திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 50 -- இடன் அறிதல்
இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "ஏற்ற இடத்தைத் தெரிந்து, தம்மைப் பாதுகாத்துக்கொண்டு, தொழிலை மேற்கொண்டால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராக விளங்குவார்" என்கின்றார் நாயனார்.
திருக்குறளைக் காண்போம்...
"ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன் அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்."
இதற்குப் பரிமேலழகர் உரை ---
ஆற்றாரும் ஆற்றி அடுப --- வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர்,
இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் --- அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.
('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலி இன்றியும் வெல்வர் என்பதாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
"காட்டு முயலும் கதக் கரியைக் கொல்லுமால்
தோட்டலர் நீர்க் கச்சியினுள், சோமேசா! --- நாட்டியிடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்."
இதன்பொருள்---
சோமேசா! ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியராய் வெல்வர், இடன் அறிந்து - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, போற்றி - தம்மைக் காத்து, போற்றார்கண் செயின் - பகைவர்மாட்டு வினை செய்வாராயின் என்று,
நாட்டி இடின் - துணிந்து சொல்லுமிடத்து, தோடு அலர் நீர் கச்சியினுள் - இதழ்களையுடைய மலர்கள் பொருந்திய நீர்வளம் மிக்க காஞ்சி மாநகரில், காட்டு முயலும் - காட்டின்கண் வாழ்கின்ற முயலும், கதம் கரியை கொல்லும் - சினத்தையுடைய யானையை வருத்தியது ஆகலான் என்றவாறு.
காஞ்சியின்கண் உள்ள ஒரு சிறிய முயல், அத் தலவாசம் செய்யும் வலிமையினால், ஒரு யானையை வருத்தி ஓட்டிற்று. பின்வரும் பெரியபுராணப் பாடலைக் காண்க.
"மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்
மண்ணில் மிக்கதுஓர் நன்மையி னாலே
துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்
துரக்க எய்திய தொலைவில்ஊக் கத்தால்
தன்நி லத்துநின்று அகற்றுதல் செய்யும்
தானம் அன்றியும் தனுஎழுந் தரணி
எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத்
தானம்என்று இவை இயல்பினில் உடைத்தால்."
இதன் பொருள் ---
நிலைபெற்ற அக்காஞ்சித் திருநகர் எல்லையில், இம்மண்ணில் மிக்கதோர் நன்மையினால் விளங்கிடும் பேற்றால், நெருங்கிக் கொலை புரியும் யானையைத் தூற்றில் (காடு அல்லது புதர்) வாழும் ஒரு முயல், தன் ஊக்கத்தால் அவ்யானையை ஓடிடச் செய்த இடமும், இறந்த உடம்புகள் மீளவும் உயிர் பெற்று எழுகின்ற ஓர் இடமும், எந்நிலத்திலும் காண்டற்கரிய இறவாத் தானம் என்ற இடமும் உள்ளன.
"வென்றி இபம் ஒன்று குறுமுயலுக்கு ஓடும் இடம் பார்த்து" என்னும் ஏகாம்பரநாதர் உலா அடிகளையும் காண்க.
No comments:
Post a Comment