பழநி - 0124. ஒருவரை ஒருவர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஒருவரை ஒருவர் (பழநி)

திருநீறு என்னைப் பூசு, திருவடியைத் தந்து சிவகதி அருள்

தனதன தனன தான தனதன தனன தான
     தனதன தனன தான ...... தனதான


ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
     ஒருகுண வழியு றாத ...... பொறியாளர்

உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
     உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின்

வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
     மறைவரி னனைய கோல ...... மதுவாக

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
     வடிவுற அருளி பாத ...... மருள்வாயே

திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
     திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்

திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
     திருநட மருளு நாத ...... னருள்பாலா

சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
     துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே

சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
     தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர், மத விசாரர்,
     ஒருகுண வழி உறாத ...... பொறியாளர்,

உடல் அது சதம் எனநாடி, களவுபொய் கொலைகள் ஆடி,
     உற நமன் நரகில் வீழ்வர்,...... அதுபோய், பின்

வரும் ஒரு வடிவ மேவி, இருவினை கடலுள் ஆடி,
     மறைவர், இன் அனைய கோலம் ...... அதுவாக,

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
     வடிவு உற அருளி பாதம் ...... அருள்வாயே.

திரிபுரம் எரிய, வேழ சிலை மதன் எரிய, மூரல்
     திருவிழி அருள் மெய்ஞ் ஞான ...... குருநாதன்,

திரு, சரஸ் வதி, மயேசுவரி, இவர் தலைவல் ஓத
     திருநடம் அருளும் நாதன் ......அருள்பாலா!

சுரர் பதி, அயனும், மாலும் முறையிட, அசுரர் கோடி
     துகள் எழ விடு மெய்ஞ் ஞான ...... அயிலோனே!

சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி
     தொழ, முது பழநி மேவு ...... பெருமாளே.


பதவுரை

      திரிபுரம் எரிய --- திரிபுரங்கள் எரிந்து அழியவும்,

     வேழ சிலை மதன் எரிய --- கரும்பு வில்லையுடைய மன்மதன் எரிந்து அழியவும்,

     மூரல் --- புன்சிரிப்பாலும்,

     திருவிழி --- திருக்கண்ணாலும்,

     அருள் --- அருளிய,

     மெய்ஞான குருநாதன் --- உண்மை அறிவை உணர்த்தும் குருநாதரும்,

     திரு --- இலக்குமி

     சரஸ்வதி --- கலைமகள்,

     மயேசுவரி --- மகேச்வரி ஆகிய,

     இவர் --- இவர்களுடைய,

     தலைவர் ஓத --- தலைவர்களான பிரமா திருமால் உருத்திரன் என்ற மூம்மூர்த்திகளுக்கும் துதி செய்ய,

     திருநடம் அருளும் நாதன் அருள் பாலா --- திருநடனம் புரிகின்ற தலைவனும் ஆகிய சிவபெருமான் பெற்ற திருக்குமாரரே!

      சுரர் பதி --- தேவேந்திரனும்,

     அயனும் --- பிரமதேவரும்,
    
     மாலும் --- விஷ்ணுவும்,

     முறையிட --- காத்தருள வேணும் என்று முறையிட

     அசுரர் கோடி துகள் எழ விடு --- கோடிக்கணக்கான அசுரர்கள் அழிந்து தூளாகுமாறு செலுத்திய

     மெய் ஞான அயிலோனே --- மெய்ஞ்ஞானமாகிய வேலாயுதரே!

      சுக குறமகள் மணாளன் என --- இன்பத்தை நல்கும் வள்ளியின் கணவன் என்று,

     மறை பலவும் ஓதி தொழ --- வேதங்கள் பலவும் துதி செய்து வணங்க,

     முது பழநி மேவு --- பழைமையான பழநியில் விரும்பி வாழ்கின்ற,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

      ஒருவர் தேறி அறிகிலர் --- ஒருவர் சொல்வதை மற்றொருவர் இன்னதென்று தேர்ந்து அறியமாட்டாதவர்களாகிய

     மத விசாரர் --- மதவாதிகளும்,

     ஒரு குண வழி உறாத --- ஒரு கொள்கை வழியில் நிலைத்து நிற்காத,

     பொறியாளர் --- பொறிகளை உடையவர்களுமான மனிதர்க்கு,

     உடல் அது சதம் என நாடி --- இந்த உடம்பு நிலையானது என்று கருதி,

     களவு பொய் கொலைகள் ஆடி உற --- திருடு பொய் கொலை முதலிய தீமைகளைச் செய்து கொண்டு வர,

     நமன் நரகில் வீழ்வர் --- இயமனுடைய நரகத்திலே விழுவார்கள்;

     அது போய் பின் --- அந்த நிலை போன பின்னர்,

     வரும் ஒரு வடிவம் மேவி --- வினையினால் வருகின்ற ஒரு உடம்பை எடுத்து,

     இருவினைக் கடலுள் ஆடி --- நல்வினை தீவினை என்ற கடலினுள் முழுகி,

     மறைவர் --- மறைந்து போவார்கள்.

