பழநி - 0122. உலக பசுபாச





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உலகபசு பாச (பழநி)

பாச பந்தங்களினால் அறிவு திரியாமல் படிக்கு முருகன் அருள் பெற

தனதனன தான தந்த ...... தனதான
     தனதனன தான தந்த ...... தனதான


உலகபசு பாச தொந்த ...... மதுவான
     உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்

மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
     மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்

சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
     சரவணப வாமு குந்தன் ...... மருகோனே

பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
     பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


உலகபசு பாச தொந்தம் ...... அதுவான
     உறவு,கிளை, தாயர், தந்தை, ...... மனை,பாலர்,

மலசல சுவாச சஞ்ச ...... லம் அதால் என்
     மதிநிலை கெடாமல் உன்தன் ...... அருள்தாராய்.

சலம், றுகு, பூளை, தும்பை, ...... அணி சேயே!
     சரவண பவா! முகுந்தன் ...... மருகோனே!

பலகலை சிவ ஆகமங்கள் ...... பயில்வோனே!
     பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.


பதவுரை

       சலம் --- கங்காதேவியையும்,

     அறுகு --- அறுகம் புல்லையும்,

     பூளை --- பூளை மலரையும்,

     தும்பை --- தும்பை மலரையும்,

     அணி சேயே --- தரித்துக் கொண்டுள்ள சிவமூர்த்தியின் திருக்குமாரரே!

      சரவணபவா --- சரவணத் தடாகத்தில் தோன்றி அருளினவரே!

      முகுந்தன் மருகோனே --- திருமாலினரது மருகரே!

      பலகலை --- பற்பல நூல்களையும்,

     சிவ ஆகமங்கள் --- சிவசம்பந்தமான ஆகமங்களையும்,
    
     பயில்வோனே --- திருவாய் மலர்ந்தருளியவரே!

      பழநிமலை வாழ வந்த பெருமாளே --- பழநிமாமலை இனிது சிறப்புறுமாறு அதில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

      உலக பசுபாச தொந்தம் அது ஆன --- உலகத்தில் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தும் மல பந்த சொரூபங்களான,

     உறவு --- சுற்றம்,

     கிளை --- சகோதரர்,

     தாயர் தந்தை --- தாய் தந்தையர்,

     மனை --- மனைவி,

     பாலர் --- குழந்தைகள் முதலியவர்களாலும்,

     மல சல சுவாச சஞ்சலம் அதால் --- மலஜல உபாதைகளாலும் பிராண வாயுவினாலும் உண்டாகும் துன்பங்களாலும்,

     என் மதி நிலை கெடாமல் --- அடியேனுடைய அறிவுநிலையானது கெட்டுப் போகாமலிருக்குமாறு,

     உன் தன் அருள் தாராய் --- தேவரீரது திருவருளைத் தந்து காத்தருள வேண்டும்.

பொழிப்புரை

         கங்கா நதியையும் அறுகம் புல்லையும் பூளைப் பூவையும் தும்பை மலரையும் அணிந்து கொண்டுள்ள சிவகுமாரரே!

         சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!

         திருமால் மருகரே!

         பற்பல சாத்திரங்களையும் சிவாகமங்களையும் சொல்லி யருளினவரே!

         பழநிமலை சிறந்து உய்யுமாறு அதில் எழுந்தருளியுள்ள பெருமித முடையவரே!

         உலகத்தின்கண் உயிர்களைக் கட்டுப்படுத்தும் மலபந்தங்களாகிய சுற்றத்தார் துணைவர் தாய் தந்தையர் மனைவி மக்கள் முதலியவராலும், மலஜல பிராண வாயுக்களாலும் உண்டாகும் துன்பங்களாலும் அடியேனுடைய மெய்யறிவு நிலை அழியாமலிக்குமாறு தேவரீருடைய திருவருளைத் தந்து ஆட்கொள்ளல் வேண்டும்.


விரிவுரை

உலக பசுபாச தொந்தம் ---

பதியை யறிந்து அடைய ஒட்டாமல் பசுக்களைக் கட்டுப்படுத்தி மயக்குவிப்பது பாசம். பசுக்களுக்குப் பாசம், செம்பில் களிம்பு போல் வேறு காரணமின்றி அநாதியே உடன் இருந்து வருதலின், ஆன்மா தானே உணருமாறு இன்றிக் கருவிகளைப் பற்றி நின்று உணர்வதாயிற்று.

அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று; அவை
சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத் தைத்தே.
                                                            --- சிவஞான போதம் 4-ஆம் சூத்திரம்

பாச சம்பந்தத்தினால் ஆன்மா பசுவெனப்பட்டது. (பதிஞானத்தால்) பாச நீக்கமுற முத்தான்மா பசுவெனப்படாது.

பாசமற்ற வேதகுரு” பரனாகிய குமரேசனுடைய திருவடி ஞானத்தாலே, பாசத்தை அறுத்து அத்துவித முத்தியை அடைதல் வேண்டும்.

