பழநி - 0150. குன்றும் குன்றும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குன்றுங் குன்றும் (பழநி)

முருகா!
மாதர் வயப்படாமல், உனது அருள் வயப்பட்டு நிற்க அருள்

தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
     தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
     தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
     தனதன தனதன தனதன தனதன ......              தனதான


குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
     படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
     கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
     சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும்

கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
     குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
     தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
     பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும்

என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
     டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
     தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
     தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே

எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
     அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
     செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
     துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனே

ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
     தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
     டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
     றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனே

உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
     சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
     றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
     விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீரா

அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
     கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
     படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
     அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே

அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
     கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
     தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
     கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

 
குன்றும் குன்றும், செண்டும் கன்றும்
     படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்,
இந்தும் சந்தம் தங்கும் தண்செங்
     கமலமும் என ஒளிர் தருமுக வநிதையர்,
கொஞ்சும் கெஞ்சுத் செஞ்சும் வஞ்சம்
     சமரசம் உற ஒரு தொழில் வினை புரிபவர், ...... விரகாலும்

கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும்
     குடி என வளர்தரு கொடியவர், கடியவர்,
எங்மு எங்கு எம்பங்கு என்று என்றும்,
     தனது உரிமை அது என நலமுடன் அணைபவர்
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன்
     பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர், ...... மயலாலும்,

என்றென்றும் கன்றும் துன்பும் கொண்டு,
     உனதிரு மலரடி பரவிட, மனதினில்
நன்று என்றுங்கொண்டு, ன்றும் சென்றும்
     தொழு மகிமையின், நிலை உணர்வினின் அருள்பெற
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்-
     தமும், மிக இருள்பெற விடைதரு விதம் முனம் ...... அருள்வாயே

எங்குங் கஞ்சன் வஞ்சன் ஞ்சன்
     அவன்விடும் அதிசய வினையுகொறும் அலகையை
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம்
     செயும் அரி, ஒருமுறை இரணிய வலன் உயிர்
நுங்கும் சிங்கம், வங்கம் தன்கண்
     துயில்பவன், கினனை உதவிய கருமுகில் ...... மருகோனே!

ஒன்றென்று என்றும் துன்றும் குன்றும்
     தொளைபட, மதகரி முகன் உடல் நெரிபட,
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
     டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட,
ஒண் சங்கம் சஞ் சஞ்சஞ் சஞ்ச என்று
     ஒலிசெய, மகபதி துதிசெய, அசுரரை ...... அடுவோனே!

உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம்
     சிவன் அருள் குருபர என முநிவரர் பணி-
யும், தொந் தந்தொந் தந்தொந் தந்த என்று
     ஒலிபட நடம்இடு பரன் அருள் அறுமுக!
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும்
     விரைபடு குரவு அலர் அலர்தரும் எழில்புனை ......புயவீரா!

அன்று என்று ஒன்றும் கொண்டு, ன்பின் தங்கு
     அடியவர் தமை இகழ் சமணர்கள் கழுவினில்
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்
     படி, ஒரு தொகுதியின் நுரைநதி எதிர்பட,
அன்பின் பண்பு எங்கும் கண்டு, ன்பின்
     அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு ...... திறலோனே!

அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு
     அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
     தருமகன், முநி தழல் வரு தகர் இவர்வல,
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும்
     கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.


பதவுரை


      எங்கும் --- கவலையால் ஏங்கிய,

     கஞ்சன் --- கம்சனும்,

     வஞ்சன் --- வஞ்சகனும்,    

     கொஞ்சன் --- அற்பனுமாகிய தீயன்,

     அவன் விடும் அதிசய வினையுறும் அலகையை வென்றும் --- கொல்லும் பொருட்டு அவன் விடுத்த அதிசயமான செயலையுடைய பூதனையாகிய பேயை வென்று,

     கொன்று --- கொலை புரிந்து,

     துண்டம் துண்டம் செயும் அரி --- துண்டம் துண்டமாகச் செய்த திருமால்,

     ஒரு முறை இரணிய வலன் உயிர் நுங்கும் சிங்கம் --- ஒரு காலத்தில் இரணியன் என்ற வலியவனுடைய உயிரை உண்ட நரசிங்க வடிவினர்,

     வங்கம் தன் கண் துயில்பவன் ---  (ஆதிசேடனாகிய) தோணியின் மீது துயில்பவர்,

     எகினனை உதவிய கருமுகில் --- அன்னவாகனனாகிய பிரமதேவனைப் பெற்ற கரிய மேகம் போன்றவர் ஆன நாராயணரது,

     மருகோனே ---- திருமருகரே!

