திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 50 -- இடன் அறிதல்
இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "தகுந்த இடத்தை அறிந்து, பகைவரிடத்தில் செய்வகைகளைப் பொருள் செய்து மேற்கொண்டால், தன்னை வெல்ல எண்ணிய பகைவரும் தமது எண்ணத்தைக் கைவிடுவர்" என்கின்றார் நாயனார்.
இதற்குத் திருக்குறள்
"எண்ணியார் எண்ணம் இழப்பர், இடம் அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்."
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இடன் அறிந்து துன்னியார் --- தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர்,
துன்னிச் செயின் --- அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின்,
எண்ணியார் எண்ணம் இழப்பர் --- அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.
('அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, "நீதிசூடாமணி" என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
"சார்ந்துபறை கீறிச் சாரசந்தன் தன்உடலை
ஈர்ந்துவென்றான் வீமன், இரங்கேசா! - தேர்ந்தக்கால்
எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்."
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வீமன் சார்ந்து - வீமன் (வேதிய வேடம் தாங்கிக் கண்ணனோடு) சென்று, பறை கீறி - (சராசந்தன் பட்டணத்தில் இருந்த) பேரிகையைக் கிழித்து, சராசந்தன் தன் உடலை ஈர்ந்து - சராசந்தனுடைய உடலை இரு பிளவாக்கி வென்றான் - வெற்றி பெற்றான்,(ஆகையால், இது) இடன் அறிந்து - தொழிலை முடிப்பதற்குத் தகுந்த இடத்தை அறிந்து, துன்னியார் - சேர்ந்த அரசர், துன்னி செயின் - பொருந்தி இருந்து அத்தொழிலைச் செய்வாராயின், எண்ணியார் - (முன்பு அவரை வெல்ல) எண்ணியிருந்த பகைவர், எண்ணம் இழப்பர் - அவ் எண்ணத்தை இழந்து தோற்பார்கள் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- இடம் அறிந்து காரியம் செய்தால் பகைவரை வெல்லலாம்.
விளக்கவுரை --- சராசந்தன் இருதாய்மார் வயிற்றில் அரை, அரை உடலாகப் பிறந்தவன். ஆகையால், அந்த அசம்பாவிதத்துக்கு அஞ்சி அவ்வூர் அரசன், அந்த அரை உடல்களைக் கோட்டைக்கு வெளிப்புறத்தில் வீசி எறிந்தான். நடு நிசியில் சரா என்னும் அரக்கி இரை தேடி அங்கு வந்தபோது, அந்த அரை உடல்களை ஒன்று சேர்த்து, உண்ண மனம் வராமல் வியந்து நோக்கிக் கொண்டிருந்தாள். அதற்குள் பொழுது விடிந்தது. அந்த அதிசயத்தை அவ் ஊரார் அனைவரும் கண்டு அரசற்கு அறிவித்தார்கள். அரசன் வந்து சரா என்பவளுக்கு வேண்டிய உணவளித்து அவளை மகிழ்வித்தான். ஆகையால் அவள், தான் ஒன்று சேர்த்த குழந்தைக்குத் தன் பெயரே வழங்கும்படி அதற்குச் "சராசந்தன்" என்று பெயரிட்டு அழைக்க வேண்டிக்கொண்டு, அதை விட்டுச் சென்றாள். அரசனும் அப்படியே ஒப்பி, அக் குழந்தைக்குச் சராசந்தன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அவனுக்கு வரத்தினால் தெய்வீகமாய் ஒரு பேரிகை கிடைத்தது. அது சத்துருக்கள் வரவை முன்னம் அறிந்து அறிவிக்கும் ஆற்றல் உடையது. சராசந்தன் வளர்ந்து வயது நிரம்பினபோது அவ்வூரை ஆளும் அரசனாய்ச் சத்துருக்களை வென்று புகழ் பெற்று விளங்கினான்.
தருமன் இராஜசூய யாகம் செய்வதற்குப் பொருள் வேண்டியிருந்தது. அது சேகரிக்கும் பொருட்டுக் கண்ணபிரான் வீமனை அழைத்துக் கொண்டு, சராசந்தன் ஊருக்குப் போனார். அங்குக் கட்டியிருந்த பேரிகை தங்கள் வரவை அறிவிக்கும் முந்தியே, கண்ணபிரான் வீமசேனனைக் கொண்டு அதைக் கிழிப்பித்துச் சராசந்தன் அரண்மனைக்குள் திடும் பிரவேசமாய் வீமனோடு நுழைந்தார். அது கண்ட அவன் கடும் கோபம் கொண்டு சண்டைக்குக் கிளம்பினான். கண்ணபிரான் செய்த சங்கேதப்படி வீமசேனன் கொஞ்சமேனும் பின் வாங்காமல், அவனோடு அகோர மல்யுத்தம் செய்து, இரண்டரை நாழிகைக்குள் அவனது உடலை இருபிளவாகக் கிழித்துத் தலைமாறி எறிந்தான். ஆகையால், சராசந்தன் மாண்டான். உடனே கண்ணபிரான் சற்றேனும் தாழ்க்காமல், அவன் பிள்ளைக்குப் பட்டம் கட்டிவிட்டு, யாகத்துக்காக வேண்டிய பொருளைக் கொள்ளையிட்டு, அங்கிருந்து எடுத்துக் கொண்டு வந்து தருமராஜனிடத்தில் கொடுத்தார். ஆகையால், "துன்னியார் துன்னிச் செயின், எண்ணியார் எண்ணம் இழப்பர்" என்றார் திருவள்ளுவ நாயனார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....
"வயத்து இரதம் ஏறி வரும்அபிமன் தன்னைச்
செயத்திரதன் கொன்றான், சிவசிவா! --- முயற்சியுடன்
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்."
ஜெயத்திரதன் சிந்து நாட்டு அரசன். கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்திரதன் பிறந்தபோது ஓர் அசரீரி "இவன் போரில் புகழ் படைத்து வீர சுவர்க்கம் அடைவான்" எனக் கூறியது கேட்டு ஜயத்திரதன் தந்தை, "என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்" என்றான்.
காமியக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது, திரௌபதி தனித்து இருந்தாள். அப்போது அங்கு வந்த சிந்து நாட்டு மன்னன் ஜயத்திரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக் கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான். காம வயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான். அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்திரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர். தேர் சென்ற சுவடைக் கொண்டு ஜயத்திரதனுடன் போரிட்டனர். அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவன் தலையை மொட்டை அடித்து அனுப்புகின்றனர். நாணி தலைகுனிந்து திரும்பிய ஜயத்திரதன், கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத் தக்க வலிமையை வேண்டுகிறான். கண்ணனின் துணை இருக்கும் வரை, பாண்டவர்களை யாராலும் கொல்ல முடியாது. ஆனாலும் ஜயத்திரதன் விடவில்லை. பாண்டவர்களுக்கு மிகப் பெரும் மனவலியை போரில் உண்டாக்க வரம் கேட்கிறான். அவன் வாக்கினையே அவனுக்கு எதிராக ஈசன் திருப்புகிறார். அதன்படி, "ஒரே ஒரு நாளிற்கு, அருச்சுனன், கண்ணன் இருவரைத் தவிர்த்து, போர் களத்தில் ஜயத்திரதன் யாரை வேண்டுமானாலும் எளிமையாய் தோற்கடிக்கும் ஆற்றலை பெறுவான். அந்த நாளையும் ஜயத்திரதனே தேர்வு செய்துகொள்ளலாம்" என வரம் கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறார்.
பதின்மூன்றாம் நாள் குருச்சேத்திரப் போரில் துரியோதனன் திட்டப்படி, துரோணர் சக்கர வியூகம் அமைத்துப் போரை நடத்துகிறார். அன்றைய போரின் போது தருமனைச் சிறைப்பிடிக்க எண்ணி சக்கரவியூகமாக வளைத்து விடுகிறார்கள். இந்த அமைப்பை உடைத்து செல்லத் தெரிந்தவர்கள் பாண்டவர் தரப்பில், அருச்சுனன், கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு ஆகிய மூவர் மட்டுமே. ஆனால் அபிமன்யுவுக்கு உள்ளே போகத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. இருந்தாலும் அருச்சுனரும் கிருஷ்ணரும் அச்சமயம் போர்க்களத்தில் வேறிடத்தில் இருந்ததால், அபிமன்யு மட்டும் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு. ஆனால், தருமன் மீட்கப்பட்டு வெளி வந்த மறுகணம், அவர் உள்பட அபிமன்யுவைப் பின் தொடர்ந்த பாண்டவர்கள் நால்வரையும் ஜெயத்திரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான். அபிமன்யுவைத் தனியாக வளைத்து விடுகிறார்கள். துரோணர் ஆச்சரியத்தில் கண்பிதுங்கிப் போகும் அளவுக்கு அத்தனை பேரையும் தனியாக சமாளிக்கிறான் சிறுவனாகிய அபிமன்னன். கடும் போராட்டத்துக்குப் பிறகு, அவனை வீழ்த்திக் கொன்று விடுகிறார்கள்.
"துன்னியார் துன்னிச் செயின், எண்ணியார் எண்ணம் இழப்பர்" என்றார் திருவள்ளுவ நாயனார். கௌரவர்கள் சூழ்ச்சியால், அபிமன்னன் தனது எண்ணத்தை இழந்தான் என்பதை அறிக.
No comments:
Post a Comment