"தேடித்தம் வீட்டிற் பணக்காரர் வந்திடின்
தேகசீ வன்போலவே,
சிநேகித்த உம்மையொரு பொழுதுகா ணாவிடின்
செல்லுறா தன்னம்என்றே
கூடிச் சுகிப்பர்;என் ஆசைஉன் மேல்என்று
கூசாமல் ஆணையிடுவார்;
கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ்
கொடுப்பர்,சும் பனம்உகப்பர்;
வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்தபின்,
வேறுபட நிந்தைசெய்து
விடவிடப் பேசுவர்; தாய்கலகம் மூட்டியே
விட்டுத் துரத்திவிடுவார்;
வாடிக்கை யாய்இந்த வண்டப் பரத்தையர்
மயக்கத்தை நம்பலாமோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!"
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தம் வீட்டில் பணக்காரர் தேடி வந்திடின் - தம் வீட்டினைத் தேடிச் செல்வர்கள் வந்தால், தேக சீவன் போலவே சினேகித்த உம்மை - உடலும் உயிரும்போல் நட்புக்கொண்ட தங்களை, ஒருபொழுது காணாவிடின் அன்னம் செல்லுறாது - ஒரு வேளை பார்க்கவில்லையானாலும் உணவு ஏற்றுக் கொள்வதில்லை; என்றே - எனவே கூறி, கூடிச் சுகிப்பர் - கலந்து மகிழ்வர்;
என் ஆசை உன்மேல் என்று கூசாமல் ஆணையிடுவர் - என் காதல் உனக்கே என்று மனம் கூசாமல் பொய்யாக ஆணையிடுவார்கள்;
கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திடுவர் - மார்பைத் திறந்து இறுகப் பற்றும்படி கொடுப்பார்கள்;
இதழ் கொடுப்பர் - வாய் இதழ் பருக அளிப்பர்;
சும்பனம் உகப்பர் - சும்பனம் என்னும் கரணத்தை விரும்பிச் செய்வர்;
வேடிக்கை பேசியே கைமுதல் பறித்தபின் - இனிமையாகப் பேசிக் கையிலுள்ள செல்வத்தைப் பற்றிய பிறகு, வேறுபட நிந்தை செய்து - மனம்வெறுக்கப் பழித்து, விடவிடப் பேசுவர் - மாறிமாறித் தூற்றுவர்;
தாய் கலகம் மூட்டியே விட்டுத் துரத்திவிடுவார்- தாய்க்கிழவியைக் கொண்டு கலகம் உண்டாக்கி வீட்டை விட்டுத் துரத்துவார்கள்;
இந்த வண்டப் பரத்தையர் மயக்கத்தை வாடிக்கையாய் நம்பலாமோ? - இந்த இழிந்த வேசையரின் மயக்கம் தரும் காமச்செயல்களை வழக்கமாக நிலையென நம்பல் கூடுமோ?
அன்பை விரும்பாமல் பொருளை விரும்பும் பெண்களை வேசையர் என்பர். வேசையரின் நட்பு வேண்டாம் என்பது சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment