திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்
அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீர்ர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "கற்பதற்கு அரிய நூல்களைக் கற்று அறிந்ததோடு, குற்றமும் அற்றவராக இருந்தாலும், ஆராயும் இடத்து, அவரிடமும் அறியாமை இல்லாது இருப்பது அரியது ஆகும்" என்கின்றார் நாயனார்.
அதாவது, எவ்வளவு கல்வி அறிவு உடையவராய் இருந்தாலும், நுணுகிச் சென்று, அவரது குணங்களை ஆராயப் புகுந்தால், அவரிடத்திலும் ஏதோ ஓர் சிறிய குற்றம் இருக்கவே காணப்படும் என்பதால், குணமே உடையவர் என்று எவரையும் கூற முடியாது்.
இதற்குத் திருக்குறள்...
"அரியகற்று ஆசு அற்றார் கண்ணும், தெரியும்கால்
இன்மை அரிதே வெளிறு."
இதற்குப் பரிமேலழகர் உரை ---
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் --- கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்,
தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது --- நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.
(வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....
"வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்
களிறினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. --- சுந்தரர் தேவாரம்.
இதன் பொருள் ---
உலகீர், வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம், பிளிறுகின்ற, மனவலியையும், பெரிய தும்பிக்கையையும், பொழிகின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு, பிடி யானைகள் சூழ்ந்துள்ள, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே;. ஆதலின், உங்கள் அறியாமை நீங்குதற் பொருட்டு, அங்குச் சென்று, திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள்.
நூல்களைக் கற்பதால் மட்டும் அறியாமை நீங்குதல் அரிது. எனவே, இறைவனை வழிபடவேண்டும் என்பது கூறப்பட்டது.
"அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே;
கடன்கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது." --- இனியவை நாற்பது.
இதன் பொருள் ---
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிது - (தம்பால்) அடைக்கலம் புக்கார் துன்ப மிக்கு அடையாது, ஆற்றல் செய்வது இனிது; கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிது - கடன் வாங்கியும் செய்யத்தக்கவற்றைச் செய்வது இனிது; சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும் ஆராய்ந்து அறிந்து உரைத்தல் இனிது - மிக்கு நிறைந்த நூற்கேள்வியை உடையவரானாலும் ஆராய்ந்தறிந்தே ஒன்றைச் சொல்லுதல் மிக இனிது.
"அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இம்மை அரிதே வெளிறு” (குறள் - 503)
என்றவாறு கல்வி கேள்விகளின் மிக்கார் மாட்டும் ஒரோ வழி அறியாமை உளதாகலின், ‘சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனது' என்றார்.
"நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்,
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்
சொற்சோரா தாரோ இலர். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
கல்பால் இலங்கு அருவி நாட - மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!, நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர் - நல்ல குடியின்கண் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும், - (சில நேரங்களில்) ஆராய்தல் இல்லாமல் பிழைபடச் சொல்லுவார்கள், இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவது எவன் --- நல்ல குடியின்கண் பிறவாதவரது சொற்களில் உள்ள இன்னாமையும் பிழைகளும் ஆகிய இயல்பு இன்மையை நினைந்து வருந்துவது எது பற்றி?, யாரானும் சொல் சோராதாரோ இலர் - யாவரே ஆயினும் சொல்லின்கண் சோர்வுபடாதார் இலர்.
யாவர் மாட்டும் சொற்சோர்வு காணப்படும் என்பதால், சொல்லில் உள்ள கருத்து ஒன்றனையே நோக்குக.
"ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றம் உளானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல். --- நான்மணிக் கடிகை.
இதன் பொருள் ---
எல்லாம் அறிவான் ஒருவனும் இல் - எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; யாதொன்றும் அறியாதவன் ஒருவனும் இல் - ஒரு சிறிதும் தெரியாதவன் ஒருவனும் இல்லை; குணன் அடங்க குற்றம் உள்ளான் ஒருவனும் இல் - ஒரு நல்லியல்பு இல்லாமல், பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை; கணன் அடங்க கற்றானும் இல் - அறியாமை சிறிதும் இல்லதாக, கற்றறிந்தவனும் இல்லை.
எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை; குற்றமே உள்ளவனும் இல்லை; அறியாமை இல்லாதவனும் இல்லை.
No comments:
Post a Comment