அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இரவி என (பழநி)
பிரணவ வடிவாகிய மயிலின்
மீது வந்து அருள
தனதனன
தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான
இரவியென
வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ......
லதுகூவ
எழுகடலின்
முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ....வசைபேச
அரஹரென
வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ......மெலிவானாள்
அகுதியிவள்
தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வோருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே
நிரைபரவி
வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன்
......மருகோனே
நிருமலிய
திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா
பரவைகிரி
யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா
பளிதம்ருக
மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் .... பெருமாளே.
பதம் பிரித்தல்
இரவி
என, வடவை என, ஆலால விடம் அது என,
உருவுகொடு, ககனமிசை மீது ஏகி, மதியும்வர,
இரதிபதி கணைகள் ஒரு நால் ஏவ, விருது குயில் ...... அது கூவ,
எழுகடலின், முரசின் இசை, வேய் ஓசை, விடையின்மணி,
இசை குறுகி, இருசெவியில் நாராசம்
உறுவது என,
இகல் புரிய, மதனகுரு ஓராத அனையர் கொடு ....வசை பேச,
அரஅர
என வநிதைபடு பாடு ஓத அரிது அரிது,
அமுதமயில் அதுகருதி யாரோடும் இகல்புரிவள்,
அவசம்உற அவசம்உற ஆர்ஓமல் தரவும், மிக ...... மெலிவு
ஆனாள்,
அகுதி
இவள் தலையில்விதி, ஆனாலும் விலக அரிது,
அடிமைகொள உனது பரம், ஆறாத ஒரு தனிமை
அவளை அணை தர இனிதின் ஓகார பரியின்மிசை
......வருவாயே.
நிரைபரவி
வர, வரை உளோர் சீத
மருதினொடு
பொரு சகடு உதை அது செய்து, ஆ மாய மழைசொரிதல்
நிலைகுலைய, மலை குடையதாவே கொள் கரகமலன் ......மருகோனே.
நிருமலிய
திரிநயனி, வாள்வீச வரு குமரி,
கவுரி, பயிரவி, அரவ பூணாரி, திரிபுவனி,
நிபுடமலை அரசன்அருள் வாழ்வான புரண உமை
...... அருள்பாலா!
பரவைகிரி
அசுரர் திரள் மாசேனை தவிடுபொடி
பட, அமரர் துயர் அகல, வேல் ஏவி, அமர்பொருத
பதும கரதல! முருக! நால்வேத கரரணிக! .....மயில்வீரா!
பளித
ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை
வநிதை, குறமகள் மகிழும் லீலா விதர! மதுர
பநுவல் தரு பழநி வரு கோலாகலா!அமரர் .... பெருமாளே.
பதவுரை
வரையுள் நிரை பரவி வர ---
மலையினிடத்தில் உள்ள பசுக் கூட்டமெல்லாம் துதிசெய்து தம்மைச் சூழ்ந்துவர
(வேணுகானஞ் செய்தவரும்)
ஓர் சீத மருதின் ஓடு --- ஒப்பற்ற
மருதமரத்தையும்,
பொரு சகடு உதையது செய்து --- போர் புரிந்து
கொல்லும் பொருட்டு வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொன்றவரும்,
ஆ மாய --- (தன்னை வழிபடா மையால் சினந்து
இந்திரன் ஆணையால்) பசுக்கள் அழியுமாறு
மழை சொரிதல் நிலை குலைய --- பெருமழை
சொரியுந்தன்மை கெட்டொழியுமாறு,
(பசுக்களுக்கும்
கோபாலர்கட்கும் நன்மை விளையுமாறு)
மலை குடை அதாவே கொள் --- கோவர்த்தன கிரியைக்
குடையாகப் பிடித்த,
கர கமலன் --- தாமரை மலர் போன்ற திருக்கரங்களை
யுடையவருமாகிய வாசுதேவரது,
மருகோனே --- திருமருகரே!
