அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இலகிய களப (பழநி)
பொதுமாதர் ஆசை அற
தனதன
தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தனதான
இலகிய
களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ......
யிதமாகக்
கலவியி
லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே
சிலைதரு
குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி
திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா
கொலைபுரி
யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி லென்று மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
இலகிய
களப சுகந்த வாடையின்,
ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியெ,
இலைசுருள் பிளவை அருந்தியே, அதை ...... இதமாகக்
கலவியில்
அவரவர் தங்கள் வாய்தனில்
இடுபவர், பலபல சிந்தை மாதர்கள்,
கசனையை விடுவதும் எந்த நாள்?அது ...... பகர்வாயே.
சிலைதரு
குறவர் மடந்தை நாயகி,
தினைவனம் அதனில் உகந்த நாயகி,
திரள்தனம் அதனில் அணைந்த நாயக! ......
சிவலோகா!
கொலைபுரி
அசுரர் குலங்கள் மாளவெ,
அயில் அயில் அதனை உகந்த நாயக!
குருபர! பழநியில் என்றும் மேவிய ......
பெருமாளே.
பதவுரை
சிலைதரு குறவர் மடந்தை நாயகி --- மலை
தந்த குறவர் மகளாகிய நாயகியும்,
தினைவனம் அதனில் உகந்த நாயகி --- தினைப்
புனத்தில் விரும்பியிருந்த நாயகியும் ஆகிய வள்ளி பிராட்டியின்,
திரள் தனம் அதனில் அணைந்த நாயக --- திரண்ட
தனபாரத்தில் அணைந்த நாயகரே!
சிவலோக --- சிவலோக நாயகரே!
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ ---
கொலைத் தொழிலே புரிகின்ற அசுரர்களுடைய குலங்கள் மாளுமாறு,
அயில் அயில் அதனை உகந்த நாயக --- கூரிய
வேலாயுதத்தை மகிழ்ந்து தரித்த நாயகரே!
குரு பர --- மேலான குருமூர்த்தியே!
பழநியில் என்றும் மேவிய ---
பழநியம்பதியில் எந்நாளும் விரும்பி வீற்றிருக்கும்,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
இலகிய களப சுகந்த வாடையின் --- விளங்குகின்ற
கலவைகளின் நறுமணம் வீச,
ம்ருக மதம் அதனை மகிழ்ந்து பூசியே ---
கஸ்தூரியை மகிழ்ச்சியுடன் பூசியும்,
இலை சுருள் பிளவை அருந்தியே --- வெற்றிலைச்
சுருளையும் பாக்கின் பிளவையும் உண்டு,
அதை இதம் ஆக --- அதனை இன்பமான பேச்சுடன்,
கலவியில் அவர் அவர் வாய்தனில் இடுபவர் ---
புணர்கின்ற பொழுது அவ்வாடவர்களது வாயில் தருகின்றவரும்,
பலபல சிந்தை மாதர்கள் --- பல்வேறு நினைவுகளை
உடையவருமாகிய பொதுமாதர்களின்,
கசனையை விடுவதும் எந்த நாள் --- பற்றினை
விடுகின்ற நாள் எது?
அது பகர்வாயே --- அதனை அடியேனுக்குக்
கூறியருள்வீர்.
பொழிப்புரை
வள்ளிமலையில் தோன்றிய குறமகளாம்
நாயகியும், தினைப் புனத்தில்
விரும்பியிருந்த நாயகியும், ஆகிய
வள்ளியம்மையாருடைய திரண்ட தனங்களைத் தழுவிய தலைவரே!
சிவ லோகத்துக்குத் தலைவரே!
கொலையே புரிகின்ற அசுரர்களின் குலங்கள்
அழியுமாறு கூறிய வேலைத் தரித்த தலைவரே!
மேலான குரு நாதரே!
பழனாபுரியில் என்றும் விரும்பி
வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!
விளங்கும் கலவைச் சாந்தின் நறுமணம் வீச, கஸ்தூரியை மகிழ்ச்சியுடன் பூசியும், வெற்றிலை சுருளைப் பிளந்த பாக்குடன்
தின்று, இனிய மொழியுடன்
புணர்கின்ற போது அதனை ஆடவர்களது வாயில் இடுகின்றவர்களும், பல்வேறு எண்ணங்களை உடையவருமாகிய பொது
மகளிரின் பற்றினை அடியேன் விடுகின்ற நாள் எது என்பதனைக் கூறியருளும்.
விரிவுரை
இலகிய
களப சுகந்த வாடை ---
பொதுமாதர்
தம்பால் வரும் ஆடவர் மகிழுமாறு,
நாறுகின்ற
தம் உடம்பில் நல்ல நறுமணம் மிகுந்த சந்தனக் கலவைகளைப் பூசிக்கொண்டிருப்பர்.
ம்ருகமத
மதனை மகிழ்ந்து பூசியெ ---
ம்ருகம்-மான்
மதம்-அதன் மதமாகிய கஸ்தூரி. வாசனையில் உயர்ந்தது கஸ்தூரி. விலையுயர்ந்த கஸ்தூரியை
அம்மகளிர் மகிழ்ச்சியுடன் பூசிக்கொள்வர்.
