அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருகனக மாமேரு (பழநி)
பிறவித் துயர் கெட
தனதனன
தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த ...... தனதான
இருகனக
மாமேரு வோகளப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்ப
மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ
இலகுமல
ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல்
பெருகியொரு
காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப்
பிணியினக
மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ
கருணையுமை
மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த
கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ......
யருள்பாலா
கருடனுடன்
வீறான கேதனம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே
பரவையிடை
யேபாத காசுரர்வி ழுந்து
கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா
பலமலர்க
ளேதூவி யாரணந வின்று
பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருகனக
மாமேருவோ? களப துங்க
கட கடின பாடீர வார அமுத கும்பம்
இணைசொல் இள நீரோ? கர அசல இரண்டு .....குவடேயோ?
இலகு
மலரே வாளி ஆகிய அநங்கன்
அணி மகுடமோதான்? எனா மிக வளர்ந்த
இளமுலை மினார் மோக மாயையில் விழுந்து
...... தணியாமல்,
பெருகி
ஒரு காசே கொடாதவரை ஐந்து
தருவை நிகரே ஆகவே, எதிர் புகழ்ந்து,
பெரிய தமிழே பாடி, நாள்தொறும் இரந்து ......நிலைகாணாப்
பிணியின்
அகமே ஆன பாழ் உடலை நம்பி,
உயிரை அவமாய் நாடியே, பவ நிரம்பு
பிறவி தனிலே போக, மீளவும் உழன்று ...... திரிவேனோ?
கருணை
உமை, மாதேவி, காரணி, அநந்த
சயன களி கூர் அரி சோதரி, புரந்த
கடவுளுடன் வாதாடு காளி, மலை மங்கை ...... அருள்பாலா!
கருடன்
எடன் வீறான கேதனம் விளங்கு
மதிலினொடு, மாமாட மேடைகள் துலங்கு
கலிசை வரு காவேரி சேவகனொடு அன்பு ......புரிவோனே!
பரவை
இடையே பாதம அசுரர் விழுந்து
கதறி இடவே, பாகசாதனனும் நெஞ்சு
பலிதம் எனவே ஏகவே, மயிலில் வந்த ...... குமரேசா!
பலமலர்களே
தூவி, ஆரணம் நவின்று,
பரவி, இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து
பழநிமலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு ...... பெருமாளே.
பதவுரை
கருணை உமை --- கருணை நிறைந்த
உமாமகேசுவரியும்,
மாதேவி --- பெருமை மிகுந்த தேவியும்,
காரணி --- எல்லாவற்றுக்கும் காரணமானவரும்,
அநந்த சயன களிகூர் --- ஆதிசேடன் மீது
மகிழ்ச்சியுடன் அறிதுயில் புரியும்,
அரி சோதரி --- திருமாலின் சகோதரியானவரும்,
புரந்த கடவுளுடன் வாது ஆடு காளி --- எல்லா
உலகங்களையும் காத்தருளிய சிவபிரானுடன் நடனத்தில் வாது செய்த குமாரியாகத்
தோன்றியவரும் ஆகிய பார்வதியம்மையார்,
அருள் பாலா --- பெற்றருளிய திருக்குமாரரே!
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கும் ---
கருடனோடு போட்டியிடுவது போல் உயரத்தில் பறக்கும் கொடிகள் திகழும்,
மதிலினொடு --- திருமதில்களோடு,
மா மாட மேடைகள் துலங்கு --- பெரிய மாடங்களும்
மேடைகளும் விளங்குகின்ற,
கலிசை வரு --- கலிசை என்ற நகரில் தோன்றிய,
காவேரி சேவகனொடு --- காவேரி சேவகன் என்ற
மன்னனிடத்தில்,
அன்பு புரிவோனே --- அன்பு செய்பவரே!
பரவை இடை --- கடலின் நடுவில்,
பாதக அசுரர் விழுந்து கதறியிட --- பாவிகளான அசுரர்கள்
விழுந்து அலறவும்,
பாக சாதனனும் --- தேவேந்திரனும்,
நெஞ்சு பலிதம் எனவே ஏக --- தனது உள்ளத்தின்
எண்ணம் பலித்ததென்று தன்னகருக்குக் குடியேறவும்,
மயிலில் வந்த --- மயிலின் மீது எழுந்தருளி
வந்த,
குமரேசா --- குமாரக் கடவுளே!
