பழநி - 0123. ஒருபொழுதும் இருசரண





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஒருபொழுதும் இருசரண (பழநி)

பிறவி அற நினைக்கின்றேன்; ஆசை அறவில்லையே.

தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
     தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான


ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே

பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
     பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
     தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
     விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஒருபொழுதும் இருசரண நேசத்தே வைத்து ...... உணரேனே,
     உனது பழநிமலை எனும் ஊரைச் சேவித்து ......அறியேனே,

பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே,
     பிறவிஅற நினைகுவன் என் ஆசைப் பாடைத் ...தவிரேனோ?

துரிதம் இடு நிருதர் புர சூறைக் காரப் ...... பெருமாளே!
     தொழுது வழிபடும் அடியர் காவல் காரப் ...... பெருமாளே!

விருதுகவி விதரண விநோதக் காரப் ...... பெருமாளே!
     விறல் மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.


பதவுரை


      துரிதம் இடு --- பாவத்தைச் செய்கின்ற,

     நிருதர் புர --- அசுரர்களுடைய நகரத்தை,

     சூறைக்கார பெருமாளே --- அவர்களுடைய ஆவியும் ஆக்கமும் கொள்ளை கொண்ட பெருமிதம் உடையவரே!

      தொழுது வழிபடும் --- தேவரீரை மெய்யன்போடு வணங்கி வழிபாடு செய்யும்,

     அடியர் --- தொண்டர்களுக்கு,

     காவல்கார பெருமாளே --- காவல்காரனாக இருந்து காத்தருளுகின்ற பெருமிதம் உடையவரே!

      விருது கவி --- விருது கூறுகின்ற கவிகளைப் பாடிய,
    
     விதரண --- வாக்கு வன்மையுடையவரே!

      விநோதக்கார பெருமாளே --- திருவிளையாடல் பல செய்யும் பெருமிதம் உடையவரே!

      விறல் மறவர் சிறுமி --- வலிமை பொருந்திய வேடர்களது தவத்தால் உதித்த வள்ளி நாயகியாருக்கு

     திருவேளைக்கார பெருமாளே --- நல்ல சமயத்தில் வந்து உதவி செய்த பெருமிதம் உடையவரே!

      ஒருபொழுதும் --- ஒரு வேளையாவது,

     இரு சரண --- தேவரீருடைய இரண்டு சரண அரவிந்தங்களில்,

     நேசத்து வைத்து உணரேன் --- அன்பைச் செலுத்தி வைத்து மெய்யுணர்வைப் பெற்றேனில்லை.

     உனது பழநிமலை எனும் --- தேவரீருடைய திருத்தலமாகிய பழநிமலை என்னும்,

     ஊரை சேவித்து அறியேன் --- திவ்விய க்ஷேத்திரத்தை அன்போடு வந்து தெரிசித்தேனில்லை.

     பெருபுவியில் --- பெரிய உலகத்தில்,

     உயர்வு அரிய வாழ்வை --- உயர்வு அரிதாகிய வாழ்வை,

     தீர குறியேன் --- ஒழிக்குமாறு குறித்தேனில்லை.

     (இத்தகைய அடியேன்)

     பிறவி அற நினைகுவன் --- பிறவி அற்றுப்போக வேண்டுமென்று எண்ணுகிறேன்.

     என் ஆசைப்பாடை தவிரேனோ --- என்னுடைய ஆசா பாசத்தை அறவே ஒழிக்கமாட்டேனோ?

 
பொழிப்புரை


         பாவங்களையே செய்யும் அசுரர்கள் வாழும் பட்டினத்தில் அவர்களுடைய உயிரையும் உடைமையையும் கொள்ளை கொண்ட பெருமாளே!

         மெய்யன்போடு வணங்கி வழிபாடு செய்யும் சீரடியார்களுக்கு காவல்காரனாக இருந்து பேரருள் புரியும் பெருமாளே!

         விருது கூறிக் கவிபாடியவருக்கு வன்மையுடையவரே!

         அற்புதத் திருவிளையாடல் புரியும் பெருமாளே!

         வலிமை மிக்க வேடர்களது குலத்தில் அவதரித்த வள்ளிநாயகியாருக்கு உரிய பருவத்தில் வந்து உதவி செய்த பெருமாளே!

     ஒரு சமயத்திலாவது தேவரீருடைய திருவடிக் கமலத்தில் அன்பை வைத்து மெய்யறிவு பெறுகின்றேனில்லை; தேவரீர் எழுந்தருளிய பழநிமலை யென்னும் திருத்தலத்தையாவது வந்து சேவித்தேனில்லை; உலகில் உயர்வற்றதாகிய வாழ்வை ஒழிப்பதற்குரிய உபாயம் எண்ணுகின்றேனில்லை, (இத்தகைய நற்குணமில்லாத அடியேன்) பிறவாத பெற்றியைப் பெறவேண்டு மென்று நினைக்கிறேன். (ஆனால், அப்பிறவிக்கு வித்தாகிய) ஆசையைவிட்டு ஒழிக்கமாட்டேனோ?


விரிவுரை


ஒருபொழுதும் இருசரண நேசத்தே வைத்து உணரேனே ---

     கதி பெற விரும்பும் ஒவ்வொருவரும் கதிக்கு நாதனாம் கந்தக் கடவுளின் கழல் இணைக் கஞ்சங்களிடத்து அன்பைச் செலுத்தி அமைதல் வேண்டும். அங்ஙனம் அன்பு வையாதார் ஒருபோதும் உய்யமாட்டார். பலகாலும் அன்பு வைத்து தைலதாரையைப் போல் இடையறாது உருகுதல் வேண்டும். அங்ஙனம் அன்பு செலுத்தும் ஆற்றல் இல்லாதவர் ஒருபொழுதாவது அப்பரமபதியின் அடி மலரில் அன்புவைத்து உருகவேண்டும்.

