திருக் கடம்பூர்
(மேலக்கடம்பூர் / கடம்பைக் கரக்கோயில்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக
எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மீ. தொலைவில் கடம்பூர் உள்ளது.
காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர்
செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது.
கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம்.
மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற
தலம்.
இத்திருத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மீ. தொலைவில் திருஓமாம்புலியூர்
என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது.
ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர்
செல்லலாம்.
இறைவர்
: அமிர்தகடேசுவரர்
இறைவியார்
: சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி
தல
மரம் : கடம்பு
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - வானமர் திங்களும்.
2. அப்பர் -1. தளரும் கோளரவத்தொடு,
2. ஒருவராய் இரு.
பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை
பருகச்சென்றனர். இதைக் கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுத கலசத்தை எடுத்துச் சென்று
விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி
தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை
உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு
வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர்
சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர்
இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி
அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். இந்திரனின் தாய் இத்தலத்திறைவனை வழிபட்டு
வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட
இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை
இழுத்துச்செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன்
காரியத்தில் இறங்காததால், விநாயகர் தேர்ச் சக்கரத்தை
தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோயிலை ஒரு அடிகூட
நகர்த்த முடியவில்லை. இந்தின் இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து
"தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாக சொல்லி", இந்திரனை இங்கு வந்து தன்னை வணங்கும்
படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான்.
தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.
அருள்மிகு
அமிர்தகடேசுவரர் திருக்கோயில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில்
காணப்படுகிறது. அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் வழியே உள்ளே
நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம்.
கொடிமரமில்லை.
முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே
மூலவர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு
நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப்
போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து
காணப்படுகின்றன. இச்சிற்பங்களைக் காண்பதற்காகவே ஒவ்வொருவரும் மேலக்கடம்பூர் ஆலயம்
அவசியம் வரவேண்டும். இந்திரன் கோயிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் போது
விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து
இருக்கிறது. கருவறை பின்பக்க சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில்
ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர்.
இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன்
இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்ட சுவரிலேயே
கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி
ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி
புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும்
காட்சியை தரிசிக்கலாம். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா சிவனை பூஜித்தபடி இருக்கிறார்.
இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர்
ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது
நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன்
இருக்க, அவருக்கு கீழே
ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. அம்பாளைத் தன்தொடை மீது இருத்தி
ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
ரிஷபதாண்டவமூர்த்தி: இத்தலத்தில்
"ரிஷபதாண்டவமூர்த்தி" நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார்.
இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை
தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள்
இருக்கின்றன.
ஆரவார விநாயகர்: இந்திரனின் ஆணவத்தை
போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த
கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை
மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை
இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார்.
ஆலயத்தின்
மற்ற சிறப்புகள்:
சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம்
கடன் தீர்க்கும் கடம்பவனநாதர்
எழுந்தருளியிருக்கும் தலம்
ஆயுள் பலம் தரும் அமிர்த கடேஸ்வரர் சுயம்பு
லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம்
கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம்
தரும் சனி பகவான்
அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி
தலம்
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன்
எழுந்தருளியிருக்கும் தலம்
கடம்பவன தலமாதலால் சதய நட்சத்திரக்காரர்கள்
வழிபட வேண்டிய தலம்
காலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும்
ஸ்ரீவித்யுஜோதிநாயகி சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும்
துர்க்கை
அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர்
தலம்
ஸ்ரீ முருகப் பெருமான் சூரனை அழிக்க தவம்
செய்து வில் பெற்ற தலம் என்றும் சொல்லப்படுகின்றது.
பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய
ஒளி விழுவதும், ஐப்பசி
அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி
சுவாமி மீது விழுகின்றது.
பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி தலம். பிரதோஷ
காலத்தில் மட்டும் தரிசனம் தரும் ஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "பாரில் உடம்பு ஊர்
பவத்தை ஒழித்து அருளும் மேன்மைக் கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே" என்று போற்றி
உள்ளார்.
காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 251
மற்றநல்
பதிவட தளியின் மேவிய
அற்புதர்
அடிபணிந்து, அலர்ந்த செந்தமிழ்ச்
சொல்தொடை
பாடி,அங்கு அகன்று, சூழ்மதில்
பொன்பதி
வாழ்கொளி புத்தூர் புக்கனர்.
பொழிப்புரை : அந்நற்பதியில்
வடதளிக் கோயிலில் எழுந்தருளிய, அற்புதமான
சிவபெருமானின் திருவடிகளை வணங்கி விளங்கும் செந்தமிழால் ஆன பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, சூழ்ந்த மதிலை உடைய அழகிய பதியான
திருவாழ்கொளிப்புத்தூரில் வந்து புகுந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 252
சீர்வளர்
கோயிலை அணைந்து, தேமலர்க்
கார்வளர்
கண்டர்தாள் பணிந்து காண்பவர்,
பார்புகழ்
பதிகங்கள் பாடி, நீடுவார்
வார்புகழ்க்
கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
பொழிப்புரை : சிறப்பு மிக்க
அத்திருக்கோயிலை அடைந்து, தேன்பொருந்திய
கருங்குவளை மலர் போன்ற கரிய நிறம் வளர்வதற்கு இடமான கழுத்தையுடைய இறைவரின்
திருவடிகளை வணங்கி, பெருமானாரைக் கண்டு
மகிழ்பவர், உலகம் புகழும்
திருப்பதிகங்களைப் பாடியருளி, நிறைந்த புகழைக் கொண்ட
`திருக்கடம்பூரை\'யும் வணங்கினார்.
குறிப்புரை : திருவாழ்கொளிப்புத்தூரில்
பாடிய பதிகம் `பொடியுடை மார்பினர்' (தி.1 ப.40) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த
பதிகமாகும். இப்பதிகத்து வரும் பாடல் தொறும், அப்பெருமான் அடியைக் காண்போம், சேர்வோம், சார்வோம் என உலகினரை உளப்படுத்திக்
கூறுவதால், `பார் புகழ் பதிகங்கள்' என்றார். பாரோடு சேர்ந்து புகழும்
பதிகங்கள் என்றவாறு. பதிகங்கள் என்ற பன்மையால் மேலும் பல பதிகங்கள்
இருந்திருக்கலாம். எனினும் இதனையடுத்து வரும் ஒரு பதிகமே இன்று காணக்
கிடைக்கின்றது. இப்பதிகம், `சாகையாயிரம்' என்பது: பண் - பியந்தைக் காந்தாரம் (தி.2 ப.94). அடுத்துவணங்கிய
திருக்கடம்பூர் கரக்கோயிலில் அருளியது `வானமர் திங்கள்' (தி.2 ப.68) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த
பதிகமாம்.
2.068 திருக்கடம்பூர் பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வான்அமர்
திங்களும் நீரும்
மருவிய வார்சடை யானை,
தேன்அமர்
கொன்றையி னானை,
தேவர் தொழப்படு வானை,
கான்அம
ரும்பிணை புல்கிக்
கலைபயி லுங்கடம்
பூரில்
தான்அமர்
கொள்கையி னானைத்
தாள்தொழ வீடுஎளி
தாமே.
பொழிப்புரை :வானிற் பொருந்திய
திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச்
சூடியவனும், தேவர்களால்
தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத்
தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான்
திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.
பாடல்
எண் : 2
அரவினொடு
ஆமையும் பூண்டு,
அந்துகில் வேங்கை
அதளும்,
விரவும்
திருமுடி தன்மேல்
வெண்திங்கள் சூடி
விரும்பி,
பரவுந்
தனிக்கடம் பூரில்
பைங்கண்வெள்
ஏற்றுஅண்ணல் பாதம்
இரவும்
பகலும் பணிய
இன்பம் நமக்குஅது
வாமே.
