாகி, பொய்யாகி, விதியா னானை,
பெண்ணவனை, ஆணவனை, பித்தன்தன்னை,
         பிணம்இடுகாடு உடையானை, பெருந்தக் கோனை,
எண்அவனை, எண்திசையுங் கீழும் மேலும்
         இருவிசும்பும் இருநிலமும் ஆகித் தோன்றும்
கண்ணவனை, கஞ்சனூ ராண்ட கோவை,
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை :சிவலோகனாய் , மேருமலையை வில்லாக உடையவனாய் , ஞானியர்க்கு உண்மைப்பொருளாகி , உணர்வில்லார்க்கு இல்பொருள் ஆகி அறநெறியும் அருள்நெறியும் ஆனவனும் , பெண் ஆண் ஆனவனும் , பித்தனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டை இடமாகக் கொண்டவனும் , மேலான தகுதியினனும் , எண்ணமானவனும் , எட்டுத் திசைகளும் கீழும் மேலும் பெரிய ஆகாயமும் பரந்த நிலமும் ஆகித் தோன்றுபவனும் , கண்போற் சிறந்தவனும் , கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 5
உருத்திரனை, உமாபதியை, உலகு ஆனானை,
         உத்தமனை, நித்திலத்தை, ஒருவன் தன்னை,
பருப்பதத்தை, பஞ்சவடி மார்பி னானை,
         பகல்இரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பு அதனை, நித்திலத்தின் தொத்துஒப் பானை,
         நீறுஅணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனை, கஞ்சனூ ராண்ட கோவை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை :உருத்திரனும், உமாபதியும், உலகு ஆள்பவனும், உத்தமனும், நித்திலம் அனையவனும், ஒப்பற்றவனும், மலையாய் விளங்குபவனும், மயிர்க்கயிறாகிய பஞ்சவடிப்பூணூல் திகழ் மார்பினனும், பகலும், இரவும், நீரும், ஆகாயமும், பரவிய நெருப்பும் ஆனவனும், முத்தின்கொத்து ஒக்கத் திகழும் திருநீற்றுக் கீற்றினனும், திருநீற்றைப் பூசிய மேனியை உடையவராய், இடைவிடாது நினைக்கும் அன்பர்களின் மனத்தில் உறைபவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.


