50. இடன் அறிதல் - 10. காலாழ் களரின்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "துன்பத்திற்கு அஞ்சாத வேற்படையை உடைய வீரர் பலரையும் அழித்த முகத் தந்தங்களை உடைய யானைகளையும், கால் புதையும் சேற்று நிலத்தில் நரியானது மாய்த்துக் கொல்லும்" என்கின்றார் நாயனார்.

தம்மைச் செலுத்துகின்ற பாகர்களுக்கு அடங்காமல், போரில் எதிர் வந்த வீரர்களைத் தமது முகத்தில் உள்ள தந்தங்களால் குத்திக் கொன்ற வல்லமை உடைய பெரிய யானைகள், தமது கால் புதையும் சேற்று நிலத்தில் இருந்துவிட்டால், மிகச் சிறிய நரியும்  யானைகளைக் கொன்றுவிடும். யானையானது சேற்றில் புகுந்து விடுமானால், அதன் உடல் பளுவால், சேற்றில் புதையுமே அன்றி, சேற்றை விட்டு வெளியே வருவதற்கு உரிய வல்லமை இல்லாமையால், சேற்றில் நிற்கத் தகுதியற்ற யானையை, நரியானது கடித்தே கொன்று விடும்.

எனவே, தனக்குப் பொருந்தாத இடத்தில் செல்லுதல் கூடாது என்பது பெறப்பட்டது. பெரிய படையை உடையவனும், தனக்குப் பொருந்தாத இடத்தில் சென்றால், அங்கிருந்து திரும்பி வர முடியாமல் மாய்ந்து போவான் என்று சொல்லப்பட்டது.


இதற்குத் திருக்குறள் ......


"கால்ஆழ் களரின் நரி அடும், கண் அஞ்சா

வேல்ஆள் முகத்த களிறு."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு --- பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, 

கால்ஆழ் களரின் நரி அடும் --- அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும்

('முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

"பால்ஆர் மொழிஉமை பங்காளர், வெங்கைஅம் பாவைதந்த

மால் ஆழ்தரும் எனை, வெவ்வுரையான், நண்ப! வாட்டுகின்றாய்,

கால்ஆழ் களரின் அமிழ்ந்த வெம் கோட்டுக் களிற்றை ஒரு

வேலால் எறிபவர் போலே, இது என் விதிவசமே."  --- திருவெங்கைக் கோவை.

இதன் பொருள் ---

பால் போலும் மொழியினை உடைய உமாதேவியாரைத் தனது திருமேனியின் ஒரு பாதியிலே உடைய பெருமான் எழுந்தருளி உள்ள, திருவெங்கை என்னும் திருத்தலத்தில் நான் கண்ட அழகிய பாவையால் உண்டான மயக்கத்தில் ஆழ்ந்து உள்ளேன் யான். தோழனே! கால் புதையும் சேற்று நிலத்தில் புகுந்த கொடிய தந்தங்களை உடைய ஆண் யானையை, ஒரு வேலைக் கொண்டு எறிபவரைப் போல, கொடுமையான சொற்களால் என்னை இப்படி வாட்டுகின்றாய். இது எனது விதிவமே ஆகும்.

பாவை - பாவை போல்வாளாகிய தலைமகள். மால்ஆழ் தரும்-மயக்கத்தில் ஆழுகின்ற. வெவ்வுரை - கடுஞ்சொல். கோடு - கொம்பு. களிறு - ஆண்யானை.


"போன மாமுனி தன் தபோவனத்து

ஒருபுடை மிசை நெடுங் கள்ளிக்

கான மானது புகுந்து பாரிடங்களும்

கழுகு இனங்களும் துன்றி,

யானை ஒடிட, நரி துரந்திடு நிலத்து

எரி வெயில் கழைமுத்தம்,

வான் எலாம் நெடும் தாரகைபோல் எழு

மால்வரைப் புறம் சார்ந்தான்." --- வில்லிபாரதம்.


