பழநி - 0117. இருசெப்பு என





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இரு செப்பென (பழநி)

தவ நிலையைத் தந்து அருள


தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
     திளகிப் புளகித் ...... திடுமாதர்

இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
     றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத்

தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
     தழுவிக் கடிசுற் ...... றணைமீதே

சருவிச் சருவிக் குனகித் தனகித்
     தவமற் றுழலக் ...... கடவேனோ

அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
     குரியத் திருமைத் ...... துனவேளே

அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
     றசுரக் கிளையைப் ...... பொருவோனே

பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
     பயனுற் றறியப் ...... பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருசெப்பு என, வெற்பு என, வட்டமும் ஒத்து,
     இளகிப் புளகித் ...... திடுமாதர்,

இடையைச் சுமையைப் பெறுதற்கு உறவு உற்றுர
     இறுகக் குறுகிக் ...... குழல்சோரத்

தரு, மெய்ச் சுவை உற்ற இதழைப் பருகித்
     தழுவி, கடி சுற்று ...... அணைமீதே,

சருவிச் சருவிக் குனகித் தனகித்
     தவம் அற்று உழலக் ...... கடவேனோ?

அரி புத்திர! சித்தஜனுக்கு அருமைக்கு
     உரியத் திரு மைத் ...... துனவேளே!

அடல் குக்குட நல் கொடி பெற்று, திர் உற்ற
     அசுரக் கிளையைப் ...... பொருவோனே!

பரிவு உற்று அரனுக்கு அருள்நல் பொருளைப்
     பயன் உற்று அறியப் ...... பகர்வோனே!

பவனப் புவனச் செறிவுற்று உயர்மெய்ப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.

பதவுரை

      அரி புத்திர --- திருமாலின் மகனும்,

     சித்தஜனுக்கு --- சித்தத்தில் பிறந்தவனும் ஆகிய மதனனுக்கு,

     அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே --- அருமையான அழகிய மைத்துனராகிய வேளே!

        அடல் குக்குட நல்கொடி பெற்று --- ஆண்மையுள்ள கோழியின் நல்ல கொடியைத் தாங்கி,

     எதிர் உற்ற அசுர கிளையை பொருவோனே --- எதிர்த்து வந்த அசுரர் கூட்டங்களுடன் போர் புரிந்தவரே!

       பரிவு உற்று --- அன்பு பூண்டு,

     அரனுக்கு --- சிவமூர்த்திக்கு,

     அருளால் பொருளை --- அருள் பாலிக்கும் நல்ல பொருளை,

     பயன் உற்று அறிய --- அதன் பயனை உணர்ந்து அறியும் வகையில்,

     பகர்வோனே --- உபதேசித்தவரே!

      பவன புவன செறிவு உற்று உயர் --- வாயு மண்டலம் வரையும் நிறைந்து உயர்ந்த,

     மெய் பழநி குமர --- மெய்ம்மை விளங்கும் பழநியில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!

     பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!

      இரு செப்பு என --- இரண்டு செப்புக் குடங்கள் போலவும்,

     வெற்பு என --- மலைகள் போன்றும்,

     வட்டமும் ஒத்து --- வட்ட வடிவுடன் விளங்கி,

     இளகி புளகித்திடும் --- இளகியும் பூரித்தும் உள்ள,

     மாதர் இடைச் சுமையை பெறுதற்கு --- பெண்களுடைய இடைக்கு அழகிய சுமையாயுள்ள தனங்களைப் பெறும் பொருட்டு,

     உறவு உற்று --- அம்மாதர்களின் நட்பு கொண்டு

     இறுக குறுகி --- நெருங்கி அணுகி,

     குழல் சோர --- அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ,

     தரு மெய் சுவை உற்று --- அவர்கள் தருகின்ற உடம்பின் இன்பத்தை அடைந்து,

     இதழை பருகி --- இதழின்பத்தை அனுபவித்து,

     தழுவி --- அவர்களை அணைத்து,

     கடி சுற்று அணைமீதே --- வாசனை யுலவுகின்ற சயனத்தின் மீது,

     சருவி சருவி --- சரச வார்த்தைகள் கூறி சரசச் செயல் செய்து

     குனகி தனகி --- கொஞ்சியும் சிணுங்கியும் பேசி,

     தவம் அற்று உழலக் கடவேனோ --- தவ நிலையை விட்டு வீணே திரியக் கடவேனோ?


பொழிப்புரை


         திருமாலின் மகனாக, அவருடைய இதயத்தில் பிறந்த மன்மதனுக்கு, அருமையும், அழகும் உடைய மைத்துனராகிய முருகவேளே!

         ஆண்மை மிகுந்த கோழிக் கொடியைத் தரித்து, எதிர்த்து வந்த அசுரருடைய கூட்டத்துடன் போர் புரிந்தவரே!

         அன்பு பூண்டு சிவபெருமானுக்கு அருள் நலமாகிய பிரணவப் பொருளை, அதன் பயனையறியும் பொருட்டு உபதேசித்தவரே!

         வாயு மண்டலம் வரை உயர்ந்து ஓங்கியுள்ள உண்மையுதவும் பழநித் தலத்தில் எழுந்தருளியுள்ள குமார மூர்த்தியே!  பெருமிதம் உடையவரே!

         இரண்டு செப்புக் குடங்களைப் போலவும், மலைகள் போலவும், வட்டமாகவும், இளகியும், பூரித்தும், பெண்கள் இடைக்குச் சுமையாகியும் உள்ள அழகிய தனங்களைப் பெறும் பொருட்டு உறவு கொண்டு, நன்கு அழுந்த நெருங்கி, அவர்களுடைய கூந்தல் சோருமாறு, அவர்கள் தந்த உடலின் இன்பத்தை யனுபவித்து, அவர்களது இதழைப் பருகி, தழுவிக்கொண்டு வாசனை மிக்க சயனத்தின் மீது, சரசச் செயல்கள் செய்து கொஞ்சியும் சிணுங்கியும் பேசி, தவநிலை விட்டு, வீணே திரியக் கடவேனோ?

 
விரிவுரை

இருசெப்பென வெற்பென..... இடைச் சுமையை ---

அருணகிரிநாத சுவாமிகள் தனத்திற்கு “இடையைச் சுமை” என்ற புதுப் பெயர் சூட்டுகின்றார்.

அரிபுத்திர சித்தஜன் ---

சித்தம் - உளம், ஜம் - பிறத்தல். திருமாலின் சித்தத்தில் மன்மதன் பிறந்தபடியால் சித்தஜன் என்று பேர் அமைந்தது. இவன் உலகில் உயிர்கள், உடம்பெடுப்பதற்கு உதவி புரிகின்றவன்.

அடல் குக்குட நற்கொடி பொருவோனே ---

கோழிக்கொடி நாதம். அருள் நாதம் எழுந்தவுடன் வினைக்கூட்டம் யாவும் ஒடுங்கிவிடும். அசுரர்கள் தீவினைத் தொகுதி.

பவனப் புவனச் செறிவுற்றுயர் மெய்ப்பழநி ---

புகழினால் விண்ணளவும் உயர்ந்தது பழநிமலை. தெய்வீகம் பொருந்திய மலை. அடியவர்க்கு புரியும் அற்புதமலை.

கருத்துரை

         பழநி மேவும் சிவகுருவே! தவநிலை தந்து அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...