50. இடன் அறிதல் - 07. அஞ்சாமை அல்லால்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "பகைவரிடத்தில் தொழில் செய்யும் விதங்களை எல்லாம் குறைவுபடாமல் ஆராய்ந்து, இடத்தோடு பொருந்தச் செய்தால், அந்தச் செயலுக்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணைகள் வேண்டா" என்கின்றார் நாயனார்.

அதாவது, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி என்ற இம் மூன்று வலிமையினுள், இடம் அறிந்து செய்கின்றவர்க்குத் தாம் எண்ணிய காரியத்தை முடிப்பதற்குத் தமது வலி ஒன்றே போதுமானது என்றும், துணை வலி என்பதே வேண்டாம் என்று கூறப்படுவதால், ஒரு தொழிலைச் செய்து முடிக்க வேண்டுமானால், இடம் அறிதலே சிறந்தது என்பது பெறப்பட்டது. 


இதற்குத் திருக்குறள்

"அஞ்சாமை அல்லால் துணை வேண்டா, எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் --- பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், 

அஞ்சாமை அல்லால் துணை வேண்டா --- அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.

('திண்ணியராய் நின்று செய்து முடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து வரு பாடல்...


"சென்னிஅனீ கத்தைமோ திச்சிதைத்தது ஓர்கோழி

முன்உறையூர்க் கானில், முருகேசா - மன்னுலகில்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்."


இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே! முன் - முன்னாளிலே, உறையூர் கானில் - உறையூர்க் காட்டிலே, ஓர் கோழி - ஒரு கோழியானது, சென்னி - சோழனது, அனீகத்தை - படையை, மோதி சிதைத்தது - அடித்துக் கெடுத்தது. மன் உலகில் - நிலைபெற்ற உலகத்தில், எஞ்சாமை எண்ணி - குறைவில்லாமல் எண்ணிப் பார்த்து, இடத்தால் செயின் - இடமறிந்து செய்தால், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அஞ்சாமையை அல்லாமல் வேறு துணை வேண்டியது இல்லை.

முன்னாளிலே உறையூர்க் காட்டில் ஒரு கோழியானது சோழனுடைய படையை மோதியடித்துக் கெடுத்தது. இவ் உலகில் சிறிதும் குறைவில்லாமல் நன்றாக எண்ணமிட்டு இடத்தையும் நோக்கிக் காரியத்தைச் செய்தால் அஞ்சாமை அல்லால் வேறு துணை வேண்டியது இல்லை என்பது சொல்லப்பட்டது.


உறையூர்க் கோழியின் கதை


முன்னாளிலே சனநாத வளவனுடைய மகனாகிய அரசசூளாமணி என்பவன் நாட்டு வளங்களைக் காண எண்ணிப் புறப்பட்டான். பல இடங்களையும் பார்த்துக் கொண்டு திரிசிராமலைக்கு மேல்பால் உள்ள உறையூர்க் காட்டை அடைந்தான். அப்போது அங்கு ஒரு கோழியானது அந்த இடத்தின் வலிமையால் சோழனுடைய பெரிய படையில் பாய்ந்து பட்டத்து யானை முதலியவைகளையும் மோதிக் கலங்குமாறு செய்தது. அதனைக்  கண்ட அரசன், இது இவ்வாறு செய்வதற்கு ஏது, இந்த இடத்தின் வலிமையே என்று முடிவு செய்து அங்கு ஒரு நகரத்தை உண்டாக்கி அதனைத் தலைநகராகக் கொண்டான்.


No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 10. காலாழ் களரின்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...