திரு எதிர்கொள்பாடி





திரு எதிர்கொள்பாடி
(மேலைத் திருமணஞ்சேரி)

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் "அஞ்சார் வார்த்தலை" என்னும் ஊரை அடைந்து அங்குள்ள வாய்க்காலைத் தாண்டி வலதுபுறம் திருமணஞ்சேரி செல்லும் சாலையில் சென்றால் முதலில் மேலத் திருமணஞ்சேரி என்று இன்று வழங்கப்படும் ஊர் வரும். (இதே சாலையில் மேலும் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி உள்ளது.) ஊருக்குள் வலதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தொலைவு சென்றால் திருஎதிர்கொள்பாடி ஆலயத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து திருமணஞ்சேரி செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

இறைவர்              : ஐராவதேசுவரர், மத்யானேசுவரர்.

இறைவியார்           : சுகந்த குந்தளாம்பிகை, மலர்குழல்மாது.

தேவாரப் பாடல்கள்    : சுந்தரர் - மத்த யானை ஏறி

     பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் வந்தபோது, சிவபெருமானிடம் அவளை மணந்து கொள்ளும்படி பரத்வாஜ மகரிஷி வேண்டினார். சிவபெருமானும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவபெருமானை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற இறைவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் இத்தலத்திற்கு "எதிர்கொள்பாடி" என்றும், சுவாமிக்கு திருஎதிர்கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேசுவரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

         துர்வாச முனிவர் ஒருமுறை சிவனை பூஜித்து பிரசாதமாக பெற்ற மலரை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அம்மலரை தன் வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைக்க, அது அம்மலரை கீழே போட்டு தன் காலால் மிதித்து அம்மலரை அவமரியாதை செய்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசரிடம் சாபம் பெற்ற ஐராவதம் சாப விமோசனம் வேண்டி பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றித் திரிந்தது. பூலோகத்தில் பல தலங்களில் சிவபூஜை செய்தது. அப்படி சிவபூஜை செய்த தலங்களில் திருஎதிர்கொள்பாடி தலமும் ஒன்றாகும். இறைவனும் ஐராவதேசுவரர் என்ற பெயர் பெற்றார். ஐராவதம் உண்டாக்கிய தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்ற பெயருடன் இங்கு உள்ளது.

         நல்ல குணம் படைத்த மருமகன் அமையவும், அமைந்த மருமகன் திருந்தவும் பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஆகும். இத்தலத்தில் அருளும் ஐராவதேஸ்வரர், சிறந்த மருமகன் கிடைக்க அருள் செய்கிறார். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.

         மூன்று நிலை இராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமரத்து விநாயகரையும், பலிபீடம் மற்றும் அதிகார நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். கருவறை முன் மண்டபம் வழியே உள்ளே நுழைந்தவுடன் மேறகு நோக்கிய சந்நிதியில் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் இறைவன் ஐராவதேஸ்வரர் தரிசனம் தருகிறார். அம்பாள் மலர்க்குழல் நாயகி தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். பரத்வாஜ முனிவர் இங்கு சிவனை வழிபட்டுள்ளார். இவர் வணங்கிய பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சத்திதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். கருவறை முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர், சூரியன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சூழ்வுற்றோர் விண் எதிர் கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழப் பண் எதிர்கொள் பாடிப் பரம் பொருளே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர் கானாட்டுமுள்ளூர் செல்லும் வழியில் இறைவன் காட்சி கொடுக்கக் கண்டு வணங்கி, திரு எதிர்கொள்பாடிக்குச் செல்லும் பொழுது பாடிப் பரவியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர் கோன். புரா. 120-121.)


பெரிய புராணப் பாடல் எண் : 120
கானாட்டு முள்ளூரைச் சாரும் போது
         கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு,
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
         துணைப்பாத மலர்கண்டு தொழுதேன் என்று,
வான்ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும்
         வண்தமிழின் தொடைமாலை மலரச் சாத்தி,
தேன்ஆரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
         திருஎதிர்கொள் பாடியினை எய்தச் செல்வார்.