நிருமலிய --- மலமில்லாதவரும்,
திரி நயனி --- மூன்று கண்களையுடையவரும்,
வாள் வீச வரு குமரி --- (ஞான) ஒளிவீச
எழுந்தருளி வருகின்ற இளங் கன்னிகையும்,
கவுரி --- பொன்னிறம் உடையவரும்,
பயிரவி --- காளியாக வந்து அருளியவரும்,
அரவ பூணாரி --- பாம்பை ஆபரணமாக உடையவரும்,
திரி புவனி --- மூன்று புவனங்களுக்குத்
தலைவியும்,
நிபுட --- நெருக்கமாக உள்ள (சிகரங்களை உடைய)
மலை அரசன் அருள் வாழ்வு ஆன --- பருப்பத வேந்தாகிய
இமவான் தவத்தினால் பெற்ற பெருவாழ்வாக விளங்குபவரும்,
புரண (பூரண) உமை --- எங்கும் நிறைந்தவரும்
ஆகிய உமா தேவியார்,
அருள் பாலா --- பெற்றருளிய திருப்புதல்வரே!
பரவை --- சமுத்திரமும்,
கிரி --- கிரௌஞ்ச மலையும்,
திரள் அசுரர் மாசேனை --- திரண்ட இராக்கதருடைய
பெரிய சேனைகளும்,
தவிடு பொடி பட --– தவிடு போல தூள்பட்டு அழியவும்,
அமரர் துயர் அகல --- தேவர்களது துன்பமானது
நீங்கவும்,
வேல் ஏவி அமர் பொருத --- வேல் ஏவிப் போர்
செய்த,
பதும கரதல --- தாமரை மலர் போன்ற
திருக்கரங்களை உடையவரே!
நால் வேத கர --- வேதங்கள் நான்கையும்
கரத்தில் தாங்கியுள்ளவரே!
முருக --- முருகப் பெருமானே!
ரணிக மயில்வீரா --- பொன் நிறமுடைய மயில்
வாகனத்தில் வரும் வீரரே!
பளித --- பச்சைக் கற்பூரமும்,
ம்ருகமத --- கஸ்தூரி இவைகள் கலந்த
களப சேறு ஆர --- கலவைச் சாந்து பூசப்பெற்று,
வளரு முலை வனிதை குறமகள் மகிழும் ---
வளர்கின்ற முலைகளை உடைய குறமடந்தையாகிய பெண்மணி உளம் மகிழுமாறு,
லீலா விதர --- இன்ப லீலைகளைப் புரியும்
சிறந்த பராக்ரமமுடையவரே!
மதுர பநுவல் தரு பழநி வரு --- இனிமையான
நூல்களால் துதிக்கப்படுகின்ற பழநிமலையில் எழுந்தருளியிருக்கின்ற,
கோலாகலா --- சம்பிரமம் உடையவரே!
அமரர் பெருமாளே --- தேவர்களுக்குள்
பெருமையின் மிக்கவரே!
இரவி என --- சூரியனைப் போலவும்,
வடவை என --- வடவைத் தீயைப் போலவும்,
ஆலால விடம் அது என --- ஆலால விடத்தைப்
போலவும்,
உருவுகொடு ககனமிசை மீது ஏகி மதியும் வர ---
மிகுந்த வெப்பத்தைக் கொடுக்கும் உருவத்தைக் கொண்டு சந்திரனானவன் ஆகாயத்தில் சென்று
(துன்புறுத்திக் கொண்டு) வரவும்,
இரதி பதி கணைகள் ஒருநாள் ஏவ --– இரதி
தேவியின் கொழுநனாகிய மன்மதன் மலர்க்கணைகள் ஐந்தையும் ஏவவும்,
விருது குயில் அது கூவ --- அம்மதனனது
விருதாகிய குயில் இனிமையாகக் கூவி விரகத்தை அதிகப்படுத்தவும்,
எழுகடலின் முரசின் இசை --- மன்மதனுடைய
பேரிகையாகிய ஏழு சமுத்திரங்களின் ஓசையும்,
வேய்ஓசை --- புல்லாங்குழலின் (இனிய) ஓசையும்,
விடையின் மணி ஓசை --- எருதுகளின் கழுத்திற்
கட்டிய மணிகளின் ஓசையும்,
இருசெவியில் நாராசம் உறுவது என --- இரண்டு
காதுகளிலும் அம்பு வந்து புகுந்தாற்போல்,
குறுகி இகல் புரிய --- நெருங்கி வந்து
போராடவும்,
மதன குரு ஓராத --- மன்மதனால் வரும்
வருத்தத்தை நன்கு யோசனை செய்யாத,
அ(ன்)னையர் கொடு வசை பேச --- தாய் முதலியோர்
கொடிய வசை மொழிகளைப் பேசி நகையாடவும்,
அரஹரா என வனிதை படுபாடு ஓத அரிது அரிது ---
அரஹரா என்று துதி செய்து இப்பெண் மடந்தை படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது
மிகவும் அரிது.
