அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குழல்கள் சரிய (பழநி)
முருகா!
மாதர் மயல் அற அருள் புரிவாய்
தனன
தனன தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குழல்கள்
சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
கொலைகள் செயவெ ...... களவோடே
குலவு
கிகிகி கிகிகி எனவு மிடறி லோலிகள்
குமுற வளையி ...... னொலிமீற
இளநி
ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய ...... மயில்போலே
இனிய
அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் ...... உளர்வேனோ
மிளிரு
மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் ...... அணிவோனே
விமலி
அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி ...... யருள்பாலா
பழைய
மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ ...... முடையோனே
பழன
வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குழல்கள்
சரிய, மொழிகள் பதற, விழிகள் உலவ,
கொலைகள் செயவெ, ...... களவோடே
குலவு
கிகிகி கிகிகி எனவு மிடறில் ஒலிகள்
குமுற, வளையின் ...... ஒலிமீற,
இளநிர்
எனவும் முலைகளு அசைய, உபய தொடையும்
இடையும் அசைய, ...... மயில்போலே,
இனிய
அமுத ரசமும் வடிய, உபரி புரிவர்
இடரில் மயலில் ...... உளர்வேனோ?
மிளிரு
மதுர கவிதை ஒளிரும் அருண கிரிசொல்,
விஜய கிரிசொல் ...... அணிவோனே!
விமலி, அமலி, நிமலி, குமரி, கவுரி, தருணி,
விபின கெமனி ...... அருள்பாலா!
பழைய
மறையின் முடிவில் அகர மகர உகர
படிவ வடிவம் ...... உடையோனே!
பழன
வயல்கள் கமுகு கதலி பனசை உலவ
பழநி மருவு ...... பெருமாளே.
பதவுரை
மிளிறும் மதுர கவிதை ஒளிரும் ---
விளங்கிய சுவை நிரம்பிய பாடல்கள் பொலிவுறும்,
அருணகிரி சொல் --- அருணகிரி என்ற புலவன்
கூறுகின்ற,
விஜயகிரி சொல் --- வெற்றி மலை போன்ற புகழ் மாலையை,
அணிவோனே --- அணிபவரே!
விமலி --- மலம் இல்லாதவரும்,
அமலி --- மலத்தை அகற்றுபவரும்,
நிமலி --- பரிசுத்தமான வரும்,
குமரி --- இளமையுடையவரும்,
கவுரி --- பொன்னிறம் படைத்தவரும்,
தருணி --- நல்ல பருவமுடையவரும்,
விபின கெமினி --- மயானத்தில் ஆடுபவருமாகிய
உமாதேவியார்,
அருள் பாலக --- அருளிய புதல்வரே!
பழைய மறையின் முடிவில் --- பழைமையான
வேதமுடிவில்,
அகர மகர உகர படிவ வடிவம் உடையோனே --- அகர உகர
மகரங்களைக் கொண்ட பிரணவத்தை உருவத் திருமேனியாகக் கொண்டவரே!
பழன வயல்கள் --- நன்செய் புன்செய்களும்,
கமுகு --- பாக்கு மரங்களும்,
கதலி --- வாழைகளும்,
பனசை உலவ --- பலா மரங்களும் அசைந்து
விளங்கும்,
பழநி மருவு --- பழநியம்பதியில்
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
குழல்கள் சரிய --- கூந்தலின் பின்னல்கள்
சரியவும்,
மொழிகள் பதற --- சொற்கள் பதற்றமுறவும்,
விழிகள் உலவு கொலைகள் செயவே --- கண்கள்
புரண்டு கொலைத் தொழிலைக் காட்டவும்,
களவோடே --- களவு எண்ணத்துடன்,
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள்
குமுற --- குலவுதல் செய்து கண்டத்தில் கிகிகி கிகிகி என்ற ஓசை எழவும்,
வளையின் ஒலி மீற --- வளையல்களின் சத்தம்
மிகுதியாக ஒலிக்கவும்,
இளநீர் எனவும் முலைகள் அசைய --- இளநீர் போன்ற
முலைகள் அசையவும்,
உபய தொடையும் இடையும் அசைய --- இரண்டு
தொடைகளும் இடையும் அசையவும்,
மயில்போல --- மயில்போல் நடித்து,
இனிய அமுத ரசமும் வடிய --- இனிய மதுர நீர்
இதழ்களிலிருந்து ஒழுகவும்,
உபரி புரிவர் --- மிகுதியான கலவி புரிகின்ற
பரத்தையருடைய,
இடரில் மயலில் உளர்வேனோ --- துன்பத்திலும்
மயக்கத்திலும் வீழ்ந்து அடியேன் அழிவேனோ?
