திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்
அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீர்ர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.
அதாவது, தொழிலுக்குத் துணையாகக் கொள்வோரை ஆராய்ந்து தேர்ந்து கொள்ளவேண்டும் என்பது கூறப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "அறம், பொருள், இன்பம், உயிருக்காக அஞ்சுகின்ற அச்சம் என்னும் நான்கின் வகையால் வினைக்கு உரியவன் தெளியப்படுவான்" என்கின்றார் நாயனார்.
"தெரிந்து தெளிதல்" என்பதை, பரிமேலழகர் "உபதை" என்றார்.
உபதை --- சோதனை. மன இயல்பை ஆராய்ந்து தெளிதல்.
அறம், பொருள், இன்பம், உயிரினது அச்சம் என்னும் நான்குவகையால் ஆராய்ந்து தெளிதல் கூறப்பட்டது.
அற உபதை --- அறத்தால் ஆராய்ந்து தெளிதலாவது, அறம் கூறும் அறவோரையும், நன்மை தீமை கூறும் சடங்கு செய்வோன் அல்லது சோதிடரையும் தெளியப்பட வேண்டுவோனிடத்து அனுப்பி, "இவ்வரசன் நூல்களில் கூறியவாறு அறத்தைச் செய்பவன் அல்ல. அறத்திற்கு மாறானவைகளைச் செய்கின்றான். ஆதலால், இவனை நீக்கி, அறத்தின் வழி நடப்பவனும், குடிகளிடத்தில் உரிமை உடையவனும் ஆகிய வேறு ஒருவனை அரசனாக்க எண்ணி உள்ளோம். இக் கருத்தை யாவரும் ஏற்கின்றனர். இதில் உனது கருத்து என்ன?" என்று வஞ்சகத்தோடு சொல்லுவித்து, அக் கருத்துக்கு அவன் உடன்படுவானாயின், அவன் அரசனிடத்தில் இருப்பதற்குத் தகுதி உடையவன் அல்ல என்று தள்ளுதலும், சொன்ன கருத்துக்கு அவன் இசையவில்லையானால், அவனை வைத்துக் கொள்ளுதலும் ஆகும்.
பொருள் உபதை --- பொருளால் சோதித்துத் தெளிந்து கொள்ளுதல். சேனைக்குத் தலைவனாக உள்ளவனையும், அவனைச் சேர்ந்தாரையும் அனுப்பி, "இந்த அரசன் பொருளில் பற்று உடையவனாக, யாருக்கும் எதுவும் கொடுக்காத உலோபியாய் இருக்கின்றான். எனவே, இவனை நீக்கி, உதார குணம் படைத்த ஒருவனை அரசனாக்க எண்ணி உள்ளோம். இதில் உனது கருத்து என்ன?" என்று வஞ்சகத்தோடு சொல்லுவித்து, அதற்கு அவன் உடன்படுவானாயின், அவன் தகுதி உடையவன் அல்லன் என்று நீக்கியும், உடன்படானாயின், அவன் தகுதி உடையவன் என்று ஏற்றுக் கொள்ளுதலும் ஆகும்.
இன்ப உபதை --- இன்பநெறியைக் கூறிச் சோதித்தல். அரசன் மனைவியர் முதலியவரிடத்துப் பழகி வருகின்ற ஓர் முதுமகளை அனுப்பி, அவளைக் கொண்டு, "இந்த அரசனுக்கு உரிமை உள்ளவளாகிய ஒருத்தி, எப்படியாவது உன்னைத் தன்னிடத்தில் சேர்த்து வைக்கவேண்டும் என்று என்னை அனுப்பினாள். எனவே, நீ அவளைச் சேருவாயானால், அதனால் உனக்குப் பெரியதோர் இன்பம் உண்டாவது அல்லாமல், பெரும் பொருளும் கிடைக்கும்" என்று வஞ்சகமாகச் சொல்லுவித்து, அதற்கு அவன் உடன்படுவானாயின், அவனைக் கொள்ளாது நீக்கி, உடன்படாமல் அறநெறியைக் கூறுவானானால், அவனைக் கொள்ளவேண்டும் என்பதும் ஆகும்.
அச்ச உபதை --- அச்சம் உண்டாகும் வழியைக் கூறிச் சோதித்தல். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவனைக் கொண்டு ஊரில் உள்ளவர்களை எல்லாம் அமைச்சனின் வீட்டிற்கு அழைப்பித்து, இப்போது நாம் இங்கே கூடி இருப்பது அரசனுக்கு விரோதமாகிய செயலைச் செய்வதற்கு. மேலும், இந்த அரசன் ஊரில் உள்ள ஒருவனைக் கொண்டு நம்மை எல்லாம் கொல்லத் துணிந்து இருப்பதால், அவன் நம்மைக் கொல்வதற்கு முன், நாம் அவனைக் கொன்று, நமக்கு வேண்டிய ஒருவனை அரசனாக்குவது வேண்டும்" என்று வஞ்சகமாகச் சொல்லி, அக் கருத்துக்கு உடன்படுவார்களாயின், உடன்படுவோரை நீக்கியும், அறநெறியைக் கூறுவோரைத் தன்னிடம் வைத்துக் கொள்ளுதலும் ஆகும்.
இவ்வாறு நான்கு வகையான சோதனைகளைப் பற்றி விநாயக புராணம் கூறுமாறு காண்க.
இதற்குத் திருக்குறள்...
"அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம், நான்கின்
திறம் தெரிந்து தேறப் படும்."
இதற்குப் பரிமேலழகர் உரை ---
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் --- அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும்,
நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் --- உபதை நான்கின் திறத்தான் மன இயல்பு ஆராய்ந்தால், பின்பு தெளி்யப்படும்.
(அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்,
பொருள் உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
இன்ப உபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே அன்றிப் பெரும் பொருளும் கைகூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
இந்நான்கினும் திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.)
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறிக....
"பொருள்,போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போந்த
அருள்,போகா ஆர்அறம் என்று ஐந்தும் - இருள்தீரக்
கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
தேறப் படுங்குணத்தி னான்." --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
பொருள் - பொருளும், போகம் - இன்பமும், அஞ்சாமை - (இடுக்கண் வந்தால் அதற்கு) அஞ்சாமையும், பொன்றுங்கால் - பிறிதோர் உயிர் அழிய வந்த இடத்து, போந்த அருள் - மிக்க அருளும், போகா - நீங்காத, ஆர் அறம் --- அரிய அறமும், என்ற ஐந்தும் - என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும், இருள் தீர - குற்றந் தீர, கூறப்படும் - சொல்லப்படுகின்ற, குணத்தான் - தன் குணங்களை உடையவன், கூர் வேல் வல் வேந்தன்றால் தேறப்படும் --- கூரிய வேற்படையை உடைய, வலிய அரசனால் (ஒரு கருமத்தின் மேல் செலுத்தத் தக்கவனென்று) தெளியப்படுகிற, குணத்தினான் - குணத்தை யுடையவனென்று சொல்லப்படுவான்.
பொருளும், இன்பமும், இடுக்கண் வந்த காலத்து அதற்கு அஞ்சாமையும், பிறிதோருயிர் அழிய வந்தவிடத்து அதற்கு இரங்கும் அருளுடைமையும், அருமையாகிய அறமும் என்று சொல்லப்பட்ட இவ்வைந்தனையும் உடையவன் அரசனால் ஒரு கருமத்தின் மேல் செலுத்துதற்கு உரியனாவான்.
No comments:
Post a Comment