பொழிப்புரை :பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து
அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப்பரவப் பெறும்
சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை
இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.
பாடல்
எண் : 3
இளிபடும்
இன்சொலி னார்கள்
இருங்குழல்
மேலிசைந்து ஏறத்
தெளிபடு
கொள்கை கலந்த
தீத்தொழி லார்கடம்
பூரில்
ஒளிதரு
வெண்பிறை சூடி
ஒள்நுத லோடுஉடன்
ஆகிப்
புலியதள்
ஆடை புனைந்தான்
பொற்கழல் போற்றுதும்
நாமே.
பொழிப்புரை :இளி என்னும் இசை
இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர்
ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு உடனாய்ப்
புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம்போற்றுவோம்.
பாடல்
எண் : 4
பறையொடு
சங்கம் இயம்பப்
பல்கொடி சேர்நெடு
மாடம்
கறைஉடை
வேல்வரிக் கண்ணார்
கலைஒலி சேர்கடம்
பூரில்
மறைஒலி
கூடிய பாடல்
மருவிநின்று ஆடல்
மகிழும்
பிறைஉடை
வார்சடை யானைப்
பேணவல் லார்பெரி
யோரே.
பொழிப்புரை :பறை சங்கம் முதலியன
ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாட வீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த
கடம்பூரில் வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட சடையை
உடைய பெருமானைப் பேணவல்லவர் பெரியோர் ஆவர்.
பாடல்
எண் : 5
தீவிரி
யக்கழல் ஆர்ப்பச்
சேய்எரி கொண்டுஇடு
காட்டில்
நாவிரி
கூந்தல்நல் பேய்கள்
நகைசெய்ய நட்ட
நவின்றோன்
காவிரி
கொன்றை கலந்த
கண்ணுத லான்கடம்
பூரில்
பாவிரி
பாடல் பயில்வார்
பழியொடு பாவம் இலாரே.
பொழிப்புரை :தீப்போலும்
சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க
நடனம் ஆடுபவனும் கொன்றைமாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை
அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.
பாடல்
எண் : 6
தண்புனல்
நீள்வயல் தோறும்
தாமரை மேல்அனம் வைகக்
கண்புணர்
காவில்வண்டு ஏறக்
கள்அவி ழுங்கடம்
பூரில்
பெண்புனை
கூறுஉடை யானைப்
பின்னு சடைப்பெரு
மானைப்
பண்புனை
பாடல் பயில்வார்
பாவம் இலாதவர் தாமே.
பொழிப்புரை :குளிர்ந்த
நீர்நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க
மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய்
விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர்.
பாடல்
எண் : 7
பலிகெழு
செம்மலர் சாரப்
பாடலொடு ஆடல் அறாத
கலிகெழு
வீதி கலந்த
கார்வயல் சூழ்கடம்
பூரில்
ஒலிதிகழ்
கங்கை கரந்தான்,
ஒள்நுத லாள்உமை
கேள்வன்
புலியதள்
ஆடையி னான்தன்
புனைகழல் போற்றல்
பொருளே.
பொழிப்புரை :சிவபூசகர்கள்
பூசைக்கு வேண்டும் செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த
வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில்
மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும்
பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும்.
பாடல்
எண் : 8
பூம்படு
கில்கயல் பாயப்
புள்இரி யப்புறங்
காட்டில்
காம்புஅடு
தோளியர் நாளும்
கண்கவ ருங்கடம்
பூரில்
மேம்படு
தேவியொர் பாகம்
மேவிஎம் மான்என
வாழ்த்தித்
தேம்படு
மாமலர் தூவித்
திசைதொழத் தீய
கெடுமே.