பொழிப்புரை
சுவை நிரம்பி ஒளிரும் கவிகளால் விளங்கும்
அருணகிரி கூறும் வெற்றிமலை போன்ற புகழ்மாலையை அணிபவரே!
மலம் அற்றவரும் மலத்தை அகற்றுபவரும், தூய்மையும், இளமையும், பொன்னிறமும் நல்ல பருவமும் உடையவரும், சுடலையில் நடனம் ஆடுபவருமாகிய பார்வதி
பெற்ற பாலகரே!
பழைமையான வேதத்தின் முடிவில் அகர உகர
மகரங்களைக் கொண்ட ஓம் மந்திர உருவத்தை உடையவரே!
நன்செய், புன்செய், பாக்கு, வாழை, பலா முதலியவை சூழும் பழநியம்பதியில்
எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
கூந்தல் சரியவும், சொற்கள் பதறவும், கொலைக் குணங்காட்டுங் கண்கள் சுழலவும், கரவான எண்ணத்துடன், கழுத்தில் ழுகிகிகி கிகிகிழு என்ற
ஒலியுண் டாகவும், வளையல்கள் ஒலிக்கவும், இளநீர்போன்ற தனங்கள் அசையவும், இருதொடைகளும் இடையும் அசையவும், மயில்போல் நடித்து, இதழில் இனிய அமுதநீர் ஒழுகவும், மிகுந்த கலவித் தொழில் புரியும்
பரத்தையருடைய துன்பத்திலும், மயக்கத்திலும்
அடியேன் (நொந்து) வீழ்ந்து அழியலாமோ? அழிதல்
கூடாது.
விரிவுரை
இத்
திருப்புகழில் முதல் அடி நான்கிலும் ஆசை நோயினால் வரும் துன்பம் மெய்ப்பாடு
இவற்றைக் கூறுகின்றனர்.
மிளிரும்
மதுரகவி......அருணகிரி.....சொல்.....அணிவோனே ---
அந்த
அடியில் அருணகிரிநாதருடைய பாடலின் சிறப்பு வருகின்றது; ஆனாலும் இத்திருப்புகழ் அருணகிரியார்
வாக்குதான் என்று துணிந்து கூற இயலவில்லை. திருவகுப்பில் இப்படி ஒரு தொடர்
வருகின்றது. சுவாமிகள் தன்னையே பிறிதொருவனாக அமைத்துப் பாடியிருக்கின்றார்.
“உரைபெற வகுத்துஅருணை
நகரில்ஒரு பத்தன்இடும்
ஒளிவளர் திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்” --- வேடிச்சி காவலன் வகுப்பு
விமலி
அமலி நிமலி குமரி கவுரி தருணி விபினகெமனி ---
இந்த
அடியில் அம்பிகையின் திருநாமங்களை மிக அழகாகக் கூறியுள்ளார்.
“விபினகெமனி”-சுடலையில் அம்பிகையுடன் சிவபெருமான் நடனமாடும் தனிநிலை.
“புறங்காட்டிடை நேரிழையோடும் ஆடி” ---
திருஞானசம்பந்தர்
இது
மகாசங்கார காலத்தில், எல்லாம் ஒடுங்கிய
இடம்.
பழைய
மறையின் முடிவில் ---
வேத
சிரசாகிய உபநிடதம் அதர்வசிரஸ், அதர்வசிகை என்ற
பகுதி.
அகர
மகர உகர படிவ வடிவம் ---
அகர
உகர மகரத்தின் சேர்க்கையே பிரணவம். முருகன் ஓங்கார வடிவினன். ஓங்காரமே அப்பரமனுடைய
ஆறுமுகங்களில் ஒன்று.
“ஓம் எனப்படும் குடிலையே
ஒப்பிலா முருகன்
மாமுகத்துள் ஒன்றாம், அவன் பெருமை யார் வகுப்பார்” --- கந்தபுராணம்
கருத்துரை
உமைபாலா! பழநியப்பா!
மாதர் மயல் அற அருள் புரிவாய்.
No comments:
Post a Comment