பழநி - 0121. உயிர்க்கூடு விடும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உயிர்க் கூடு (பழநி)

பொதுமாதர் வலைப்படாமல், மயில் மீது வந்து ஆட்கொள்ள

தனத்தான தனதனன தனத்தான தனதனன
     தனத்தான தனதனன ...... தனதான


உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
     ஒருக்காலு நெகிழ்வதிலை ...... யெனவேசூள்

உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
     துடைத்தாய்பின் வருகுமவ ...... ரெதிரேபோய்ப்

பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
     படப்பேசி யுறுபொருள்கொள் ...... விலைமாதர்

படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
     பதத்தாள மயிலின்மிசை ...... வரவேணும்

தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
     தரத்தாடல் புரியுமரி ...... மருகோனே

தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
     தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வே

செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
     செயித்தோடி வருபழநி ...... யமர்வோனே

தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
     திருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


உயிர்க்கூடு விடும் அளவும் உமைக் கூடி மருவு தொழில்
     ஒருக்காலும் நெகிழ்வது இலை ...... எனவே, சூள்

உரைத்தே, முன் மருவினரை வெறுத்து, ம திரவியம்
     அது உடைத்தாய் பின் வருகும் அவர் ......எதிரேபோய்ப்

பயில் பேசி, ரவுபகல் அவர்க்கான பதமை பல
     படப்பேசி, உறுபொருள் கொள் ...... விலைமாதர்,

படப் பார வலைபடுதல் தவிர்த்து ஆள, மணி பொருவு
     பதத் தாள மயிலின்மிசை ...... வரவேணும்.

தயிர்ச்சோரன் எனும் அ உரை வசைக்கோவ வனிதையர்கள்
     தரத்து ஆடல் புரியும் அரி ...... மருகோனே!

தமிழ்க்காழி, மருதவனம், மறைக்காடு, திருமருகல்,
     தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வே!

செயில் சேல் விண் உடுவினொடு பொரப்போய்விமு அமர்பொருது
     செயித்து ஓடி வரு பழநி ...... அமர்வோனே!

தினைக்காவல் புரிய வல குறப்பாவை முலை தழுவு
     திருத்தோள! அமரர்பணி ...... பெருமாளே.


பதவுரை

       தயிர் சோரன் எனும் --- தயிரைத் திருவடினவன் என்ற,

     அ உரை வசை --- அந்த உரையாகிய நிந்தை புகல்கின்ற,

     கோவ வனிதையர்களின் தரத்து --- கோபிகைப் பெண்களிடம்,

     ஆடல் புரியும் --- திருவிளையாடல் செய்த,

     அரி மருகோனே --- திருமாலின் மருகரே!

      தமிழ் காழி --- தமிழ் வழங்குகின்ற, சீகாழி,

     மருதவனம் --- திருவிடை மருதூர்,

     மறைக்காடு --- திருமறைக்காடு,

     திருமருகல் --- திருமருகல்,

     தநுக்கோடி --- தநுக்கோடி என்ற இத்தலங்களில்,

     வரு குழகர் --- எழுந்தருளியுள்ள சிவபெருமான்,

     தருவாழ்வே --- தந்த புதல்வரே!

      செயில் --- வயல்களில்,

     சேல் --- மீன்,

     விண் உடுவினொடு பொர போய் --- ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களுடன் போர் புரியச் சென்று,

     விம்மு அமர் பொருது --- மிகுந்த போர் புரிந்து,

     செயித்து ஓடி வரு --- வெற்றி பெற்றுத் திரும்பி வருகின்ற,

     பழநி அமர்வோனே --- பழநியம்பதியில்  எழுந்தருளியிருப்பவரே!

      தினைக்காவல் புரிய வல --- தினைப்புனத்தில் காவல் புரிய வல்ல,

     குறபாவை முலை தழுவு --- வள்ளியம்மையாருடைய முலைகளைத் தழுவுகின்ற,

     திருதோள --- அழகிய தோள்களை உடையவரே!

      அமரர் பணி --- தேவர்கள் தொழுகின்ற,

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

      உயிர் கூடு விடும் அளவும் --- உயிரானது இந்த உடம்பைவிட்டுப் பிரிகின்றவரை,

     உமை கூடி மருவு தொழில் --- உம்மைக் கூடி இருக்கும் தொழிலை,

     ஒருக் காலும் நெகிழ்வது இலை எனவே --- ஒருபோதும் நழுவ விடமாட்டேன் என்று,

     சூள் உரைத்தே --- சபதமொழி கூறி,

     முன் மருவினரை வெறுத்த --- ஏற்கனவே தம்மை மருவி இருந்தவரை வெறுத்து விலக்கி,

     ஏம திரவியம் அது உடைத்தாய் --- பொன் முதலிய பொருள்களை அடையப் பெற்று,

     பின் வருகும் அவர் எதிரே போய் --- பின்னர் வருபவர்களின் எதிரிற் சென்று,

     பயில் பேசி --- இரகசிய வார்த்தைகளைப் பேசி,

     இரவு பகல் அவர்க்கு ஆன பதமை பல பட பேசி --- இரவும் பகலும் அவர்கட்குப் பிரியமான பதங்களை பலவாறு பாடி,

     உறு பொருள் கொள் விலைமாதர் --- அவர்களிடம் உள்ள பொருள்களைக் கவர்கின்ற (பறிக்கின்ற) விலை மாதர்களுடைய,

     பட பார வலைபடுதல் தவிர்த்து --- அழிந்துபடுவதற்கு ஏதுவான வலையில் வீழ்வதை நீக்கி,

     ஆள --- அடியேனை ஆண்டருள,

     மணி பொருவு பதத்தாள --- மணி புனைந்த பாதங்களையுடைய,

     மயிலின் மிசை வரவேணும் --- மயில் மீது வந்தருள வேணும்.