         பொழிப்புரை : திருக்கானாட்டுமுள்ளூரைச் சாரும்பொழுது கண்ணுதற் பெருமான் அவர் எதிரே தோன்றிக் காட்சி கொடுத்தருளக் கண்டு போற்றுவார், தூயதாய அன்றலர்ந்த மெல்லிய மலராகும் கொன்றை மாலையைச் சடைமீது அணிந்த பெருமானாரது இரு திருவடி மலர்களையும் நேரில் கண்டு தொழுதேன் எனும் கருத்தமைந்த, விண்ணுலகத்தையும் ஆட்படுத்தும் `வள்வாய்\' எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையை உள்ளம் உருகப்பாடி, பெருமானுக்கு அணிவித்து, அப்பால் தேன்நிறைந்த மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த திருஎதிர்கொள்பாடியைச் சென்று சேர்வாராய்,


பெ. பு. பாடல் எண் : 121
எத்திசையும் தொழுதுஏத்த "மத்த யானை"
         எடுத்து "எதிர்கொள் பாடியினை அடைவோம்" என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து,
         செல்வமிகு செழுங்கோயில் இறைஞ்சி, நண்ணி,
அத்தர்தமை அடிவணங்கி, அங்கு வைகி,
         அருள்பெற்று, திருவேள்விக் குடியில் எய்தி,
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட
         "மூப்பதுஇலை" எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.

         பொழிப்புரை : சேர்ந்திடும்பொழுது, எத்திசையும் தொழுது போற்றி `மத்தயானை\' எனத் தொடங்கி, திருஎதிர்கொள்பாடியை அடைவோம் என்னும் கருத்தினை நிலைகொள்ளுமாறு வைத்திடும் திருவுடைய பதிகத்தைப் பாடி வந்து, செல்வமிகுந்த செழுமையான கோயிலினை வணங்கி, அங்குச் சில நாள்கள் தங்கி அருள்பெற்று, திருவேள்விக்குடியைச் சென்றடைந்து, வீடுபேற்றைத் தருகின்ற பெருமானைத் திருத்துருத்தி என்னும் பதியும் சேர்ந்திட `மூப்பதில்லை\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளி அங்கிருந் தருளினார்.

         குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1. திருஎதிர்கொள்பாடி: மத்தயானை - இந்தளம் (தி.7 ப.7)

2. திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும்: மூப்பதுமில்லை - நட்டராகம் (தி.7 ப.18) `திருவேள்விக்குடியில் எய்தி ...... துருத்திகூடி மூப்பதிலை' எனும் பதிகம் மொழிந்து என்பதால், இவ்விரு பதிகளையும் இணைத்துப் பாடியமை புலனாகும்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 007    திருஎதிர்கொள்பாடி                 பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மத்த யானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்,
செத்த போதில் ஆரும் இல்லை, சிந்தையுள் வைம்மின்கள்,
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா, வம்மின் மனத்தீரே,
அத்தர் கோயில், எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : மதத்தையுடைய யானையின்மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே , நீவிர் இறந்தால் , அதுபோது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர் ; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன் ; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள் . அவ்வாறு வைத்த மனத்தைப் பின் அந்நிலையினின்றும் வேறுபடுத்தி , மீள , இவ் வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா . என் நெஞ்சீரே , நீரும் வாரும் ; அவர்களுடன் , யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் .


பாடல் எண் : 2
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு, துயரம் மனைவாழ்க்கை,
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு, நெஞ்ச மனத்தீரே,
நீற்றர், ஏற்றர், நீல கண்டர், நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில், எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : நினைத்தற் றன்மையை யுடைய நெஞ்சீரே , யாவர்க்கும், பிறப்பு உளதாயின் , இறப்பும் ஒருதலையாக உண்டு; அவற்றிற்கு இடையே உள்ள இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே . அவ்வாழ்க்கையின் பொருட்டுச் சொல்லப்படும் சொல் உளதாயின். அதன்கண் பெரும்பாலும் வஞ்சனை உளதாவதேயாம். அதனால் , அவைகளின் நீங்குதற் பொருட்டு , வெண்ணீற்றை யணிந்தவரும் , இடப வாகனத்தை உடையவரும், மிக்க நீரை நீண்ட சடையிலே தாங்கியவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள் பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .


பாடல் எண் : 3
செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன்,
வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே,
கொடிகொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடைஉடை
அடிகள் கோயில்,எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : நெஞ்சீரே , துன்பத்தைக் கொண்ட உடம்பானது , உலகியலில் உழன்று உழன்று மெலிந்து , விரைய வீழ்ந்தொழியாத முன்னே , மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்திற் பட்டு மயங்காது , தம் கொடி தன்னிடத்துப் பொருந்தக் கொண்ட இடபத்தை யுடையவரும் , வெண்மையான நீற்றை அணிந்த வரும் , கோவணமாக உடுத்த ஆடையை உடைய தலைவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .


பாடல் எண் : 4
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர், வஞ்ச மனத்தீரே,
யாவ ராலும் இகழப்பட்டு, இங்கு அல்லலில் வீழாதே,
மூவர் ஆயும், இருவர் ஆயும், முதல்வன் அவனேஆம்,
தேவர் கோயில், எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : வஞ்சனையை யுடைய நெஞ்சீரே , நமக்கு உட்பட்டவராயே ஐவர் பகைவர் வாழ்வர் ; அதனால் , அவரது தீமையால் யாவராலும் இகழப்படும் நிலையை எய்தித் துன்பத்தில் வீழாது , தாமே மும்மூர்த்திகளாயும் , தமது ஆணை வழியால் மாலும் அயனுமாயும் , எவ்வாற்றானும் உலகிற்கு அவரே முதல்வராகும் முழுமுதல்வராகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .


பாடல் எண் : 5
அரித்து நம்மேல் ஐவர் வந்து இங்கு, ஆறுஅலைப்பான் பொருட்டால்,
சிரித்த பல்,வாய், வெண்தலை போய், ஊர்ப்புறம் சேராமுன்,
வரிக்கொள் துத்தி, வாள்அரக்கர் வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி, எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : நெஞ்சீரே , ஐவர் ஆறலை கள்வர் நம்மேல் வந்து துன்புறுத்தி நன்னெறியின் இடையே அலைத்தலால் வாணாள் வீணாளாய்க் கழிய , மகிழ்ச்சியாற் சிரித்த பல்லினை உடைய வாய் , வெண்டலையாய்ப் போய் ஊர்ப்புறத்திற் சேராத முன்பே , அழகினைக் கொண்ட படப்புள்ளிகளையுடைய பாம்பை அணிந்த , கொடிய அசுரரது பகைமை தங்கிய மதில்கள் மூன்றினையும் எரித்த வில்லை யுடைய பெருமானது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .


பாடல் எண் : 6
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர், பொத்து அடைப்பான் பொருட்டால்
மையல் கொண்டீர், எம்மொடு ஆடி நீரும் மனத்தீரே,
நைய வேண்டா, இம்மை ஏத்த, அம்மை நமக்குஅருளும்
ஐயர் கோயில், எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : நெஞ்சீரே , நம் இல்வாழ்க்கையை ஆளுதலுடைய சுற்றத்தார் , நம்மீது நிலையற்ற அன்புடையரே ; அதனை நினையாது , அவர்கள் குறையை முடித்தற் பொருட்டு நீரும் எம்மொடு கூடித் திரிந்து , மயக்கத்தையுடையீராயினீர் ; இனி , அவ்வாற்றால் துன்புறுதல் வேண்டா ; இப்பிறப்பில் நாம் வழிபட்டிருக்க , வருகின்ற பிறப்பில் வந்து நமக்கு அருள் பண்ணும் நம் பெருமானது திருக்கோயிலை, ` திருஎதிர்கொள்பாடி` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .


பாடல் எண் : 7
கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி,
வாச மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்புஅணிந்து ஏறுஏறும்
ஈசர் கோயில், எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : நெஞ்சே , கும்பிட்டுக் கூத்தாடக் கூசுதலை ஒழித்து , காமம் வெகுளி முதலிய குற்றங்களை அகற்றி , யாரிடத்தும் பகை கொள்ளுதலைத் தவிர்த்து , மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது , வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து எலும்பை அணிதலோடு , விடையை ஊரும் இறைவரது திருக்கோயிலை அவரிடத்து அன்பு வைத்து . ` திரு எதிர் கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; அதுவே செயற்பாலது ; வாரீர்.


பாடல் எண் : 8
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு, ஏழை மனைவாழ்க்கை,
முன்பு சொன்னால் மோழைமை ஆம் முட்டை மனத்தீரே,
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள்அடி சேரார்
என்பர் கோயில், எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : பொறியொன்றும் இல்லாத முட்டைபோலும் நெஞ்சீரே , அறியாமையால் வரும் மனை வாழ்க்கையில் இன்பம் உள்ளதுபோலவே துன்பமும் உளதாதல் கண்கூடு; ` அழகிய கொன்றை மாலையை அணிந்த இறைவரது திருவடிகளை , அவற்றிற்கு அன்பராய் உள்ளவரல்லது அடையமாட்டார் ` என்று , அறிந்தோர் கூறுவர் ; இவற்றை முன்பு உமக்குச் சொன்னால் நீர் உணரமாட்டாமையின் , அறியாமையாய் முடியும் ; ஆதலாற் சொன்னோமில்லை . இனி மனை வாழ்க்கையைக் கைவிட்டு , இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர் கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .


பாடல் எண் : 9
தந்தை யாரும் தவ்வை யாரும் எள்தனைச் சார்வுஆகார்,
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறிகாட்டும்
சிந்தை யீரே, நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும்
எந்தை கோயில், எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : நெஞ்சீரே , தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாகமாட்டார் ; ஆதலின் , நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி , எமக்கு வீட்டு நெறியைக் காட்டும் நினைவுடையீராயின் , விளங்குகின்ற திங்களைச் சூடும் நம் தந்தை கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .


பாடல் எண் : 10
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல்சடையன்,
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா,
சுருதி யார்க்கும் சொல்ல ஒண்ணாச் சோதி, எம் ஆதியான்
கருது கோயில், எதிர்கொள் பாடி என்பது அடைவோமே.

         பொழிப்புரை : நெஞ்சீரே , யானையின் தோலை உதிரம் ஒழுகப் போர்த்த , குழல்போலும் சடையை உடையவனும் , இருமருத மரங்களை முரித்து , அவற்றின் இடையே தவழ்ந்த மாயோனும் , பிரமனும் காணாத , வேதத்தை உணர்ந்தோர்க்கும் சொல்ல ஒண்ணாத ஒளி வடிவினனும் , எங்கள் முதல்வனும் ஆகிய சிவபிரான் தன் இடமாக விரும்புகின்ற திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; அதுவே செயற்பாலது ; வாரீர் .


பாடல் எண் : 11
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும்
பத்தர் பந்தத்து எதிர்கொள் பாடிப் பரமனையே பணிய,
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன், சடையன் அவன் சிறுவன்,
பத்தன், ஊரன், பாடல் வல்லார் பாதம் பணிவாரே.

         பொழிப்புரை : முத்துப்போலும் வெள்ளிய நீற்றையும் , பவளம் போலும் செய்ய திருமேனியையும் , சிவந்த சடையையும் உடைய இறைவன் வாழும் , அடியவர் மனம் பிணிப்புண்ணுதலையுடைய திருஎதிர்கொள்பாடியில் உள்ள பெருமானை வணங்கவே விரும்பின , சிவனடியானும் , சிவனடியார்க்கு அடியானும் , ` சடையன் ` என்பானுக்கு மகனும் ஆகிய நம்பியாரூரனது இப்பாடல்களை நன்கு பாடவல்லவர் , அப்பெருமானது திருவடியை அடைந்து வணங்கியிருப்பர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...