50. இடன் அறிதல் - 08. சிறுபடையான்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "சிறு படையை உடையவனின் செல்லத்தக்க இடத்தை அடைந்தால், பெரும்படையை உடையவனின் மன எழுச்சி அழிந்து விடும்" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

தனது சேனையின் பெருமையை மட்டுமே எண்ணி, இடத்தை நோக்காது செல்வானாயின் பயனின்றிப் போய்விடும் என்பது சொல்லப்பட்டது்.


இதற்குத் திருக்குறள்...


"சிறுபடையான் செல்இடம் சேரின், உறுபடையான்,

ஊக்கம் அழிந்து விடும்."


இதற்குப் பரிமேழகர் உரை ---

உறு படையான் --- பெரும்படை உடைய அரசன், 

சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், 

ஊக்கம் அழிந்து விடும் --- அவனால் தன் பெருமை அழியும்.

('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்கு சென்று வினை செயல் ஆகாமையானாகப் பயிற்சி இன்மையானாக,  அப் பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"இறையருள் தென்னன் இடத்து இந்திரன் வந்து,அன்று

வளையால் எறிபட்ட ஆற்றால், ---  இளையாச்

சிறுபடையான் செல்இடம் சேரின், உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்."


இதன் பொருள் ---

இறையருள் தென்னன் - இறையருளைப் பெற்ற பாண்டியன். பாண்டியன் தளை இட்டு வைத்த மேகங்களை விடுவிக்க வந்த இந்திரன், பாண்டியனோடு செய்த போரில், பாண்டியன் இந்திரன் முடிமேல் வளை (சக்கரம்) ஒன்று எறிந்து அவனைப் புறங்காட்டி ஓடச் செய்தான் என்பது வரலாறு.

திருவிளையாடல் புராணத்தில், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் இந்த வரலாறு கூறப்பட்டு உள்ளது.

உக்கிரபாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அப்பொழுது ஒருசமயம் மழையானது மூவேந்தர்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் பொய்த்தது. ஆகையால், தமிழ்நாட்டில் நீர்வளம் இன்றிப் பஞ்சம் உண்டானது. தம் மக்களின் துயர் தீர்க்க எண்ணிய மூவேந்தர்களும் பொதிகை மலையில் வசித்த அகத்தியரின் உதவியை நாடினர்.

அகத்தியரும் கோள்நிலை, காலநிலையை ஆராய்ந்து மூவேந்தர்களிடமும் “அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது. ஆதலால் நீங்கள் மழைக்கடவுளான இந்திரனிடம் மழையைப் பெய்யச் செய்யுமாறு கேளுங்கள்” என்று கூறினார். மூவேந்தரும் அகத்தியரிடம் “நாங்கள் இந்திரனை சந்திப்பதற்காக எவ்வாறு இந்திலோகத்தை அடைவது?” என்று வினா எழுப்பினர்.

அதற்கு அகத்தியர் "நீங்கள் மூவரும் சோமவார விரத வழிபாட்டினைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தை அடையுங்கள்" என்று கூறினார். தமிழ் மூவேந்தரும் சோமவாரம் விரதமுறையை விளக்குமாறு அகத்தியரை வேண்டினர்.

அகத்தியர் பின்வருமாறு விளக்கினார். "சோமாவார விரதமுறையை பின்பற்ற விரும்புபவர்கள் கார்த்திகை, மார்கழி மாதங்கள் மற்றும் இரண்டு அமாவாசை சேர்ந்து வரும் மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் திங்கள் கிழமைகளில் இவ்விரதத்தை துவக்கலாம். இதற்காக விரதம் தொடங்கும் திங்கட்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமைகளில் இரவில் உணவு உண்ணாமல், நிலத்தில் படுத்து உறங்க வேண்டும். திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து சொக்கநாதரை மனதில் நினைத்து, அன்றைய கடன்களை முடித்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, திருவெண்ணீறு அணிந்து கொள்ள வேண்டும். மந்தாரை, முல்லை, இருவாட்சி, சாதி, மல்லிகை மலர்களால் விநாயகரை வழிபட்டு பின் சொக்கநாதரை முறைப்படி வழிபட வேண்டும். பின் பஞ்சாமிர்தம், பஞ்சகவ்வியம், நறுங்கனி, தேன், சந்தனக்குழம்பு, குளிர்ந்த தூய நீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் (அபிடேகம்) செய்ய வேண்டும். அழகிய வெண்பட்டு, பச்சைக் கற்பூரச் சுண்ணம், சந்தனம், மல்லிகை உள்ளிட்ட மணமுள்ள மாலை ஆகியவற்றை அணிவிக்க வேண்டும். பொன்னாலான அணிகலன்களை இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். பலவித பலகாரம், பானகம் மணம் மிக்க தாம்பூலம் ஆகியவற்றைப் படைத்து தீபதூப ஆராதனைகள் செய்து வில்வத்தால் அர்ச்சித்து மனமுருக வழிபாடு நடத்த வேண்டும்.  பின் தானங்கள் பலவற்றைக் கொடுக்க வேண்டும்".

"இவ்வாறு வழிபட்டால் நல்ல திருமணப்பேறு, நன்மக்கட்பேறு, நல்லவாக்கு, கல்வி, பொருள், இனியபோகம், பகைவரை வெற்றி கொள்ளும் தன்மை, இப்பிறவியிலேயே அரசுரிமை, பிறநலன்கள் ஆகியவை கிடைக்கும்".

"மேலும், முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று இப்பிறவியில் வீடுபேறு அடைவர். தேவருலகில் பதிநான்கு இந்திரப் பட்டம் பெற்று அவன் பக்கத்தில் வாழ்வர்.” என்று சோமவாரத்தின் விரதமுறை மற்றும் பலன்களை அகத்தியர் விளக்கிக் கூறினார்.

அகத்தியர் கூறிய விதிமுறைப்படி மூவேந்தர்கள் மூவரும் சோமவார விரதத்தைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தைச் சென்று அடைந்தனர். மூவேந்தரும் வருவதை அறிந்த இந்திரன் மூவேந்தர்கள் அமருவதற்காக, தன்னைவிட தாழ்ந்த நிலையில் உள்ள சிம்மாசனத்தை அமைத்தான்.

இந்திரோலகத்தை அடைந்த மூவேந்தர்களில் சேரனும், சோழனும் இந்திரனின் காட்டிய சிம்மாசனத்தில் அமர்ந்தனர். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுக்கு சமமாக அவனுடைய சிம்மாசனத்தில் இந்திரனோடு அமர்ந்தான். இதனால் இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது கடும் கோபம் கொண்டான். இந்திரன் சேர, சோழர்களைப் பார்த்து “நீங்கள் வந்த காரியம் யாது?” என்று கேட்டான். அவர்கள் இந்திரனிடம் “மழைக்கு அதிபதியே! எங்கள் நாட்டில் மழை பெய்யவில்லை. அதனைப் பெறவேண்டி இங்கே வந்தோம்.” என்று கூறினர். அதனைக் கேட்ட இந்திரன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் இரத்தின ஆபரங்கள் கொடுத்து அவ்விருவர் நாடுகளிலும் மழைபெய்யச் செய்யவதாக வாக்கு கொடுத்து அவர்களை வழி அனுப்பினான்.

தனக்கு இணையாக அமர்ந்திருந்த உக்கிரபாண்டியனை நோக்கிய இந்திரன் அவனை அவமானப்படுத்த எண்ணி ஒரு சூழ்ச்சியைச் செய்தான். பலபேர் சேர்ந்து தூக்கிவரும் பொருட்டு உள்ள முத்துமாலையை உக்கிரபாண்டியனுக்கு பரிசளிக்க எண்ணினான். அவனின் ஆணையின்படி பலபேர் சேர்ந்து முத்துமாலையைத் தூக்கி வந்து உக்கிரபாண்டியனிடம் நீட்டினர். உக்கிரபாண்டியன் முத்துமாலையை தூக்கத் திணருவதைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்க இந்திரன் எண்ணியிருந்தான். ஆனால், உக்கிரபாண்டியன் முத்துமாலையை எளிதாக தூக்கி கழுத்தில் அணிந்து கொண்டான். இதனைப் பார்த்த இந்திரன் அதிர்ச்சியடைந்தான். பின் உக்கிரபாண்டியனிடம் “இன்று முதல் நீ ஆரம் தாங்கிய பாண்டியன் என்று அழைக்கப்படுவாய்” என்று கூறினான்.

ஆனால், உக்கிரபாண்டியன் அதனைப் பொருட்படுத்தாது இந்திரனிடம் ஏதும் கேட்காது மதுரை நகர் திரும்பினான். சேர, சோழ நாடுகளில் இந்திரன் மழையைப் பெய்வித்தான். பாண்டிய நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை.

ஒருநாள் உக்கிரபாண்டியன் மரங்கள் அடர்ந்த பொதிகை மலைச்சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது புட்கலாவருத்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி என்னும் நான்கு மேகங்கள் பொதிகை மலைச்சாரலில் மேய்ந்து கொண்டிருந்தன.