      ஒன்று என்ற --- சமானமில்லாததாகிய,

     என்றும் துன்றும் --- சூரிய மண்டலம் வரையும் உயர்ந்து நின்ற,

     குன்றும் தொளை பட --- கிரவுஞ்ச மலை தொளைபடுமாறும்,

     மதகரி முகன் உடல் --- மதம் பொழியும் யானைமுகமுடைய தாரகாசுரனது உடம்பு,

     நெரி பட --- நெரிபட்டு அழியுமாறும்,

     டுண்டுண்டுணடுண், டிண்டிண்டிண்டிண் டிடி என --- டுண்டுண்.......டிடி யென்ற ஒலியுடன் அதிர்ச்சியுற்று,

     விழும் எழு படிகளும் அதிர்பட --- விழுகின்ற நிலையில் ஏழு உலகங்களும் அதிர்ச்சியடையவும்,

     ஒண் சங்கம் சஞ்சஞ்சஞ்சஞ் சென்று ஒலி செய --- ஒளி பெற்ற சங்கமானது சஞ்சஞ்சஞ்சஞ் சென்று முழங்கவும்,

      மகபதி துதி செய --- இந்திரன் துதிக்கவும்,

     அசுரரை அடுவோனே --- சூராதி யசுரரை மாய்த்தவரே!

      உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் --- உமக்கு நாங்கள் முக்காலும் அடைக்கலம்,

     சிவன் அருள் குருபர என --- சிவபெருமான் அருளிய குருமூர்த்தியே என்று,

     முனிவர் பணியும் --- சிறந்த முனிவர்கள் தொழுகின்ற,

     தொம்தம் தொம்தம் தொம்தந்த என்று ஒலிபட --- தொம்தம் தொம்தம் தொம்தந்த என்ற ஒலியுண்டாகுமாறு,

      நடம் இடு பரன் அருள் அறுமுக --- திருநடனம் புரிந்தருள்கின்ற சிவபெருமான் பெற்ற ஆறுமுகக் கடவுளே!

      உண்கண் --- தேன் உண்ணுகின்ற இடத்தில்,

     வண்டும் கொண்டும் தங்கும் --- வண்டுகளையும் கொண்டு நிலைபெற்ற,

     விரைபடு குரவு அலர் அலர் தரும் --- வாசனை வீசுகின்ற குராமலர் மலர்கின்ற,

     எழில்புனை புயவீரா --- அழகு செய்கின்ற திருப்புயங்களையுடைய வீரரே!

      அன்று என்று --- பிற மதங்கள் முத்தி வழி அன்று என்று கூறி,

     ஒன்றும் கொண்டு --- தங்கள் நெறி ஒன்றையே கொண்டு,

     அன்பு இன்று ---- அன்பு இல்லாமல்,

     அங்கு அடியவர் தமை இகழ் சமணர்கள் --- அவ்விடத்தில் சிவனடியார்களை இகழ்ந்த சமணர்கள்,

     கழுவினில் அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி --- கழுவில் அவர்களின் உடல் சிந்தும்படியும் குறைபட்டு மாளும்படியும்,

     ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட --- ஒரே வெள்ளமாய் நுரைத்து வந்த வையையாற்றில் ஏடு எதிரேறும்படியும்,

     அன்பின் பண்பு எங்கும் கண்டு --- அன்பின் உயர்ந்த பண்பினை உலககெங்கும் பரவச் செய்து,

     என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு --- எலும்பிலிருந்து பூம்பாவையை எதிரில் வருமாறும் கவிபாடிய,

     திறலோனே --- அருளாற்றலுடையவரே!