அமுதம் அயில் அது கருதி --- அழியாத தன்மையை அருளும்
வேலாயுதத்தை நினைந்து,
ஆரோடும் இகல் புரிவள் --- அக் குக நெறி
மாறுபடுபவர்களிடம் வாதிடுவள்,
அவசம் உற அவசம் உற --- மிகவும் இளைப்புற்று,
ஆர் ஓமல் தரவும் --- ஊர் பேச்சு நிறைந்து
வளரவும்,
மிக மெலிவு ஆனாள் --- மிகவும் உடல் மெலிந்து
விட்டாள்.
அகுதி இவள் --- பெண் திக்கற்றவள்,
தலையில் விதி ஆனாலும் விலக அரிது --- இவ்வாறு
துன்புறுவது தலையில் பிரமன் விதித்த விதியாயினும் அதனை விலக்குவது அரிதாகும்.
அடிமைகொள --- இவளை அடிமைகொள்வது,
உனது பரம் --- தேவரீருடைய பாரமேயாம்,
ஆறாத ஒரு தனிமை --- தணியாத காதலுடன் தனித்து
நின்று வருந்துபவளாகிய,
அவளை அணை தர --- இப்பெண்மகளை அணைத்து
ஆட்கொள்ளுமாறு
இனிதின் --- இனிமையுடன்,
ஓகார பரியின் மிசை --- ஓங்கார வடிவத்தோடு
கூடிய மயில் வாகனத்தின் மீது,
வருவாயே --- வந்தருள்வீர்.
பொழிப்புரை
மலையினிடத்துள்ள பசுக்கள் பரவசப்பட்டு தம்மிடத்துச்
சூழ்ந்து வருமாறு வேய்ங் சூழலிசைத்தவரும், ஒப்பற்ற மருதமரத்தையும், (கொல்ல வந்த) சகடா சுரனையும் உதைத்துக்
கொன்றவரும், (ஆண்டுதோறும் உத்தராயண
முதல் நாளன்று தனக்குச் செய்து வந்த பூஜையை மாற்றிச் செய்தால் இந்திரன் சினந்து
ஆணையிட) பசுக்களும் இடையர்களும் மாய்ந்து அழியுமாறு பெய்த பெரு மழையைத் தடுக்க
மலையைக் குடையாகப் பிடித்த தாமரைத் தடக்கையருமாகிய நாராயண மூர்த்தியின்
திருமருகரே!
மலமில்லாதவரும் முக்கண்ணியும் ஞான
ஒளியுடன் வருங் கௌமாரியும், பொன்னிறமுடையவரும், காளியும், நாக பூஷணியும், மூவுலகங்கட்கும் தலைவியும், நெருங்கிய சிகரங்களையுடைய மலையரசனது
புதல்வியும், எங்கும்
நிறைந்தவருமாகிய உமையம்மையாரது திருப் புதல்வரே!
சமுத்திரமும் கிரௌஞ்ச வெற்பும் திரண்டு
வந்த அசுரசேனைகளும் தவிடு பொடிபட்டழியுமாறும் தேவர்கள் துன்பம் நீங்குமாறும்
வேற்படையை ஏவிப் போர் புரிந்த மயில் வீரரே!
பச்சைக்கற்பூரம் கஸ்தூரி இவற்றால்
கூட்டிய கலவைச் சாந்து பூசப்பட்ட,
தனபாரங்களையுடைய
குறவர் குலக் கொழுந்தாகிய, வள்ளி நாயகியார்
மகிழுமாறு லீலைகளைப் புரியும் சிறந்த சமர்த்தரே!
பொருட் சுவையோடு கூடிய, பிரபந்தங்களையுடைய, பழநிமலையில் எழுந்தருளியுள்ள சம்பிரமுடையவரே!
தேவர்களுக்கெல்லாம் பெருமையிற்
சிறந்தவரே!
