பழநி - 0149. குறித்தமணி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குறித்தமணி (பழநி)

முருகா!
மாதர் மயக்கம் அற்று, புகழ் பெற,  
திருவடியைத் தந்து அருள்

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான


குறித்தமணிப் பணித்துகிலைத்
     திருத்தியுடுத் திருட்குழலைக்
          குலைத்துமுடித் திலைச்சுருளைப் ...... பிளவோடே

குதட்டியதுப் புதட்டைமடித்
     தயிற்பயிலிட் டழைத்துமருட்
          கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே

பொறித்ததனத் தணைத்துமனச்
     செருக்கினர்கைப் பொருட்கவரப்
          புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் ......    திடுமாதர்

புலத்தலையிற் செலுத்துமனப்
     ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
          புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே

பறித்ததலைத் திருட்டமணக்
     குருக்களசட் டுருக்களிடைப்
          பழுக்களுகக் கழுக்கள்புகத் ...... திருநீறு
  
பரப்பியதத் திருப்பதிபுக்
     கனற்புனலிற் கனத்தசொலைப்
          பதித்தெழுதிப் புகட்டதிறற் ...... கவிராசா

செறித்தசடைச் சசித்தரியத்
     தகப்பன்மதித் துகப்பனெனச்
          சிறக்கவெழுத் தருட்கருணைப் ...... பெருவாழ்வே

திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
     தடுத்தடிமைப் படுத்தஅருட்
          டிருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குறித்தமணிப் பணித் துகிலைத்
     திருத்தி உடுத்து, ருள் குழலைக்
          குலைத்து முடித்து, லைச் சுருளைப் ......பிளவோடே

குதட்டி அதுப்பு உதட்டை மடித்து
     அயிற் பயில் இட்டு அழைத்து, மருள்
          கொடுத்து, ணர்வைக் கெடுத்து, நகக் ......குறியாலே,

பொறித்த தனத்து அணைத்து, மனச்
     செருக்கினர், கைப் பொருள் கவரப்
          புணர்ச்சிதனில் பிணிப்படுவித் ......   திடுமாதர்,

புலத்தலையில் செலுத்துமனப்
     ப்ரமத்தை அற,  ப்ரசித்தம் உற,
          புரித்து அருளித் திருக் கழலைத் ...... தருவாயே.

பறித்த தலைத் திருட்டு அமணக்
     குருக்கள் அசட்டு உருக்களிடைப்
          பழுக்கள் உக, கழுக்கள் புக, ...... திருநீறு

பரப்பிய தத் திருப்பதி புக்கு
     கனல் புனலில் கனத்த சொலைப்
          பதித்து எழுதிப் புக அட்ட திறல் ...... கவிராசா!

செறித்த சடைச் சசித் தரி அத்
     தகப்பன் மதித்து உகப்பன் எனச்
          சிறக்க எழுத்து அருள்கருணைப் ...... பெருவாழ்வே!

திகழ்ப்படு செய்ப் பதிக்குள் எனைத்
     தடுத்து, டிமைப் படுத்த அருள்
          திருப்பழநிக் கிரிக் குமரப் ......        பெருமாளே.


பதவுரை

      பறித்த தலை --- உரோமத்தைப் பறித்த தலையை உடையவரும்,

     திருட்டு --- கள்ளமுடையவருமாகிய,

     அமண குருக்கள் --- சமணர்களுடைய குருமார்களாம்,

     அசட்டு உருக்களிடை --- அறியாமையின் வடிவங்களின்,

     பழுக்கள் உக --- விலா எலும்புகள் முறிந்து விழ,

     கழுக்கள் புக --– கழு மரங்களில் ஏறும்படி,

     திருநீறு பரப்பிய --- விபூதியைப் பரவ வைத்த,

     தத் திருப்பதி புக்கு --- அந்த மதுரையம்பதி சென்று,

     அனல் புனலில் --- நெருப்பிலும் நீரிலும்,

     கனத்த சொலை --- பெருமையுள்ள திருப்பதிகத்தை,

     பதித்து எழுதிப் புகட்ட --- பொறித்து எழுதிய ஏடுகளைப் புகவிட்ட,

     திறல் கவி ராசா --- ஞான வலிமையுடைய கவியரசரே!

      செறித்த சடை --- நெருங்கி அடர்ந்த சடையில்,

     சசி தரி --- சந்திரனைத் தரித்த,

     அ தகப்பன் --- அந்த தந்தையாகிய சிவபெருமான்,

     மதித்து உகப்பன் என --- பாராட்டி மகிழ்ச்சியுறுவார் என்று,

     சிறக்க எழுத்து அருள் --- சிறப்புறும் வகையில் பிரணவ எழுத்தின் உட்பொருளை உபதேசித்த,

     கருணை பெருவாழ்வே --- கருணை நிறைந்த பெரிய வாழ்வாக விளங்குபவரே!

         திகழ்படு செய் பதிக்குள் --- விளக்கமுறும் வயலூரில்,

     எனை தடுத்து அடிமைப் படுத்த --- அடியேனைத் தடுத்து ஆட்கொண்டு அடிமையாக்கிய,

     அருள் திரு பழநி கிரி குமார --- அருள் நிறைந்த திருப்பழநி மலைமீது எழுந்தருளிய குமாரக் கடவுளே!

         பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!

         குறித்த மணி பணி --- சிறந்ததென்று கருதிய இரத்தின மணிகள் பதித்த ஆபரணங்களையும்,

     துகிலை --- ஆடைகளையும்,

     திருத்தி உடுத்து --- சரிப்படுத்தித் தரித்துக்கொண்டு,

     இருள் குழலை குலைத்து முடித்து --- இருண்டு கூந்தலைக் கலைத்து நன்கு முடித்து,

     இலை சுருளை பிளவோடே --- வெற்றிலையைப் பாக்குடன்,

     குதட்டிய --- மெல்லுகின்ற,

     துப்பு உதட்டை மடித்து --- பவளம் போன்ற இதழ்களை மடித்து,

     அயில் பயிலிட்டு அழைத்து --- வேல் போன்ற கண்ணால் நெருக்கி அழைத்து,

     மருள் கொடுத்து --- மயக்கத்தை நல்கி,

     உணர்வை கெடுத்து --- நல்லுணர்வைக் கொடுத்து,

      நகக் குறியாலே --- நகத்தின் குறியினால்,

     பொறித்த --- அடையாளம் இடப்பட்ட,

     தனத்து அணைத்து --- தனபாரங்களில் தழுவி,

     மன செருக்கினர் கைப் பொருள் கவர --- வந்தவர்களின் கையிலுள்ள பொருளைக் கவரும் பொருட்டு,

     புணர்ச்சி தனில் பிணிப் படுவித்திடு --- கலவிச் சேர்க்கையில் கட்டுப்படுத்துகின்ற,

     மாதர் புலத்தலையில் --- பொதுமகளிர் இடத்திலே,

     செலுத்து மன --- செலுத்துகின்ற மனத்தின்,

     ப்ரமத்தை அற --- மயக்கமானது அற்றுப்போகவும்,

     ப்ரிசித்தம் உற --- பெரும் புகழ் பெறவும்,

     புரித்து அருளி --- அன்பு கூர்ந்து அருள் புரிந்து,

     திருக் கழலை தருவாயே --- உமது அழகிய திருவடியைத் தருவீராக.

பொழிப்புரை


         தலைமயிரைப் பறிக்கின்ற வஞ்சகர்களாகிய சமணர்களுடைய குருமார்களாம் அசடர்களின் விலா எலும்புகள் முறியுமாறு கழுக்களில் ஏறும்படியும், திருநீறு எங்கும் பரவுமாறும் அந்த மதுராபுரியில் சென்று, நெருப்பிலும், நீரிலும், பெருமை மிகுந்த திருப்பதிகத்தை எழுதிய ஏட்டைச் செலுத்திய ஞான வலிமையுடைய கவிராசரே!

