திருக் கோடிகா
(திருக்கோடிகாவல்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில் கோடிகாவல் என்று வழங்குகிறது.
மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம்
வந்தும் இத்திருத்தலத்தை அடையலாம்.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில்
உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் வரலாம்.
இறைவர்
: கோடீசுவரர், கோடிநாதர்
இறைவியார்
: திரிபுரசுந்தரி,வடிவாம்பிகை
தீர்த்தம் : சிருங்க திர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - இன்று நன்று.
2. அப்பர் -1. நெற்றிமேற் கண்ணினானே,
2. சங்குலா முன், 3. கண்டலஞ்சேர்.
சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில்
அருள்கின்ற தலம்.
அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில்
உள்ள தலம்
தலத்தின் தீர்த்தமான காவேரி நதி
உத்திரவாகினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில்
இத்தலத்தில் காவிரியில் நீராடினால்,
எல்லா
பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்
இத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி
என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.
கண்டராதித்த சோழரின் மனைவியுமான
செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக
திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.
மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம்
பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப
விமோசனம் பெற்ற தலம்
அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல
இறைவனை வழிபட்டு ஞானமுக்தி அடைந்த தலம்.
ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில்
வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய
திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து
கூறப்பட்ட தலம்
இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற
பெருமையுடைய தலம்.
ஐந்து நிலை ராஜகோபுர வாயில்
வழியே உள்ளே நுழைந்தால் எதிரில் கவசமிட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தியும் காட்சி தருகின்றன.
முன்மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி
உள்ளது. வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். உட்பிரகார வலத்தில்
கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்கமூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் உள்ளன.
கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தனவிநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வலம் முடித்து
உள்மண்டபம் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் தரிசித்து வாயில்
கடந்தால் நேரே மூலவர் தரிசனம். மூலவர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும்
சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர்.
இது இத்தலத்தின் விசேஷ அமைப்பாகும். திருகோடீசுவரர் சதுரபீடத்தில் உயர்ந்த
பாணத்துடன் சுயம்பு லிங்க உருவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.
கருவறை மேற்கு சுற்றில் முதலில் உள்ள
அறையில் நாகலிங்கம், காசி விசுவநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள்
விக்ரகங்கள் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தெய்வானையுடன் அசுரமயில் வாகனத்தில்
முருகர் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத
சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும்
தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது.
மாந்தாவின் கையில் தாமரை மலரும்,
மாந்தியின்
முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே
கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது. வடக்குச் சுற்றில் கோயிலின்
தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், அதையடுத்து சண்டிகேஸ்வரர்
தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும்
(கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி
உள்ளது.
ஆலயத்தில் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை.
சிவபெருமானின் 64 லீலைகளில்
பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல
இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும்
விதத்தில் அமைத்திருக்கின்றன.
இராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின்
போர்க்காட்சிகள், மனுநீதி சோழன்
நீதிவரலாறு, கண்ணனின் கோகுல
லீலைகள், மிக நுணுக்கமாக
செதுக்கப்பட்ட 22 விதவிதமான
வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே
போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன.
தெற்குச் சுவரில் முதலில் நடராஜர் சிற்பம் உள்ளது. இடதுபுறம் சிவகாமியும், வலதுபுறம் காரைக்கால் அம்மையார் பேய்
உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள்.
திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர்.
அடுத்து வரிசையாக பிட்சாடனர், விஷ்ணுவின் மோகினி
அவதாரம், ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில்
பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக
நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச்
சுவற்றில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற
கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில்
மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில்
கௌதம மகரிஷியும் அடுத்து பிரம்மாவும், தொடர்ந்து
காஸ்யப ரிஷி, அஷ்டபுஷ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில்
பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள்
சிற்பம் அமைந்துள்ளது.
காசியைப் போல இத்தலத்தில்
வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் மயானம் தனியாக இல்லை.
இவ்வூரில் மறிப்பவர்களை, காவிரி நதியின்
மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை
தொடர்கிறது.
வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "அஞ்சுகங்கள் நாடிக் கா உள்ளே
நமச்சிவாயம் புகலும் கோடிக்கா மேவும் குளிர்மதியே" என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் 12-30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 291
செழுந்திரு
வேள்விக் குடியில்
திகழ்மண வாளநல் கோலம்
பொழிந்த
புனல்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி
இரவில்
தழும்பிய
தன்மையும் கூடத்
தண்தமிழ் மாலையில்
பாடிக்
கொழுந்துவெண்
திங்கள் அணிந்தார்
கோடி காவில்சென்று
அடைந்தார்.
பொழிப்புரை : அம்மையப்பராகிய
பெருமான், வளம் மிக்க `திருவேள்விக்குடியில்' வீற்றிருக்கும் மணவாளத் திருக்கோலத்தை, பொய்யாமல் வருகின்ற நீர் வளம் கொண்ட தூய
`திருத்துருத்தியில்' பகலில் காணக்காட்டி, இரவில் இவ்வேள்விக்குடியில்
அக்கோலத்துடனேயே எழுந்தருளிய தன்மையையும் சேர்த்துக் குளிர்ந்த தமிழ்மாலை பாடி, முளைக்கும் கொழுந்தைப் போன்ற வெண்மையான
பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் `திருக்கோடிகா\' என்ற திருப்பதிக்குச் சென்று அடைந்தார்.