இதன் பொருள் ---

போன மாமுனி - புறப்பட்டுச் சென்ற சிறந்த அந்தக் காள மாமுனிவன், தன் தபோவனத்து - தன்னுடைய தவச் சாலையில், ஒரு புடை - ஒரு பக்கத்திலே, மிடை - நெருங்கிய, நெடுங் கள்ளிக்கானம் ஆனது - நீண்ட கள்ளிக் கானமாகிய இடத்திலே, புகுந்து - புகுந்து, பாரிடங்களும் - பூதங்களும், கழுகு இனங்களும் - கழுகின் கூட்டங்களும், துன்றி - நெருங்கப் பெற்று, யானை ஓடிட நரி துரத்திடு - யானை அஞ்சி ஓடும்படி நரியானது ஓட்ட வல்ல, நிலத்து - (பாலை) நிலமாகிய, எரி வெயில் - எரிகின்ற வெயிலினால்,  கழை முத்தம் வான் எலாம் நெடுந்தாரகை போல் எழும் - மூங்கிலிருந்து முத்துக்கள் ஆகாயமெல்லாம் பெரிய நட்சத்திரங்கள் போல மேலே எழுகின்ற, மால் வரை புறம் - பெரிய மலையின் பக்கமாகிய இடத்தை, சார்ந்தான் - சென்று சேர்ந்தான்.

     பாலை நிலத்தில் யானை வலிகுன்றிடும், ஆதலால், அதனை நரி  துரத்திடும் என்றார். 


"தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது" என்று,

இந் நிலத்தினில் பழமொழி அறிதி நீ; இறைவ!

எந் நிலத்தினும் உனக்கு எளிதாயினும், இவர் நம்

நல் நிலத்தினில் வர, அமர் தொடங்குதல் நன்றால்."   --- வில்லிபாரதம். 

இதன் பொருள் ---

இறைவ - அரசனே! தன் நிலத்தினில் - தான் இருக்குமிடத்தில் உள்ள, குறுமுயல் - சிறிய முயற்குட்டி, தந்தியின் வலிது என்று - (தன்னிடம் விட்டுப் பெயர்ந்து வந்த பெரிய) யானையைக் காட்டிலும் வலிமை உடையது என்று, இ நிலத்தினில் - இவ்வுலகத்துச் சொல்லப்படுகின்ற, பழமொழி - பழமொழியை, நீ அறிதி - நீ அறிவாய்; (ஆகையால்), எந் நிலத்தினும் - (தன் நிலம்) அயல் நிலம் என்னும்) எந்த இடங்களிலும், உனக்கு எளிது ஆயினும் --- உனக்கு (போர் செய்வது) எளிதாயிருந்தாலும், இவர் நம் நல் நிலத்தினில் வர - இவர்கள் நமது நல்ல இடத்தில் வந்த பின்பு, அமர் தொடங்குதல் - (நாம்) போரைத் தொடங்குதல், நன்று - நல்லது.

     "தன் நிலமானால் முயலும் யானையை வெல்லும்" என்பது உலக வழக்கு. இது, இவர் வலியில்லாதவரானாலும், நீ மிக்க வலிமை உடையவனானாலும், இவர் நிலத்திலிருந்து நீ போர் செய்தால் தோல்வி அடைவாய் என்னும் பொருள் தோன்றத் துரியோதனனுக்கு விதுரர் கூறியது. இது நிரைமீட்சிச் சருக்கத்தில் வருகிறது காண்க.

இனிமேல், அருச்சுனாதியரை வெல்ல முடியாதோ? என்று துரியோதனனுக்குத் தோன்றக் கூடிய எண்ணத்திற்குச் சாமாதானம் கூறுப்பட்டது. இப்போது பொருதவர் ஒருகால் பாண்டவராக இருப்பின் பிறகு எப்படியும் அவர்கள் நம் நிலத்தில் வந்து பொருவராதலால், அப்போது அவர்களை வென்றுவிடலாம் என்பான் இவர் நம் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்று என்றான். துரியோதனனுக்கு ஊக்கம் குறையாதிருத்தற் பொருட்டும், அவனுக்குக் கோபம் உண்டாகாமல் இருப்பதைக் கருதியும்,  "எந்நிலத்தினும் உனக்கு எளிது" என்றான்.  தந்தி - தந்தங்களை உடையது.  

"தன் ஊருக்கு யானை - அயலூருக்குப் பூனை" என வழங்கும் முதுமொழியைக் கருத்தில் கொள்ளுதல் சாலும்.


No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...