தேவரீர் மீது காதல் கொண்டுள்ள இப்பெண்
மடந்தைக்குக் காதல் மிகுதியால் ஏற்பட்ட விரகவேதனையால் சந்திரன் சூரியனைப் போலவும்
வடவாமுகாக்கினியைப் போலவும், ஆலகாலவிடத்தைப்
போலவும் விண்மிசை தோன்றி வெப்பத்தைக் கொடுக்கவும், மன்மதன் ஐந்து மலர்க்கணைகளை
விடுவிக்கவும், அவனது விருதாகிய
குயில் கூவவும், அம்மதனது முரசாகிய
ஏழு கடல்களின் ஒலியும், புல்லாங்குழலின்
ஒலியும், இடபத்தின்
கழுத்திற்கட்டிய மணியொளியும் வந்து இரண்டு செவிகளிலும் அம்பு நுழைந்தாற்போல்
துன்பத்தைச் செய்யவும் மன்மதன் செய்யும் வருத்தத்தை நன்குணராத தாய் முதலியோர்
கொடிய வசை பேசவும், “அரஹர” என்று துதி
செய்து இப்பெண் படுகின்ற துன்பத்தைச் சொல்லவொண்ணாது; மரணமில்லாப் பெருவாழ்வை வழங்கும்
வேற்படையை நினைந்து, குகநெறிக்கு
மாறுபடுவோரிடம் வாதிட்டுப் போரிடுகின்றாள். மிகவும் சோர்ந்து ஊரெங்கும் இவள்
பேச்சாகவே பேச, உடல் மிகவும்
மெலிந்து விட்டாள். திக்கற்றவளாகிய இவளுடைய தலைவிதி யிப்படி யாயினும் அதனை
விலக்குதல் அரிதே. ஆயினும் இவளை அடிமை கொள்வது உமது பாரமே. தணியாத காதல் கொண்டு
தனித்திருந்து வாடும் இவளைத் தழுவி ஆட்கொள்ளுமாறு பிரணவ வடிவாகிய மயில் வாகனத்தின்
மீது இனிது வந்து அருள்புரிவீர்.
விரிவுரை
இரவியென........மதியும்
வர
---
இப்பாசுரம்
நாயகி நாயக பாவத்தில் பாடப்பட்டது காதல் மிக்குடையார்க்குக் குளிர்ந்த சந்திரன்
மிகுந்த வெப்பத்தைத் தருவான். காலையரும்பிப் பகலெல்லாம் போதாயிருந்த காம மலர் மாலை
மலர்ந்து தனித்திருந்து துன்புறும் காதலர்கட்குச் சந்திரன் ஒரு பெரும்பகை.
குயிலது
கூவ...........இகல் புரிய ---
காதல்
நோய்ப்பட்டார்க்குக் குயில் கூவுதலும் கடலோசையும் வேய்ங்குழல் முதலியவும் இனிமை
பயவாது. காதில் சூட்டிருப்புக் கோல் செருகியது போல் துன்பமே செய்யும்.
“தொல்லை நெடு நீலக்
கடலாலே
மெள்ள வருசோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே” --- (துள்ளுமத) திருப்புகழ்
அவளை
அணைதர........வருவாயே ---
தேவரீரைக்
காதலித்து உடலும் உள்ளமும் மெலிந்து வாடுகின்ற ஜீவான்மாவாகிய பெண்ணைத் தழுவிப்
பேரின்பப் பெருவாழ்வைத் தரும் பொருட்டு மயில் புரவிமேல் வந்தருள்வீர் என்று
சுவாமிகள் முருகனை வேண்டுகின்றார்.
வளரும்
கறிஅறியா, மந்திதின்று
மம்மர்க்கு இடமாய்த்
தளரும்
தடவரை தண்சிலம்பா, தனது அங்கம் எங்கும்
விளரும்,
விழும், எழும், விம்மும், மெலியும், வெண்மாமதிநின்று
ஒளிரும்
சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்நுதலே. --- திருக்கோவையார்
நிரை
பரவிர..........மலைகுடையதாவே கொள் ---
கண்ணபிரான்
குழலிசைத்துக் குன்றைக் குடையாகப் பிடித்த வரலாற்றைக் குறிக்கின்றது.
கோவர்த்தன கிரியைக்
குடையாகப் பிடித்த வரலாறு
ஒரு
நாள் நந்தகோபர் உபநந்தர் முதலிய ஆயர் குலத்தலைவர்கள் ஆண்டுகள் தோறும்
நடத்திக்கொண்டு வந்த மகேந்திர யாகத்தைச் செய்ய ஆலோசித்துத் தொடங்கினார்கள்.
அதனையறிந்த கண்ணபிரான், அந்த யாகவரலாற்றை
யறிந்திருந்தும் நந்தகோபரைப் பார்த்து, “எந்தையே!
இந்த யாகம் யாரைக் குறித்துச் செய்கிறீர்கள்! இதனால் அடையப் போகும் பயன் யாது?” என்று வினவினார். நந்தகோபர் “குழந்தாய்!
தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் மேகரூபமாயிருந்து உயிர்களுக்கு பிழைப்பையும்
சுகத்தையும் தருகின்ற தண்ணீரைப் பொழிகின்றான்; மூன்று உலகங்களுக்கும் தலைவனாகிய அந்த
இந்திரனது ஆணையால் இந்த மேகங்கள் சகல ஜீவாதாரமாக உள்ள மழையை பெய்கின்றன; ஆதலால் மேகவாகனனாய் இருக்கும்
இந்திரனைக் குறித்து ஆண்டுகள்தோறும் ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டு, பரிசுத்தர்களாயிருந்து, சிறந்த பால் தயிர் அன்னம் முதலிய
பொருட்களைக் கொண்டு இந்த இந்திர யாகத்தைச் செய்து இந்திரபகவானை ஆராதிக்கின்றோம்.
கமலக் கண்ணா! இவ்வாறு இந்திரனைப் பூசித்தவர்கள் இந்திரனுடைய அருளால் எல்லா
நலன்களையும் பெற்று இன்புறுகின்றார்கள்; மேலும்
அந்தப் பர்ஜன்யரூபியாகிய இந்திரன்,
அநேக
நற்பலன்களை வழங்குகின்றான். இவ்வாறு ஆராதிக்காதவர்கள் நன்மையடைய மாட்டார்கள்”
என்றார்.
மூன்றுலகங்களுக்கும்
முதல்வன் என்று செருக்குற்ற இந்திரனுடைய அகங்காரத்தை நீக்கத் திருவுளங் கொண்ட
கண்ணபிரான், பிதாவை நோக்கி
“தந்தையே உயிர்கள் வினைகளுக்கீடாய்ப் பிறக்கின்றன; முற்பிறப்புக்களிற் செய்த வினைகளின்
வண்ணம் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி சுகதுக்கங்களை யனுபவிக்கின்றன. வினைகளால்தான்
சுகதுக்கங்கள் வருகின்றன. இதனையன்றி இந்திராதி உலக பாலர்கள் பலன்களைக் கொடுக்க
வல்லவராக மாட்டார்கள். இந்திரனால் ஒரு பலனும் கொடுக்க முடியாது. கர்மத்தை
யொழிக்கும் ஆற்றலுமில்லை. உயிர்கள் தாங்கள் செய்த வினைக்குத் தக்கவாறு, -பசு, பட்சி, புழு, விலங்கு, தேவர், மனிதர்களாகப் பிறந்து சுகதுக்கங்களை
யனுபவிக்கின்றன என்பதில்
சிறிதும் ஐயமில்லை. சுகத்துக்கத்திற்குக் கர்மமே முக்கிய காரணம். நம்முடைய
புண்ணியமே மேகமாக இருந்து மழை பெய்கிறது. எந்தையே! நமக்கு ஊர்கள், தேசங்கள், வீடுகள் ஒன்றுமில்லை. காடு மலைகளில்
வசித்துக் கொண்டு காட்டுப் பிராணிகள் போல் பிழைத்து வருகின்றோம். ஆதலால் இந்த மலையையும் மலைக்கு
அதிதேவதையையும், பசுக்களையும்
பூசியுங்கள். இப்போது இந்திர பூசைக்காகச் சேகரித்த பொருள்களை கொண்டு இந்த மலையை
ஆராதியுங்கள், பற்பல பணியாரங்கள், பாயசம், பால், நெய், பருப்பு, அப்பம் இவற்றை தயாரித்து அந்தணர் முதல்
சண்டாளர் நாய்வரை எல்லாப் பிராணிகளையும் திருப்தி செய்து வையுங்கள்.