பாடல் எண் : 6
ஏடுஏறு மலர்க்கொன்றை, அரவு, தும்பை,
         இளமதியம், எருக்கு,வான் இழிந்த கங்கை,
சேடுஎறிந்த சடையானை, தேவர் கோவை,
         செம்பொன்மால் வரையானை, சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
         கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளும்
காடவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை :இதழ் செறிந்த கொன்றைமலர் , பாம்பு , தும்பைப்பூ , பிறைச்சந்திரன் , எருக்க மலர் , வானின்றிறங்கிய கங்கை ஆகியவைகளால் அழகு விளங்கிய சடையினனும் , தேவர்க்குத் தலைவனும் , பெரிய செம்பொன்மலை போன்றவனும் , தன்னை அடைந்தார் சிந்தையில் கேடின்றி இருப்பவனும் , கீழ்வேளூரிலிருந்து ஆளும் அரசனும் , மடவார்கைகளில் அணிந்துள்ள வளைகளைப் பொய்பேசிக் கவர்ந்து கொள்ளும் அதிசயிக்கத்தக்க திறனுடையவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 7
நாரணனும் நான்முகனும் அறியா தானை,
         நால்வேதத்து உருவானை, நம்பி தன்னை,
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்
         பால்வணனை, தீவணனை, பகல் ஆனானை,
வார்பொதியும் முலையாள்ஓர் கூறன் தன்னை,
         மான்இடம்கை உடையானை, மலிவார் கண்டம்
கார்பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை :திருமாலும் , நான்முகனும் , அறியாதவனும் , வேதமந்திர உருவினனும் , ஆடவருட்சிறந்தவனும் , பூதங்கள் தான் ஏவிய பணிகளைச் செய்ய தான் பிச்சை ஏற்று உண்ணும் பால் நிறத்தவனும் , தீ நிறத்தவனும் , பகல் ஆனவனும் , கச்சணிந்த கொங்கை யாளை உடலின் ஒரு கூற்றாகக் கொண்டவனும் , மானை இடக்கையில் ஏந்தியவனும் , தேவர்கள் மகிழ்ச்சி நிறைவதற்குக் காரணமானவனாய் , கழுத்துக் கருநிறத்தால் மூடப்பட்டவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 8
வானவனை, வலிவலமும் மறைக்காட் டானை,
         மதிசூடும் பெருமானை, மறையோன் தன்னை,
ஏனவனை, இமவான்தன் பேதை யோடும்
         இனிதுஇருந்த பெருமானை, ஏத்து வார்க்குத்
தேன்அவனை, தித்திக்கும் பெருமான் தன்னை,
         தீதுஇலா மறையோனை, தேவர் போற்றும்
கானவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை : வானிடத்தவனும் , வலிவலமும் மறைக்காடும் உறைபவனும் , மதிசூடும் பெருமானும் , ஆதி அந்தணனும் , மற்றை வருணத்தினனும் , இமவான் மகள் பார்வதியோடும் இனிதிருந்து அருள்செய்யும் பெருமானும் , தன்னை ஏத்தி வணங்குவார்க்குத் தேன் போன்று தித்திப்பவனும், தீது இல்லாமல் அவர்களைக் காத்தற் பொருட்டுக் காலம்பார்த்துக் கரந்து நிற்பவனும் , தேவராற் போற்றப்படும் வேட்டுவனும் கஞ்சனூராண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 9
நெருப்புஉருவத் திருமேனி வெண்ணீற் றானை,
         நினைப்பார்தம் நெஞ்சானை, நிறைவு ஆனானை,
தருக்குஅழிய முயலகன்மேல் தாள்வைத் தானை,
         சலந்தரனைத் தடிந்தோனை, தக்கோர் சிந்தை
விருப்பவனை, விதியானை, வெண்ணீற் றானை,
         விளங்குஒளியாய், மெய்ஆகி, மிக்கோர் போற்றும்
கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.
        
         பொழிப்புரை :நெருப்புநிறமுடைய அழகிய திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவனும் , நினைப்பவர் நெஞ்சில் நிலைத்து நிற்பவனும் , எங்கும் நிறைந்தவனும் , முயலகன்மேல் காலை ஊன்றி ஆடியவனும் , சலந்தரனைப் பிளந்திட்டவனும் , ஞானிகள் சிந்தையில் விரும்பி வாழ்பவனும் , வேதவிதியானவனும் , சிவாகமவிதியாய் விளங்குபவனும் , இயல்பாகவே விளங்கும் ஒளியாய் , மெய்ப் பொருளாய் , மேலோர்கள் போற்றும் கருத்தாய்த் திகழ்பவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .


பாடல் எண் : 10
மடல்ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று
         மலர்க்கண்இடந்து இடுதலுமே மலிவான் கோலச்
சுடர்ஆழி நெடுமாலுக்கு அருள்செய் தானை,
         தும்பிஉரி போர்த்தானை, தோழன் விட்ட
அடல்ஆழித் தேருடைய இலங்கைக் கோனை
         அருவரைக்கீழ் அடர்த்தானை, அருளார் கருணைக்
கடலானை, கஞ்சனூர் ஆண்ட கோவைக்
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டுஉய்ந் தேனே.

         பொழிப்புரை :இதழுடைய வட்டமான தாமரை மலரில் ஆயிரத்தில் ஒன்றாகத் தன் தாமரை மலர்போலும் கண்ணைப் பெயர்த்து இடுதலும் நிறைந்த பெரிய அழகினையும் ஒளியையும் உடைய சக்கராயுதத்தை நெடு மாலுக்கு அருள் செய்தவனும் , யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் , தன் நண்பன் குபேரன் தோற்றுக் கைவிட்ட வலிய சக்கரத்தையுடைய தேரினைத் தன் உடைமை ஆக்கிக்கொண்ட இலங்கைக்கோனை எடுத்தற்கரிய கயிலை மலைக்கீழ் வைத்து நெரித்தவனும் , பின் அவனுக்கு அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலானவனும், கஞ்சனூர் ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக்கண்டு, மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...