பொழிப்புரை :அழகிய நீர் நிலைகளில்
கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட
விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய்
விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து
மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர்தூவித்தொழத் தீயனகெடும்.
பாடல்
எண் : 9
திருமரு
மார்பில் அவனும்
திகழ்தரு மாமல ரோனும்
இருவரு
மாய்அறிவு ஒண்ணா
எரிஉரு ஆகிய ஈசன்
கருவரை
காலில் அடர்த்த
கண்ணுத லான்கடம்
பூரில்
மருவிய
பாடல் பயில்வார்
வான்உல கம்பெறு வாரே.
பொழிப்புரை :திருமகள் மருவிய
மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல்
விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும்
கரியமலைபோன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார்
வானுலகம் பெறுவர்.
பாடல்
எண் : 10
ஆடை
தவிர்த்துஅறம் காட்டும்
அவர்களும், அம்துவர் ஆடைச்
சோடைகள்
நல்நெறி சொல்லார்,
சொல்லினும் சொல்அல
கண்டீர்,
வேடம்
பலபல காட்டும்
விகிர்தன்நம் வேத
முதல்வன்
காட
தனில் நடம் ஆடும்
கண்ணுத லான்கடம்
பூரே.
பொழிப்புரை :ஆடையின்றி அறங்கூறும்
அமணர்களும், துவராடை உடுத்து
அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச் சொன்னாலும் அவை
மெய்ச்சொற்களல்ல. பலவேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள்
நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.
பாடல்
எண் : 11
விடைநவி
லுங்கொடி யானை
வெண்கொடி சேர்நெடு
மாடம்
கடைநவி
லுங்கடம் பூரில்
காதல னைக்கடல் காழி
நடைநவில்
ஞானசம் பந்தன்
நன்மையால் ஏத்திய
பத்தும்
படைநவில்
பாடல் பயில்வார்
பழியொடு பாவம் இலாரே.
பொழிப்புரை :விடைச்சின்னத்தை
அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த
உயரிய வாயில்களைக் கொண்ட மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழிமாநகரில் தோன்றிய
நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை
ஓதுவார் பழிபாவம் இலாராவர்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
அப்பர் பெருமான் திருத்தில்லையை
வழிபட்டு அங்குத் தங்கியிருந்த காலத்தில், சீர்காழியில் அவதரித்து, அம்மை முலைப்பாலுண்டு, அரிய ஞானம் பெற்று சிவஞானசம்பந்தர்
ஆயின் பிள்ளையாரைப் பற்றி அடியவர்கள் சொல்லக் கேட்டு, பிள்ளையாரைக் கண்டு வணங்கி மகிழ, திருத்தில்லையினின்றும் நீங்கி, வரும் வழியில் திருநாரையூர் பணிந்து, அங்கிருந்து சீர்காழி செல்லும் வழியில்
உள்ள திருத்தலங்களைத் தொழுது திருநாவுக்கரசர் பாடியருளிய திருப்பதிகங்களில்
திருக்கடம்பூர்த் திருக்கரக்கோயில் திருப்பதிகங்கள்.
பெரிய
புராணப் பாடல் எண் : 178
ஆழிவிடம்
உண்டவரை அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே
ஏழிசைவண்
தமிழ்மாலை இவன்எம்மான்
எனக்காட்டி இயம்ப
வல்ல
காழிவரும்
பெருந்தகைசீர் கேட்டலுமே,
அதிசயமாம் காதல் கூர,
வாழிஅவர்
மலர்க்கழல்கள் வணங்குதற்கு
மனத்துஎழுந்த
விருப்பு வாய்ப்ப.
