அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குரம்பை மலசலம்
(பழநி)
முருகா!
அடியேனை ஆட்கொள்ளும் பொருட்டு,
மயில் மீது எழுந்தருளி வந்த
திருக்கோலத்தை மறவேன்.
தனந்த
தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன ...... தனதான
குரம்பை
மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல
...... கசுமாலக்
குடின்பு
குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ......
விறலான
சரம்ப
ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித்
தழைந்த
சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே
இரும்பை
வகுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ......
வளநாடா
இருண்ட
குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே
சிரம்பொ
னயனொடு முநிவர்க ளமரர்கள்
அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா
செழும்ப
வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...பெருமாளே.
பதம் பிரித்தல்
குரம்பை, மலசலம், வழுவளு, நிணமொடு,
எலும்பு, அணி சரி தசை, ஈரல், குடல், நெதி
குலைந்த செயிர்மயிர், குருதியொடு இவை பல ....கசுமாலக்
குடில்
புகுதும் அவரவர் கடு கொடுமையர்,
இடும்பர், ஒருவழி இணையிலர், கசடர்கள்,
குரங்கர், அறிவிலர், நெறியிலர், மிருக அணை ...... விறலான
சரம்பர்
உறவனை, நரகனை, துரகனை,
இரங்கு கலியனை, பரிவு உறு சடலனை,
சவுந்தரிக முக சரவண பதமொடு ...... மயில் ஏறித்
தழைந்த
சிவசுடர் தனை என மனதினில்
அழுந்த, உரைசெய வருமுக நகை ஒளி
தழைந்த நயனமும், இருமலர் சரணமும்
...... மறவேனே.
இரும்பை
வகுளமொடு இயைபல முகில்பொழில்
உறைந்த குயில் அளி ஒலி பரவிட, மயில்
இசைந்து நடம்இடும் இணைஇலி புலிநகர் ......
வளநாடா!
இருண்ட
குவடுஇடி பொடிபட, வெகுமுகடு
எரிந்து, மகரமொடு இசைகரி குமுறுக,
இரைந்த அசுரரொடு, இப பரி யமபுரம் ...... விடும்வேளே!
சிரம்பொன்
அயனொடு, முநிவர்கள், அமரர்கள்,
அரம்பை மகளிரொடு, அரகர சிவசிவ
செயம்பு என நடம் இடுபதம் அழகியர் ...... குருநாதா!
செழும்
பவள,ஒளி நகை, முகம் மதி, நகு
சிறந்த குறமகள் இணைமுலை புதைபட
செயங்கொடு அணை குக! சிவமலை மருவிய ...... பெருமாளே.
பதவுரை
இரும்பை --- இலுப்பை மரங்களும்,
வகுளமொடு இயை --- மகிழ மரங்கள் முதலிய
தருக்களும் பொருந்தியுள்ள,
பல முகில் பொழில் --- மேகங்கள் தவழுமாறு
உயர்ந்துள்ள அநேக சோலைகளில்,
உறைந்த குயில் அளி --- வசிக்கின்ற
குயில்களும் வண்டுகளும்,
ஒலி பரவிட --- இனிமையான ஒலிகளைச் செய்ய,
மயில் இசைந்து நடம் இடும் --- மயில்கள் அவ்வொலிக்குத்
தக்கவாறு நடம் செய்கின்ற,
இணை இலி புலி நகர் வள நாடா --- இணையற்ற
சிதம்பர க்ஷேத்திரத்தை தன்னகத்தே சிறப்புடையதாகக் கொண்ட வளமை மிக்க
திருநாட்டிற்குத் தலைவரே!
இருண்ட குவடு இடி பொடி பட --- (மாயச்
செயலால்) இருளோங்கி நின்ற கிரவுஞ்ச மலை இடிந்து தூள்பட்டு அழியவும்,
வெகு முகடு எரிந்து --- பல மலைகளும்
தீப்பட்டு எரிந்து போகவும்,
மகரம் --- மகர மீன்களுக்கு உறைவிடமான கடலும்,
ஒள் திசை கரி குமுறுக --- ஒளி பெற்ற எட்டுத்
திசைகளிலே உள்ள திக்கசங்களும் ஓவென்று சத்திக்கவும்,
இரைந்த அசுரரொடு --- ஒலி செய்துகொண்டு வந்த
இராக்கதர்களோடு,
இப பரி --- யானை படைகளையும், குதிரைப் படைகளையும்,
யமபுரம் விடும் வேளே --- இயமனூருக்கு ஓட்டிய
முருகவேளே!