         அடர்ந்த சடையில் சந்திரனைத் தரித்த பிதாவாகிய சிவமூர்த்தி மதித்து உவக்குமாறும் சிறப்புறவும் பிரணவத்தின் உட்பொருளை உபதேசித்த கருணைப் பெருவாழ்வே!

         விளங்குகின்ற வயலூரில் அடியேனைத் தடுத்தாட் கொண்டு அடிமை கொண்டு அருளியவரே!

         திருப்பழநி மலைமீது நின்றருளிய குமாரக் கடவுளே!

         பெருமிதம் உடையவரே!

         சிறந்ததென்று கருதப்படுகின்ற இரத்தின மணிகள் பதிந்த அணிகலன்களையும் ஆடைகளையும் திருத்தி உடுத்து, இருண்ட குழலைக் குலைத்து முடித்து, வெற்றிலைப் பாக்கை மெல்லுகின்ற பவளம் போன்ற உதட்டை மடித்து, வேல் போன்ற கண்ணால் நெருங்கி வர அழைத்து, ஆசை மயக்கத்தை தந்து, நல்லுணர்வைக் கெடுத்து, நகக்குறியால் அடையாளம் இடப்பட்ட கொங்கையில் அணைத்து, மனக் கர்வம் கொண்டவராய், தம்பால் வந்தவர்களிடம் கைப்பொருளைக் கவரும் பொருட்டு, கலவிச் சேர்க்கையில் கட்டுப்படுத்துகின்ற பொதுமாதர்களிடத்திலே செலுத்துகின்ற மன மயக்கமானது ஒழியவும், சிறந்த புகழை அடையவும் அன்பு கூர்ந்து அருளி, உமது அழகிய பாத மலரைத் தந்தருளுவீர்.

விரிவுரை


குறித்தமணிப் பணி...........மாதர் ---

இந்த மூன்று அடிகளிலும் பொது மகளிரின் இயல்புகளைக் கூறி அம் மயலில் புகுதல் தீமையென்று விளக்குகிறார்.
  
ப்ரமத்தை அற ---

ப்ரமம்-மயக்கம்.

ப்ரசித்தம் உற ---

ப்ரசித்தம்-பெரும்புகழ். மனிதனுக்கு அழியாத செல்வம் புகழ்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று       ---  திருவள்ளுவர்


பறித்த தலைத் திருட்டு அமணக் குருக்கள் ---

சமணர்கள் தலைமயிரைப் பறிப்பதைத் தமது சமய ஒழுக்கமாகக் கொண்டவர்கள்.

முகடூர் மயிர் கடிந்த செய்கையார்”      ---  திருஞானசம்பந்தர்

கேசம் பறி கோப்பாளிகள்”             ---  (தவர்வாள்) திருப்புகழ்

களவுத் தனம் படைத்தவர்கள், வஞ்சனையால் பலப்பல கொடுமைகள் புரிபவர்கள். இவ்வாறு ஆறாம் நூற்றாண்டிலே சிலர் இருந்தார்கள். அப்போது அக்கொடுமையை அகற்ற வந்த அவதாரம் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தருடைய காலத்திலே எண்ணாயிரம் சமணக் குருமாரர்கள் பாண்டி நாட்டிலேயிருந்து, சைவ சமயத்தை அழித்து, சமண சமயத்தைப் பரப்பினார்கள். அக்காலை ஞானசம்பந்தர் அவதரித்து, சமணசமயத்தை அழித்து, திருநீற்று நெறியை எங்கும் பரப்பினார்.

தத் திருப்பதி புக்கு ---

தத்-அந்த; இது வடசொல், திருப்பதி-மதுரை.

அனல் புனலில் கனத்த சொலைப் பதித்து எழுதிப் புகட்ட ---

அனல் வாதம், புனல் வாதம் புரிந்தபோது, தேவாரப் பதிகத்தை எழுதிய ஏட்டினை இட்டு, ஆளுடைய பிள்ளையார் வென்றனர். புகவிட்ட என்ற சொல் புகட்ட என மருவியது.

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின; உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழ ராஜனது திருமகளாய், பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு ஸ்ரீதனமாக சோழராஜனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.