பொழிப்புரை : திருநிலைநாயகி
அம்மையாரின் திருமுலைப் பாலமுதத்தை ஞானத்துடன் உண்ட அப்பொழுதே, ஏழிசை பொருந்தும் வளமான தமிழ் மாலையால்
கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளிய சிவபெருமானை `எமது பெம்மான் இவன்` எனச் சுட்டிக்காட்டிப் பாடியருள வல்ல, சீகாழியில் தோன்றியருளிய
பெருந்தகையாளரான ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புகளைக் கேட்டவுடனே, வியத்தகு உணர்வுடன் கூடிய காதலால், வாழ்வு அளிக்கும் அவருடைய மலர் போன்ற
திருவடிகளை வணங்குதற்குத் தம் உள்ளத்தில் எழுந்த விருப்பம் பொருந்த,
பெ.
பு. பாடல் எண் : 179
அப்பொழுதே
அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி, அருள்முன் பெற்று,
பொய்ப்பிறவிப்
பிணிஓட்டுந் திருவீதி
புரண்டு,வலம் கொண்டு போந்தே,
எப்புவனங்
களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி
ஏத்தி,
செப்பரிய
பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச்
செல்வார்.
பொழிப்புரை : அதுபொழுதே
பொன்னம்பலத்தில் கூத்தாடும் இறைவரின் திருவடியை வணங்கி அருளைப் பெற்றுக் கொண்டு, பொய்யான இப்பிறவி நோயைப் போக்கும்
இயல்பு கொண்ட தில்லையின் வீதியை நிலம் பொருந்தப் புரண்டு வலமாக வந்து, பின் எவ்வுலகங்களிலும் நிறைவுடைய
அப்பதியினது எல்லையை வணங்கிப் போற்றிச், சொல்வதற்கரிய
பெருமையுடைய சிவபெருமானின் திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடி மேலே செல்வராய்.
குறிப்புரை : இது பொழுது
திருநாரையூரில் பாடியருளிய பதிகங்கள் இரண்டாம்.
(1) `வீறுதானுடை` (தி.5 ப.54)எனத் தொடங்கும்
திருக்குறுந்தொகைப்
பதிகம்.
(2) `சொல்லானைப் பொருளானை` (தி.6 ப.74) எனத் தொடங்கும் திருத்தாண்டகம்.
இத்திருப்பதியிலிருந்து சீகாழிக்குச்
செல்லும் பொழுது இடையில் திருஓமாம்புலியூர், கடம்பூர் ஆகிய திருப்பதிகளுக்கும்
சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இப்பதிகளில் அருளிய பதிகங்கள் மூன்றாம்:
1. திரு ஓமாம்புலியூர்த்
திருப்பதிகம்: `ஆராரும் மூவிலை வேல்` - திருத்தாண்டகம் (தி.6 ப.88).
2. கடம்பூர்த் திருப்பதிகங்கள்:
அ)`தளரும் கோளரவ` - திருக்குறுந்தொகை (தி.5 ப.19)
(ஆ) `ஒருவராய்` - திருக்குறுந் தொகை (தி.5 ப.20).
5. 019 திருக்கடம்பூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தளரும்
கோள்அர வத்தொடு தண்மதி
வளரும்
கோல வளர்சடை யார்க்குஇடம்,
கிளரும்
பேரிசைக் கின்னரம் பாட்டுஅறாக்
களரும்
கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : தளருகின்ற கொள்ளுதல்
தப்பாத பாம்பினோடு , குளிர்ந்த பிறைமதி
வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானுக்கு இடம் , பேரிசை கிளர்கின்ற கின்னரங்களின் பாட்டு
அறாத , கரிய கடம்பு நிறைந்த
ஊரில் திருக்கரக் கோயிலே .