குறிப்புரை : திருத்துருத்தியையும்
திருவேள்விக்குடியையும் இணைத்து ஒரே பதிகத்தில் பாடப் பெற்றுள்ளன. காரணம், இறைவன் உமையம்மையாருக்குப் பகலில் திருத்துருத்தியிலும், இரவில் திருவேள்விக்குடியிலுமாக
வீற்றிருந்தருளிக் காட்சி கொடுத்தருளியமையாகும். இவ்வகையில் அமைந்த திருப்பதிகம், `ஓங்கி மேலுழிதரு' (தி.3 ப.90) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த
திருப்பதிகமாகும்.
பெ.
பு. பாடல் எண் : 292
திருக்கோடி
காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை,
எருக்கோடு
இதழியும் பாம்பும்
இசைந்துஅணிந் தானை,வெள்ஏனப்
பருக்கோடு
அணிந்த பிரானை,
பணிந்துசொல் மாலைகள்
பாடி,
கருக்கோடி
நீப்பார்கள் சேரும்
கஞ்சனூர் கைதொழச்
சென்றார்.
பொழிப்புரை : திருக்கோடிகாவில்
அமர்ந்திருக்கும் தேவர்களின் தலைவரான இறைவரை, எருக்கு மலருடனே கொன்றை மலரையும்
அணிந்தவரை, வெள்ளைப் பன்றியான
திருமாலின் பருத்த கொம்பைப் பூண்ட பெருமானாரைப் பணிந்து சொல்மாலைகளாலான
திருப்பதிகங்களை பாடி, பிறப்பு
அறுக்கலுற்றோர் அடைவதற்கு இடமான திருக்கஞ்சனூரை வணங்குவதற்குச் சென்றார்.
குறிப்புரை : இத்திருப்பதியில்
அருளியது, `இன்று நன்று' (தி.2 ப.99) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
2.099 திருக்கோடிகா பண் -
நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
இன்றுநன்று
நாளைநன்று என்றுநின்ற இச்சையால்,
பொன்றுகின்ற
வாழ்க்கையைப் போகவிட்டு,
போதுமின்
மின்தயங்கு
சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று
சென்னியான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :இன்றைய நாள் நல்லது .
நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது
அழிந்தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள். மின்னல் போன்ற
ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை முடியில்
சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக.
பாடல்
எண் : 2
அல்லல்மிக்க
வாழ்க்கையை ஆதரித்து இராது,
நீர்
நல்லதுஓர்
நெறியினை நாடுதும், நடம்மினோ,
வில்லைஅன்ன
வாள்நுதல் வெள்வளையொர் பாகமாம்
கொல்லைவெள்ளை
ஏற்றினான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :அல்லல் மயமான
வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப்
புறப்படுவீர்களாக . வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும் , வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு,
முல்லை
நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை
அடைவீர்களாக .
பாடல்
எண் : 3
துக்கமிக்க
வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து, நீர்
தக்கதோர்
நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்,
அக்குஅணிந்து
அரைமிசை ஆறுஅணிந்த சென்னிமேல்
கொக்கிஇற
குஅணிந்தவன் கோடிகாவு சேர்மினே
பொழிப்புரை :துக்கம்மிகுந்த
வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி , நீர்
தக்கதொரு நெறியை அடைய வாருங்கள் . அரை மிசை என்பு மாலையை அணிந்தவனாய் , கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு
அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள்.
பாடல்
எண் : 4
பண்டுசெய்த
வல்வினை பற்ற்அறக் கெடும்வகை
உண்டு,உமக்கு உரைப்பன்நான், ஒல்லை நீர் எழுமினோ,
மண்டுகங்கை
செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுஉகந்த
மார்பினான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :முற்பிறவிகளில் செய்த
வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு. அதனை உங்கட்குக்
கூறுகிறேன் . விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக. செஞ்சடையில் கங்கையைச் சூடி
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை
அடைவீர்களாக.
பாடல்
எண் : 5
முன்னைநீர்செய்
பாவத்தால் மூர்த்திபாதம் சிந்தியாது
இன்னம்
நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழும்மினோ,
பொன்னைவென்ற
கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொல்நவிலும்
வேலினான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :முற்பிறவியில் நீர் , செய்த பாவத்தால் சிவமூர்த்தி யின்
திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே , புறப்படுவீர்களாக . பொன்னையும் வென்ற
அழகிய கொன்றை சூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பினனும், கொல்லும் தன்மை வாய்ந்த வேலினை
உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக .
பாடல்
எண் : 6
ஏவம்
மிக்க சிந்தையோடு இன்பம் எய்த லாம்என,
பாவம்எத்
தனையும்நீர் செய்துஒரு பயன்இலைக்
காவல்மிக்க
மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவம்
மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :குற்றம் மிக்க
சிந்தையோடு இன்பத்தை அடையலாம் என்று எண்ணி, எத்தனை பாவங்களைச்
செய்து வாழ்கிறீர்கள். இதனால் என்ன பயனும்
இல்லை. காவலோடு இருந்த முப்புரங்களையும், சினந்து நெற்றிக் கண்ணால் எரித்து, முப்புராதிகளுக்கு எருள் புரிந்த
பெருமான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
பாடல்
எண் : 7
ஏண்அழிந்த
வாழ்க்கையை இன்பம்என்று இருந்து, நீர்
மாண்அழிந்த
மூப்பினால் வருந்தல்முன்னம் வம்மினோ,
பூணல்வெள்
எலும்பினான் பொன்திகழ் சடைமுடிக்
கோணல்வெண்
பிறையினான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :பெருமையற்ற உலக
வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால்
வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்புமாலையை அணி கலனாகப் பூண்டு, பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த
வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .
பாடல்
எண் : 8
மற்றுஇவ்வாழ்க்கை
மெய்எனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின்
சேவடி, பணிந்துவந்து எழுமினோ,
வெற்றிகொள்
தசமுகன் விறல்கெட இருந்ததுஓர்
குற்றம்இல்
வரையினான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :இவ்வாழ்க்கையை
மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி
வாழ்வீர்களாக . வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை
மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .
பாடல்
எண் : 9
மங்குநோய்
உறும்பிணி மாயும்வண்ணம் சொல்லுவன்,
செங்கண்மால்
திசைமுகன் சென்றுஅளந்தும் காண்கிலா
வெங்கண்மால்
விடைஉடை வேதியன், விரும்பும் ஊர்
கொங்குஉலாம்
வளம்பொழில் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :வாழ்வை மங்கச்
செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் :
கேளுங்கள் . செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற் கியலாத
பெருமையனும் , வெவ்விய கண்களைக்
கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த
பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக .
பாடல்
எண் : 10
தட்டொடு
தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுஉடை
விரிதுகிலி னார்கள்சொல் பயனிலை,
விட்டபுன்
சடையினான் மேதகும் முழவொடும்
கொட்டுஅமைந்த
ஆடலான் கோடிகாவு சேர்மினே.
பொழிப்புரை :தட்டோடு , தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும்
சமணர்களும் , பட்டால் ஆகிய விரிந்த
ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும். தொங்க விட்ட சடையினனாய்
மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவ பிரானின் கோடிகாவை அடைவீர்களாக .
பாடல்
எண் : 11
கொந்துஅணி
குளிர்பொழில் கோடிகாவு மேவிய
செந்தழல்
உருவனைச் சீர்மிகு திறல் உடை
அந்தணர்
புகலியுள் ஆயகேள்வி ஞானசம்
பந்தன
தமிழ்வல்லார் பாவம்ஆன பாறுமே.
பொழிப்புரை :பூங்கொத்துக்களை உடைய
குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள்
வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை
வல்லவர்களின் பாவங்கள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கசர்
திருப்பதிக வரலாறு
திருநாவுக்கரசு நாயனார்
திருச்செம்பொன்பள்ளி, திரு மயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திரு எதிர்கொள்பாடி முதலான
திருத்தலங்களில் வழிபாடியற்றி, திருஆவடுதுறைக்குச்
செல்லும் முன், திருக்கோடிகா அடைந்து
பாடிய திருப்பதிகங்கள்.
பெ.
பு. பாடல் எண் : 190
மேவுபுனல்
பொன்னிஇரு கரையும் சார்ந்து
விடைஉயர்த்தார்
திருச்செம்பொன் பள்ளி பாடி,
காஉயரும்
மயிலாடு துறை,நீள் பொன்னிக்
கரைத்துருத்தி, வேள்விக்குடி, எதிர்கொள் பாடி,
பாவுறு
செந்தமிழ்மாலை பாடிப் போற்றி,
பரமர்திருப்
பதிபலவும் பணிந்து போந்தே
ஆவுறும்அஞ்சு
ஆடுவார் கோடிகாவில்
அணைந்துபணிந்து, ஆவடுதண் துறையைச்
சார்ந்தார்.
பொழிப்புரை : நீர் இடையறாது
பொருந்திய காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சேர்ந்து, ஆனேற்றுக் கொடியை உயர்த்திய
சிவபெருமானின் திருச்செம்பொன்பள்ளியினைப் பாடிச் சோலைகள் உயர்ந்து சூழ்ந்த
திருமயிலாடுதுறையையும், காவிரியின் இரு
கரைகளிலும் உள்ள திருத்துருத்தி - திருவேள்விக்குடியையும், திருஎதிர்கொள்பாடியையும் தொழுது
செந்தமிழ்ப் பதிகங்களான பாமாலைகளால் போற்றி, இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும்
பணிந்து சென்று, ஆன் ஐந்தையும் ஆடும்
சிவபெருமானின் திருக்கோடிக்காவை அடைந்து, வணங்கிச்
சென்று, திருவாவடுதுறையைச்
சேர்ந்தார்.
குறிப்புரை : இங்கு முதற்கண்
குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஐந்தாம். இவ்விடங்களில் பாடப்பெற்ற திருப்பதிகங்கள்:
1. திருச்செம்பொன்
பள்ளி: இது இக்காலத்துச் செம்பொனார்கோயில் என வழங்கப் பெறுகிறது.