      அண்டம் கண்டும் --- அண்டங்களை உண்டாக்கியும்,

     பண்டு உண்டும் --- முன்னொரு நாள் அவற்றை உண்டும்,

     பொங்கு அமர்தனில் --- சீறி வந்த போரில்,

     விஜயவன் இரதமை நடவிய --- அர்ச்சுனனுடைய தேரை நடத்திய,

     துங்கன் --- பரிசுத்த மூர்த்தியும்,

     வஞ்சம் --- தீயாரை வஞ்சம் புரிந்து அழிப்பவரும்,

     சங்கன் --- பாஞ்சஜன்யம் என்ற சங்கையுடையவருமாகிய திருமாலின்,

     மைந்தன் தருமகன் முனி தழல் வரு --- புதல்வராகிய பிரமதேவருடைய புத்திரர் நாரத முனிவர் புரிந்த வேள்வியில் பிறந்த,

     தகர் இவர் வல --- ஆட்டுக்கடாவின் மீது ஏறுகின்ற வல்லவரே!

      அங்கம் --- அழகிய நீரும்,

     கஞ்சம் --- தாமரையும்,

     சங்கம் --- சங்கும்,

     பொங்கும் --- விளங்குகின்ற,

     கயம் நிறை வளம் உள --- குளங்கள் நிறைந்த வளமை மிகுந்த,

     சிவகிரி மருவிய --- சிவமலையில் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

      குன்றும் குன்றும் --- குன்றும் குன்றும் படியும்,

     செண்டும் கன்றும் படிவளர் --- செண்டும் கன்றுமாறு பெரிதாக வளர்கின்ற,

     முலையினில் ம்ருகமதம் மெழுகியர் --- முலைகளில் கஸ்தூரிக் குழம்பு மெழுகிக் கொண்டவரும்,

     இந்தும் --- சந்திரனைப் போலவும்,

     சந்தம் தங்கும் --- அழகு தங்கிய,

     தண்செம் கமலமும் என ஒளிர்தரு முக --- குளிர்ச்சியும் சிவப்பு நிறமும் பொருந்திய தாமரை போலவும் ஒளி செய்கின்ற முகத்தையுடைய,

     வநிதையர் --- மாதர்களும்,

     கொஞ்சும் --- கொஞ்சுதலும்,

     கெஞ்சும் --- கெஞ்சிக் கேட்பதும்,

     செஞ்சும் --- செய்தும்,

     வஞ்சம் சமரசம் உற --- வஞ்சகமான ஒற்றுமை வரும்படி,

     ஒரு தொழில் வினை புரிபவர் --- ஒப்பற்ற செயல்களைச் செய்பவருமாகிய அம்மாதர்களின்,

     விரகாலும் --- சூழ்ச்சியினாலும்,

     கும்பும் --- கும்பல் கூடியிருந்தாலும்,

     பம்பும் --- வேடிக்கையும்,

     சொம்பும் --- அழகும்,

     தெம்பும் --- அகங்காரமும்,

     குடியென வளர்தரு கொடியவர் --- தம்மிடம் குடியாக வளர்ந்துள்ள தீயவர்கள்,

     கடியவர் --- கடுமையானவர்கள்,

     எங்கு எங்கு எம் பங்கு என்றென்று --- எங்கே எங்கே எமது பங்கு என்று அடிக்கடி கூறி,

     என்றும் தனது உரிமையது என --- எந்நாளும் தமக்குச் சொந்தம் என்று,

     நலமுடன் அணைபவர் --- சுகமாகத் தழுவுபவரும்,

     கொஞ்சம் தங்கு இன்பம் தந்து --- அற்பமாகத் தங்கியுள்ள இன்பத்தைத் தந்து,

     எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் --- என்னுடைய பொருள் உள்ளவை அனைத்தும் நயமாக பறிப்பவரும், ஆகிய அவ்விலைமகளிரின்

     மயலாலும் --- மயக்கத்தாலும்,

     என்றென்றும் --- எந்நாளும்,

     கன்றும் --- மனம் கன்றுதலையும்,

     துன்பும் கொண்டு --- துன்பத்தையும் அடைந்து (அடியேன்)