இலை
சுருள் பிளவை அருந்து ---
கண்ணுக்கு
அழகாக மையும், வாய்க்கு அழகாகத்
தாம்பூலமும் தரிப்பர். இலைச்சுருள்-வெற்றிலைச்சுருள்; பிளவை-பிளந்த பாக்கு.
அதை
இதமாக...வாய்தனில் இடுபவர் ---
பொதுமகளிர், வாசனைத் தாம்பூலத்தை மென்று, இன்னுரை கூறி, அதனைத் தம்மை விரும்பித் தழுவும் ஆடவரது
வாயினில் உமிழ்வர்.
“ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர்” --- (பழிப்பர்)
திருப்புகழ்
பலபல
சிந்தை மாதர்கள் ---
தம்பால்
வந்த ஆடவர்களின் உடமை எவ்வளவு? இவர்கள்பால் பொருள்
பறிக்கின்ற வழிவகைகள் எவை? இவரினும் மேலான
தனவந்தர் யார்? அவர்களை
வசப்படுத்துவது எப்படி? என்பனவாதி வேறு வேறு
எண்ணங்களை உடையவர்கள். சொல் வேறு எண்ணம் வேறாய் நிற்பர். அதனால் திருவள்ளுவர்
இருமனப் பெண்டிர் என்றனர்.
கசனையை
விடுவது எந்த நாள்? அது பகர்வாயே ---
யாழ்பாணத்துக்
கப்பலில் செல்பவர்க்கு இந்தியாவின் கரை தெரிகின்றவரை இலங்கையின் கரை தெரியாது; இலங்கையின் கரை தெரிந்தால் இந்தியாவின்
கரை தெரியாது. அதுபோல் உலக நினைவு உள்ளவரை கடவுள் தெரியாது. கடவுளின் காட்சி
தெரிந்தால் உலகம் தெரியாது.
பரத்தைப்
பார்ப்பவர் பாரினைப் பாரார். பாரினைப் பார்ப்பவர் பரத்தைப் பாரார். பார் மறைந்தால்
பரம் தெரியும்.
மரத்தை
மறைத்தது மாமத யானை
மரத்தில்
மறைந்தது மாமத யானை
பரத்தை
மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில்
மறைந்தது பார்முதல் பூதமே ---
திருமந்திரம்.
எனவே
உலக மயக்கமாகிய பற்றினை அகற்ற நாள் எது என்று இறைவனைக் கேட்கின்றார் அருணைநாதர்.
சிலைதரு
குறவர் மடந்தை நாயகி ---
சிலை-கல்லின்
தொடர்புள்ள மலை. வள்ளி பிராட்டி வள்ளிமலையில் பிறந்தார். அதனால் ழுசிலைதருழு
என்றனர்.
இப்பிராட்டி
பெருமை மிகுந்த திருமாலின் திருப்புதல்வி. மூவர் தேவாதிகள் தம்பிரானுடைய
திருப்பத்தினி, குறவர்கள் தம்
புதல்வியாக நினைத்து வளர்த்தார்கள். ஆதலின் அக்குறவர் புரிந்த தவத்தை யாரே
அளக்கவல்லார்.
மூவா
முகுந்தன் முதல்நாள் பெறும் அமுதைத்
தேவாதி
தேவன் திருமைந்தன் தேவிதனை
மாவாழ்
சுரத்தில்தம் மாமகளாய் போற்றுகையால்
ஆவா
குறவர்தம் ஆர் அளக்க வல்லாரே. --- கந்தபுராணம்
தினைவனம்
அதனில் உகந்த நாயகி ---
தினைவனம்
என்பது தூய ஆன்மா விளைவிக்கும் ஞானப்பயிர். இதன் விவரங்களை கந்தபுராணக் கவியமுதம்
என்ற நூலில் விரிவாக எழுதி யிருக்கிறேன். அதனிற் காண்க. “தினைவனங் கிளி
காத்த சவுந்தரி” என்று பிறிதொரு திருப்புகழிலும் அழகாகக் கூறுகின்றனர்.
கொலைபுரி
அசுரர்கள் குலங்கள் மாளவெ ---
அசுரர்கள்
உயிர்க்கொலை புரிவதையே தொழிலாகக் கொண்டவர்கள். அதனாலேயே முருகவேள் அவர்களது
குலத்தை அடியுடன் அழித்தருளினார்.
இதனை
கீழ்வரும் பாடலால் அறிக.
பாரினை அழைத்துப் பல்லுயிர் தமக்கும்
பருவரல் செய்து, விண்ணவர் தம்
ஊரினை முருக்கி, தீமையே இயற்றி,
உலப்புறா வன்மை கொண்டு உற்ற
சூரனை, அவுணர் குழுவொடும் தடிந்து,
சுருதியின் நெறிநிறீஇ மகவான்
பேரரசு
அளித்து, சுரர்துயர் அகற்றிப்
பெயர்தி என்றனன் எந்தைபெருமான்.
அயிலயில்
தனையுகந்த நாயக ---
அயில்-கூர்மை.
அயில்-வேல்.
பழநியில்
என்று மேவிய
---
ஞான
பூமியாகிய பழநியில் ஞான பண்டிதன் என்றும் அகலாது உரைகின்றான்.
கருத்துரை
வள்ளி
மணவாளா! பழநி முருகா! மாதராசை அற அருள்வாய்.
No comments:
Post a Comment