அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இலகுகனி மிஞ்சு
(பழநி)
அகத்துறை பாடல்
முருகா எனது மகளைக் கண்டு
அருள்
தனதனன
தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதான
இலகுகனி
மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே
இசைமுரல்சு
ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு ...... மயலாலே
நிலவிலுடல்
வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்
நிலையழியு
நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து ...... படலாமோ
புலவினைய
ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த ...... கதிர்வேலா
புழுகெழம
ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா
பலநிறமி
டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த ...... குகவீரா
பணைபணிசி
றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இலகுகனி
மிஞ்சு மொழி, இரவு துஞ்சும்
இருவிழி, என் நஞ்சு, ...... முகமீதே
இசைமுரல்
சுரும்பும், இளமுலை அரும்பும்
இலகிய கரும்பும், ...... மயலாலே,
நிலவில்
உடல் வெந்து கரிய, அலமந்து
நெகிழும் உயிர் நொந்து, ...... மதவேளால்
நிலையழியும்
நெஞ்சில் அவர் குடி புகுந்த
நினைவொடும் இறந்து ...... படல் ஆமோ?
புலவினை
அளைந்து, படுமணி கலந்து,
புதுமலர் அணிந்த ...... கதிர்வேலா,
புழுகு
எழ மணந்த குறமகள் குரும்பை
பொர, முகை உடைந்த ...... தொடைமார்பா!
பலநிறம்
மிடைந்த விழு சிறை அலர்ந்த
பருமயில் அடைந்த ...... குக! வீரா!
பணை
பணி சிறந்த தரள மணி சிந்து
பழநிமலை வந்த ...... பெருமாளே.
பதவுரை
புலவினை அளைந்து --- புலாலைக் கலந்து,
படுமணி கலந்து --- ஒலிக்கின்ற மணியுடன்,
புதுமலர் அணிந்த --- புதிய மலர்களைப்
புனைந்துள்ள,
கதிர்வேலா --- ஒளி மிகுந்த வேலாயுதரே!
புழுகு எழ மணந்த --- புனுகின் நறுமணம் வீசுமாறு
மணந்துகொண்ட,
குறமகள் --- வள்ளிநாயகியின்,
குரும்பை பொர --- தென்னங் குரும்பை போன்ற
தனங்கள் தங்குதலால்,
முகை உடைந்த தொடை மார்பா --- அரும்புகள்
விரிந்து மலர்ந்த மலர் மாலை தரித்த திருமார்பினரே!
பலநிறம் மிடைந்த --- பலப்பல நிறங்கள்
நெருங்கினதாய், விழுகின்ற,
விழு சிறை அலர்ந்த --- மேலான சிறகுகள் பரந்து
ஒளிரும்,
பருமயில் அடைந்த --- பெரிய மயிலை வாகனமாகக்
கொண்ட,
குக வீரா --- குகையில் வசிக்கும் வீரரே!
பணை ---- மூங்கில்கள்,
பணி சிறந்த தரளமணி சிந்து ---
வேலைப்பாட்டுக்குத் தக்கதான முத்து மணிகளை உதிர்க்கும்,
பழநி மலை வந்த --- பழநிமலையில்
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
இலகு கனி மிஞ்சு மொழி --- சுவை
விளங்கும் பழத்தின் இனிமையினும் மேம்பட்ட மொழியும்,
இரவு துஞ்சும் இருவிழி என் நஞ்சும் ---
இரவில் துயில் புரியும் இரு கண்கள் என்கின்ற நஞ்சும்,
முக மீதே இசைமுரல் சுரும்பும் --- முகமாகி
தாமரை மலரின் மீது இசை ஒலிக்கும் வண்டும்,
இளமுலை அரும்பும் --- இளந் முலைகளாகிய
அரும்பும்,
இலகிய கரும்பும் --- அழகிய கரும்பு போன்ற
தோள்களும் கொண்ட (என்மகள்),
மயலாலே --- தலைமகன் மீது கொண்ட மோகத்தினால்,
நிலவில் உடல் வெந்து --- கரிய சந்திரனுடைய
குளிர்ந்த ஒளியினால் உடல் வெந்து கரியவும்,
அலமந்து --- வேதனைப்பட்டு,
நெகிழும் உயிர் நொந்து --- நெகிழ்ச்சியுறும்
உயிரானது நலிவுற்று,
மதவேளால் --- மன்மதனால்,
நிலை அழியும் நெஞ்சில் --- தனது நிலை
அழிகின்ற உள்ளத்தில்,
அவர் குடிபுகுந்த --- தலைமகன் வந்து
குடிபுகுந்த,
நினைவோடும் இறந்து படலாமோ --- அந்த
நினைவினால் இன்புறாது இவள் மடியலாமோ?