பல மலர்களே தூவி --- பலவிதமான மலர்களைச்
சொரிந்து,
ஆரணம் நவின்று --- வேதங்களை ஓதி,
பரவி இமையோர் சூழ --- துதி செய்து தேவர்கள்
சூழ,
நாள்தோறும் இசைந்து --- தினமும் இடையறாது
மகிழ்ந்து,
பழநி மலை மீது --- பழநி மலையின்மேல்,
ஓர் பராபரன் இறைஞ்சு --- ஒப்பற்ற சிவபெருமான்
வணங்குகின்ற,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
இரு கனக மா மேருவோ --- இரண்டு பொன் மயமான
பெரிய மேரு மலையோ?
களப துங்க --- கலவைச் சந்தனமணிந்த
பரிசுத்தமானதும்,
கடி கடின --- வாசனையொடு கெட்டியானதும்,
பாடீர --- பச்சைக் கற்பூரம் அணிந்ததும்,
வார் அமுத கும்பம் --- கச்சு அணிந்ததும் ஆகிய
அமித கலசமோ?
இணை சொல் இளநீரோ --- சமானமென்று கூறப்படும்
இளநீரோ?
கர அசல இரண்டு குவடேயோ --- யானை போன்ற இரண்டு
குன்றுகளோ?
இலகு மலரே வாளியாகிய அநங்கன் --- சிறந்த
மலர்களையே கணைகளாகக் கொண்ட மன்மதனுடைய,
அணை மகுடமோ தான் --- அழகிய முடிதானோ?
என மிக வளர்ந்த --- என்று கூறும்படி மிகவும்
வளர்ந்துள்ள,
இள முலை --- இளமையான முலைகளையுடைய,
மினார் மோக மாயையில் விழுந்து --- பொது
மாதர்களின் ஆசையாகிய மாயையில் விழுந்து,
தணியாமல் --- அம்மோகங் குறையாமல்,
பெருகி --- பெருக்கமுற்று,
ஒரு காசே கொடாதவரை --- ஒரு காசு கூடக்
கொடுக்காத உலோபிகளை,
ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து ---
கற்பக முதலிய பஞ்ச தருக்களை நிகராவீர்கள் என்று எதிரில் புகழ்ந்து,
பெரிய தமிழே பாடி --- பெரிய தமிழ் பாடல்களைப்
பாடி,
நாள்தோறும் இரந்து --- தினமும் யாசித்து,
நிலைகாணா பிணியின் அகமே ஆன --- நிலை காண
முடியாத நோய்க்கு உள்ளான,
பாழ் உடலை நம்பி --- பாழான இவ்வுடலை நம்பி,
உயிரை அவமாய் நாடியே --- உயிரைப் பயனிலதாய்
செய்து,
பவம் நிரம்பு --- பாவ வினை நிரம்பியுள்ள,
பிறவிதனிலே போக --- பிறவியல் சேரும்படி,
மீளவும் உழன்று --- மறுபடியும் மறுபடியும்
அலைந்து,
திரிவேனோ --- அடியேன் திரியக் கடவேனோ?
பொழிப்புரை
கருணை மிகுந்த உமையம்மையாரும், பெரிய தேவியும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவரும், ஆதிசேடன் மீது மகிழ்ச்சியுடன் அறிதுயில்
புரிகின்ற அச்சுதரது சகோதரியாரும்,
உலகங்களைக்
காத்தருளிய சிவபெருமானுடன் நடனத்தில் வாதாடிய காளியாக வந்தவரும், மலை மன்னனுடைய புதல்வியாரும் ஆகிய
பார்வதியார் பெற்ற பாலகரே!
கருடனுடன் போட்டி டிடுவது போல்
உயரத்தில் பறக்கும் கொடிகளுடன் விளங்கும் திருமதில்களும் பெரிய மாடங்களும்
மேடைகளும் விளங்குகின்ற கலிசை என்ற நகரில் அவதரித்த காவேரி சேவகரிடம் அன்பு
செய்பவரே!
கடலின் நடுவில் வீழ்ந்து அசுரர்கள்
கதறவும், இந்திரன் தனது நினைவு
பலித்ததென்று மகிழ்ந்து தன் நகரில் குடியேறவும், மயிலின் மீது எழுந்தருளி வந்த குமாரக்
கடவுளே!
