பழநி - 0147. குழல் அடவி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குழல் அடவி (பழநி)

முருகா!
மாதரைப் புகழ்ந்து திரிந்து உழலாமல்,  
அடியேனை ஆட்கொண்டு அருள்

தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான


குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
     குமுத வதரமு ......              றுவலாரம்

குழைம கரம்வளை மொழிகு யிலமுது
     குயமு ளரிமுகை ......      கிரிசூது

விழிக யலயில்ப கழிவ ருணிகரு
     விளைகு வளைவிட ......         மெனநாயேன்

மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
     வெறிது ளம்விதன ......          முறலாமோ

கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
     கழல்ப ணியவருள் ......          மயில்வீரா

கமலை திருமரு கமலை நிருதரு
     கமலை தொளைசெய்த ......     கதிர்வேலா

பழனி மலைவரு பழநி மலைதரு
     பழநி மலைமுரு ......            கவிசாகா

பரவு பரவைகொல் பரவை வணஅரி
     பரவு மிமையவர் ......            பெருமாளே.


பதம் பிரித்தல்


குழல் அடவி முகில் பொழில், விர வில் நுதல்,
     குமுத அதரம், ......         முறுவல் ஆரம்,

குழை மகரம் வளை, மொழி குயில் அமுது,
     குயம் முளரிமுகை, ......         கிரி, சூது,

விழி கயல் அயில் பகழி, வருணி, கரு
     விளை, குவளை, விடம் ...... எனநாயேன்

மிக அரிவையரை அவ நெறிகள்சொலி,
     வெறிது உளம் விதனம் ......     உறல்ஆமோ?

கழல் பணிய வினை, கழல் பணியை அணி,
     கழல் பணிய அருள் ......         மயில்வீரா!

கமலை திரு மருக! மலை நிருதர்
     உக மலை தொளை செய்த ...... கதிர்வேலா!

பழனி. மலை வரு, பழ நிமலை தரு
     பழநி மலை முருக! ......         விசாகா!

பரவு பரவைகொல் பரவை வண அரி
     பரவும் இமையவர் ......          பெருமாளே.


பதவுரை

      பணிய வினை கழல் --- பண்ணின வினைகள் கழல, (நீங்குமாறு)

     கழல் பணியை அணி --- வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள,

     கழல் பணிய அருள் --- திருவடியைப் பணியும்படி அடியேனுக்கு அருள்புரிந்த,

     மயில் வீரா --- மயில் மீது வருகின்ற வீரமூர்த்தியே!

      கமலை திருமருக --- தாமரையில் வாழும் இலட்சுமி தேவியின் திருமருகரே!

      மலை நிருதர் உக --- மலைகளில் வசித்த அரக்கர் அழிய,

     மலை தொளை செய்த --- மலையைத் தொளைத்த,

     கதிர்வேலா --- ஒளி மிகுந்த வேலாயுதத்தை யுடையவரே!

      பழநி --- பழம் நிகர்த்தவரும்,

     மலை வரு --- இமயமலையில் அவதரித்தவரும்,

     பழ நிமலை --- பழைமையுடைய மலமில்லாதவரும் ஆகிய பார்வதிதேவி,

     தரு --- பெற்றருளிய,

     பழநிமலை முருக --- பழநி மலையில் வாழ்கின்ற முருகப் பெருமாளே!

      விசாகா --- விசாக மூர்த்தியே!

      பரவு பரவை கொல் --- பரந்துள்ள சமுத்திரத்தை அக்கினி யந்திரத்தால் அடக்கிய,

     பரவை வண --- கடல் வண்ணம் பொருந்தியவரும்,

     அரி --- பாவத்தை அழிப்பவரும் ஆகிய நாராயணர்,

     பரவும் --- துதிசெய்கின்ற,

     இமையவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிகுந்தவரே!