(அ). `ஊனினுள் உயிரை` (தி.4 ப.29) - திருநேரிசை.
(ஆ) `கானறாத` (தி.5 ப.36) - திருக்குறுந்தொகை.
2. திருமயிலாடுதுறை: `கொள்ளும் காதல்` (தி.5 ப.39) - திருக்குறுந்தொகை.
3. 3+4. திருத்துருத்தியும்
திருவேள்விக்குடியும்: இறைவன் பகலில் திருத்துருத்தியிலும் இரவில்
வேள்விக்குடியிலும் எழுந்தருளியிருப்பர். இதனால் இவ்விரு திருப்பதிகளையும் இணைத்தே
ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். நாவரசர் திருத்துருத்தி ஒன்றற்கே பதிகம்
பாடியுள்ளார். `பொருத்திய` (தி.4 ப.42) - திருநேரிசை.
4. திருஎதிர்கொள்பாடிக்கு
உரிய பதிகம் கிடைத்திலது. இனி, இப்பதிகளோடு `பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே` என ஆசிரியர் அருளுவதால், இதுபொழுது பாடிய பதிகள் வேறு பிறவும்
உளவாம் எனத் தெரிகிறது.
அவையாவன:
1. திருஅன்னியூர் :
`பாறலைத்த` (தி.5 ப.8) - திருக்குறுந்தொகை.
2. திருமணஞ்சேரி:
`பட்டநெற்றியர்` (தி.5 ப.87) - திருக்குறுந்தொகை.
இப்பாடலில் ஆசிரியர் நிறைவாக
இருபதிகளைக் குறிக்கின்றார். அவை: திருக்கோடிகா, திருஆவடுதுறை.
1. திருக்கோடிக்கா:
(அ). `நெற்றிமேல்` (தி.4 ப.51) - திருநேரிசை.
(ஆ). `சங்குலாம்` (தி.5 ப.78) - திருக்குறுந்தொகை.
(இ). கண்டலஞ்சேர் (தி.6 ப.81) - திருத்தாண்டகம்.
4. 051 திருக்கோடிகா திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நெற்றிமேல்
கண்ணி னானே, நீறுமெய் பூசி னானே,
கற்றைப்
புன் சடையி னானே, கடல்விடம் பருகி னானே,
செற்றவர்
புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தி னானே,
குற்றம்இல்
குணத்தி னானே, கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கோடிகா உடைய பெருமான்
நெற்றிக்கண்ணனாய் , நீற்றைத்
திருமேனியிற் பூசியவனாய் , முறுகிக் கற்றையான
சிவந்த சடையினனாய் , கடலில் தோன்றிய
நஞ்சினைப்பருகியவனாய் , பகைவருடைய
முப்புரங்களிலும் தீயைச் செலுத்தியவனாய் , குற்றமற்ற நற்பண்பினாய் உள்ளவனாவான் .
பாடல்
எண் : 2
கடிகமழ்
கொன்றை யானே, கபாலம் கை ஏந்தி னானே,
வடிவுடை
மங்கை தன்னை மார்பில்ஓர் பாகத்
தானே,
அடியிணை
பரவ நாளும் அடியவர்க்கு அருள்
செய்வானே,
கொடிஅணி
விழவு அதுஓவாக் கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கொடிகள்
ஏற்றப்பட்டுத் திருவிழாக்கள் நடத்தப் பெறுதல் நீங்காத கோடிகாப் பெருமான் நறுமணம்
கமழும் கொன்றைப் பூவினனாய் , கையில் ஏந்திய
மண்டையோட்டை உடையவனாய் , அழகிய பார்வதியைப்
பாகமாக மார்பில் கொண்டவனாய்த் தன் திருவடிகளை வழிபடுமாறு நாள்தோறும்
அடியவர்களுக்கு அருள் செய்பவனாவான் .
பாடல்
எண் : 3
நீறுமெய்
பூசி னானே, நிழல்திகழ் மழுவி
னானே,
ஏறுஉகந்து
ஏறி னானே, இருங்கடல் அமுதுஒப்
பானே,
ஆறும்ஓர்
நான்கு வேதம் அறம் உரைத்து அருளி
னானே,
கூறும்எர்
பெண்ணி னானே, கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கோடிகாப் பெருமான்
நீற்றைத் திருமேனியில் பூசியவனாய் ,
ஒளிவீசும்
மழுப்படையினனாய் , காளையை விரும்பி
ஏறிஊர்ந்தவனாய் , பெரிய கடலில் தோன்றிய
அமுதத்தை ஒப்பவனாய் , நான்கு வேதங்களும்
ஆறு அங்கங்களும் ஆகிய அறத்தை உபதேசித்தவனாய் , பார்வதி பாகனாய் உள்ளான் .
பாடல்
எண் : 4
காலனைக்
காலால் செற்றுஅன்று அருள்புரி கருணை யானே,
நீலம்ஆர்
கண்டத் தானே, நீண்முடி அமரர் கோவே.
ஞாலமாம்
பெருமை யானே, நளிர்இளந் திங்கள்
சூடும்
கோலம்ஆர்
சடையினானே, கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கோடிகா உடைய பெருமான்
காலனைக் காலால் ஒறுத்து மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த கருணையாளனாய் , நீல கண்டனாய் , நீண்டமுடிகளை உடைய தேவர்களுக்குத்
தலைவனாய் உலகம் முழுதும் பரவிய பெருமானாய் , குளிர்ந்த பிறைசூடும் அழகிய சடையினை
உடையவனாய் உள்ளான் .