பலவகையான மலர்களைச் சொரிந்து, வேத மந்திரங்களைக் கூறி, தேவர்கள் சூழவும், எப்போதும் உள்ளம் உவந்து பழநி மலையின்
மேல் ஒப்பற்ற சிவமூர்த்தி வணங்கும்படியும் எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!
பொன்மயமான இரண்டு பெரிய மேரு மலைகளோ? சந்தனக் கலவை அணிந்த தூய்மையானதும், வாசனை உடையதும் கெட்டியானதும் பச்சைக்
கற்பூரம் அணிந்ததும் கச்சுடன் கூடியதுமாகிய அமுத கலசமோ? நிகர் என்று கூறும் இளநீரோ? யானை போன்ற இரு குன்றங்களோ? சிறந்த மலர்க்கணைகளை உடைய மன்மதனுடைய
அழகிய மகுடமோ? என்று கூறுமாறு
மிகவும் வளர்ந்துள்ள இளந்தனங்களை உடைய மின்னலைப் போன்ற விலைமாதருடைய மோகமாகிய
மாயையில் விழுந்து, அம் மயக்கம் குறையாது
பெருக்கெடுத்து, ஒரு காசும் தராத
உலோபியரை ஐந்து தேவ தருக்கள் என்று புகழ்ந்து, பெரிய தமிழ்க் கவிகளைப் பாடித்
தினந்தோறும் பொருள் யாசித்து, நிலையில்லாத
நோய்களுக்கு உள்ளான பாழான உடம்பை நம்பி உயிரைப் பயனற்றதாகச் செய்து, வினை நிரம்பிய பிறவியிலேயே செல்லுமாறு
மிகவும் அலைந்து அடியேன் திரியக் கடவேனோ?
விரிவுரை
இருகனக
மாமேருவோ ---
காமுகர்கள்
தாம் விரும்பிய மகளிரது வெறும் தசை திரட்சியாகிய தனங்களை மிகப்பெரிய குவியலாக
நினைத்து, மதிமயங்கித்
தியங்குவர். கட்டையை கள்வன் என்றும், இப்பியை
வெள்ளி என்றும், கயிற்றைப் பாம்பு என்றும், ஒளியும் இருளும் கூடிய நேரத்தில், ஒன்றை ஒன்றாகத் திரிபாக உணர்வது போல்
சிறிது அறிவும் அறியாமையும் கூடிய மக்கள், துன்பத்தை இன்பமாக நினைத்து நெஞ்சும்
புண்ணாவார்கள்.
இவ்வண்ணம்
மயக்க உணர்வால் மாமிசத்தின் பகுதியைப் பொன்மேரு மலையோ? அமுத கலசமோ? மன்மதன் மகுடமோ? சந்தனக் குன்றமோ? என்று எல்லாம் உயர்வாக உன்னி
இடர்ப்படுவார்கள் என்று அருணகிரிப் பெருமான் கூறுகின்றார்.
ஆறு
வரிகள் அந்த வகையில் அவர்களது மாறுபட்ட மயக்க அறிவின் விபரீதத்தை விளக்குகின்றன.
கானகத்தில் கானலை நீரெனக் கருதி மான் ஓடியோடி வாடுவது போல் எனவுணர்க.
ஒருகாசே
கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர்புகழ்ந்து பெரிய தமிழேபாடி நாள் தொறும் இரந்து
நிலைகாணா ---
உலகிலே
குணக் கேடுகள் பல. அவற்றுள் தலையாய தீக்குணம் உலோபம் ஒன்றே. அநேக குணங்களை
யெல்லாம் உலோபம் என்ற ஒன்று அழித்துவிடும்.
“உளப்பரும் பிணிப்புறா
உலோபம் ஒன்றுமே
அளப்பருங்
குணங்களை அழிக்கும்”
என்று
கம்பநாடார் கூறுகின்றார். ஓர் அண்டா நிறையவுள்ள பாலினை ஒரு துளி நஞ்சு
அழித்துவிடுவது போல் என உணர்க.
மரம்
நிழல் தருகின்றது. கருங்கல் கோயில்,
வீடு
முதலியவை கட்ட உதவுகின்றது. துணி தோய்க்கப் பயன்படுகின்றது. இடிந்த சுவர், மறைவுக்கு ஆகின்றது. உடைந்த கண்ணாடித்
துண்டு, சுவருக்கு மேல்
வைக்கப்பட்டு கள்ளனைத் தடுக்கின்றது. உடைந்த பானை, வறுக்க உதவுகின்றது. கிழிந்த கந்தல், விளக்குத் துடைக்கத் துணை புரிகின்றது.