உறவு கிளை.............மனை பாலர் ---

பாசத்தினால் வந்த மயக்க வுணர்வினால் துணையாகாத உறவினர் மனைவி மகார் முதலியவரைத் துணை என நம்பி, வறிதே நாள்களைக் கழித்து, அவமே கெட்டு, ஆன்மாக்கள் அல்லற்படுகின்றன.


மதிநிலை கெடாமல் ---

ஆன்மாக்களுக்கு உள்ள அறிவை ஆணவமலம் மறைத்து அறிய விடாமல் தடுக்கின்றது. அதனால் ஆன்மா அறிவு கெட்டு தன் உண்மையையும் தலைவன் உண்மையையும் அறியாமல் தவிக்கின்றது.

ஞான சொரூபமாயுள்ள சிவம் என்ற அருட்பெருஞ் ஜோதி ஆன்மாவிற்கு உள்ளும் புறமும் வியாபித்திருக்கும் போது, ஆணவ மலம் எனும் இருள் ஆன்மாவை மறைப்பது யாங்ஙனம் எனின் - “கூகைக்குச் சூரியன் இருட்டாக காணப்படுமாறு மூடனுக்குச் ஸ்வப்ரகாச பராநந்தத்தில் இருட்டுள்ளதாகும்” என்பது அறியப்படுகின்றது.

தன் உயிர்க்கு உயிராய் நிற்கும் கடவுள் தன்மையே “ஸவப்ரகாச பராநந்தம்” எனப்பட்டது. இங்ஙனம் கூகை பகல் குருடாய் இருத்தற்கு அதன் விழிக் குற்றமேயாம். சூரியன் குற்றமன்று. அதுபோல் யாண்டும் நீக்கமற நிறைந்து ஞானப் பகலாகவே உள்ள தெய்வத்தைத் தரிசியாது, குருடாய் இருத்தற்கு ஆணவ மலக்குற்றமேயாம் என்பதனை உணர்க. பூத இருளும் ஆணவாதி ஐவகைப் பாசங்களும் சிவபரம்பொருளை மறையாமே சீவனது அறிவையே மறைக்குமென்பதையும் தெள்ளிதின் ஓர்க. யாண்டும் ஞானப்பகலாய் இருத்தலினாலும், அவ்வாறிருக்கும் பதிக்குச் சுட்டியறியக் கிடப்பது ஒன்று இன்மையாலும், அப்பதியை அறிய அறிவு இருந்தும் பசு அறியாது நிற்றலினாலும், அறிய அறிவு இல்லாப் பாசமும் அப்பதியை மறையாது அப்பிரகாசமாய் கிடத்தலினாலுமே சிவஞானபோதம் 7ஆம் சூத்திரம் “யாவையும் சூனியம் சத்து எதிர்” என்று உபதேசிக்கின்றது. விளங்கி நில்லாமையே சூனியம் எனப்பட்டது. கூகைக்கு இருளில் பார்வை நிகழுமாறு, சீவனுக்கும் அஞ்ஞான தசையில் சிற்றறிவு நிகழும்.

ஆதலால் அவ் ஆணவ மறைப்பினின்று நீங்கி, சிவத்தை அடைய அருளின் துணை அவசியமாகின்றது. அதனைத் தான் “சத்திநிபாதம்” என்பர். சக்தி- அருள், நி-மிகுதி, பாதம்-பதிதல், (விழுதல்) மிகுதியாக அருள்பதிதல் என்பதாம்.

அத் திருவருளைத் தரவேண்டும் என்று சுவாமிகள் இப்பாசுரத்தில் எம்பெருமானை வேண்டுகின்றார்.

சிவாகமங்கள் ---

ஆகமம் என்னும் வடமொழிப் பதம் “வந்தது” என்று பொருள்படும். “எங்கிருந்து வந்தது?” என்ற வினாவுக்குப் ‘பரம ஆப்தரது திருநாவிலிருந்து வந்தது’ என்பது விடையாகும். பரமாப்தர் சிவபெருமானே ஆம். சிவபெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களையும் விளக்கி ஆகமங்களைக் கூறினார்.

  நாலாரு மாகமத்தின் நூலாய ஞானமுத்தி
       நாடோறு நானுரைத்த    நெறியாக”       --- (நாவேறு) திருப்புகழ்

ஐம்முகருக்கும் ஆறுமுகருக்கும் பேதம் இன்று. ஆதலின் குமாரக் கடவுளே ஆகமங்களைக் கூறினார் என்றனர்.


முகுந்தன் ---

முத்தியைக் கொடுப்பவர். மு-முத்தி, கு-பூமி, த-இவற்றைத் தருபவர்; தன்னை வழிபடு மடியவர்கட்குத் தனது பரமபதத்தையும் இந்த உலக சுகத்தையும் அருள் புரிபவர் என்றும் பொருள்படும்.

கருத்துரை

சிவகுமாரரே! சரவணபவ! மாயன்மருக! வேதாகம வித்தக! பழநியாண்டவ! பாசத்தினின்று நீங்கி பதிஞானம் பெற்றுய்யத் தேவரீரது திருவருளைத் தந்தருள வேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...