அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குருதி மலசலம் (பழநி)
முருகா!
மனது துயர் அற, வினைகள் சிதறிட,
எனது தலையில் திருவடி
சூட்டி அருள்.
தனன
தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன ...... தனதான
குருதி
மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளி ......
யுடலூடே
குடிக
ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ......யடல்பேணி
மருவி
மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் ......
மயலாகா
மனது
துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத ......
மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகட லெரிய வுருவிய ......
கதிர்வேலா
நிறைய
மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி ......
மயிலோனே
பருதி
மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ ......
ளருள்பாலா
பரம
கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
குருதி
மலசலம் ஒழுகு நர குடல்,
அரிய புழு உது நெளியும் உடல்,மத
குருபி நிண சதை விளையும் உளைசளி .....உடல்ஊடே
குடிகள்
என பல குடிகை வலி கொடு,
குமர வலி, தலை வயிறு வலி என,
கொடுமை எனபிணி கலகம் இடும் இதை.....அடல்பேணி
மருவி, மதனன் உள் கரிய, புளகிதம்,
மணி அசல பல கவடி மலர்புனை,
மதன கலைகொடு குவடு மலைதனில் ......மயல்ஆகா,
மனது
துயர் அற, வினைகள் சிதறிட,
மதன பிணியொடு கலைகள் சிதறிட,
மனது பதம் உற, எனது தலை பதம் ......அருள்வாயே.
நிருதர் பொடிபட, அமரர் பதிபெற,
நிசித அர, வளை முடிகள் சிதறிட,
நெறிய கிரிகடல் எரிய உருவிய ......
கதிர்வேலா!
நிறைய
மலர்பொழி அமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகில் உடல் கிழிய வருபரி ......
மயிலோனே!
பருதி
மதி கனல் விழிய சிவன் இடம்
மருவும் ஒரு மலை அரையர் திருமகள்
படிவ முகில் என, அரியின் இளையவள் ....... அருள்பாலா!
பரம
கணபதி அயலின் மதகரி
வடிவு கொடுவர, விரவு குறமகள்
அபயம் என அணை பழநி மருவிய ......
பெருமாளே.
பதவுரை
நிருதர் பொடிபட --- அசுரர்கள் அழிந்து
பொடிபடுமாறும்,
அமரர் பதி பெற --- தேவர்கள் தங்கள் நகரத்தைப்
பெறுமாறும்,
நிசித அர --- கூரிய நாகாத்திரம்,
வளை --- சக்கராயுதம் என்ற கணைகளின்,
முடிகள் சிதறிட --- உச்சிகள்
சிதறிப்போகுமாறும்,
கிரி நெறிய --- மலைகள் பொடிபடவும்,
கடல் எரிய --- கடல்கள் தீப்பட்டு வேகவும்,
உருவிய கதிர்வேலா --- செலுத்திய ஒளிமிகுந்த
வேலாயுதரே!
நிறைய மலர் பொழி --- நிரம்பவும்
மலர்களைப் பொழிந்து,
அமரர் --- தேவர்களும்,
முநிவரும் --- முநிவர்களும்
நிருப --- அரசே!
குருபர --- குருநாதரே!
குமர --- குமரக் கடவுளே!
சரண் என --- சரணம் என்று பணிய,
நெடிய முகில் உடல் கிழிய வரு --- பெரிய
மேகத்தின் உடம்பு கிழியுமாறு ஊடுறுவி வருகின்ற,
பரி மயிலோனே --- தாங்குகின்ற மயிலை வாகனமாகக்
கொண்டவரே!
பருதி மதி கனல் விழிய --- சூரியன்
சந்திரன் அக்கினி என்ற முச்சுடர்களையும் மூன்று கண்களாகவுடைய,
சிவன் இடம் மருவு --- சிவபெருமானுடைய இடப்
பாகத்தில் உள்ளவரும்,
ஒரு மலை அரையர் திருமகள் --- ஒப்பற்ற
மலையரசனுடைய திருமகளாக வந்தவரும்,
படிவம் முகில் அரியின் இளையவள் --- மேகம்
போன்ற உருவமுடைய திருமாலின் தங்கையுமாகிய உமாதேவியார்,
அருள் பாலா --- பெற்ற பாலகரே!