விளக்குமாறு கூட்டுகின்றது. சாணம் உரத்துக்காகின்றது. நாய் வேட்டையாடுகின்றது.
கழுதை பொதி சுமக்கும். இப்படி இழிந்தவைகள் யாவும் பயன்படுகின்றன, உலோபி ஒன்றுக்கும் பயன்படமாட்டான்.
பொருளைத்
திரட்டி வைத்துப் பூதம்போல் காத்துக் கொண்டிருப்பான். அவனும் உண்ணான், உண்ணுகின்றவரையும் உண்ணவிடான்.
பதினாயிரம் ஆண்டுகள் வாழப்போவதாக நினைத்துப் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு உடன்
கொண்டுபோக வேண்டும் என்று எண்ணி,
மூடனான
உலோபி வறிதே பழி பாவம் இரண்டுக்கும் ஆளாகிறான். அந்தோ பாவம்! பாவம்! பரிதாபப்
படவேண்டியவன் அவன். வைக்கோல் போரைக் காத்த நாய்போல் இருப்பான். வைக்கோலை நாயும்
தின்னாது, தின்ன வரும்
பசுவையும் தின்னவிடாது குலைக்கும். என்னே அறியாமை!
ஈத்து
உவக்கும் இன்பத்தை அறியாது மடிவன். உலோபியிடம் உள்ள பணமும், கைம்பெண்ணின் அழகும்
ஒன்றுதான். இந்த இரண்டும் யாருக்குப் பயன்? ஆதலால் உலோப குணம் மிக மிக
வெறுக்கத்தக்கது. தன்னைப் புகழ்ந்து பாடும் புலவனுக்கு ஒரு காசுங் கொடாது
விரட்டியடிப்பன்.
இத்தகைய
பரம மூடனாகிய உலோபியைப் பாடுகின்றவன் அவனினும் மூடனாகின்றான். காமதேனுவின் பாலைக்
கமரில் சிந்துவதுபோல் நல்ல தமிழைக் கொண்டு பொல்லாதவனைப் பாடித் திரிவர் பலர்.
தேவ
தருக்கள் ஐந்து ---
கற்பகம், பாரிஜாதம், அரிசந்தனம், மந்தாரம், சந்தானம் என்பவை. இவை நினைத்தவற்றைத்
தரும் உயர்ந்த பண்புடையவை. பாடினாலுங்கூட ஒரு சல்லியுந் தராத உலோபிகளிடம் போய்
கால் தேய “நீ தேவதரு; சிந்தாமணி” என்று
இனிய செந்தமிழால் புகழ்ந்து பாடிப் பல புலவர்கள் துதி செய்து மதியிழப்பர்.
இத்தன்மையை
சுவாமிகள் இப்பாடலில் கண்டிக்கின்றார்.
பிணியின்
அகமே ஆன பாழ் உடலை நம்பி ---
இந்த
புன்புலால் உடம்பு புழுக்கூடு. மலபாண்டம், நோய்க்கு உறைவிடம். இந்த உடம்பை
வச்சிரத்தூண் என்று நம்பியிருப்பது பேதைமை.
“நில்லா தவற்றை
நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை”
என்று
கூறுகின்றார் திருவள்ளுவ தேவர்.
“அநித்தமான ஊன்நாளும்
இருப்பதாகவே” என்று உபதேசிக்கின்றார் அருணையடிகள் மற்றொரு திருப்புகழில்.
பிறப்பாகிய
பெருந்துன்பத்தை ஒழிப்பதற்கு ஐந்து சாதனங்களைக் கூறுகின்றார் திருஞான சம்பந்தர்.
1. தன்னுடைய பெருமை நினையாமை,
2. தான் என்று எண்ணாதிருத்தல்,
3. பிறரிடம் யாசிக்காதிருத்தல்,
4. இப்புலால் உடம்பைப் பழித்தல்,
5.
சிவத்துடன்
ஒன்றி நிற்றல்.