பாடல்
எண் : 5
பூண்அரவு
ஆரத் தானே, புலிஉரி அரையி னானே,
காணில்வெண்
கோவ ணம்மும் கையில்ஓர் கபாலம்
ஏந்தி
ஊணும்ஓர்
பிச்சை யானே, உமைஒரு பாகத் தானே,
கோணல்வெண்
பிறையி னானே, கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கோடிகா உடைய தலைவன்
பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து , கையில் மண்டையோட்டை ஏந்தி , பிச்சை ஏற்ற உணவையே உண்பவனாய்ப்
பார்வதிபாகனாய் வளைந்த வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான் .
பாடல்
எண் : 6
கேழல்வெண்
கொம்பு பூண்ட கிளர்ஒளி மார்பி னானே,
ஏழையேன்
ஏழை யேன்நான் என்செய்கேன் எந்தை
பெம்மான்
மாழைஒண்
கண்ணி னார்கள் வலைதனில் மயங்கு
கின்றேன்,
கூழைஏறு
உடைய செல்வா, கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கோடிகா உடைய பெருமானே
! பன்றியின் வெண்ணிறக் கொம்பினை அணிந்த ஒளிவீசும் மார்பினனாய் , குட்டையான காளையை உடைய செல்வனே ! எம்
தந்தையாகிய தலைவனே ! அழகிய ஒளி பொருந்திய கண்களை உடைய மகளிரின் பார்வையாகிய
வலையில் அகப்பட்டு மயங்குகின்றேன். அறிவிலியாகிய அடியேன் யாது செய்குவென்?
பாடல்
எண் : 7
அழல்உமிழ்
அங்கை யானே, அரிவைஓர் பாகத் தானே,
தழல்உமிழ்
அரவம் ஆர்த்துத் தலைதனில் பலிகொள்
வானே,
நிழல்உமிழ்
சோலை சூழ நீள்வரி வண்டு
இனங்கள்
குழல்உமிழ்
கீதம் பாடும் கோடிகா வுடைய கோவே.
பொழிப்புரை : நெருப்பை ஏந்திய
உள்ளங்கையை உடையவனே ! பார்வதிபாகனே! நெருப்பைக் கக்குகின்ற பாம்பினைக் கட்டிக்
கொண்டு மண்டையோட்டில் பிச்சை பெறுபவனே ! நிழலை வெளிப்படுத்துகின்ற சோலைகள்
சூழ்ந்திருக்க அவற்றில் நீண்டகோடுகளை உடைய வண்டினங்கள் வேய்ங்குழல் ஒலிபோன்ற
பாடல்களைப் பாடும் கோடிகாவை உடைய பெருமானே !
பாடல்
எண் : 8
ஏஅடு
சிலையி னானே புரம்அவை எரிசெய்
தானே,
மாவடு
வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத் தானே,
ஆவடு
துறையு ளானே, ஐவரால் ஆட்டப்
பட்டேன்
கோஅடு
குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : அம்பை இணைத்த
வில்லைக் கொண்டு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவனே ! மாவடுவின் பிளப்பைப்
போன்ற கண்களை உடைய பார்வதிபாகனே! ஆவடுதுறையில் உறைபவனே ! கோடிகா உடைய தலைவனே !
ஐம்பொறிகளாலும் யான் அவை விரும்பியவாறு செயற்படுத்தப்பட்டுள்ளேன். பசுக்கொலைக்கு
ஒப்பாகிய என் குற்றங்களைப் போக்குவாயாக.
பாடல்
எண் : 9
ஏற்றநீர்க்
கங்கை யானே, இருநிலந் தாவி னானும்
நாற்றமா
மலர்மேல் ஏறு நான்முகன் இவர்கள்
கூடி
ஆற்றலால்
அளக்கல் உற்றார்க்கு அழல்உரு ஆயி னானே,
கூற்றுக்குங்
கூற்று அதுஆனாய், கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கோடிகாவில் உள்ள
பெருமானே ! கங்கையைச் சடையில் ஏற்றவனே ! பெரிய உலகங்களை ஈரடியால் அளந்த திருமாலும்
நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் தங்கும் பிரமனும் ஆகிய இருவரும் கூடித் தம்
ஆற்றலால் அளக்க முயன்றவர்களுக்குத் தீத்தம்ப வடிவாயினவனே ! யமனுக்கும் யமனாயினாய்
நீ .
பாடல்
எண் : 10
பழகநான்
அடிமை செய்வேன். பசுபதீ, பாவ நாசா,
மழகளி
யானையின் தோல் மலைமகள் வெருவப்
போர்த்த
அழகனே, அரக்கன் திண்கோள் அருவரை நெரிய ஊன்றும்
குழகனே, கோல மார்பா, கோடிகா உடைய கோவே.
பொழிப்புரை : கோடிகா உடைய கோவே !