அதனைக் கண்ட உக்கிரபாண்டியன் அவற்றைப் பிடித்து சிறையில் அடைத்தான். இதனை அறிந்த இந்திரன் கடும்கோபம் கொண்டான். உக்கிரபாண்டியன் மீது போர் தொடுத்தான். பாண்டியனின் படைகளும், இந்திரனின் படைகளும் நேருக்கு நேராக நின்று போரிட்டன. போரின் போது உக்கிரபாண்டியன், இறைவனான சுந்தரபாண்டியன் அளித்த வளையை இந்திரனை நோக்கி வீசினான்.

வளையானது இந்திரன் அணிந்திருந்த கிரீடத்தைச் சிதைத்தது. அதனைக் கண்ட இந்திரன் "நான் முன்னர் சோமசுந்தரரை வழிபட்டதின் பலனாக என்னுடைய தலை இன்று தப்பியது" என்று எண்ணி போர்களத்தைவிட்டு தேவலோகத்தை அடைந்தான்.

பின்னர் ‘உனது நாட்டில் மழையைப் பொழிவிக்கிறேன். நீ என்னுடைய மேகங்களைத் திருப்பித் தருவாயாக’ என்று ஓலை ஒன்றை அனுப்பினான். இந்திரன் அனுப்பிய ஓலையை நம்பாததால் மேகங்களின் விடுவிக்க உக்கிரபாண்டியன் மறுத்து விட்டான். பாண்டிய நாட்டு வேளாளன் ஒருவன் “அரசே இந்திரனின் செய்திக்கு நான் பிணை. இந்திரன் என்னை நன்கு அறிவான். ஆதலால் நீங்கள் மேகங்களை விடுதலை செய்யுங்கள்" என்று கூறினான்.

உக்கிரபாண்டியனும் மேகங்களை விடுவித்தான். பின்னர் இந்திரன் பாண்டிய நாட்டில் மழையை பெய்யச் செய்து நாட்டை வளமாக்கினான். மழையால் பாண்டிய நாடு செழித்து பொலிவு பெற்றது.

வலிமை மிக்கவர்கள் தங்களை விட வலிமை குறைந்தவர்களைத் துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டால் இறைவனின் அருளால் வலிமை மிக்கவர் தண்டிக்கப்படுவர் என்பதை இப்படலம் விளக்குகிறது.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


"வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்

அணங்கருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,

அளைச்செறி இழுவை இரைக்கு வந்தன்ன

மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து

விழுமியம் பெரியம் யாமே, நம்மில்

பொருநனும் இளையன், கொண்டியும் பெரிதென

எள்ளி வந்த வம்ப மள்ளர்

புல்லென் கண்ணர், புறத்திற் பெயர,

ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்

மாண்இழை மகளிர் நாணினர் கழியத்

தந்தை தம்மூர் ஆங்கண்

தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே."     ---  புறநானூறு.

இதன் பொருள் ---

நிலை தவறாது நிற்கவல்ல, நல்ல கால் வலியும், வென்று அழிக்க முடியாத உயர்ந்த தோள்வலியும் உடையவன் எமது தலைவன். குகைக்கு உள்ளே கிடந்த புலி, எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு, தன் பசிக்கு உணவாகிய இரையைத் தேடிக்கொண்டு வருவதைப் போல வரும், வெல்லுதற்கு அரிய, பரந்து அகன்ற மார்பை உடைய தலைவனின் வீரத்தை மதிக்காதவர்களாய், "மிகப் பெரியவர்கள், மிகப் பெரிய படையை உடையவர்கள் நாம், நாம் போய்ப் போரிடப் போகும் இவனோ வயதில் மிகச் சிறியவன். இவனை வென்றால் கிடைக்கின்ற தேட்டையோ மிகப் பெரிது" என்ற பேராசையால், படை கொண்டு வந்த வீரரை, இங்கே கொல்லாது, புறமுதுகு இட்டு ஓடச் செய்து, அவர்களின் காதல் மகளிர் கண்டு வெட்கத்தால் உயிர் விடும் வண்ணம், போர்ப்பறை ஒலிக்க, அவர்கள் உரைச் சென்று, அங்கேயே அப் பகைவர்களைக் கொன்றவன் இவன்.

தனது பகைவர்களை அவர்கள் ஊரிலேயே சென்று வெல்லும் வலிமையை உடையவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதைக் கூறும் பாடல் இது.


No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...