       குழல் --- பெண்களுடைய கூந்தலானது,

     அடவி --- காடு என்றும்,

     நுதல் விரவில் --- நெற்றி வீரம் பொருந்திய வில் என்றும்,

     அதரம் குமுதம் --- வாயிதழ் குமுத மலர் என்றும்,

     முறுவல் ஆரம் --- பற்கள் முத்துக்கள் என்றும்,

     குழை மகரம் வளை --- மகர மீன் வடிவம் பொருந்திய குழை தரித்துள்ள காது வள்ளைக்கொடி இலை போன்றது என்றும்,

     அமுது --- அமுதம் போன்றது என்றும்,

     கிரி --- மலை போன்றது என்றும்,

     சூது --- சூதுக்காய் போன்றது என்றும்,

     விழி கயல் --- கண் மீன் என்றும்,

     அயில் --- வேல் என்றும்,

     பகழி --- கணை என்றும்,

     வருணி --- கடல் என்றும்,

     கருவிளை --- காக்கட்டான் மலர் என்றும்,

     குவளை --- நீலோற்பலம் என்றும்,

     விடம் என --- நஞ்சு என்றும் புகழ்ந்து கூறி,

     நாயேன் மிக அறிவையரை அவ நெறிகள் சொலி --- அடியேன் விலைமாதர்களை மிகவும் பயனற்ற வழிகளில் வியந்துரைத்து,

     வெறிது உளம் விதனம் உறலாமோ --- வீணாக என் உள்ளம் துக்கப்படலாகுமோ?

பொழிப்புரை


         அடியேன் முன் செய்த வினைகள் நீங்குமாறு, வீரக்கழல் தண்டை முதலிய அணிகலன்கள் விளங்கும், திருவடியைப் பணியும்படி அருள் புரிந்த மயில் வீரரே!

         தாமரையில் வாழும் திருமகளின் திருமருகரே!

         மலைகளில் வசித்த அரக்கர்கள் அழிய அம்மலைகளைத் தொளைத்த ஒளிமிக்க வேலாயுதரே!

         பழம் போன்றவரும், இமயமலையில் அவதரித்தவரும், பழைமையானவரும் மலம் இல்லாதவரும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய பழநி மலையில் வாழும் முருகக் கடவுளே!

         விசாக மூர்த்தியே!

         பரந்துள்ள கடலின் மீது கணையை விடுத்து அடக்கிய கடல் வண்ணராகிய அரி நாராயணர் பரவித் துதி செய்கின்ற, தேவர் போற்றும் பெருமிதம் உடையவரே!

         கூந்தலானது காடு, மேகம், பொழில் என்றும், நெற்றி வீர வில் என்றும், மகரக்குழை தரித்த செவி வள்ளி இலை யென்றும், சொல் குயில், அமுதம் என்றும், தனம் தாமரை அரும்பு, மலை சூதுக் கருவி என்றும், கண் மீன், வேல், கணை, கடல் காக்கட்டான் மலர், நீலோத்பலம், விடம் என்றும் பெண்களுடைய அவயங்களை வீணான வழிகளில் அடியேன் மிகவும் புகழ்ந்து கூறி, வெறுமையாக உள்ளம் துக்கப் படலாமோ?


விரிவுரை

குழல் அடவி முகில் ---

இத் திருப்புகழில் புலவர்கள் பெண்களின் கூந்தல், புருவம், இதழ், பல், காது, சொல், தனம், கண் முதலிய உறுப்புக்களைப் பல உவமைகள் கூறிப் புகழ்ந்து பாடுவதைத் தான் பாடி, அவமே கெடுவதாகக் கூறிக் கண்டிக்கின்றார்.

மக்களின் குற்றங்களை மாதா பிதாக்கள் தாம் தம் மீது ஏற்றி வருந்துவது போல், உலகவர் குற்றங்களைப் பரமஞானத் தந்தையாகிய அருணகிரிநாதர் தன் மீது ஏற்றிக்கொண்டு பாடுகின்றார்.

இத்திருப்புகழ் பிற்பகுதியில் சுவாமிகள் தமது அருட்புலமைத் திறத்தை வெளிப்படுத்துகின்றார். கழல் பணிய, கமலை, பழநிமலை என்ற மூன்று சொற்றொடர் மூன்று முறை வருமாறும் வெவ்வேறு பொருள் அமையுமாறும் பாடுகின்ற திறம் அற்புதமானது.