     உனது இருமலர் அடி பரவிட --- உமது இரண்டு மலர் போன்ற திருவடிகளைத் துதி செய்வதுவே,

     நன்று என்றும் --- நல்லது என்று,

     மனதினில் கொண்டு --- எனது உள்ளத்தில் அறிந்து,

     என்றும் சென்றும் தொழும் --- எந்நாளும் உமது திருக்கோயிலில் சென்று வணங்குகின்ற,

     மகிமையின் நிலை --- பெருமையின் நிலையை,

     உணர்வில் நின் அருள் பெற --- எனது உணர்வில் உமது திருவருளால் அடியேன் பெறவும்,

     இன்பும் --- இன்பமும்,

     பண்பும் --- நல்ல பண்பும்,

     தெம்பும் --- ஊக்கமும்,

     சம்பந்தமும் மிக அருள் பெற --- நிரம்பும்படியான அருளைப் பெறவும்,

     விடைதரு விதம் முனம் அருள்வாயே --- நீர் அனுமதி செய்யும் வழியை முன்னதாக அருள் புரிவீர்.

பொழிப்புரை

         கவலையால் ஏங்குகின்ற வஞ்சனும், அற்பனுமான கம்சன் அனுப்பிய அதிசயச் செயலையுடைய பூதனை என்ற பேயை வென்று துண்டு துண்டாகச் செய்து கொன்ற நாராயணரும், ஒரு காலத்தில் இரணியனுடைய உயிரைக் குடித்த நரசிங்கமும், ஆதிசேடனாகிய தோணிமீது துயில்பவரும், பிரம தேவனைப் பெற்றவரும், நீலமேக வண்ணருமாகிய விஷ்ணுமூர்த்தியின் திருமருகரே!

         ஒப்பற்ற சூரிய மண்டலம்வரை யளாவியுள்ள கிரவுஞ்சமலை தொளைபடவும், யானை முகம் உடைய தாரகனுடைய உடம்பு நெரிபடவும், டுண்டுண்டுண்டுண் டிண்டிண்டிண்டிண் டிடி என்ற ஒலியுடன் விழுகின்ற ஏழு உலகங்களும் அதிர்ச்சியடையவும், ஒளிபெற்ற சங்குகள் சஞ்சஞ் சஞ்சஞ் என்று சப்திக்கவும், இந்திரன் துதி செய்யவும் அசுரர்களை அழித்தவரே!

         சிவகுமாரரே!

         நாங்கள் உமக்கு முக்காலும் அடைக்கலம் என்று கூறி முனி புங்கவர்கள் பணியும், தொந்தம் தொந்தம் தொந்தம் என்ற ஓசையுடன் நடனம் புரிந்தருளும் நடராஜமூர்த்தி பெற்ற ஆறுமுகக் கடவுளே!

         வண்டுகள் தங்கி தேன் உண்ணுகின்ற வாசனை மிகுந்த குரா மலர் புனைந்த அழகிய திருப்புயங்களை உடைய வீரரே!

         பிற சமயங்கள் முத்தி வழிக்குரியவை அன்று என்று தமது கோட்பாடு ஒன்றை மட்டுமே கொண்டு அன்பில்லாமல் சிவனடியவர்களை இகழ்கின்ற சமணர்கள் கழுவில் உடம்பு சிதறி அழியும்படியும், நுரைத்து வெள்ளம் பெருகும் வையை யாற்றில் ஏடு எதிர் ஏறவும், அன்பின் பண்பு எங்கும் பரவவும் எலும்பு பெண்ணாகுமாறும் தமிழ்க் கவி பாடவல்ல திறமை உடையவரே!

         அண்டங்களை உண்டாக்கியும், முன்னாள் அவற்றை உண்டும், பொங்கி எழுந்த போர்க்களத்தில் அர்ச்சுனனுடைய தேரை செலுத்திய பரிசுத்த மானவரும், தீயருக்கு வஞ்சனை புரிபவரும், பாஞ்சசன்யம் என்ற சங்கத்தை உடையவருமான நாராயணருடைய மைந்தராகிய பிரமதேவர் பெற்ற நாரத முனிவர் செய்த யாகத்தில் தோன்றிய ஆட்டுக்கடாவின்மீது ஏறி வருகின்ற வல்லவரே!