சிரம் பொன் அயனொடு --- பெருமை
பொருந்தியரும் பொன்னிறம் உடையவருமாகிய பிரமதேவருடன்,
முனிவர்கள் --- முனிவர்களும்,
அமரர்கள் --- தேவர்களும்,
அரம்பை மகளிரொடு --- தேவ மாதர்களும்,
அரகர சிவசிவ செயம்பு என --- ஹர ஹர! சிவ சிவா!
சுயம்புவே! என்று துதிக்க,
நடம் இடுபதம் அழகியர் --- திருநடனம்
புரிகின்ற அழகிய திருவடியையுடைய சிவபெருமானுடைய,
குருநாதா --- குருமூர்த்தியே!
செழும் பவள --- வளம் பெற்ற பவள
நிறத்துடன் கூடிய இதழ்களும்,
ஒளி நகை --- ஒளி செய்கின்ற பற்களும்,
மதி நகு முக --- சந்திரனைக் கண்டு நகைக்கின்ற
அழகிய முகமும் உடைய,
சிறந்த குறமகள் --- சிறப்பு மிக்க
வள்ளிநாயகியாரது,
இணை முலை புதை பட - இரு முலைகளும் பதியும்படி,
செயங்கொடு அணை குக --- வேடர்களைச் செயித்து
(அவ்வம்மையாரை) மருவுகின்ற குருமூர்த்தியே!
சிவ மலை மருவிய --- பழநியங்கிரியில் எழுந்தருளியுள்ள, பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
குரம்பை --- சிறுகுடிலாகிய உடம்பில்,
மலசலம் --- மல மூத்திரங்களும்,
வழுவளு நிணமொடு --- வழுவழுப்பாயுள்ள
கொழுப்பும்,
எலும்பு --- எலும்புகளும்,
அணி சரி தசை --- அடுக்காகச் சரிந்துள்ள
தசைகளும்,
இரல் --- ஈரலும்,
குடல் --- குடலும்,
நெதி குலைந்த செயிர் மயிர் ---
நியதியில்லாமல் சிக்குற்றுள்ள குற்றமுடைய மயிர்களும்,
குருதியோடு இவை பல --- இரத்தம் முதலிய
அசுத்தப் பொருள்கள் பல (இச்சிறு வீட்டில் நிறைந்திருக்கின்றன),
கசுமாலம் --- கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான,
குடின் புகுதும் அவர் --- இந்தக் கசுமால
வீட்டில் குடிபுகுந்து வாழ்பவர்களோ என்னில்,
அவர் கடு கொடுமையர் --- அவர்கள் மிகவும்
கடுமையுடைய, கொடுங் குணத்தினர்கள்,
இடும்பர் --- இடும்புத்தன்மை உடையவர்கள்,
ஒரு வழி இணையிலர் --- ஒரு வழியிலும் ஒத்து
நடவாதவர்கள்,
கசடர்கள் --- கீழ்மக்கள்,
குரங்கர் --- குரங்குச் சேட்டையுடையவர்கள்,
அறிவிலர் --- அறிவில்லதவர்கள்,
நெறி இலர் --- நல்ல நீதி நெறி செல்லாதவர்கள்,
மிருகணை விறல் ஆன சரம்பர் --- மிருகத்தன்மை உடையவரும்
சமர்த்தருமான விஷகுணமுடையவர்கள்,
(இத்தகைய
துர்க்குணமுடையவர்களாகிய காமக்ரோதாதியருடன்)
உறவனை --- நட்புடையவனும்,
நரகனை --- நரகம் புகுகின்றவனும்,
துரகனை --- குதிரையைப்போல் மிக வேகமாகச்
செல்லும் மனமுடையவனும்,
இரங்கு கலியனை --- பரிதவிக்கின்ற
சிறுமையுடையவனும்,
பரிவு உறு சடலனை --- துன்பத்திற்கு
உறைவிடமாகிய உடலையுடையவனுமாகிய,
என் மனதில் --- அடியேனுடைய மனதில்,
தழைந்த சிவ சுடர் தனை --- தழைந்திருக்கின்ற
அருட்பெருஞ் சோதியை,
அழுந்த உரை செய --- நன்றாக (எனது மனதில்) பதியுமாறு
உபதேசிக்கும் பொருட்டு,
சவந்தரிக முக --- மிகுந்த பேரழகுடைய
திருமுகங்களும்,
சரவண பதமொடு ---- தாமரையனைய திருவடிகளும்
