88. பலவகை அறிவுரைகள்

 

"தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்

     தங்களுக் கவைத ழுவுறா;

  சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்

     தயவிலோர் ஆயுள் பெருகார்;


மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்

     வீடுநற் செந்நெல் இவைகள்

  வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்

     விலைகொடுத் தேகொள் ளுவார்;


தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்

     தீண்டரிய நீசர் எனினும்

  சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்,

     சீலமுடை யோர்என் பரால்;


ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆன் கொடி உயர்த்த உமை நேசனே - விடைக் கொடியை உயர்த்திய உமையன்பனே!  ஈசனே - செல்வத்தை அளிப்பவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தாம் புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா - தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் தாமே புகழ்ந்து கூறிக் கொள்வோருக்கு அவை கிடையாமல் போய்விடும்;

சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய் தயவு இலோர் ஆயுள் பெருகார் - சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கம் அற்றவருக்கு வாழ்நாள் குறையும்; 

மேம்படு நறுங் கலவை, மாலை, தயிர், பால், புலால், வீடு. நல் செந்நெல் இவைகள் - உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம், மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை, வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்த பேர் விலை கொடுத்தே கொள்ளுவார் - மற்றொருவர் கொடுத்தாலும், மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள்;

தேன், கனி, கிழங்கு, விறகு, இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற அளிப்பரேல் - தேனையும், கனியையும், கிழங்கையும், விறகையும், இலையையும் இவை (போன்ற) யாவற்றையும் தீண்டத் தகாத  இழிந்தோரானாலும் நேர்மையோடு கொடுத்தாரானால், சீலம் உடையோர் இகழாது கைக் கொள்வர் - ஒழுக்கம் உடையோர் பழிக்காமல் ஏற்றுக்கொள்வர்.


விளக்கம் ---

தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கூறுதல் ஒருவனுக்கு அழிவைத் தரும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். "அமைந்து ஆங்கு ஒழுகலான், அளவு அறியான், தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்னும் திருக்குறளைக் காண்க. சூழல் அமைந்தபடி வாழாதவனும், வலிமைகளின் அளவை அறியாதவனும், தன்னைத் தானே மதித்துக் கொண்டவனும் விரைவில் கெடுவான் என்கின்றார் நாயனார்.  பின்வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க.

"தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்

அமராது அதனை அகற்றலே வேண்டும்;

அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்

தமவேனும் கொள்ளாக் கலம்." --- பழமொழி நானூறு.

இதன்பொருள் ---

அமை அரும் வெற்ப - மூங்கில்கள் நிறைந்த மலை நாடனே!, கொள்ளாக் கலம் தமவேனும் - தமக்கு ஏற்றதாக இல்லாத பொற்கலன்கள் தம்முடையதாயினும், தம்மை அணியார் - மக்கள் அவற்றை அணிந்து கொண்டு தம்மை அணிபெறச் செய்யார். (அதுபோல) தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் - தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து, தமரேயும் அமராததனை அகற்றலே வேண்டும் - சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு விலக்குதலையே ஒருவன் விரும்புதல் வேண்டும்.

'அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி. தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையை ஏற்றல் கூடாது.


"தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி

வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்

நாயைப் புலியாம் எனல்."

இதன் பொருள் ---

தாயினால் ஆயினும், தந்தையினால் ஆயினும் யாதானும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தனது வாயினாலேயே தன்னைப் புகழ்ந்து கூறிக்கொள்ளும் தற்புகழ்ச்சியாளர்களை, மற்றவர்களுக் புகழ்ந்து கூறுதல் என்பது, புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவது இல்லை. என்றாலும், அவ்வாறு கூறுவது அடுப்பின் ஓரத்திலே முடங்கிக் கிடக்கும் நாயை பார்த்து, புலி என்று சொல்வது பொலப் பொருத்தம் இல்லலாத புகழ்ச்சியே ஆகும் அது. (குடிப் பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினை உடையவர் ஆதல் இல்லை. அவருடைய போலித் தோற்றத்தைக் கண்டு புகழ்வது எல்லாம் பொய்யான புகழ்ச்சியே ஆகும்.

 

"ஒன்னார் அடநின்ற போழ்தின்,ஒருமகன்

தன்னை எனைத்தும் வியவற்க;--- துன்னினார்

நன்மை இலராய் விடினும்,நனிமலராம்

பன்மையில் பாடு உடையது இல்." --- பழமொழி நானூறு.

இதன் பொருள் --- 

    ஒன்னார் அட நின்ற போழ்தின் - பொருந்தாத பகைவரிடத்தில் போரிடும்போது, தம்மைக் கொல்ல நின்ற பொழுதில், ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க - வீரத்தில் மிக்கவனாக இருந்தாலும், தனித்து நின்ற ஒருவன், தன்னை எத்துணையும் வியந்து கூறுதல் கூடாது. துன்னினார் நன்மையிலராய்விடிலும் - கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றவர் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். நனி பலவாம் பன்மையில் பாடுடையது இல் - மிகப்பலராய் இருத்தலை விட வலிமையுடையது ஒன்று இல்லை.

 

"கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்,

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்;- தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்."  --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

      அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்கு உரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடு அமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

    நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடமோ, தளும்பித் தளும்பி, இருக்கின்ற நீரும் இல்லாமல் போகும். கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள். அறிவில்லாதவர்கள் தம்மைத் தாமே பெரிதும் மதித்துப் பேசி, இழிவைத் தேடிக் கொள்வார்கள்.

 

 "தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், -– தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்."        --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

      தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் - தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொள்ளுதல், தீச் சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று - குளிர்ந்த நீரை விட்டுத் தீவிளக்கை வளர்த்தது போல ஆகும்;  ஆதலால்,  தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது -  தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமை அன்றோ இன்பமாகும்?

    தீ வளரும் என்று நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ, அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பும் மிகாது அழிந்தே போகும் என்று சொல்லப்பட்டது.

 

"கற்றாங்கு அறிந்துஅடங்கி, தீதுஒரீஇ, நன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றி, பணிஅறநின்று, ஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச்சென் றார்."      --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

     கற்று ஆங்கு அறிந்து அடங்கி - அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அவற்றிற்கேற்ப மன அடக்கத்தோடு இருந்து, தீது ஒரீஇ - (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டு, நன்று ஆற்றி - (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து, பெற்றது கொண்டு மனம் திருத்தி - கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி, பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்தில் கொண்டு, பணி அற நின்று - சரியை முதலிய தொழில்கள் மாள, அருள் நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து - தனிப் பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே நீள்நெறி சென்றார் - நிற்கின்ற ஞானியரே வீட்டை அடையும் வழியில் நின்றவராவர்.

         அறிவு நூல்களில் விலக்கிய தீயகாரியங்களாவன: காமம் கோபம் முதலியன. அவற்றின்கண் விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை,வாய்மை முதலியன. 

 

 "கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தனென் றெள்ளப் படும்."           ---  நாலடியார்.

இதன் பொருள் --- 

      கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சி பரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  தான் உரைப்பின் - அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால், மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், 'மருந்தினால் தெளியாத பித்தன் இவன்' என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

         பேதைமை என்பது, பிறர் கருத்தை அறியாது, பிறர் கூறும் முகமனுக்கு மகிழும் பித்துத் தன்மை உடையது.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...