கழல் பணிய வினை ---

பண்ணிய என்பது பணிய என வந்தது. கழல என்பது கழல் என வந்தது.

முன்செய்த வினைகள் நீங்குமாறு இறைவனுடைய திருவடிகளை வணங்குவதனால் பழைய வினைகள் நீங்கும்.

பத்தி நெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்”

முந்தைவினை முழுவதும் ஓய உரைப்பான்” ---  திருவாசகம்

வல்லவர்தொல் வினை தீர்தல் எளிதாமே”  --- தேவாரம்

கழல் பணியை அருள் அணி ---

கழல்-வீரக்கழல். வீரர்களுடைய பாதத்தில் ஒரு மணி விளங்கும். அதற்கு வீரக் கழல் என்று பேர். நடராஜப் பெருமானுடைய தூக்கிய பாதத்தில் வீரமணியொன்று விளங்குவதைக் காண்க. அப்பாதம் இயமனை உதைத்த வீரத் திருவடியன்றோ?
  
கழல் பணிய அருள் ---

திருவடியைப் பணியும்படி தனக்கு அருள் புரிந்த முருகன் அருளிய திறத்தினைக் கூறுகின்றார்.
  
கமலை திருமரு கமலை நிருதரு கமலை தொளை செய்த ---

கமலை:-(கமலம்-தாமரை) தாமரையில் வாழ்கின்ற இலட்சுமிதேவி.

கமலை திரு மருக-இலட்சுமிக்கு அழகிய மருகரே!

மலை நிருதர் உக மலை தொளை செய்த என்று பதப் பிரிவு செய்க. மலைகளில் வசித்த அசுரர்கள் அழியுமாறு அம்மலைகளை முருகப் பெருமான் வேற்படையால் தொளைத்தருளினார்.

பழநி மலை வரு பழ நிமலை தரு பழநிமலை முருக ---

பழ-பழம் (கனி) போன்றவரும், மலை வரு-இமயமலையில் அவதரித்தவரும்.

பழ-பழைமையுடையவரும், நிமலை-மலமில்லாதவரும் ஆகிய உமாதேவியார். தரு-பெற்றருளிய.

பழநிமலை முருக-பழநிமலையில் வாழ்கின்ற முருகவேளே.

பரவு பரவைகொள் ---

பரவை-சமுத்திரம்; பரவு பரவை-பரந்துள்ள கடல்.

இராமர் சேதுபந்தனம் புரியும் பொருட்டு தென்கடற்கரையில் திருப்புல் லணையில் படுத்து வருணனை ஏழு நாள் வழி வேண்டினார். வருணன் ஏழு கடல்களுக்கு அப்பால் இரு பெரிய திமிலங்களின் போரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபடியால் ஸ்ரீராமருடைய வேண்டுதலை அறியாதவனாகி நின்றான்.

ஸ்ரீராமர் வெகுண்டு அக்கினிக் கணையை எடுத்துத் தொடுத்து விடுத்தார். அக்கணையின் வெம்மையால் கடல் வரண்டுவிட்டது.

இதனை இங்கு இந்த அடியில் கூறியுள்ளார்.

                                  “....          ….              ….     இலங்காபுரிக்குப்
போகைக்கு நீ வழிகாட்டு என்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாசைச்சிலை வளைத்தோன் மருகா”               ---  கந்தர் அலங்காரம்.

பரவை வண ---

பரவை வண்ணன்; கடல் வண்ணன்-நாராயணன். (பரவை-கடல்)

இரு திருமாலுடைய கருணைத் திறத்தைக் குறிக்கின்றது.

கருத்துரை

பழநியாண்டவரே! அழிவதற்கு ஏதுவாய் மனிதப் புலால் உடம்பினைப் புகழ்ந்து அழியா வண்ணம் அருள் புரிவீர்



No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...