தோன்ற,
மயில் ஏறி வரும் --- பச்சை மயில் வாகனத்தில்
ஏறி வந்தருளியபோது,
முக நகை ஒளி --- தேவரீருடைய திருமுகத்தில்
அரும்பிய புன்னகையின் பேரொளியையும்,
தழைந்த நயனமும் --- மிகவும் குளிர்ந்து
அடியேனை நோக்கிய திருக்கண்களையும்,
இருமலர் சரணமும் --- இரண்டு
சரணாரவிந்தங்களையும்,
மறவேனே --- அடியேன் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
இலுப்பை, மகிழ் முதலிய தருக்கள் நிறைந்து
மேகங்கள் தவழும் பல சோலைகளில் உறைகின்ற குயிலினங்களும் வண்டினங்களும் இனிய
ஒலிகளைச் செய்ய, மயிலினங்கள்
நடனஞ்செய்கின்ற நிகரற்ற சிதம்பரம் என்னும் திருத்தலத்தைய உடைய வள நாட்டிற்குத்
தலைவரே!
மாயா காரியத்தால் இருண்டுள்ள கிரௌஞ்ச
மலையானது இடிந்து தூள்பட்டு அழியவும், பல
மலைகளும் தீப்பட்டு எரிந்து ஒழியவும், சமுத்திரம், ஒளி பெற்ற திக்கயங்களும் ஓலமிட்டலறவும், ஒலித்து வந்த இராக்கதர்களும்
யானைப்படைகளும் குதிரைப் படைகளும் யமலோகம் புகும்படி செய்த முருகவேளே!
மேன்மை உடையவரும், பொன்னிறம் உடையவருமாகிய, பிரமதேவரும், முனிவர்களும், தேவர்களும் தேவ மாதர்களும், ”ஹரஹரா! சிவசிவா! சுயம்புவே” என்று துதி
செய்து வணங்கி நிற்கத் திருநடனம் புரிகின்ற அழகிய திருவடியையுடைய சிவபெருமானுடைய
குருநாதரே!
நல்ல பவள இதழும், வெள்ளிய திருப் பற்களும், சந்திரனைப் பரிகசிக்கும் திருமுகமும் உடைய
வள்ளி நாயகியாரது இரு தனங்களும் புதைபடுமாறு, வேடர்களை வென்று மருவிய குகப்பெருமானே!
பழநி மலையில் வாழ்கின்ற பெருமையின்
மிக்கவரே!
சிறு குடிலாகிய உடம்பில் மலம், மூத்திரம், வழுவழுப்பான கொழுப்பு, எலும்பு, அடுக்காகச் சரிந்துள்ள தசை, ஈரல் சிக்குற்று நிலைகுலைந்து
குற்றமுடைய மயிர், உதிரம் முதலிய பல
அசுத்தப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன! இத்தகைய கசுமால வீட்டில் குடிபுகுந்து
வாழ்பவர்களோ மிகவும் கடுமையான கொடியவர்கள்; இடும்பர்; பல வழிப்பட்டவர்கள்; கசடர்கள்; குரங்கர்கள்; அறிவில்லாதவர்கள்; நன்னெறியில் நில்லாதவர்கள்; மிருக சுபாவமுடைய விஷகுணம் உடையவர்கள்; இத்தகைய (காமக்ரோதமதமாச்சரியராகிய)ருடன்
உறவு கொண்டிருப்பவனும் நரகம் புகுபவனும், குதிரையைப்
போல் வேகமான மனத்தை உடையவனும், பரதவிக்கின்ற
சிறுமையை உடையவனும், துன்பங்கள் நிறைந்த
உடம்புடன் கூடினவனுமாகிய அடியேனுடைய மனத்தில் சிவஞான அருட்பெரும் ஒளியானது
நன்றாகப் பதியுமாறு உபதேசிக்கும் பொருட்டு, பேரழகுடைய திருமுகமும் திருவடித்
தாமரையும் தோன்ற, மயில் வாகனத்தின்
மீது வந்தருளியபோது தேவரீருடைய திருமுகத்தில் இலகிய புன்முறுவலின் பொலிவையும்
திருவருள் நோக்கையும் அடியேன் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
விரிவுரை
குரம்பை
---
குரம்பை
என்பது சிறுகுடில் எனப்படும்.