பசுக்களுக்குப் புல்லைக் கொடுங்கள். பிறகு நீங்கள் அனைவரும் புசித்து சந்தனாதி
வாசனைகளை யணிந்து ஆடையாபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு இந்த மலையை வலம் வந்து வணங்குங்கள்”
என்றார்.
இதனைக்
கேட்ட கோபாலர்கள் அனைவரும் நன்று என்று அதற்கு இசைந்து, கோவர்த்தன மலைக்கருகில் இருந்து
அம்மலையை வழிபட முயன்றார்கள். அப்போது பகவானாகிய கண்ணபிரான் தமது யோக மகிமையால்
தாமே ஒரு பெரிய மலையாக நின்றார். அவ்வாயர்களிலும் தாமொருவராக இருந்து, “ஆயர்களே! இதோ இந்த மலைக்கு அதிதேவதையே
நம்மைக் காக்கும் பொருட்டு இங்கு எழுந்தருளியிருக்கிறார், இவரை நீங்கள் அன்புடன் ஆராதியுங்கள்?” என்றார். ஆயர்கள் அதனைக் கண்டு மிகுந்த
ஆச்சரியமடைந்து பயபக்தி சிரத்தையுடன் அருக்கியபாத்திய ஆசமனீயந்தந்து, மனோபாவமாக அபிஷேகஞ் செய்து, சந்தன புஷ்ப மாலைகளைச் சாத்தி
தூபதீபங்களைக் காட்டி, அர்ச்சித்து, பங்காபேரி, வேணு முரசு முதலிய வாத்தியங்களை முழக்கி
- பால், நெய், பருப்பு, அன்னம், பழம், தாம்பூலம் முதலியவற்றை நிவேதித்து
வழிப்பட்டார்கள். மலை வடிவாயுள்ள பகவான் அவற்றை புசித்து அருள்புரிந்தார்.
கண்ணபிரானும் ஆயர்களுடன் அம்மலையை வணங்கி, “நம்மவர்களே! இதோ மலைவடிவாயுள்ள தேவதை, நாம் நிவேதித்தவைகளை யுண்டு நமது பூசையை
ஏற்றுக்கொண்டார்; இம்மலை நம்மைக்
காத்தருள்புரியும்” என்று கூறினார். கோபாலர்கள் மகிழ்ந்து மலையை வலம் வந்து
வணங்கித் துதித்து நின்றார்கள். பிறகு அம்மலைவடிவாக நின்ற பகவான் மறைந்தார்.
ஆயர்கள் கோவர்த்தனம் முதலிய மலைகட்கு தூபதீபங் காட்டி ஆராதித்து வணங்கி, பசுக்களை யலங்கரித்து தாங்களும் உணவு கொண்டு, அலங்கரித்துக் கொண்டு மலையை வலம் வந்து
மகிழ்ந்தார்கள்.
ஆயர்கள்
வழக்கமாய்ச் செய்துவந்த பூசையை மாற்றியதைக் கண்ட இந்திரன் மிகவும் கோபித்து, ஊழிக்கால மேகங்களை அழைத்து “மேகங்களே!
