"சடம்ஒன் றெடுத்தால், புவிக்குநல் லவனென்று
தன்பேர்வி ளங்கவேண்டும்;
சதிருடன் இதல்லாது மெய்ஞ்ஞானி என்றவ
தரிக்கவே வேண்டும்;அல்லால்
திடம்இனிய ரணசூர வீரன்இவன் என்னவே
திசைமெச்ச வேண்டும்;அல்லால்
தேகியென வருபவர்க் கில்லையென் னாமலே
செய்யவே வேண்டும்;அல்லால்
அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான்
ஆகவே வேண்டும்;அல்லால்
அறிவினால் துரைமக்கள் ஆகவர வேண்டும்;இவர்
அதிகபூ பாலர், ஐயா!
வடகுவடு கிடுகிடென எழுகடலும் அலையெறிய
மணிஉரகன் முடிகள்நெரிய
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!"
இதன் பொருள் ---
ஐயா - ஐயனே! வடகுவடு கிடுகிடு என - வடக்கிலுள்ள இமயமலை அதிரவும், எழுகடலும் அலை எறிய - ஏழுகடல்களும் பொங்கி அலைமோதவும், உரகன் மணிமுடிகள் நெரிய - ஆதிசேடனின் மாணிக்கமுடிகள் நெரியவும், மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சடம் ஒன்று எடுத்தால் - ஓர் உடல் எடுத்தால், (மனிதனாகப் பிறந்து விட்டால்)
புவிக்கு நல்லவன் என்று தன்பேர் விளங்கல் வேண்டும் - உலகிற்கு நல்லவன் எனத் தன் பெயர் விளக்கம் பெறுதல் வேண்டும்;
இது அல்லாது சதிருடன் மெய்ஞ்ஞானி என்று அவதரிக்க வேண்டும் - இதுவும் அல்லாமல், திறமையுடன் உண்மையான அறிவாளி என்று தோற்றம் உறல் வேண்டும்;
அல்லால் - (இதுவும்) அல்லாமல், திடம் இனிய ரணசூரவீரன் இவன் என்னவே திசை மெச்சவேண்டும் - வலிமை மிக்கவனாகிப் போர்க் களத்திலே அச்சம் உண்டாக்குபவனும் அஞ்சாமை உள்ளவனும் இவன் என்னும்படி திக்கெலாம் புகழப்படல் வேண்டும்;
அல்லால் - (இதுவும்) அல்லாமல், தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் - இல்லை என்று வந்து இரப்பவர்க்கு இல்லை என்னாமல் தன்னிடத்து உள்ள பொருளைக் கரவாமல் கொடுத்திடல் வேண்டும்;
அல்லால் - (இதுவும்) அல்லாமல், அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் - ஒழுங்காகப் பல கலைகளையும் ஆராய்ச்சி செய்து புலவனாக வேண்டும்;
அல்லால் - (இதுவும்) அல்லாமல், அறிவினால் துரைமக்கள் ஆக வரவேண்டும் - அறிவின் திறமையால் தலைவர்களாக வருதல் வேண்டும்;
இவர் அதிக பூபாலர் - இத்தகையோர் சிறந்த உலகமுதல்வர் ஆவர்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஔவைப் பிராட்டியார். அரியதிலும் அரிதாகிய, உயர்ந்த மனிதப் பிறவியை எடுத்த பின், உலகில் புகழோடு விளங்க வேண்டும். அதற்கு ஏதாயினும் ஒரு நெறியிலே சிறப்புப் பெற்று விளங்க வேண்டும். "தோன்றின் புகழொடு தோன்றுக, அஃது இல்லார் தோன்றலின் தோன்றாமை நன்று" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது அறிக.
No comments:
Post a Comment