பரம கணபதி --- பரம்பொருளாகிய விநாயக
மூர்த்தி,
அயலின் மதகரி வடிவு கொண்டு வர --- அருகில்
மதயானையின் உருவங்கொண்டு வர,
விரவு குறமகள் அபயம் என அணை --- அபயம் என்று
வள்ளி அடைக்கலம் புகுந்து தழுவ,
பழநி மருவிய பெருமாளே --- பழநி மலையில்
வசிக்கின்ற பெருமையின் மிகுந்தவரே!
குருதி --- உதிரம்.
மலசலம் ஒழுகு --- மலமும் நீரும் ஒழுகுகின்ற,
நர குடல் --- மனிதக் குடலையும்,
அரிய புழு அது நெளியும் உடல் --- சிறிய
புழுக்கள் நெளிகின்ற உடலையுங் கொண்டு,
மத குருபி --- மதமுடைய விகார வடிவம்
உடையவனாய்,
நிணம் சதை விளையும் உளை சளி உடலூடே ---
கொழுப்பு, சதை, ஊறியெழும் சேறு போன்ற சளி
முதலியவெல்லாம் உடம்பினுள்ளே,
குடிகள் என பல குடிகை கொடு ---
குடியிருப்பவர் போலப் பலவுங் குடிகொண்டு,
வலி குமர வலி --- வலிமையான குமரகண்ட வலி,
தலை வயிறு வலி என --- தலைவலி வயிற்று வலி
என்று,
கொடுமை என --- கொடுமை என்னும்படி,
பிணி கலசம் இடும் இதை --- நோய்கள் ஒன்றுடன்
ஒன்று கலகம் புரிகின்ற இவ்வுடலை,
அடல் பேணி --- வலிமையாக விரும்பிய யான்,
மருவி --- மாதரைத் தழுவி,
மதனன் உள் கரிய --- (பொறாமையால்) மன்மதனுடைய
உள்ளமும் கரிந்து போக,
புளகிதம் --- புளகாங்கிதமும்,
மணி --- மணிகளும் பூண்ட,
அசல --- மலைபோன்றதும்,
பல கவடி --- பலகறை போன்ற நகைகளும்,
மலர் புனை --- மலர்களும் புனைந்து,
மதன கலை கொடு --- மன்மதனுடைய நூலிற் கூறியபடி,
குவடு மலைதனில் மயல் ஆகா --- திரண்ட
மலைபோன்றதுமான தனங்களில் மயக்கங் கொள்ளாமல்,
மனது துயர் அற --- மனத்தின் துன்பம் ஒழியவும்,
வினைகள் சிதறிட --- வினைகள் சிதறிப் போகவும்,
மதன பிணிகொடு --- காம நோயுடன்,
கலைகள் சிதறிட --- காமநூல்கள் விலகி
நீங்கவும்,
மனது பதம் உற --- அடியேனுடைய மனம்
பக்குவப்படவும்,
எனது தலை --- என்னுடைய தலையில்,
பதம் அருள்வாயே --- தேவரீருடைய திருவடியைச்
சூட்டியருளுவீராக.
பொழிப்புரை
அசுரர்கள் மாண்டு பொடியாகுமாறும், தேவர்கள் தங்கள் திருநகரத்தைப்
பெறும்படியும், கூரிய நாகாத்திரம்
சக்ராயுதம் என்ற பாணங்களின் நுனிகள் சிதறுமாறும், மலைகள் நெரிந்து இடியவும், கடல்கள் தீப்பட்டு வெதும்புமாறும்
செலுத்திய வேலாயுதரே!
நிரம்பவும் மலர் மழை பொழிகின்ற
தேவர்களும் முனிவர்களும் ‘அரசே! குருபரனே! குமரா! சரணம்’ என்று கூறி அடைக்கலம் புக, நீண்ட மேகப்படலம் கிழியுமாறு வருகின்ற, தாங்கும் ஆற்றலுடைய மயிலை உடையவரே!
சூரியன், சந்திரன், அக்கினி என்ற முச்சுடர்களையும் மூன்று
கண்களாக உடைய சிவபெருமானது இடப்புறத்தில் எழுந்தருளி உள்ளவரும், ஒப்பற்ற மலை மன்னரது திருமகளும், மேக வண்ணராம் திருமாலின் தங்கையும் ஆகிய
பார்வதியம்மையார் பெற்றருளிய பாலகரே!