         அழகிய நீரும் தாமரையும் சங்கும் நிறைந்த குளத்தில் சூழ்ந்து வளமை மிக்க சிவமலையென்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         குன்று குன்றும்படியும், செண்டு கன்றும் படியும் வளர்கின்ற தனங்களில் கஸ்தூரி பூசப் பெற்றவரும், சந்திரனையும் அழகு தங்கும் குளிர்ந்த சிவந்த தாமரையையும் ஒத்து ஒளிக்கின்ற முகத்தையுடைய மாதர்களும், கொஞ்சியும் கெஞ்சியும் மகிழ்ச்சியைச் செய்து, வஞ்சனையாக ஒற்றமையுண்டாக ஒரு தொழில் புரிபவரும், ஆகிய விலைமகளிரது சூழ்ச்சியாலும் கும்பல் கூடுதலும், வேடிக்கையும், அழகும், அகங்காரமும்,
குடியாகவுடைய கொடியவரும் கடுமையானவரும், எங்கே எமது பங்கு என்று எந்நாளும் தமது உரிமையானது என்று கூறி சுகமுடன் தழுவுபவர்களும், சிறிது இன்பத்தைக் கொடுத்து என் பொருள் யாவும் கவர்பவரும் ஆகிய அம்மாதர்களின் மயக்கத்தாலும், எந்நாளும் உள்ளம் கன்றித் துன்பங் கொண்டுள்ள அடியேன், உமது திருவடி மலர்களைத் துதி செய்ய உள்ளத்தில் நலம் என்று கொண்டும், திருக்கோயிலிற் சென்று தொழுகின்ற மகிமையின் நிலையை எனது உணர்வில் உமது அருளால் பெறவும், இன்பமும் பண்பும் ஊக்கமும் தொடர்பும் மிகுமாறும், உமது திருவருளைப் பெறவும் அநுமதி தரும் வழியை முன்னதாக அருள்புரிவீர்.

விரிவுரை

குன்றும் குன்றும் ---

அருணகிரிநாத சுவாமிகள் ஒப்புயர்வற்ற வாக்கு வன்மை முருகன் அருளால் பெற்றவர். அவர் கூறுகின்ற விதமே ஓர் அலாதியான விதமாக இருக்கும்.

மாதர்களின் நகில் உயர்ந்திருக்கும் என்றும், மலை நிகர்த்தது என்றும் கூறுவது மரபு.

குன்றும் குன்றும்படி உளது என்ற சொற்சாதுர்யம் மிகவும் மதுரமானது.

செண்டு போன்றது என்னாது, செண்டும் கன்றுகின்றபடி இருக்கின்றது என்றனர்.

படி என்றதை குன்றுங் குன்றும்படி, செண்டுங் கன்றும்படி எனத் தனித்தனி இயைக்க.

ம்ருகமதம் ---

மான்மதம். இது கஸ்தூரி. வாசனைப் பொருள்களில் தலை சிறந்தது. இதனை மகளிர் மார்பில் பூசிக்கொள்வர்.


கொஞ்சம் கெஞ்சும் செஞ்சும் ---

பொருட் பெண்டிர், ஆடவருடன் கொஞ்சுவர். விருப்பமான பொருள் தரும்படி கெஞ்சுவர். இப்படியான இன்பச் செயல்களைப் புரிவர். செய்தும் என்பது செஞ்சும் என மருவியது.

கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் ---

சொற்களை அருணகிரிநாதர் தொடுக்கின்ற அழகை இங்கு பாருங்கள்.

கும்பும்-மகளிர் பலர் கூடி அரட்டையடிப்பர்

பம்பு-வேடிக்கை செய்வர்.

சொம்பு-அழகு.

தெம்பு-அகங்காரம்.

இவை அப் பொருட்பெண்டிர்பால் குடியாக இருந்து நாளும் நாளும் வளர்ச்சியுறும்.

எங்கெங் கெம்பங் கென்றென் றென்றும் ---

எங்கு எங்கு எம்பங்கு என்று என்றென்றும்.

அம் மாதர் தம்பால் வருபவரிடம் உரிமை கொண்டாடி, “எங்கே எங்கே எமது பங்கு” என்று கூறிக் கேட்டு எந்நாளும் பொருள் பறிப்பர்.


என்றென்றும் கன்றுந் துன்புங் கொண்டு ---

என்றென்றும்-எஞ்ஞான்றும்.

கன்றும் துன்பும்-கன்றுதலையும் துன்பத்தையும்.

கொண்டு என்ற வினை எச்சத்தை கொண்டேன் என்று வினை முற்றாகப் பொருள் செய்து கொள்ளவும்.