பாடல்
எண் : 2
வெலவ
லான்புலன் ஐந்தொடு, வேதமும்,
சொலவ
லான், சுழ லுந்தடு
மாற்றமும்,
அலவ
லான்,மனை யார்ந்தமென்
தோளியைக்
கலவ
லான்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : கடம்பூர்த்
திருக்கரக் கோயிலின்கண் வீற்றிருக்கும் இறைவன் புலன் ஐந்தினை வெல்ல வல்லமை உடையவன்
; வேதமும் சொல்லவல்லவன்
; சுழல்கின்ற
தடுமாற்றமும் நீக்க வல்லவன் : மனையார்ந்த மங்கையாகிய மென்றோளுடைய உமாதேவியாரைக்
கலத்தல் வல்லவன்
பாடல்
எண் : 3
பொய்தொ
ழாது புலியுரி யோன்பணி
செய்து
எழாஎழு வார்பணி செய்துஎழா
வைது
எழாதுஎழு வார்அவர் எள்க,நீர்
கைதொ
ழாஎழு மின்கரக் கோயிலே.
பொழிப்புரை : உலகப் பொருள்களில்
பற்றுச் செய்யாது . புலியின் தோலை உடுத்தோனாகிய சிவபிரான் பணியைச் செய்து, அவ்வாறு எழுவார் பணியினையும் உடன்செய்து
கரக்கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக ! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும்
.
பாடல்
எண் : 4
துண்எ
னாமனத் தால்தொழு நெஞ்சமே,
பண்ணி
னால்முனம் பாடல் அதுசெய்தே,
எண்இ
லார்எயில் மூன்றும் எரித்தமுக்
கண்ணி
னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : நல்ல எண்ணமில்லாதாரது
முப்புரம் எரித்த முக்கண்ணினானது கடம்பூர்க் கரக்கோயிலை , பண்ணினால் திருமுன்பு பாடல் பரவி
அச்சமின்றி நெஞ்சமே தொழுவாயாக !
பாடல்
எண் : 5
சுனையுள்
நீல மலர்அன கண்டத்தன்,
புனையும்
பொன்னிறக் கொன்றை புரிசடை,
கனையும்
பைங்கழ லான்கரக் கோயிலை
நினையும்
உள்ளத் தவர்வினை நீங்குமே.
பொழிப்புரை : சுனையுள் பூத்த
நீலமலர் போன்ற கண்டத்தனும் , புனையும் பொன்னிறக்
கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை
நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும் .
பாடல்
எண் : 6
குணங்கள்
சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி
வாழ்த்துவர் அன்புஉடை யார்எலாம்,
வணங்கி
வான்மலர் கொண்டுஅடி வைகலும்
கணங்கள்
போற்றிசைக் கும்கரக் கோயிலே.
பொழிப்புரை : அன்புடையாரெலாம்
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவதும் , கணங்கள் வணங்கி வான்மலர் கொண்டு வைகலும்
அடி போற்றிசைப்பதும் கரக்கோயில் தலத்திலாகும் .
பாடல்
எண் : 7
பண்ணின்
ஆர்மறை பல்பல பூசனை
மண்ணி
னார்செய்வது அன்றியும், வைகலும்
விண்ணி
னார்கள் வியக்கப் படுவன,
கண்ணி
னார்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : திருக்கடம்பூர்க்
கரக்கோயில் பண்ணினைப் பொருந்திய மறையோதிப் பல்பூசனைகளை மண்ணினுள்ளார்
செய்வதன்றியும் நாள்தோறும் விண்ணினுள்ளாரும் வியக்கப்படும் பூசனைகள்
செய்யக்கருதினர் .
பாடல்
எண் : 8
அம்கை
ஆரழல் ஏந்திநின்று ஆடலன்,
மங்கை
பாட மகிழ்ந்துஉடன் வார்சடைக்
கங்கை
யான்உறை யுங்கரக் கோயிலைத்
தம்கை
யால்தொழு வார்வினை சாயுமே.
பொழிப்புரை : உமையம்மை உடனிருந்து
மகிழ்ந்து பாட அங்கையில் அழல் ஏந்தி நின்று ஆடல் புரிபவன் , ஆய கங்கை யுறையும் சடையான் வீற்றிருக்கும்
கரக்கோயிலைத் தம்கையால் தொழுவாருடைய வினைகள் வலியற்றுக்கெடும் .