பரம்பொருளாகிய கணபதி மதயானையின் வடிவு
கொண்டு அருகில் வந்தவுடன், வள்ளி நாயகியார்
அபயம் என்று நெருங்கி வந்து தழுவிக்கொண்ட பழநி மலையில் உறைகின்ற பெருமிதம்
உடையவரே!
உதிரம், மலம், நீர் இவை ஒழுகுகின்ற மனிதக் குடலும், சிறிய புழுக்கள் நெளிகின்ற உடம்பும், மதங்கொண்ட விகார வடிவும் கொண்டவனாய், கொழுப்பு, சதை, ஊறி எழும் சேறு போன்ற சளி இவையெல்லாம்
உடலினுள்ளே குடியிருப்பவர்கள் போலப் பலவும் குடிகொண்டு, வலிமையான குமரகண்டவலி, தலைவலி, வயிற்றுவலி, என்ற கொடுமையுடன் கூடிய நோய்கள் வந்து
ஒன்றுடன் ஒன்று கலகம் புரியும் இந்த வுடம்பினை உறுதியாகப் பேணிய அடியேன், மாதரைத் தழுவி, மன்மதனும் உள்ளே கருகவும், புளகிதமும் மணியும் அணிந்ததும், மலை போன்றதும், பலகறை போன்ற அணிகலன்களும் மலரும்
புனைந்ததும், மதன நூல்களில்
கூறியபடி அமைந்து திரண்ட மலைபோன்றதுமான தனங்களில் மயக்கம் கொள்ளாமல், என் மனதின் துயரம் நீங்கவும், வினைகள் விலகவும், காம நோயுடன் காமக்கலைகள் அற்றுப் போகவும், என் மனம் பக்குவம் அடையவும் சிறியேனுடைய
தலையின் மீது தேவரீருடைய திருவடியைச் சூட்டியருள் புரிவீராக.
விரிவுரை
குருதி
மலசலம் ஒழுகு நரகுடல் ---
நம்முடைய
குடலில் இரத்தம் மலம் சலம் முதலியன ஒழுகும்: அசுத்தமானது.
அரிய
புழுவது நெளியும் உடல் ---
கண்ணுக்குத்
தோன்றுவதற்கு அரியதான சிறிய புழுக்கள் இந்த உடம்புக்குள் லட்சக் கணக்காக
நெளிகின்றன. “கள்ளப் புலால் கிருமி வீடு” என்கிறார் வள்ளிமலைத் திருப்புகழில்.
உடலூடே
குடிகளென
---
இந்த
வீட்டில் குடியிருக்கும் பொருள்கள் எவை? மிகவும்
அருமையான பரிசுத்தமான பொருள்கள்.
சளி, சீழ், தசை என்பவைகளாம்.
குமரவலி
தலை வயிறு வலியென கொடுமை என பிணி கலகமிடும் ---
இந்த
உடம்பில் பலநோய்கள் இருந்து கலகமிட்டுத் துன்பத்தைச் செய்யும்.
இதை
அடல்பேணி
---
இந்த
அருவருப்புடைய நிலையற்ற உடலை வலிமையானதது என்று எண்ணி, இதனையே சதா பேணி வளர்க்கின்றார்கள்
மனிதர்கள்.
எனது
தலை பதம் அருள்வாயே ---
முருகன்
திருவடியைத் தலையில் சூட்டுமாறு இப்பாடலில் அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.
இந்த
வேண்டுகோளை முருகவேள் நிறைவேற்றி வைத்தார். அதனை அருணகிரிநாதரே கூறுமாறு காண்க.
“எனது தலையில் பதங்கள்
அருள்வோனே” --- (களபமுலை) திருப்புகழ்
“சாடுந் தனிவேல்
முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லும்அதோ? --- கந்தர் அநுபூதி.
ஐந்தாவது
அடியில் வேலின் பெருமையையும், ஆறாவது அடியில்
மயிலின் பெருமையையும், கூறுகின்றார்.
கருத்துரை
வேலவனே!
மயிலவனே! பார்வதி பாலனே! பழநியாண்டவரே! சகல வினைகளும் தொலைய அடியேனுடைய தலையில்
உமது பாத மலரைச் சூட்டியருள் புரிவாய்.
No comments:
Post a Comment