“கள்ளப்புலக்
குரம்பைக் கட்டழிக்க வல்லானே” --- திருவாசகம்
இவ்வுடம்பை
சிறுவீடாகச் சித்திரிக்கின்றார். “தோலால் சுவர் வைத்து: நாலாறு காலில் சுமத்தி, இருகாலால் எழுப்பி, வளைமுது கோட்டி, கைந் நாற்றி நரம்பால் ஆர்க்கை இட்டு, மேய்ந்த அகம்” என்றார்
கந்தரலங்காரத்தில்.
“நவ துளையுடைய
குரம்பை” என்றார் திருப்பாதிரிப்புலியூர் திருப்புகழில். இந்த வீட்டிற்கு விலாசம்
“கசுமாலம்” என நகைச் சுவைபட “கசுமாலக் குடில்” என்றார்.
இந்தக்
கசுமால வீட்டில் யார் குடிபுகுந்து வாழ்வார் எனின், அவர் கடு கொடுமையர்; இடும்பர் ஒருவழி
இணையிலர்.............................................
.............................. .................
...............................சரம்பர், என்று குடிபுகுந்து வாழ்வோரைக்
குறிப்பிடுகின்ற அழகு உள்ளுவார் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது.
மாச்செய்த
குரம்பை தன்னை மண்ணிடை மயக்கம் எய்து
நாச்செய்த
நாலும் ஐந்து நல்லன வாய்தல் வைத்துக்
காச்
செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து
குமைக்க ஆற்றேன் கோவல்வீ ரட்டனாரே. --- அப்பர்.
ஒருவழி
இணை இலர்
---
உள்ளே
இருக்கின்ற காமம் ஆதி பகைவர்கள் ஒருவழியிலும் இசைந்து வரார்கள்; தெய்வ வழிபாட்டிலும் ஆலய வழிபாட்டிலும்
பத்திய கத்திய பாராயணங்களிலும் மெய் ஒருபுறமும், விழி ஒரு புறமும், காது ஒருபுறமும், வாய் ஒரு புறமுமாகப் பலவழி செல்லச்
செய்து கெடுப்பர்.
குரங்கர் ---
குரங்கு
எப்படி சேட்டைக்கு உறைவிடமாய் இருக்குமோ,
அதுபோல சதா சேட்டை செய்து கொண்டிருப்பர்.
துரகனை ---
ஓடுவதில்
வல்ல குதிரையினும் வேகமாக ஓடுகின்ற மனத்தை யுடையவன்.
“ஒருகால் திரிகையில்
ஆயிரக்கோடி சுற்றோடுந் திருத்துளமே”
--- கந்தரந்தாதி.
தழைந்த
நயனம்
---
முருகப்பெருமானுடைய
திருக்கண்கள் கருணையினால் எக்காலமும் தழைந்து விளங்குகின்றன. அத் திருக்கண் நோக்கத்தைப்
பெற்ற அருணகிரிநாத சுவாமிகளே அன்றி அத் திருக்கண்களின் குளிர்ச்சியை அறியவல்லார்
யாவர்?
அத்திருக்கண்
பார்வையாலேயே இருவினை யொத்து பக்குவ காலத்தில் நீங்கும் ஆணவமலம் தானே நீங்கி
விடுகின்றது. சிவஞானம் பிரகாசிக்கின்றது.
‘ஆணவ அழுக்கு அடையும்
ஆவியை விளக்கி, அநு
பூதி
அடைவித்தது ஒரு பார்வைக்காரனும்’ --- திருவேளைக்காரன் வகுப்பு.
‘துங்கநீள் பன்னிரு கருணை விழிமலரும்’ --- (விழையுமனி)
திருப்புகழ்
‘மறுஅறு கடல்என மருவு பனிருவிழி
வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்’ ---
கொலு வகுப்பு.