பாடல்
எண் : 9
நம்
கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென்
கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்
கடன் அடியேனையும் தாங்குதல்,
என்
கடன் பணி செய்து கிடப்பதே.
பொழிப்புரை : கடம்பமாலை சூடிய நம் முருகனைப்
பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன்
கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என்
போன்றார் கடன் பணிசெய்து தற்போதம் இன்றியே இருத்தல் .
பாடல் எண் : 10
பணங்கொள்
பால்கடல் பாம்புஅணை யானொடும்
மணங்க
மழ்மலர்த் தாமரை யான்அவன்
பிணங்கும்
பேர்அழல் எம்பெரு மாற்குஇடம்
கணங்கள்
போற்றிசைக் குங்கரக் கோயிலே.
பொழிப்புரை : பாற்கடலில் கிடக்கும்
படம்கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும் மணம் கமழ் மலர்த்தாமரையானாகிய பிரமனும்
தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த எம் பெருமானுக்கு இடம் , கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலாகும்
.
பாடல்
எண் : 11
வரைக்கண்
நால்அஞ்சு தோள்உடை யான்தலை
அரைக்க
ஊன்றி அருள்செய்த ஈசனார்,
திரைக்குந்
தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும்
உள்ளத் தவர்வினை ஓயுமே.
பொழிப்புரை : திருக்கயிலாயத்
திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர்
அருள்புரிந்த ஈசனார் வீற்றிருக்கும், அலைவீசும்
குளிர் புனல் சூழ் கரக்கோயிலைக் கூறும் உள்ளத்தவர் வினைகள் ஓயும் .
திருச்சிற்றம்பலம்
5. 020 திருக்கடம்பூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஒருவ
ராய்இரு மூவரும் ஆயவன்
குரு
அதுஆய குழகன் உறைவிடம்
பருவ
ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ
தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : ஒருவராய் , இருவராய் , மூவராய் நிற்பவனும் குருவடிவுமாகிய
குழகன் உறைவிடம் , பருத்தவரால் மீன்கள்
குதித்தலைக் கொள்ளும் பழனங்கள் சூழ்ந்த இடமாகிய கடம்பூர்க் கரக்கோயிலே .
பாடல் எண் : 2
வன்னி
மத்தம் வளர்இளந் திங்கள்ஓர்
கன்னி
யாளைக் கதிர்முடி வைத்தவன்,
பொன்னின்
மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி
னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : வன்னியும் , ஊமத்தமலரும் , வளர் இளந் திங்களும் , கங்கையும் ஆகியவற்றைக் கதிர்விரிக்கும்
முடியில் வைத்தவன் , பொன்னின் நிறைந்து
புணர்முலையாளாகிய உமாதேவியோடும் கடம்பூர்க் கரக்கோயிலில் நிலைபெற்றவன் ஆவன் . (
எல்லாம் வல்ல முதல்வன் உயிர்களுக்குப் போகம் உதவுதற்குப் போகியாய்
இருந்தருள்கின்றான் என்பது கருத்து .)
பாடல்
எண் : 3
இல்லக்
கோலமும் இந்த இளமையும்
அல்லல்
கோலம், அறுத்துஉய வல்லிரே
ஒல்லைச்
சென்றுஅடை யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக்
கோயில் திருக்கரக் கோயிலே.
பொழிப்புரை : இல்லத்திற்கொள்ளும்
கோலங்களும் , இந்த இளமையுமாகிய
அல்லற் கோலங்களை அறுத்துஉய்ய வல்லமை உடையீராவீர் ; அதற்குக் கடம்பூர்நகர்ச் செல்வக்
கோயிலாகிய கரக்கோயிலை விரைந்து சென்று அடைந்து தொழுவீர்களாக .