பொழிப்புரை
மாற்றாரின் நிணங்களுடன் கலந்து, ஒலிக்கின்ற மணியுடன் புதிய மலர்களைப் புனைந்த
ஒளி மிகுந்த வேலாயுதத்தை உடையவரே!
புனுகின் நறுமணம் வீச மணந்து கொண்ட
வள்ளிநாயகியின் தென்னங் குரும்பையை நிகர்த்த தனங்கள் தாக்குதலால், மொட்டு அவிழ்ந்து விரிந்த மலர்
மாலையுடன் கூடிய திருமார்பினரே!
பலப்பல நிறங்கள் நெருங்கிய மேலான
சிறகுகள் பரந்து ஒளிரும் பெரிய மயிலை வாகனமாகக் கொண்டவரே!
அடியார்களின் இதய குகையில் வாழும்
வீரமூர்த்தியே!
நல்ல வேலைப்பாட்டுக்குகந்த முத்து
மணிகளை மூங்கில்கள் உதிர்க்கின்ற பழநி மலையில் எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!
சுவை விளங்கும் கனிகளின் இனிமைக்கு
மேம்பட்ட மொழியும், இரவில் துயில்கின்ற
இரு கண்கள் என்ற நஞ்சும், முகமாகிய தாமரையில்
ஒளிசெய்யும் வண்டும், இளமுலையாகிய
அரும்பும், அழகிய கரும்பு போன்ற
தோளும் உடைய என் புதல்வி, தலைவன் மீது கொண்ட
அன்பின் மிகுதியால், நிலவின் வெப்பத்தால்
உடம்பு கரிந்து வேக, வேதனையுற்று, உயிர் நெகிழ்ச்சியுற்று துன்பம் அடைந்து, மன்மதனால் நிலைமை குன்றி, தான் விரும்பிய தலைமகன் அவள் உள்ளத்தில்
குடிபுகுந்து அந்த நினைவுடன் இன்பமுறாமல் இறந்து படலாமோ?
விரிவுரை
இத்திருப்புகழில்
முருகனைத் தலைமகனாக விரும்பிய ஒரு பெண்ணின் நிலைமை குறித்து தாய் வருந்துவதாக (நற்றாயிரங்கலாக)ப்
பாடியது.
இலகுகனி
மிஞ்சு மொழி
---
தாய்
தன் மகளின் நலன்களை எடுத்து முருகனிடங் கூறுகின்றாள். “முருகா! என் புதல்வியின்
மொழி சுவை மிகுந்த கனியிலும் இனிமையானது.”
இரவு
துஞ்சும் இருவிழி என் நஞ்சும் ---
இரவில்
துயில்கின்ற இரு கண்கள் நஞ்சைப் போன்றது. நஞ்சு உண்டாரைக் கொல்வது. இக்கண்கள்
கண்டாரைக் கொல்வது.
“மகளிர்க்கெல்லாம்
நஞ்செனத் தகையவாகி நளிரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சமொத்தலர்ந்த செய்யகண்ண” என்று
இராமருடைய கண்களை அநுமன் கூறுவதனாலும் அறிக.