அப்போது திருஞான சம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்; அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து, சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள்.

சம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை யுன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
         மிகநல்ல வீணைதடவி
 மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
         உளமே புகுந்த அதனால்,
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
         சனி பாம்பு இரண்டும் உடனே,
 ஆசு அறும் நல்லநல்ல, அவைநல்ல, நல்ல
         அடியாரவர்க்கு மிகவே”

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார்.

எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை யெடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி,

 சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
     இனி எதிர் காலத்தின் சிறப்பும்,
இன்று எழுந்தருளப் பெற்ற பேறு இதனால்
     எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
     நல்தமிழ் வேந்தனும் உய்ந்து,
வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
     மேன்மையும் பெற்றனம் என்பார்"

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருசானசம்பந்தர் பதிகம் பாடி, கோயிலுட் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார்.

சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,

  செய்ய னேதிரு வாலவாய் மேவிய
  ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்
  பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்
  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

என்று பாடியருளினார்.

“பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.

மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தி னெழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாயுல காண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே ” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார்.

ஆலமே அமுதமாக உண்டு, வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை, அடியேற்கு இன்று
ஞாலம்நின் புகழே ஆக வேண்டும், நான் மறைகள் ஏத்தும்
சீலமே! ஆல வாயில் சிவபெருமானே! என்றார்.    --- பெரியபுராணம்.

பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால் ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க, சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

மானின் நேர் விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்
பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

என்று பாடித் தேற்றினார்.

         அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புறநோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், ழுமந்திரமாவது நீறுழு என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

         பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிட, அவை சாம்பலாயின. புல் புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை யாற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது, “வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையுங் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.


தகப்பன் மதித்து உகப்பன் என ---

தந்தை மெச்சிய மைந்தன் என வருவது அரிது; தம்மில் தம் மக்கள் அறிவுடையவராகத் திகழ்தல் வேண்டும்.

தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்உயிர்க்கு எல்லாம் இனிது”

என்கிறார் திருவள்ளுவர்.

இந்த அறத்தை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு முருகவேள் சிவமூர்த்திக்கு உபதேசம் செய்தருளினார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் தந்தையிலும் மைந்தன் அறிவு, ஆற்றல், குணம், அறம், பண்பு, முதலிய நலங்களில் உயர்ந்திருக்க வேண்டும்; அதனால் அக்குடும்பம் சிறந்து ஓங்கும். உலகம் புகழும்.

திகழ்ப்படு செய்பதிக்குள் எனைத் தடுத்து அடிமைபடுத்த ---

செய்-வயல்; பதி-ஊர், அருணகிரிநாதரை வயலூர் என்ற திருத்தலத்தில் முருகப்பெருமான் தடுத்து ஆட்கொண்டு, அவர் முடி மீது திருவடிசூட்டி, திருப்புகழை விசேடமாகப் பாடும் திறத்தையும் திருவருளையும் வழங்கி யருளினார்.

இதனைச் சுவாமிகள் பல இடங்களில் கூறி நன்றி பாராட்டுகிறார்.

பாத பங்கயம் உற்றிட உட்கொண்டு
 ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
 பாடும்என்பது செய்ப்பதியில்தந்   தவன் நீயே”  ---  (கோலகுங்கும) திருப்புகழ்

வயலி நகரியில் அருள்பெற மயில்மிசை
 உதவு பரிமள மதுகர வெகுவித
 வசன மலரடி கனவிலு நனவிலு    மறவேனே”   ---  (குருவு) திருப்புகழ்

எத்தலத்தில் சென்று பாடினாலும், தனக்கு அருள் கிடைத்த வயலூரை மறவாமல் “வயலூரா” “வயலூரா” என்று பாடுகின்ற நியமத்தைச் சுவாமிகள் பூண்டனர்.

கருத்துரை

கவிராசரே! கருணைக்கடலே! பழநியாண்டவரே! மயக்கமற்றுப் புகழுறப் பதமலரைத் தருவீர்.



No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...