ஆன்மாக்களின் தலைவனே ! பாவங்களைப் போக்குபவனே ! இளைய மதமயக்கமுடைய யானையின் தோலைப்
பார்வதி அஞ்சுமாறு போர்த்த அழகனே ! அரக்கனாகிய இராவணனுடைய வலிய தோள்கள் கயிலை
மலையின் கீழ் அகப்பட்டு நெரியுமாறு கால்விரலை அழுத்திய அழகனே ! நின் தொண்டிற்
பழகுமாறு நான் அடித்தொண்டு செய்வேன் .
திருச்சிற்றமபலம்
5. 078 திருக்கோடிகா திருக்குறுந்தொகை
திருச்சிற்றமபலம்
பாடல்
எண் : 1
சங்கு
உலாமுன்கைத் தையல்ஓர் பாகத்தன்,
வெங்கு
உலாமத வேழம் வெகுண்டவன்,
கொங்கு
உலாம்பொழிற் கோடிகா வா,என
எங்கு
இலாதது ஓர்இன்பம்வந்து எய்துமே.
பொழிப்புரை : சங்கு வளையல்கள்
பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒருபாகத்திலுடையவனும், சினவெம்மை பொருந்திய மதம் பொழியும்
யானையினை வெகுண்டவனும், மணம் உலாவும் பொழிலை
உடைய கோடிகாவில் உள்ளவனுமாகிய இறைவா! என்று கூற, எங்கும் இல்லாததோர் இன்பம் வந்து
எய்தும்.
பாடல்
எண் : 2
வாடி
வாழ்வதுஎன் ஆவது, மாதர்பால்
ஓடி
வாழ்வினை உள்கிநீர் நாள்தொறும்
கோடி
காவனைக் கூறீரேல், கூறினேன்
பாடி
காவலிற் பட்டுக் கழிதிரே.
பொழிப்புரை : நாள்தோறும் நீர்
மாதர்பால் ஓடி, வாழ்வினையே நினைந்து
வாடி வாழ்வது என் ஆவது? கோடிகா இறைவனைக்
கூறீரேல், ஊர்க்காவலிற்பட்டுக்
கழிவீர்; கூறினேன்.
பாடல்
எண் : 3
முல்லை
நன்முறு வல்உமை பங்கனார்,
தில்லை
அம்பலத் தில்உறை செல்வனார்,
கொல்லை
ஏற்றினர் கோடிகா வாஎன்றுஅங்கு
ஒல்லை
ஏத்துவார்க்கு ஊனம்ஒன்று இல்லையே.
பொழிப்புரை : முல்லையையொத்த நல்ல
சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத்
திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய
வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை.
பாடல்
எண் : 4
நாவ
ளம்பெறு மாறுமன் நல்நுதல்
ஆம
ளஞ்சொலி அன்புசெ யின்அலால்
கோம
ளஞ்சடைக் கோடிகா வாஎன
ஏவள்
இன்றுஎனை ஏசும்அவ் ஏழையே.
பொழிப்புரை : நாவானது வளம்
பெறுமாறு அழகிய நுதலை உடைய தலைவி இயன்ற அளவு அழகிய சடையையுடைய கோடிகா இறைவனே என்று
அவன் திருப்புகழ் சொல்லி அன்பு செய்தால் பெறலாமேயன்றி அவனை இசைபாடும் வாயால் என்னை
வசைபாடுகின்றாளே இந்நங்கை.
பாடல்
எண் : 5
வீறு
தான்பெறு வார்சிலர் ஆகிலும்
நாறு
பூங்கொன்றை தான்மிக நல்கானேல்
கூறுவேன், கோடி காவுளாய்
என்றுமால்
ஏறு
வேன், நும்மால் ஏசப்
படுவனோ.
பொழிப்புரை : கோடிகாவில் உள்ள
இறைவனே! பெருமை பெறுவார் சிலர் ஆயினும் நறுமணம் வீசும் கொன்றையை மிக அருளா
தவனானால் கூறுவேன்; என்றும் காமத்துயர்
மயக்கம் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?
பாடல்
எண் : 6
நாடி
நாரணன் நான்முகன் வானவர்
தேடி
ஏசற வும்தெரி யாததுஓர்
கோடி
காவனைக் கூறாத நாள்எலாம்
பாடி
காவலில் பட்டுக் கழியுமே.
பொழிப்புரை : திருமாலும்
நான்முகனும் தேவர்களும் ஆராய முற்பட்டுத் தேடித் துயர் உறவும் தெரியாத இயல்பை உடைய
ஒப்பற்ற கோடிகாவுறையும் இறைவனைக் கூறாத நாட்களெல்லாம் ஊர்க்காவலிற்பட்டுக்
கழியும்.
பாடல்
எண் : 7, 8, 9
* * * * * * *
பாடல்
எண் : 10
வரங்க
ளால்வரை யைஎடுத் தான்தனை
அரங்க
ஊன்றி அருள்செய்த அப்பனூர்,
குரங்கு
சேர்பொழில் கோடிகா வாஎன
இரங்கு
வேன்மனத்து ஏதங்கள் தீரவே.
பொழிப்புரை : வரங்களாற்பெற்ற
பலத்தால் திருக்கயிலையை எடுத்த இராவணனை அழிய ஊன்றி அருள்செய்த அப்பன் ஊராகிய
குரங்குகள் சேரும் பொழிலை உடைய கோடிகா இறைவனே என்று என் மனத்துக் குற்றங்கள் தீர
இரங்குவேன்.