தன்
பெருமை எண்ணாமை தற்போத மேயிறத்தல்
மின்பெருமை
யாசகத்தை வேண்டாமை -தன்பாழ்
உடலைத்
தினம் பழித்தல் ஓங்குசிவத்தொன்றல்
நடலைப்
பிறப்பொழியு நாள். ---
சிவபோக சாரம்.
ஆதலால்
அநித்தமான ஊனுடம்பை நித்தம் என நித்தம் நினைந்து, இந்த உடம்புக்கே இரைதேடி இதனையே நன்கு
அலங்கரித்து மாந்தர் மாள்கின்றார்கள்.
“ஆக்கைக்கே இரைதேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே” --- அப்பர்
இந்த
உடம்பு அசுத்தமானது. அருவருப்பானது. முடிவில் நாய்க்கும் நரிக்கும் பேய்க்கும்
ஈக்கும், தீய்க்குமாகிக்
கழிவது;
இப்புலால்
உடம்பின் இழிவை அநுபவ ஞானியாகிய தாயுமானப் பெருந்தகையார் கூறுமாறு காண்க.
காக
மோடுகழு கலகை நாய்நரிகள்
சுற்று சோறிடு துருத்தியைக்
காலி
ரண்டுநவ வாசல் பெற்றுவளர்
காமவேள் நடன சாலையை
மோக
ஆசைமுறி யிட்ட பெட்டியைமும்
மலமி குந்தொழுகு கேணியை
மொய்த்து
வெங்கிருமி தத்து கும்பியை
முடங்க லார்கிடை சரக்கினை
மாக
இந்த்ரதனு மின்னை யொத்திலக
வேதம் ஓதிய குலாலனார்
வனைய
வெய்யதடி கார னானயமன்
வந்தடிக்கு மொரு மட்கலத்
தேக
மானபொயை மெய்யெனக் கருதி
ஐய வையமிசை வாடவோ
தெரிவ
தற்கரிய பிரமமே அமல
சிற் சுகோதய விலாசமே
ஆதலால்
சுவாமிகள் “பாழுடலை நம்பி” என்றனர்.
உயிரை
அவமாய் நாடி
---
அருமையான
உயிரை நற்கதிக்கு ஆளாக்காமல் அவமாக்கி அலைவர். எனவே உயிரை அவமாக்காமல்
சிவமாக்கவேணும்.
பிறவிதனிலே
போக மீளவும் உழன்று திரிவேனோ ---
உடம்பு
வினையினால் விளைந்தது. உடம்பெடுத்த நாம் பற்பல வினைகளைச் செய்து அவ்வினையினால் மீள
மீள உடம்பையே எடுத்து உழல்கின்றோம். பிறப்பொழிய வேண்டுமானால் வினையொழிய வேண்டும்.
தீவினை செய்தல் கூடாது. பயன் கருதாது கடமை உணர்ச்சியுடன் நல்வினை புரிதல்
வேண்டும்.
கருணை
உமை
---
அம்பிகை
கருணையே வடிவானவர். அருட்பெருஞ்சோதி சிவம். தனிப்பெருங் கருணை உமை.
மாதேவி ---
தேவி-ஒளிமயமானவர்.
"தேவி
உற்று ஒளிர்தரு திருஉருவுடன் எனது
ஆவியில்
கலந்துஒளிர் அருட்பெருஞ்சோதி" ---
திருவருட்பா.
காரணி ---
சகல
வுலகங்கட்கும் ஐம்பெருந் தொழில்கட்கும் எல்லாக் காரியங்கட்கும் காரணமாக
விளங்குபவர் பார்வதி தேவியார்.
புரந்த
கடவுள்
---
எல்லா
வுலகங்களையும் காத்தவர். இனி, புரந்த என்ற சொல்லை
புராந்தக என்று கூறினும் அமையும்.
காவேரி
சேவகனொடு அன்பு புரிவோனே ---
கலிசை
யென்ற திருநகரில் அரசனாக விளங்கியவர் காவேரி சேவகன் என்பவர். இவர் பெரிய
முருகனடியார். இத்திருவாளரை அருணகிரிநாதர் பல திருப்புகழ்ப் பாடல்களில் பாராட்டியுள்ளார்.
அதனால் அவர் மிகப் பெரிய பண்புடையவர் எனக் தெரிகின்றது.
கருத்துரை
பார்வதி
பாலரே! பழநியாண்டவரே! பிறவித் துயர் கெட அருள் புரிவீர்.
No comments:
Post a Comment