முகமீதே
இசைமுரல் கரும்பு ---
வண்டுகள்
இப்பெண்மணியின் முகத்தைத் தாமரை யென்று கருதி வந்து இசையுடன் ஒலி செய்கின்றன.
இள
முலை அரும்பு ---
இவளுடைய
முற்றாத இளந்தனங்கள் தாமரையின் அரும்புபோல் அழகு செய்கின்றன.
இலகிய
கரும்பு ---
அழகிய
கரும்பு-இங்கே இது உவமை ஆகுபெயராகத் தோள்களைக் குறிக்கின்றன. அல்லது கரும்பு போன்ற
என் செல்வ மகள் என்று கூறினும் அமையும்.
மயலாலே
நிலவிலுடல் வெந்து கரிய ---
முருகவேளாகிய
தலைவன் மீது கொண்ட மையலால் குளிர்ந்த அமுத மயமான தண்ணிலவைப் பொழியும் சந்திரன்
வெம்மையாகக் காட்சி தருவான். அவனுடைய சீதள ஒளி அக்கினியின் வெப்பம் போல் சூடாக
வெதும்பி உடம்பைக் கருக்குகின்றது.
அலமந்து
நெகிழும் உயிர் நொந்து ---
தலைவன்
மீது கொண்ட காதலால் துன்புற்று உயிர் நீராய் நெகிழ்ந்து உருகுகின்றது.
மதவேளால்
நிலையழியும் நெஞ்சில் அவர் குடிபுகுந்து ---
மன்மதன்
மலர்க்கணைகளைப் பொழிய, அதனால் என் மகள் தன்
நிலைமை யழிந்தாள். அவளுடைய நெஞ்சில் தலைவனாகிய நீ புகுந்தனை; அவர்-என்பது முருகனை.
நினைவொடும்
இறந்து படல் ஆமோ ---
“தனது இன்பம்
முற்றாமல் கணவனுடைய நினைவுடன் இவள் உயிர் துறக்கலாமோ! அவ்வண்ணம் இறத்தல்
முறையாகாது; முருகா! ஆகவே என்
மகள் இறக்குமுன் நீ வந்து இவளைத் தழுவியாட் கொள்ள வேண்டும்” என்று தாய் தலைவனாகிய
பழநியப்பனிடம் முறையிடுகின்றாள்.
புலவினை
அளைந்து
---
பெருமானுடைய
வேலாயுதம் மாற்றாருடைய உடம்பைப் பிளந்து மாய்த்தலால், அந்த நிணம் அவ்வேலில் அளைந்துளது.
படுமணி
கலந்து ---
வேலாயுதத்தின்
கழுத்தில் வீரமணி ஒலிக்கின்றது. வெற்றி நாதத்தை இது உணர்த்துகின்றது.
புதுமலர்
அணிந்த கதிர் வேலா ---
ஞான
மயமானது, சிவவொளியால் மலர்ந்த
இதய தாமரையில் விளங்குவது ஆதலின்,
அந்த
இதய தாமரையாகிய புதிய மலரை அணிகின்றது என்கிறார்.
பலநிறம்
மிடைந்த விழுசிறை அலர்ந்த பருமயில் ---
மயிலின்
உடம்பில் உள்ள கலாபம்-சிறகுகள்;
இவற்றில்
அநேக வர்ணங்கள் பளிச்சிட்டு ஒளிரும். விழு-விழுப்பம் (உயர்வு.)
பணைபணி
சிறந்த தரளமணி சிந்து பழநி ---
மூங்கில்கள்
உயர்ந்த முத்துக்களை உதிர்க்கின்றன,
நல்ல
முதிர்ந்த மூங்கிலில் முத்து பிறக்கும். இத்தகைய வளமையுடன் கூடியது பழநி மலை.
கருத்துரை
வேலவரே!
பழநியாண்டவரே! என் புதல்வியை ஆண்டருள்.
No comments:
Post a Comment