‘கனகத்தினு நோக்குஇனி தாய்,அடி
யவர் முத்தமி ழாற்புக வே,பர
கதிபெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே’
--- (சதுரத்தரை) திருப்புகழ்
இரும்பை.....வளநாடா ---
மேகங்கள்
தவழும் சோலையாகிய நாடக சாலையில் மயில்கள் ஆடவும், குயில்களும் வண்டுகளும் பாடவும், இலுப்பை தனது பொன் உருண்டை போன்ற
மலர்களைப் பரிசு வழங்கவும், அதனைக் கண்டு மகிழ
விருட்சம் மகிழ்வது போலும் உள்ள சீரிய வளப்பமுடைய நாடு என்பது.
உரைசேரும்
எண்பத்து நான்கு நூறு ஆயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப்
படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்கோயில்,
வரைசேரு
முகில் முழவ, மயில்கள்பல நடமாட, வண்டுபாட,
விரைசேர்பொன்
இதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே
---
திருஞானசம்பந்தர்.
சிவசிவ ---
சிவ
என்ற மந்திரம் வேதங்களுக்கு மத்தியில் நடுநாயக மணி போல் விளங்குகின்றது. சிவசிவ
என்ற உடன் சகலபாபங்களும் தீர்கின்றன. பாபமாகிய பஞ்சுப் பொதிகட்கு சிவ என்ற
மந்திரம் தீப்பொறியாகி நசிக்கச் செய்கிறது. காகமானது கோடி கூடியிருக்கினும் ஒரு
கல்லெறிந்தவுடன் எப்படிக் காகக் கூட்டங்கள் ஓடுகின்றனவோ அதுபோல் பண்டைத் தீவினைக்
கூட்டங்கள் அனைத்தையும் சிவ என்னும் மந்திரம் ஒன்றே தீர்க்கின்றது.
சிவ
சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ
சிவ என்றிடத் தீவினை மாளும்,
சிவ
சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ
சிவ என்னச் சிவகதி தானே, --- திருமந்திரம்
சண்டாளனாயினும்
“சிவ” என்று சொல்வானேல், அவனுடன் பேசவேண்டும்; அவனுடன் வசிக்க வேண்டும்; அவனுடன் இருந்து புசிக்கவேண்டும் என்று
உபநிஷதம் முரசறைகின்றது.
அபிவா
யச் சண்டாள: சிவ இதிவாசம் வதேத்
தேநஸஹ
ஸம்வ தேத் தேநஸஹ ஸம்வஸேத்
தேநஸஹ
ஸாபும்ஜீத:
ஆதலால்
பிரமதேவரும் முனிவரும் தேவரும் சுரமகளிரும் “சிவ சிவ” என்று துதிக்கின்றனர்.
செயம்பு
---
சுயம்பு
என்பது மோனை நோக்கி செயம்பு என வந்தது.
சுயம்பு:-தானாக
வந்தவன்-பிறவாப் பெருந்தகை என்பது பெறப்படும்.
சிவமலை ---
பழநிக்குச்
சிவமலை என்பது ஒரு பெயர். அகஸ்தியர் சிவபெருமானிடத்து சிவமலை, சத்திமலை என்ற இரு மலைகளைப் பெற்று, அவற்றை இடும்பனைக் கொண்டு வரச் செய்ய, அவன் காவடியாகக் கட்டிக்கொண்டு வர, அதன் மீது முருகவேள் எழுந்தருளி
நின்றார்.
கருத்துரை
சிதம்பரத்தைத் தன்னகத்தே கொண்ட வளநாடா! அசுர
குலகாலா! சிவ குருநாதா! வள்ளியம்மையாரது கணவ! குக! பழநியங்கிரிவாச! மலசல நிறைந்த
அசுத்த மிக்க உடலாகிய சிறு குடிலில் பல துர்க்குணர்கள் வாழ, அவர்களுடைய உறவு கொண்ட அடியேனை ஆட்கொள்ளும்
பொருட்டு சிவஞானத்தை உபதேசஞ் செய்ய,
மயில்
வாகனத்தின்மீது எழுந்தருளி வந்த தேவரீரது குளிர்ந்த மலர்க் கணைகளையும் குரை
கழலையும் ஒருபோதும் மறவேன்.
No comments:
Post a Comment