27. மன்னுயிரைத் தன் உயிர் போல் எண்ணுக

 


"முன்னரிய மறைவழங்கும் தண்டலையார்

      ஆகமத்தின் மொழிகே ளாமல்

பின்னுயிரை வதைத்தவனும், கொன்றவனும்

      குறைத்தவனும், பேரு ளோனும்,

அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்

      நரகுறுவர்; ஆத லாலே

தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக்

      கிரங்குவது தக்க தாமே."


இதன் பொருள் ---

முன் அரிய மறை வழங்கும் தண்டலையார் ஆகமத்தின் மொழி கேளாமல் - முற்காலத்தில் அருமையான (அறநெறியை அறிவுறுத்தும்) வேதங்களை (உலகுக்கு) அருளிய, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் 'நீள்நெறி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருள் திருவாய் மலர்ந்து அருளிய ஆகம நூல்களில் கூறியதைக் கேட்காமல், உயிரை வதைத்தவனும் - உயிருக்கு இடுக்கண் விளைவித்தவனும்,  கொன்றவனும் - அழித்தவனும்,  குறைத்தவனும் - (உயிராற்றலைக்) குறைவு  படுத்தியவனும், பேர் உளோனும் - (முன் நின்று கொலையாளி எனப்) பெயர் பெற்றவனும், அந்நெறியே சமைத்தவனும் - கொலை வழியிலே நின்று சமையல் செய்தவனும், உண்டவனும் - சாப்பிட்டவனும் (ஆகியோர்), நரகு உறுவர் - நரகத்தை அடைவர்,  

ஆதலால் -  

எந்நாளும் தன் உயிர்போல் மன் உயிருக்கு இரங்குவதும் தக்கது  ஆம் - (உயிர்களைக் கொல்லாமல், கொன்றைதைத் தின்னாமல், விலைக்கத் தராமல், ஊனைச் சமைக்காமல், ஊனை உண்ணாமலும்)) எப்போதும் தன் உயிரைப்போலப் பிற உயிரையும் நினைத்து இரக்கம் காட்டுவதும் நன்மையாகும்.

      ‘தன் உயிரைப் போல, மன் உயிரை நினை' என்பது பழமொழி. "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த, பின்வரும், திருக்குறள் பாடல்களின் கருத்தை அறிக.


"தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும் 

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்."


"உண்ணாமை வேண்டும் புலாஅல். பிறிதொன்றன் 

புண்ணது உணர்வார்ப் பெறின்." 


"செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார், 

உயிரின் தலைப்பிரிந்த ஊன்"


"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் 

உயிர்செகுத் துண்ணாமை நன்று." 


"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 

எல்லா உயிரும் தொழும்."


பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...


தின்னும் அது குற்றம் இலை, செத்தது எனும் புத்தா!

தின்பை என் கொன்று உனக்குத் தீற்றினர்க்குப் பாவம்,

மன்னுவது உன் காரணத்தால், தின்னாதார்க்கு

வதைத்து ஒன்றை இடாமையினால், வதைத்தவர்க்கே பாவம்,

என்னில், உனை ஊட்டினர்க்குப் பாவம் சேர

என்னதவம் புரிகின்றாய்? புலால் கடவுட்கு இடாயோ?

உன் உடலம் அசுசி என நாணி வேறு ஓர்

உடல் உண்ணில் அசுசி என உணர்ந்திலை காண் நீயே.     ---  சிவஞானசித்தியார், பரபக்கம்.