ஆசையினால் மக்கள் உலைந்து ஒரு சிறிதும் அமைதியும் திருப்தியும் இன்றி மனம் கன்றி பெருந்துன்பமுற்று வருந்துகின்றனர்.

துன்பங்களுக்கெல்லாம் மூலகாரணம் ஆசைதான்.

அந்த ஆசையை யறுக்க வழி முருகப் பெருமானுடைய திருவடி மலர்களைப் பரவுதல் ஒன்றே.

ஆசைத் தீயை வளர்க்கின்றவன் மாரன். ஆசைத் தீயை அவிக்கின்றவன் குமாரன்.

ஆசையை வளர்க்கும் மாரனை எரித்த நெற்றிக் கண்ணினின்றும் ஞான ஜோதியாய் வந்த தெய்வம் குமாரன்.

நெருப்புக்கு அருகில் பனி நில்லாதது போல் முருக வேள் தியானத்துக்கு முன் ஆசாபாசம் நில்லா.

விடைதரு விதமுன மருள்வாயே ---

விடை-முருகன் தருகின்ற அநுமதி.

விடைதரு இதம் முன்னம் என்றும் பிரிந்து, அநுமதி தருகின்ற இனிமையை முன்னதாக அருள்புரிவீர் எனினும் அமையும்.


எங்குங் கஞ்சன் ---

ஏங்கும் என்ற சொல் சந்தத்தைக் கருதி எங்கும் எனக் குறுகியது.

கவலையால் கம்சன் ஏங்கிக் கொண்டிருந்தான். வஞ்சனைகள் பல புரிந்தான். ஆதலினால் வஞ்சன் என்றனர்.

கொஞ்சன்-அற்பமானவன். உடன்பிறந்த தங்கையின் புதல்வரதாகிய கண்ண பிரானை நம்முறை தவறி பன்முறையுங் கொல்ல முயன்றான், பெற்ற தாய் தந்தையரைச் சிறையில் அடைத்தான். ஆன்றோர்களையும் அறவோர்களையுந் துன்புறுத்தினான். அதனால் அற்பன் என்று கூறினார்.

வங்கன் தன்கண் துயில்பவன் ---

பாற்கடலில் ஆதிசேடன் மீது திருமால் அறிதுயில் புரிகின்றனர். ஆதிசேடனார் ஓடம்போல அசைந்து கொண்டிருக்கின்றார். அதனால் வங்கம் - ஓடம் என்றே கூறினார். உவமை ஆகுபெயர்.

ஒன்றென் றென்றுந் துன்றும் குன்றும் ---

ஒன்று என்ற என்றுந் துன்றும்.

ஒன்று-ஒப்பற்றது என்ற, என்று-சூரியன், துன்றும்-சேர்ந்த.
ஒப்பற்ற சூரியமண்டலம் வரை உயர்ந்துள்ள மாயையில் வல்ல மலை கிரவுஞ்சமலை.

அன்றென் றொன்றும் கொண்டு ---

தங்கள் நெறியை யன்றி பிறசமய நெறிகள் யாவும் உண்மை நெறியன்று என்றும், தமது மார்க்கம் ஒன்றையே கொண்டு பிறரை நிந்தித்து உழலும் சமணர்கள்.

அன்பின்று ---

எல்லாரையும் தாமாகப் பார்ப்பதுவே அன்பு நெறியாகும்.

எனதும் யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
 இதய பாவ னாதீதம்         அருள்வாயே”       ---  (அமலவாயு) திருப்புகழ்

இதற்கு முற்றும் முரண்பட்ட சமணர்கள், திருஞானசம்பந்த சுவாமிகள் பதினாறாயிரம் அடியார் குழாத்துடன் திருமடத்தில் துயில்கின்றபோது, மடத்தில் தீ வைத்தார்கள். அன்பற்ற கொடிய செயல்.

அடியவர் தமை இகழ் ---

தெய்வ நிந்தனையை விட அடியவர் நிந்தனை மிக்க கொடியது. சூரியனை எதிர்த்து வெயிலில் நின்றவர் உய்வு பெறுவர். சூரியனுடைய அருள் பெற்ற நொய் மணலில் நின்று உயர்வு பெற மாட்டார்கள்.

ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்று உயர்ந்த
நேசர் எதிர் நிற்பது அரிது ஆமே --- தேசுவளர்
செங்கதிர் முன் நின்றாலும், செங்கதிர் வன்கிரணம்
தங்கு மணல் நிற்க அரிதே தான்.           ---  நீதிவெண்பா.

திருமாலை நிந்தித்த இரணியன் நெடிது காலம் வாழ்ந்தான். திருமாலின் மெய்யடியாராகிய பிரகலாதரை நிந்தித்து உடனே விரைந்து அழிந்து ஒழிந்தான்.

நதி எதிர்பட ---

புனல்வாது புரிந்த சமணர்கள், தமது மூல மந்திரமாகிய “அத்தி நாத்தி” என்ற மந்திரத்தை எழுதி நதியில் இட்டார்கள். அது கடலை நோக்கிச் சென்றது.

திருஞானசம்பந்தப் பெருந்தகையார் எழுதியிட்ட தேவாரப்பதிக ஏடு நதி வெள்ளத்தை கிழித்து கொண்டு எதிர் ஏறிச்சென்றது.

உதிரு கின்றசிற் றுண்டிகொண்டு ஒலிபுனல் சடைமேல்
மதுரை நாயகன் மண்சுமந் திட்டமா நதியில்
முதிருமு முத்தமிழ் விரகர்தம் ஏடுஎன மொய்ம்மீன்
எதிர்பு கும்படி போவது பாலியா மியாறு.       ---  கந்தபுராணம்

அன்பின் பண்பெங்குங் கண்டு ---

சைவம் அன்பின் முதிர்ச்சி. இந்த அன்புச் சமயம் எங்கும் பரவுமாறுசெய்த அருட் பெருந்தகை திருஞானசம்பந்தர்.

என்பின் அரிவையை எதிர்வர ---

திருமயிலாப்பூரில் வாழ்ந்த பெருஞ்செல்வராகிய சிவநேசச் செட்டியாருடைய புதல்வி பூம்பாவை அரவு தீண்டி இறந்தனள். அவ்வுடம்பை எரித்து எலும்பை எடுத்து வைத்திருந்து திருஞானசம்பந்தரிடம் காட்டி ஒப்புவித்தனர் தந்தை.

மட்டிட்ட புன்னை” என்ற திருப்பதிகம் பாடி எலும்பைப் பெண்ணுருவாக்கி அருள்புரிந்தார் திருஞானசம்பந்தர். அது கண்டு மண்ணும் விண்ணும் வியப்புற்றன.

அண்டங் கண்டும் ---

கண்டு என்ற சொல் இங்கே உண்டாக்கி என்ற பொருளில் வந்துள்ளது.

காவிரி கண்ட சோழன் என்ற சொல் காவிரியைத் தமிழ்நாட்டில் உண்டாக்கினவன் என வருவதுபோலும் என வுணர்க.


பண்டு உண்டும் ---

திருமால் உலகத்தை உண்டாக்கினார். பின்னர் அதனை உண்டு தனது வயிற்றில் வைத்திருந்தார், என்பதனால் உலகத்தை ஒடுக்கிக்கொண்டார் என உணர்க. “கூவுண்டவாயன்” என்று அப்பெருமானைப் புகழ்வர்.


தருமகன் முநிதழல் வரு தகரிவர்வல ---

திருமாலின் புதல்வர் பிரமதேவர். பிரமாவின் புதல்வர் நாரதமுனிவர். இவர் தேவரிஷி. இவர் ஒரு சமயம் சிறந்த யாகம் புரிந்தார். அந்த யாகத்தில் பேராற்றல் படைத்த ஓர் ஆடு தோன்றி உலகங்களை யெல்லாம் கலக்கி அழிக்கத் தொடங்கியது. தேவர்கள் துன்புற்று முருகனிடம் முறையிட்டார்கள். எம்பெருமான் வீரவாகு தேவரைக் கொண்டு அந்த ஆட்டுக்கடாவை யடக்கித் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.

அங்கம் ---

கம்-நீர், அம்-அழகிய; அழகிய நீர்.

கருத்துரை

மால் மருகா! அசுர குலகாலா! திருஞானசம்பந்தராக வந்தவரே! மேட வாகனரே! சிவகிரிக் குமாரா! மாதர் வயப்படாது அருள்வயப்பட்டு உய்ய அருள்புரிவீர்.

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...