பொழிப்புரை


         தயிரைத் திருடியவன் என்ற வசைமொழி புகன்ற கோபிகை மாதர்களிடம் திருவிளையாடல் புரிந்த திருமாலின் திருமருகரே!

         தமிழ் இனிது வழங்கும் சீகாழி திருவிடைமருதூர், வேதாரணியம், திருமருகல், தநுக்கோடி என்ற திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெற்றருளிய பெருவாழ்வே!

         வயல்களில் வாழ்கின்ற மீன்கள் விண்ணில் உறைகின்ற நட்சத்திரங்களுடன் மாறுபட்டு மிகுந்த போர் செய்து வென்று மீளுகின்ற தன்மை வாய்ந்த பழநி மலையில் வாழ்கின்றவரே!

         தினைப்புனத்தில் காவல் புரிவதில் வல்ல வள்ளிபிராட்டியாரின் தனங்களைத் தழுவுகின்ற திருத்தோளரே!

         தேவர்கள் தொழுகின்ற பெருமிதம் உடையவரே!

         உயிர் இந்த உடம்பை விட்டு நீங்குகின்ற வரை உம்மைக் கூடி இருக்கும் தொழிலை ஒரு போதும் நழுவ விடுவதில்லை என்று சபதம் புரிந்து முன் பொருள்களை எல்லாம் அடையப் பெற்று, பின்னே வருகின்றவர்களின் எதிர் சென்று, இரகசிய உரைகளைப் பேசி, இரவு பகலாக அவர்க்கான பதங்களைப் பலவாறு பாடி அவரிடம் உள்ள பொருள்களைப் பறிக்கின்ற விலைமாதர்களின், அழிவதற்கு ஏதுவான வலையில் விழுவதைத் தவிர்த்து, அடியேனை ஆட்கொள்ளும் பொருட்டு, மணிபுனைந்த பாதங்களையுடைய மயிலின்மீது வந்தருள வேண்டும்.

விரிவுரை


உயிர்க்கூடு விடுமளவும்..........எனவே சூள் உரைத்து ---

இத் திருப்புகழில் விலை மகளிரது பொய்யொழுக்கத்தைச் சுவாமிகள் புகல்கின்றனர்.

தம்பால் வந்து மருவியுள்ள ஆடவர்களது பணம் காலி ஆனவுடன், அவர்களை முடுக்கி ஓட்டுவர். பின் வந்தவர்களிடம் மிகவும் அன்புடன் பழகி, “உம்மை என் உயிர் பிரிகின்ற வரை பிரியமாட்டேன், இது சத்தியம்” என்றெல்லாம் கூறி, அவர்கள் பால் உள்ள செல்வம் முழுவதும் பறித்துக் கொண்டு, அவர்களையும் அகற்றி, பின்னே எவன் வருவான் என்று எதிர்பார்த்து நிற்பர்.

அவ்வாறு எதிர்பார்த்தபடி தம்பால் வந்த ஆடவர்களிடம் பலப்பல பதங்களைப் பாடியும், இரகசிய வார்த்தைகளைப் பேசியும் பணம் பறிப்பர்.

மணி பொருவு பதத்தான மயில் ---

எம்பெருமான் ஏறி வருகின்ற மயிலின் பாதங்களில் இனிய ஒலியுடன் கூடிய மணிகள் கட்டியிருக்கும்.

தமிழ்க் காழி ---

திருஞானசம்பந்த சுவாமிகள் திருவவதாரம் புரிந்து திருநெறிய தமிழாகிய தேவாரம் பாடப்பெற்ற, தமிழ் மணம் வீசும் திருத்தலம் சீகாழி.

தநுக்கோடி ---

இது இராமேச்சுரத்துக்கு அருகில் உள்ள நீராடு கடற்றுறை.

நீடுதநுக் கோடியினை நினைத்தாலும் புகழ்ந்தாலும் நேர்கண்டாலும் வீடு பெறல் எளிதாகும்”        --- சேதுபுராணம்.

குழகர் ---

வேதாரணியத்துக்கு அருகே கோடி என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள சிவ மூர்த்திக்குக் குழகர் என்று பேர். “கோடிக்குழகர்” என வழங்கும்.

செயிற் சேல் ---

செய்யில் சேல், செய்-வயல். சேல்-மீன். பழநியின் கண் வயலிலுள்ள மீன்கள் விண்ணளவு தாவி விளையாடி, விண் மீன்களுடன் போர் செய்து வெற்றி பெறுகின்றன என்று சுவாமிகள் கூறுகின்றனர். இது உயர்வு நவிற்சியணி எனப்படும்.

கருத்துரை

திருமால் மருகா! பழநிவேலா! மாதர் வலைப்படா வண்ணம் மயிலின்மீது வந்து ஆட்கொள்வாய்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...