இளம் பிள்ளையும் தன்னையே பெரிதாக மதித்திருக்கின்றவனுமாகிய இந்த கிருஷ்ணனுடைய
வார்த்தையைக் கேட்டு மூவுலகங்கட்கும் முதல்வனாகிய என்னை இந்த ஆயர்கள்
அவமதித்தார்கள்; புத்திகெட்டு கேவலம்
இந்த மலையை ஆராதித்தார்கள்; ஆதலால் நீங்கள் உடனே
இந்த கிருஷ்ணனையும், ஆயர்களையும், பசுக்களையும் வெள்ளத்திலழித்து கடலிற்
சேர்த்தழியுமாறு பெருமழையை இடைவிடாது பொழியுங்கள்” என்று ஆணை தந்தான். இவ்வாறு
கட்டளையிட்ட இந்திரன் தானும் ஐராவதத்தின் மேலூர்ந்து தேவர்கள் சூழ ஆயுதங்களை
ஏந்திக் கொண்டு சண்ட வாயுக்களை மேகங்களுக்குச் சகாயமாக ஏவினான். மேகங்கள்
ஊழிக்காலமென உலகங்கள் வருந்த இடியுடன் ஆகாயத்தில் வியாபித்து, மின்னல் கல் மழையை ஆயர்பாடியின் மீது
பெய்தன. அப்பெரு மழையால் எங்கும் தண்ணீர் மயமாகியது; பசுக்கூட்டங்கள் பதறியோடின; கன்றுகள் பயந்து தாய்ப் பசுக்களைச் சரண்
புகுந்தன. எருதுகளும் இரிந்தன; இடையர்கள் இந்தப்
பெரிய ஆபத்தைக் கண்டு பிரமாண்டங் கிழிந்து போயிற்றோ, ஊழிக்காலம் வந்துவிட்டதோ என்று நடு
நடுங்கி கண்ணபிரானிடம் ஓடிவந்து “கண்ணா மணிவண்ணா!” என்று முறையிட்டு
சரணாகதியடைந்தார்கள். கண்ணபிரான் “ஜனங்களே! கல்மழைக்கு அஞ்ச வேண்டாம்; குழந்தைகளுடனும் பசுக்களுடனும், பெண்மணிகளுடனும் வாருங்கள்; பகவான் காப்பாற்றுவார்” என்று சொல்லி
பெரிய மலையாகிய கோவர்த்தனத்தைத் தூக்கி, ஒரு
சிறு பிள்ளை மழைக்காலத்தில் உண்டாகும் காளானைப் பிடுங்கிக் குடையாகப்
பிடிப்பதுபோல் ஒரு கரத்தால் பிடித்தார். வராகமூர்த்தியாகிப் பூமண்டலத்தை ஒரு
கோட்டால் தாங்கிய பெருமானுக்கு இது பெரிய காரியமோ? ஒரு யானையின் தும்பிக்கையில் ஒரு
தாமரைமொக்கு இருப்பதுபோல், பகவான் கரத்தில்
அம்மலையானது விளங்கியது. கண்ணபிரான், “நம்மவர்களே!
இம்மலையின்கீழ் யாதொரு குறைவுமின்றி நீங்கள் எல்லாரும் வந்து சுகித்திருங்கள்; இந்த மலை விழுந்துவிடுமென்று நீங்கள்
அஞ்ச வேண்டாம்; பிரமாண்டங்கள்
இடிந்து இம்மலைமேல் விழுந்தாலும் இது விழாது” என்று அருளிச் செய்தார். அதுகண்ட
ஆயர்கள் அற்புதமடைந்து கோவினங் களுடனும் மனைவி மக்களுடனும் அம்மலையின் கீழ்
சுகமாயிருந்து மழைத் துன்பமின்றி பாடி யாடிக்கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு
அந்த ஊழிமேகங்கள் ஏழு நாள் இரவும் பகலும் பெரு மழையைப் பெய்தும் கோபாலர்கள்
துன்பமின்றி இருக்கக் கண்ட இந்திரன் கண்ணபிரானுடைய மகிமையை யுணர்ந்து பயந்து, மேகங்களை யனுப்பிவிட்டு பெருமானைச்
சரணமடைந்தான். மழை நின்ற பிறகு ஆயர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லுமாறு செய்து
அம்மலையைப் பழையபடியே வைத்தனர்.
அம்மைத் தடங்கண் மடவாய்ச்சியரு
மானா யருமா நிரையு மலறி
எம்மைச் சரணென்று கொள்ளென் றிரப்ப
இலங்கா ழிக்கை எந்தை எடுத்தமலை
தம்மைச் சரணென்ற தம்பாவை யரைப்புனம்
மேய்கின்ற மானினங் காண்மி னென்று
கொம்மைப் புயக்குன்றர் சிலை குனிக்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. ---பெரியாழ்வார்
கருத்துரை
திருமால்
மருகா! பார்வதிபாலா! அவுணர்குல கால! வள்ளி மணவாள! பழநிக்குமர! தேவரிடங் காதல்
கொண்டமையால், சந்திரன் வெப்பத்தைக்
கொடுக்கிறான்; குயில், புல்லாங்குழல் முதலிய இசைகள்
துன்புறுத்துகின்றன; இவ்வாறு இன்ப வேட்கை
கொண்ட இப்பெண் கொடியைத் தழுவி ஆட்கொள்ள மயில் மிசை வந்தருள்வீர்.
No comments:
Post a Comment