50. இடன் அறிதல் - 01. தொடங்கற்க எவ்வினையும்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதலாவது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "எச் செயலையும் எளிது என எண்ணி இருந்து விட வேண்டாம்; முழுமையாகப் பொருந்தி வரும் இடத்தைக் கண்டபின் அல்லாமல் செயலைத் தொடங்கவும் வேண்டாம்" என்கின்றார் நாயனார். பகைவரை வெற்றி கொள்வதற்கு இடம் என்பது எவ்விதம் இருத்தல் வேண்டும் என்பதையும், இடத்தைப் பெற்றால், எவ்விதம் தொடங்கல் வேண்டும் என்பதையும் நாயனார் கூறி அருளினார். அதற்குத் திருக்குறள்,


"தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க, முற்றும்

இடம் கண்டபின் அல்லது."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முற்றும் இடம் கண்ட பின் அல்லது --- பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, 

எவ்வினையும் தொடங்கற்க - அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காது ஒழிக, 

எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழாது ஒழிக.


(முற்றுதல்: வளைத்தல். அதற்காம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலொடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து, ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக் கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"பள்ளத் திரைகடல் சேது உண்டாக்கப் பரிதிகுலத்

துள்உற்ற வள்ளல் புல்லாணி இடங்கண்டு உவந்துசென்று

விள்ளற்கு அரும்சமர் வென்றான் தொடங்கற்க எவ்வினையும்

எள்ளற்க முற்றும் இடங்கண்டபின் அல்லது என்பதுவே."

இதன் பொருள் ---

எச் செயலையும் எளிது என எண்ணி இருந்து விட வேண்டாம்; முழுமையாகப் பொருந்தி வரும் இடத்தைக் கண்டபின் அல்லாமல் செயலைத் தொடங்கவும் வேண்டாம் எனத் திருவள்ளுவ நாயானர் அருளியதைப் போல, திருப்புல்லாணி என்னும் திப்பிய தேசத்தில் திருக்கோயில் கொண்டுள்ள பெருமாள், சூரிய குலத்தில் இராமபிரானாக அவதரித்து, ஆழமும், அலைகளும் மிகுந்த கடலில் அணை கட்டி, இலங்காபுரிக்குச் சென்று இராவணனோடு அரும் சமர் புரிந்து வென்று வந்தார்.

கடலில் அணை கட்டிய வரலாறு

இராமபிரான் கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி, வருணனை நினைத்து, கரத்தைத் தலையணையாக வைத்து, கிழக்கு முகமாகப் படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்த அவர் திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் தவமிருந்தார். மூடனான கடலரசன் இராமருக்கு முன் வரவில்லை. இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று கடலை வற்றச் செய்கிறேன், மூடர்களிடத்தில் பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டு வா; திவ்விய அத்திரங்களையும் எடுத்து வா. கடலை வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்க, கோதண்டத்தை வளைத்து நாணேற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது, எரி கொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின. மேகங்கள் இல்லாமலேயே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாத்திரத்தை எடுத்து வில்லில் சந்தித்தார். இலட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டதென்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன. 

உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருணன் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு தோன்றி, காலகாலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் ரகுவீரரிடம் வந்து பணிந்து, “இராகவரே! மன்னிப்பீர்; வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்” என்றான். 

இராமர் “நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது. இதை நான் எவ்விடத்தில் விடலாம் என்று சொல்லுக” என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துருமகுல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று சொல்ல, இராமர், உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை சென்று அந்த இடத்தைப் பிளக்க, ரசாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரணகூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்குகிறது. அவ்விடம் “எல்லா நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக” என்று இரகுநாதர் வரம் கொடுத்தார்.

பிறகு வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன்; விசுவகர்மாவினுடைய புதல்வன்; தந்தைக்குச் சமானமானவன்; தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன் என்மேல் அணை கட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம் பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித் திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே. விசாலமான இந்தக் கடலில் நான் எனது தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணை கட்டுகிறேன். வீரனுக்குத் தண்டோபாயமே சிறந்தது; அயோக்கியர்களிடம் சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இந்தக் கடலரசன் தண்ட உபாயத்தினாலேயே பயந்து அணை கட்ட இடம் கொடுத்தான். வானரவீரர்கள் அணை கட்டுவதற்கு வேண்டியவற்றைக் கொணரட்டும்” என்றான்.

இராமர் அவ்வாறே கட்டளையிட, வானர வீரர்கள் நாற்புறங்களிலும் பெருங் காட்டில் சென்று, ஆச்சா, அசுவகர்ணம், மருதம், பனை, வெண்பாலை, கர்ணீகாரம், மா, அசோகம் முதலிய தருக்களை வேரொடு பிடுங்கிக் கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக் கட்டிப் பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையைக் கட்டலானான். பெரிய பாறைகளும் மலைகளும் அக்கடலில் வீழ்த்தப்பட்ட பொழுது பெருஞ் சத்தமஉ உண்டாயிற்று. தளராத அவ்வானர வீரர்கள் அணையைக் கட்டி முடித்தார்கள். அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச்சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் இறும்பூதுற்றன.

பள்ளத் திரைக் கடல் --- ஆழமும் அலையும் உள்ள கடல்.  பரிதிகுலத்து உற்ற வள்ளல் --- கதிரவன் குலத்தில் தோன்றிய இராமபிரான். விள்ளற்கு அருஞ்சமர் --- கூறுதற்கரிய போர்.


No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 03. ஆற்றாரும் அற்றி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...