பாடல்
எண் : 4
வேறுசிந்தை
இலாதவர் தீவினை
கூறு
செய்த குழகன் உறைவிடம்,
ஏறு
செல்வத்து இமையவர் தாம்தொழும்
ஆறு
சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : தம்மைப் பற்றியன்றி
வேறு சிந்தனை இல்லாதவர்களது தீவினைகளைக் கூறு செய்யும் குழகன் உறைவிடம் , செல்வம் ஏறுகின்ற தேவர்கள் தொழுகின்ற
ஆறு சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .
பாடல்
எண் : 5
திங்கள்
தங்கிய செஞ்சடை மேலும்ஓர்
மங்கை
தங்கும் மணாளன் இருப்பிடம்,
பொங்கு
சேர்மணல் புன்னையும் ஞாழலும்
தெங்கு
சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : இடப்பாகத்தே
பார்வதியைக் கொண்டதன்றி , திங்கள் பொருந்திய
செஞ்சடை மேலும் ஒரு மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் , மணல் நிறைந்த பகுதியில் புன்னையும் , புலிநகக் கொன்றையும் , தென்னையும் சேர்ந்த கடம்பூர்க்
கரக்கோயிலாகும் .
பாடல்
எண் : 6
மல்லை
ஞாலத்து வாழும் உயிர்க்குஎலாம்
எல்லை
ஆன பிரானார் இருப்பிடம்
கொல்லை
முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல
சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : வளம் பொருந்திய
உலகத்து வாழும் உயிர்கட்கெல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம் , முல்லை , கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள்
சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும் .
பாடல்
எண் : 7
தளரும்
வாள்அர வத்தொடு தண்மதி
வளரும்
பொற்சடை யாற்குஇடம் ஆவது,
கிளரும்
பேரொலி கின்னரம் பாட்டுஅறாக்
களரி
ஆர்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : நெகிழும் இயல்புடைய
ஒளிபொருந்திய அரவத்தொடு , தண்மதி வளர்கின்ற
பொன்னிறம் உடைய சடையார்க்கு இடமாவது , கிளர்கின்ற
பேரொலி உடைய கின்னரம் பாட்டறாத களர் நிலத்தைச் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்
.
பாடல்
எண் : 8
உற்றா
ராய்உறவு ஆகி உயிர்க்குஎலாம்
பெற்றார்
ஆய பிரானார் உறைவிடம்
முற்றார்
மும்மதில் எய்த முதல்வனார்
கற்றார்
சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : உற்றாராய் , உறவாகி உயிர்க்கெலாம் ஈன்றாராகிய தலைவர்
அறிவிற் குறைபாடுடைய முப்புராதிகளின் எயில்களை எய்த முதல்வனார் உறைவிடம்
கற்றார்கள் , வாழும் கடம்பூர்க்
கரக் கோயிலாகும் .
பாடல் எண் : 9
வெள்ளை
நீறுஅணி மேனிய வர்க்குஎலாம்
உள்ளம்
ஆய பிரானார் உறைவிடம்
பிள்ளை
வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன்
சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : திருநீறணிந்த
மேனியவர்க்கெல்லாம் உள்ளத்தில் விளங்கும் தலைவனும் வெண்பிறை சூடிய சென்னியானும்
ஆகிய பெருமான் உறைவிடம் கடம்பூரில் உள்ள கள்வன்சேர்ந்த கரக் கோயிலாகும் .
பாடல்
எண் : 10
பரப்பு
நீர்இலங் கைக்குஇறை வன்அவன்
உரத்தி
னால்அடுக் கல்எடுக் கல்ஊற,
இரக்கம்
இன்றி இறைவிர லால்தலை
அரக்கி
னான்கடம் பூர்க்கரக் கோயிலே.
பொழிப்புரை : நீர்ப்பரப்புச்
சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனாகிய இராவணன் தன் ஆற்றலினால் திருக்கயிலையை எடுக்கத்
தொடங்க இரக்கமின்றிச் சிறிது விரலாற்றலையினை அரக்கினவன் இடம் கடம்பூர்க்கரக்கோயில்
.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment