23. நாய் அறியாது, ஒரு சந்திப் பானையின் அருமையை

 


"தாயறிவாள் மகளருமை! தண்டலைநீள்

     நெறிநாதர் தாமே தந்தை

ஆயறிவார் எமதருமை! பரவையிடம்

     தூதுசென்ற தறிந்தி டாரோ?

பேயறிவார் முழுமூடர்! தமிழருமை

     அறிவாரோ? பேசு வாரோ?

நாயறியா தொருசந்திச் சட்டிப்பா

     னையின்அந்த நியாயந் தானே!"


இதன் பொருள் ---

மகள் அருமை தாய் அறிவாள் - மகளின் அருமையைப் பெற்ற தாயே அறிவாள்,  எமது அருமை தண்டலை நீள்நெறிநாதர் தாமே தந்தையாய் அறிவார் - (அடியவரான) எமது அருமையைத் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் 'நீள்நெறி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரே  தந்தையாகி அறிவார், 

பரவையிடம் தூது சென்றது அறிந்திடாரோ - சிவபெருமான்  (தம் அடியவரான நம்பிஆரூரின் வேண்டுகோளுக்கு இரங்கி)) பரவை நாச்சியாரிடம் இரவு முழுதும் தூது நடந்ததை உலகினர் அறியமாட்டாரோ?, 

முழுமூடர் பேய் அறிவார் - முற்றினும்  பேதையர் பேய்த் தன்மையையே அறிவார், தமிழ் அருமை அறிவாரோ - தமிழின் அருமையை உணர்வாரோ?, பேசுவாரோ - (தமிழைப் பற்றி) ஏதாவது உரைப்பாரோ? (ஒன்றும் செய்யார்). 

ஒரு சந்திச் சட்டிப் பானையின் அந்த நியாயம் நாய் அறியாது - ஒருபோது(க்குச் சமைக்கும்) சட்டிப் பானையின் அந்த உயர்வை  நாய் அறியாது.

விளக்கம் ---

     "தந்தையாய்த் தாயும் ஆகி, தரணியாய், தரணி உள்ளர்க்கு எந்தையும் என்ன நின்ற" என்றும், "அம்மை நீ, அப்பன் நீ" என்றும் வரும் அப்பர் தேவாரப் பாடல் வரிகளையும், "தாயும் நீயே, தந்தை நீயே, சங்கரனே" என வரும் திருஞானசம்பந்தர் திருவாக்கையும், "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்" என வரும் வள்ளல்பெருமான் அருள் வாக்கையும் கொண்டு, உயிர்களுக்குத் தாயும் தந்தையுமாய் விளங்குகின்றவன் இறைவன் என்பது தெளியப்படும். எனவே,  ‘தண்டலை நீள்நெறி நாதர் தாமே தந்தையாய் அறிவர் எமது அருமை' என்றார். 

"தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று சிவபரம்பொருளே திருவாய் மரல்ந்து அருளியபடி, "தம்பிரான் தோழர்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் உலகவரால் வழங்கப்பட்டார். தனது அடியவரும் தோழரும் ஆகிய அவரின்  வேண்டுகோளுக்கு இரங்கிப் பரவை நாச்சியாரின் ஊடலைத் தவிர்க்கத் தூது சென்றது அடியவரின் அருமையையும் தமிழின் அருமையையும் உணர்ந்தே. ஆகையால் ‘அறிந்திடாரோ?'  என்றார். "பரவையார் ஊடலை மாற்ற ஏவல் ஆளாகி இரவெலாம் உழன்ற இறைவனே" என்று பட்டினத்து அடிகளார் பாடுவார்.

முழுமூடர் பேய்த் தன்மை உடையவர். "கொடிறும் பேதையும் கொண்டது விடாது" என்பது மணிவாசகம். பற்றியதை விடாது பேய். அன்புக்கு இரங்காது பேய். விரட்டினால் விட்டு விலகிச் செல்லும். முழுமூடர் அச்சத்திற்காகக் கொடுப்பரே, அன்றித் தமிழின் அருமை அறிந்து  கொடுக்கமாட்டார். ‘கொல்லச் சுரப்பதாம் கீழ்'என்றது நாலடியார்.

"இரவலர் கன்றாக ஈவார் ஆவாக

விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி

வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்

கொல்லச் சுரப்பதாங் கீழ்." -- நாலடியார்.

இதன் பொருள் ---

இரவலர் கன்றாக ஈவார் ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை - இரப்போர் கன்றுகளை ஒப்பக் கொடுப்போர் ஆன்களை (பசுக்களை) ஒப்பப் பூரிப்புடன் குறையாது அளிப்பதே கொடை எனப்படும். விரகு இன்றி, வல்லவர் ஊன்ற வடி ஆபோல் வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ் - அத்தகைய உயிர்க் கிளர்ச்சி இல்லாமல், கறக்க வல்லவர் தமது விரல்களை அழுத்தி நோவுண்டாக்க, அது பொறாது பாலை ஒழுகச் செய்யும் பசுக்களைப்போல் சூழ்ச்சி உடையார், பலவகையிலும் வருத்தினால், அது பொறாது கீழ்மக்கள் தம்பொருளைச் சொட்டுவோர் ஆவர்.

ஒரு சந்திப் பானை : நோன்புக்குச் சமைக்க வேண்டித் தனியே வைத்திருக்கும் சமையல் கலம்.  நாய்க்கு  எல்லாப்  பானையும்  ஒரே  மாதிரியாகத் தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும் ஒரு  தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன பழமொழிகள். ஒருசந்தி - ஒருபோது.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...