சரணகம லாலயத்தை அரைநிமிட நேரமட்டில்
 தவமுறை தியானம் வைக்க அறியாத        --- திருப்புகழ்


ஆங்காரமும் அடங்கார், ஒடுங்கார், பரம ஆநந்தத்தே
தேங்கார், நினைப்பு மறப்பும் அறார், தினைப்போது அளவும்
ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு
தூங்கார், தொழும்பு செய்யார், என் செய்வார் யமதூதருக்கே?  --- கந்தர்அலங்காரம்

உனது பழநிமலை எனும் ஊரைச் சேவித்து அறியேனே ---

பழநிமலை மிகச் சிறந்த தலம். “சிகரி அண்ட கூடம் சேரும் அழகார் பழநி” (ஆறுமுகம் ஆறுமுகம்) “அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை” (சரணகமலாலய) “பருதியின் ப்ரபை கோடியதாமெனும் வடிவு கொண்டருள் காசியின் மீறிய பழநியங்கிரி” (விதமிசைந்து) என்ற நம் சுவாமிகள் திருவாக்காலேயே இதன் பெருமையை உணரலாம். இம் மலை மீதேறி தண்டதரத் தனிப் பெருங்கடவுளைச் சேவிக்காவிடினும் அம் மலையைக் கண்ட மாத்திரத்திலேயே எல்லா வினைகளும் நீங்கப்பெற்று, இன்புறுவர் என்பது உலகறிந்த ஒன்றாம்.

பெருபுயிவில்..........உயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே ---

இந்த அடிக்கு, உயர்வுடைய இதனைச் செய்வேன் என்று ஆராய்ந்து, எண்ணினேனில்லை என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறும்போது தீர என்பது மிக என்று பொருள் தரும்.

பிறவி அற நினைகுவன் என் ஆசைப்பாடைத் தவிரேனா ---

பிறவிக்கு வித்து அவாவேயாம், ஏனைய விதைகள் உரிய காலத்தில்தான் விளையும். கை பலனுடையார்கள் விதைத்தால் தான் நன்றாக விளையும். சில விதைகள் முளையாமலும் போய்விடும். அவா என்ற வித்து எந்தக் காலத்திலும் விளையும், யாருக்கும் விளையும்; ஒன்றுகூடத் தவறாமல் விளையும்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
 தவாஅப் பிறப்பு ஈனும் வித்து”        --- திருக்குறள்

ஒவ்வோர் அவாவும் ஒவ்வொரு பிறப்பைத் தருகின்றது. எண்ணில்லாத அவாக்களை உடையேம். ஆதலால் எண்ணில்லாத பிறவிகளை அடைந்து கொண்டே வருகின்றோம். சிவத்தல யாத்திரை செய்து வந்த குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தைக் கண்டு அதில் தங்குவதற்கு அவா உற்றதனால் பட்டினத்தடிகளாகப் பிறந்தான். ஆலால சுந்தரர் திருக்கைலாய மலையில் திருநந்தவனத்தில் கமலினி அனிந்திதை என்ற பெண்ணைக் கண்டு சிறிது அவாவுற்றதால், திருநாவலூரில் வந்து பிறக்குமாறு ஏற்பட்டு விட்டது. ஜடபரதர் சரிதமும் இங்ஙனமேயாம்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
 ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்”    --- திருமூலர்

தொழுது வழிபடும் அடியர் காவற்கார ---

இது முருகப் பெருமானுடைய பெருங்கருணையின் எளிமையைத் தெரிவிக்கின்றது. தனிப்பெருந் தலைவராகிய முருகப்பெருமான், தன்னை வழிபடும் அடியார்களுக்கு புறக்காவலாக இருந்து, இடர்களை நீக்கி இன்பம் வழங்குவதோடு, உளத்தில் காவலாக இருந்து, தீய எண்ணங்கள் வந்து நுழையாவாறு காவல் புரிந்து காத்தருளுகின்றார்.

அரனார்க்கு அதிக பொருள் காட்டுஅதிப,
 அடியார்க்கு எளிய      பெருமாளே”   --- (நிலையாப் பொருளை) திருப்புகழ்

செஞ்சொல் அடியார்கள் வாரக்கார!”  ---(முந்துதமிழ்) திருப்புகழ்

அடியார்க்கு நல்ல பெருமாள்”    --- கந்தர்அலங்காரம்.

"அடியார்க்கு நல்ல பெருமாளே".  ---  (குடிவாழ்க்கை) திருப்புகழ்.

விருது கவி விதரண ---

உபயகுல தீப துங்க விருது கவி ராஜசிங்க”  --- (கருவினுரு) திருப்புகழ்
 

கருத்துரை

அசுரர் குலகால! அடியார்க்கு எளியவரே! விருதுகவி ராஜ! வள்ளி மணவாள! ஒருபொழுதும் தேவரீரது திருவடியில் அன்பு வைத்திலேன்; பழநிமலையைச் சேவித்திலேன்; உலக வாழ்வை ஒழிக்கிலேன்; பிறவி அற எண்ணுகின்றேன்; ஆசைப் பாடை ஒழிக்க மாட்டேனோ?

                 

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...