இதன் பொருள் ---

ஒர் உயிரைக் கொல்லுவதுதான் குற்றம். செத்ததைத் தின்பது குற்றம் இல்லை என்று கூறும் புத்தா! நீ தின்பாய் என்று கருதி, ஒன்றைக் கொன்று, நீ தின்பதற்குப் புலாலை ஊட்டினர்க்குப் பாவம் உன் காரணத்தால் உண்டாகும். அது எங்ஙனம் என்னில், தின்னாதார்க்குக் கொன்று ஊட்டுவார் இல்லை. ஆகையால், 'என் காரணத்தால் பாவம் உண்டாகாது, கொன்றவர்க்கே பாவம் உண்டு' என்று கூறினால், உன்னைப் பரிந்து ஊட்டினவர்க்குப் பாவம் உண்டாக நீ என்ன தவத்தைச் செய்கின்றாய். அது அன்றியும், நீ புலால் நுகரும் காலத்தே உன் கடவுளுக்கும் புலாலை ஊட்டுவாய். அது அல்லாமலும், உன் உடம்பு சுத்தம் இல்லையென்று வெட்கப்பட்டு, நீ பிற உடம்பின் சதையை நுகருவதும் சுத்தம் இல்லையென்று அறிந்தாய் இல்லை.


"கொன்றான், கொலையை உடன்பட்டான், கோடாது

கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால் ---கொன்றதனை

அட்டான் இடஉண்டான் ஐவரினும் ஆகும்எனக்

கட்டுஎறிந்த பாவம் கருது." ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

கொன்றான் - ஓர் உயிரைக் கொன்றவன், கொலையை உடன்பட்டான் - பிறன் ஒருவன் செய்யும் கொலைக்கு உடம்பட்டு நின்றவன், கோடாது - மனம் நாணாமல், கொன்றதனைக் கொண்டான் - கொன்ற தசையை விலைக்குக் கொண்டவன், கொழிக்குங்கால் - ஆராயுமிடத்து, கொன்றதனை அட்டான் - அங்ஙனம் கொல்லப்பட்டதன் ஊனைச் சமைத்தவன், இட உண்டான் - சமைத்ததனை இட உண்டவன் (என்று சொல்லப்படுகிற), ஐவரினும் - இந்த ஐவரிடத்தும், கட்டு எறிந்த பாவம் - வரம்பு அழித்ததினால் உண்டாகிய பாவமானது, ஆகும் எனக் கருது - நிகழும் என்று நீ கருதுவாயாக.

உயிரைக் கொன்றவன், கொலை செய்வதற்கு உடன்பட்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனை விலைக்கோ அல்லது இலவசமாகவோ பெற்றுக் கொண்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனைச் சுவைபடச் சமைத்தவன்,  சமைத்த அதனை இட உண்டவன் என, இந்து ஐவர் மாட்டும் வரம்பு கடந்து செய்த பாவம் நிற்கும்.

கொலை செய்தவன் முதல், உண்டவன் ஈறாக எல்லார்க்குமே கொலைக் குற்றம் உண்டு என்பது சொல்லப்பட்டது.


"அலைப்பான் பிறஉயிரை ஆக்கலும் குற்றம்,

விலைப்பாலில் கொண்டு ஊன் மிசைதலும் குற்றம்,

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்,

கொலைப்பாலும் குற்றமே ஆம்." ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

அலைப்பான் பிற உயிரை ஆக்கலும் குற்றம் - கொன்று புலாலை உண்பதற்காக, பிற உயிர்களை வளர்த்தலும் குற்றம் ஆகும்; விலைப்பாலின் ஊன் கொண்டு மிசைதலும் குற்றம் - விலைக்கு  ஊனை வாங்கிச் சமைத்து  உண்ணுதலும் குற்றம் ஆகும்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் - சொல்லும் வகை அல்லாத சொற்களைச் சொல்லி விடுதலும் குற்றம் ஆகும்; கொலைப்பாலும் குற்றமே ஆம் - கொலை வகைகளும் குற்றமே ஆகும்.

பிற உயிர்களைக் கொன்று உண்பதற்காக, அவற்றை வளர்த்தலும் குற்றம். கொல்லப்பட்ட ஒன்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்பதும் குற்றம். சொல்லத் தகாதவற்றைச் சொல்லுதலும் குற்றம்.  இவ்வாறான கொலை வகைகள் யாவும் குற்றமே ஆகும்.


No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 10. காலாழ் களரின்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...