திருச்சிற்றமபலம்
6. 081 திருக்கோடிகா திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கண்தலம்சேர்
நெற்றிஇளம் காளை கண்டாய்,
கல்மதில்சூழ் கந்தமா
தனத்தான் கண்டாய்,
மண்தலஞ்சேர்
மயக்குஅறுக்கும் மருந்து கண்டாய்,
மதிற்கச்சி ஏகம்பம்
மேயான் கண்டாய்,
விண்தலஞ்சேர்
விளக்குஒளியாய் நின்றான் கண்டாய்,
மீயச்சூர் பிரியாத
விகிர்தன் கண்டாய்,
கொண்டல்அம்சேர்
கண்டத்துஎம் கூத்தன் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பியுறையும் அழகனே, நெற்றியிடத்துக் கண்
சேர்ந்த இளங்காளையாய், பக்கமலைகளான மதில்கள்
சூழ்ந்த கந்தமாதனத்துறைவானாய், பலவகைப்
புவனங்களிலும் சென்று பிறத்தற்குக் காரணமாகிய மயக்கத்தை அறுக்கும் மருந்தாய், மதிலாற் சூழப்பட்ட காஞ்சி மாநகரத்து
ஏகம்பத்தை மேவியவனாய், தேவருலகிற் சென்று
எறிக்கும் விளக்கொளியாய், மீயச்சூரில் நிலைத்து
நிற்கும் வேறுபடு தன்மையனாய், மேகத்தினது அழகு
சேர்ந்த கண்டத்தனாய் எம் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
பாடல்
எண் : 2
வண்டுஆடு
பூங்குழலாள் பாகன் கண்டாய்,
மறைக்காட்டு உறையு
மணாளன் கண்டாய்,
பண்டுஆடு
பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்,
பரலோக நெறிகாட்டும்
பரமன் கண்டாய்,
செண்டுஆடி
அவுணர்புரம் செற்றான் கண்டாய்,
திருவாரூர்த்
திருமூலட் டானன் கண்டாய்,
கொண்டாடும்
அடியவர்தம் மனத்தான் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பியுறையும் அழகனே வண்டுகள் மொய்க்கும் பூக்களணிந்த குழலையுடைய உமாதேவியின்
பாகனாய், திருமறைக் காட்டில்
வாழும் அழகினனாய், பண்டு செய்த வினையான்
வரும் துன்பத்தைத் தீர்ப்பவனாய்,
வீட்டுலக
வழியை யுணர்த்தும் பரமனாய், செண்டு கொண்டு ஆடும்
ஆட்டம் போல எவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாய், திருவாரூர் மூலட்டானத்தினனாய்
விளங்குவான் ஆவான்.
பாடல்
எண் : 3
அலைஆர்ந்த
புனற்கங்கைச் சடையான் கண்டாய்,
அடியார்கட்கு ஆரமுதம்
ஆனான் கண்டாய்,
மலைஆர்ந்த
மடமங்கை பங்கன் கண்டாய்,
வானோர்கள் முடிக்குஅணியாய்
நின்றான் கண்டாய்,
இலைஆர்ந்த
திரிசூலப் படையான் கண்டாய்,
ஏழ்உலகு மாய்நின்ற
எந்தை கண்டாய்,
கொலைஆர்ந்த
குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பியுறையும் அழகனே, அலைகளுடன் கூடிய
நீரையுடைய கங்கை தங்கும் சடையனாய்,
அடியார்களுக்கு
ஆரமுதாய், மலையில் தோன்றி
வளர்ந்த இளமங்கை பார்வதியின் பங்கனாய், வானோர்தம்
முடிக்கணியாய்த் தன் திருவடிகளைத் தந்து நின்றவனாய், இலைபோன்ற திரிசூலப்படையினனாய், ஏழுலகுமாய் வியாபித்த எந்தையாய், கொலைத் தொழிலிற் பழகிய யானையது தோலைப்
போர்த்துக் கொண்டவனாய் விளங்குவான் ஆவான்.
பாடல்
எண் : 4
மற்றுஆரும்
தன்ஒப்பார் இல்லான் கண்டாய்,
மயிலாடு துறைஇடமா
மகிழ்ந்தான் கண்டாய்,
புற்றுஆடு
அரவுஅணிந்த புனிதன் கண்டாய்,
பூந்துருத்திப்
பொய்இலியாய் நின்றான் கண்டாய்,
அற்றார்கட்கு
அற்றானாய் நின்றான் கண்டாய்,
ஐயாறு அகலாத ஐயன்
கண்டாய்,
குற்றாலத்து
அமர்ந்துஉறையும் கூத்தன் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பி உறையும் அழகனே தனக்கு ஒப்பார் யாரும் இலனாய், மயிலாடுதுறையைத் தனக்குப் பொருந்திய
இடமாகக் கொண்டு மகிழ்ந்தவனாய், புற்றில் வாழ்
அரவுகளை அணிந்த புனிதனாய் , பூந்துருத்தியில்
பொய்யிலியாய் , பற்றற்ற அடியார்க்கு
மறைதலின்றி வெளிப்பட்டு நிற்பானாய் , ஐயாறு
அகலாத ஐயனாய் , குற்றாலத்து விரும்பி
உறையுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .
பாடல்
எண் : 5
வார்ஆர்ந்த
வனமுலையாள் பங்கன் கண்டாய்,
மாற்பேறு காப்பா
மகிழ்ந்தான் கண்டாய்,
போர்ஆர்ந்த
மால்விடைஒன்று ஊர்வான் கண்டாய்,
புகலூரை அகலாத
புனிதன் கண்டாய்,
நீர்ஆர்ந்த
நிமிர்சடைஒன்று உடையான் கண்டாய்,
நினைப்பார்தம்
வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்,
கூர்ஆர்ந்த
மூவிலைவேல் படையான் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பியுறையும் அடிகளே கச்சுப் பொருந்திய அழகிய முலையாளின் பங்கனாய் , மாற்பேற்றைத் தனக்குரிய இடமாகக் கொண்டு
மகிழ்ந்தானாய் , போர்ச் செயலில் பழகிய
பெரிய விடை ஒன்றை ஊர்தியாக உடையானாய் , புகலூரை
நீங்காத புனிதனாய், கங்கை பொருந்திய
நீண்ட ஒப்பற்ற சடையை உடையானாய் ,
நினைக்கும்
அடியாருடைய வினைச்சுமையை இறக்கி வைப்பானாய், கூர்மை பொருந்திய மூவிலை வேற்படையை
உடையானாய் விளங்குவான் ஆவான் .
பாடல்
எண் : 6
கடிமலிந்த
மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்,
கண்ணப்ப விண்அப்புக்
கொடுத்தான் கண்டாய்,
படிமலிந்த
பல்பிறவி அறுப்பான் கண்டாய்,
பற்றுஅற்றார்
பற்றுஅவனாய் நின்றான் கண்டாய்,
அடிமலிந்த
சிலம்புஅலம்பத் திரிவான் கண்டாய்,
அமரர்கணம்
தொழுதுஏத்தும் அம்மான் கண்டாய்,
கொடிமலிந்த
மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பியுறையும் அழகனே ! மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையனாய் , கண்ணை அப்பிய செயற்கு விண்ணைப்
பொருந்துதலை ஈடாகக் கொடுத்தானாய் ,
உலகில்
நிறைந்த பல பிறவிகளிலும் பிறத்தலை அறுப்பானாய் , பற்றற்ற அடியார்க்குத் துணை நின்றானாய் , திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு
ஒலிப்பத் திரிவானாய் , தேவர் கூட்டம்
வணங்கிப் பரவும் தலைவனாய் , மிகுதியான கொடிகள்
கட்டப்பட்ட மதில்களையுடைய தில்லையில் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .
பாடல்
எண் : 7
உழைஆடு
கரதலம்ஒன்று உடையான் கண்டாய்,
ஒற்றியூர் ஒற்றியா
உடையான் கண்டாய்,
கழைஆடு
கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்,
காளத்திக் கற்பகமாய்
நின்றான் கண்டாய்,
இழைஆடும்
எண்புயத்த இறைவன் கண்டாய்,
என்நெஞ்சத்
துள்நீங்கா எம்மான் கண்டாய்,
குழைஆட
நடம்ஆடும் கூத்தன் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பியுறையும் அழகனே , மான்கன்று
பொருந்தியதொரு கரதலத்தனாய் , ஒற்றியூரைப் பொருந்தி
நிற்கும் இடமாக உடையானாய் , மூங்கிலசையும்
கழுக்குன்றில் அமர்ந்தானாய் , காளத்திக்கண் திகழும்
கற்பகமாய் , பூணூல் கிடந்தசையும்
தோள்கள் எட்டுடைய இறைவனாய் , என் நெஞ்சைவிட்டு
நீங்கா எந்தலைவனாய் , காதணி ஆட நடன மாடுங்
கூத்தனாய் விளங்குவான் ஆவான் .
பாடல்
எண் : 8
படம்ஆடு
பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்,
பராய்த்துறையும் பாசூரும்
மேயான் கண்டாய்,
நடம்ஆடி
ஏழ்உலகும் திரிவான் கண்டாய்,
நான்மறையின்
பொருள்கண்டாய், நாதன் கண்டாய்,
கடம்ஆடு
களிறுஉரித்த கண்டன் கண்டாய்,
கயிலாயம் மேவி
இருந்தான் கண்டாய்,
குடம்ஆடி
இடமாகக் கொண்டான் கண்டாய்,
கோடிகா
அமர்ந்துஉறையும் குழகன் தானே.
பொழிப்புரை :திருக்கோடிகாவில்
விரும்பி உறையும் அழகனே படமெடுத்தாடும் பாம்பினைக் கச்சாகக் கட்டியவனாய் , பராய்த் துறையிலும் பாசூரிலும்
பொருந்தியவனாய், ஏழுலகுஞ் சென்று
ஆங்காங்கே நடனமாடுவானாய் , நான்மறையின்
பொருளினனாய் , எல்லார்க்கும்
தலைவனாய் ( நாததத்துவனாய் ) மதநீர் ஒழுகுங் களிற்றினை உரித்த வீரனாய் , கயிலை மலையில் விரும்பி உறைவா னாய் , குடமாடியாம் திருமாலை இடப்பாகமாகக்
கொண்டானாய் விளங்குவான் ஆவான் .
* * * 9, 10 : * * *
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment