50. இடன் அறிதல் - 05. நெடும்புனலுள்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஆழம் நிறைந்த நீரில் உள்ள முதலையானது பிற உயிர்களை எல்லாம் வெல்லும்; முதலையானது நீரில் இருந்து நீங்குமானால், பிற உயிர்கள் எல்லாம் அதனை வெல்லும்" என்கின்றார் நாயனார்.

அவரவரும் தத்தமது இடத்தில் வலிமை உள்ளவராகவே இருப்பார். நிலைப்படாத நீரில் முதலை வசிக்கும் காலத்து, பிற உயிர்கள் எல்லாம் அந்த ஆழம் உடைய நீரில் செல்வது அருமை உடையது. எனவே, நீரிலேயே நிலைத்து வாழும் முதலையானது அவற்றை எளிதில் வென்று விடும். தான் நிலைத்து இருந்த நீரை விட்டு, முதலையானது வெளியில் வருமானால், வெளியில் நிலைத்து வாழும் பிற உயிரினங்கள் அதனை எளிதில் வெல்லும்.

எனவே, பகைவர், இருக்கக் கூடாத இடத்தில் இருக்கும் காலத்தில் அவரை எளிதில் வெல்லலாம் என்று சொல்லப்பட்டது.


இதற்குத் திருக்குறள்...


"நெடும்புனல்உள் வெல்லும் முதலை, அடும் புனலின்

நீங்கின், அதனைப் பிற."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முதலை நெடும்புனலுள் (பிற) வெல்லும் --- முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும், 

புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.

(எனவே, 'எல்லாரும் தம் நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கல் ஆற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.)


இதற்குப் பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்...

"யானையைச் சலந்தனில் இழுத்த அக்கரா

பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ?

தானையும் தலைவரும் தலம்விட்டு ஏகினால்

சேனையும் செல்வமும் தியங்கு வார்களே."      --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

யானையைச் சலந்தனில் இழுத்த அக் கரா - யானை ஒன்றினை, தான் வலிமையோடு இருக்கும் நீர் நிலையில் பற்றி இழுத்த முதலையானது, பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ --தன் இருக்கும் இடத்தை விட்டுத் தரையில் வந்து ஒரு பூனையைப் பிடிக்க முடியுமோ? (தனக்கு வலிமை பொருந்திய நீர் நிலையை விட்டு வெளியே வந்தால், சிறிய பூனையைக் கூட இழுக்க வலிமை இருக்காது. அதுபோல) தானையும் தலைவரும் தலம் விட்டு ஏகினால் - படைகளும் அவற்றின் தலைவராகிய படைக் கர்த்தர்களும் அவர் இருக்கும் இடத்தை விட்டு, தங்களுக்கு வலிமை முறையும் இடத்திற்குச் சென்றால், சேனையும் செல்வமும் தியங்குவார்களே - படைகளும் பொருளும் வலி குறைந்து பகைவரிடம் அகப்பட்டு (செய்வது அறியாது) மயங்குவார்கள்.

கருத்து - அவரவர் இருப்பிடத்தில் அவரவருக்குத் தக்க வலிமை இருக்கும். மாற்றார் மேல் செல்லும்போது காலம், வலி, இடம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து செல்லுதல் வேண்டும்.


No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...