50. இடன் அறிதல் - 02. முரண் சேர்ந்த

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்

இடன் அறிதலாவது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பகை உணர்ச்சியோடு கூடிய பகை வலிமைகள் கொண்டவர்க்கும், பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்து இருப்பது, பயன்கள் பலவற்றையும் தரும்" என்கின்றார் நாயனார். மிக்க வலிமை கொண்ட ஒருவனுக்கு அரண் முதலியவை எதற்கு என்பதற்கு இவ்வாறு கூறளி அருளினார் நாயனார்.

மொய்ம்பு --- வலிமை.

அரண் சேராது ஆகும் ஆக்கமும் இருத்தலால், "அரண் சேர்ந்த அக்கம்" என்றார். காப்பு இல்லாமல், தமது வலிமையினால் பகைவரை வளைத்துக் கொள்வதும், காப்போடு கூடி, பகைவரை வளைத்தலும் என இருவகை ஆகும்.

பிறரால் அழிக்கக் கூடாத பெரிய வலிமையை உடையவராக இருந்தாலும், பகைமேல் செல்லுகின்ற காலத்து, பாதுகாப்பான இடம் அவசியமாகும்.


திருக்குறளைக் காண்போம்...

"முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண் சேர்ந்து ஆம்

ஆக்கம் பலவும் தரும்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முரண் சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், 

அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.

(மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும், இது பகைமேல் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை --- சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின், ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன. பகைவரால் தமக்கு நலிவின்மையும்,  தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.) 


பின்வரும் பாடல்,  இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க ---

"முரண் புகு தீவினை முடித்த முன்னவன்

கரண் புகு சூழலே சூழ, காண்பது ஓர்

அரண் பிறிது இல் என, அருளின் வேலையைச்

சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான்."   --- கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப்படலம்.

இதன் பொருள் ---

முரண் புகு தீவினை முடித்த முன்னவன் - அறத்துக்கு மாறானதாகச் சொல்லப்படும் தீய செயலைச் செய்து முடித்த  அண்ணனாகிய இராவணன்; கரண் புகு சூழலே சூழ - மனம் போன போக்கிலேயே போக (அதைப் பார்த்த வீடணன்); காண்பதோர் அரண் பிறிதில் என - நமக்குப் பாதுகாப்பு வேறு எதுவும் காணப்படவில்லை என்று;  அருளின் வேலையை - அருட்கடலாக விளங்கும் இராமபிரானை;  சரண் புகுந்தனன் - அடைக்கலம் அடையப் புகுந்தான்;  என முன்னம் சாற்றினான் - என்று முதலிலேயே கூறினான். 

முரண் - மாறுபாடு (அறத்துக்கு மாறானது) தீவினை - தீய செயல் - சீதாபிராட்டியை வஞ்சித்துக் கவர்ந்து வந்தது சிறை வைத்து போன்ற தீய செயல்கள். கரண் - அந்தக்கரணம். இங்கே மனம். முரண்பட்ட தீவினை செய்த அண்ணன்,  மனம் போன போக்கில் செல்வதால், இவனுடன் வாழ்தல்  ஏற்றதல்ல. இராமபிரானைத் தவிர புகலிடம் (காப்பான இடம்) வேறில்லை. எனவே, அருட்கடலான இராமனைச் சரண் அடைய வந்துள்ளான்.


No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 03. ஆற்றாரும் அற்றி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...