     இன் அனைய கோலம் அது ஆக --- இத்தகையோரது வாழ்வு, இப்படியாக (அடியேன் அங்ஙனம் ஆகாமல்),

     மருவிய பரம ஞான சிவகதியைப் பெறுக --- திருவருள் பொருந்திய உயர்ந்த ஞான மயமான சிவகதியைப் பெற,

     வடிவு உற நீறு அருளி --- ஞானவடிவு அடையத் திருநீற்றினை அடியேனுக்குத் தந்து,

     பாதம் அருள்வாயே --- உமது திருவடியைத் தந்து அருள் புரிவீர்.

பொழிப்புரை


         முப்புரங்கள் எரிந்து பொடி படுமாறு, புன்னகை புரிந்தவரும் கரும்பு வில்லையுடைய மன்மதன் எரியுமாறு திருக்கண் திறந்தருளியவரும், மெய்ஞ்ஞானக் குருநாதரும், திருமகள், கலைமகள், மகேசுவரி என்ற மூவருக்கும் தலைவர்களான அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் துதி செய்ய திருநடனம் செய்கின்ற தலைவரும் ஆகிய சிவபெருமான் ஈன்ற திருப்புதல்வரே!

         தேவர் கோமானும், பிரமாவும், நாராயணரும் முறையிட, கோடிக்கனக்கில் அசுரர்கள் மாண்டு தூளாகுமாறு மெய்ஞ்ஞான வேலை விடுத்தவரே!

         இன்பத்தை நல்கும் வள்ளி நாயகியின் கணவன் என்று வேதங்கள் பலவும் துதித்துத் தொழ, பழமையான பழநியில் விரும்பி உறைகின்ற பெருமிதம் உடையவரே!

         ஒருவரை யொருவர் தேர்ந்து அறிகிலாராயும் மத விசாரர்களாயும் உள்ள மனிதர்கள் இந்த உடம்பு நிலையானது என்று எண்ணி, திருடு, பொய், கொலை முதலிய பாவங்களைச் செய்துகொண்டே இருந்து, முடிவில் இயமனுடைய நரகில் விழுவார்கள். அதற்குப் பின்னர், வினையால் வருகின்ற ஒரு பிறப்பை எடுத்து, நல்வினை, தீவினை, என்ற கடலில் முழுகி மறைந்தொழிவார்கள். இத்தகைய தன்மை இதுவாக, அதுபடி அடியேன் அழியாமல், திருவருள் சேர்ந்த பெரிய ஞான சிவகதியைப் பெறவும், ஞான வடிவுறவும் திருநீறு தந்தருளி, உமது பாதமலரை அடியேனுக்குக் கொடுத்தருள வேணும்.


விரிவுரை

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ---

உலகிலே மக்கள் ஒருவரை ஒருவர் இன்னார் இனியார் என்று தெளிவாக அறியாது மயங்குகின்றார்கள். உடன் பிறந்தானான அர்ச்சுனனைக் கர்ணன், பகைவன் என்று கருதிப் பகைத்தான்.

இதம் சொன்ன வீடணனை, இராவணன் வெறுத்தான். கெடுமதி கூறிய மகோதரனை மதித்தான்.

அன்றி ஒரு மதத்தினர் கூறும் திறத்தினை மற்றொரு மதத்தினர் தெளிவாக அறியாத அவர்களுடன் தர்க்கமிட்டுக் கலகம் புரிகின்றார்கள்.

பசுக்கள் பல நிறமாயினும் பால் ஒரு நிறம்தானே?

நதிகள் வளைந்து வளைந்து பல்வேறு வழிகளில் சென்றாலும் முடிவில் கூடுகின்ற இடம் கடல்தானே?

அதுபோல் சமயங்கள் முடிகின்ற இடம் ஒன்றுதான், ஆகவே சமயவாதம் புரிதல் கூடாது. இறையருளை நாடி ஒன்றுபட வேண்டும்.

சமயவாதம் புரிவோர் நரகிலே ஒற்றுமைப்பட்டு வாழ்வார்கள்.

காதிமோதி வாதாடு நூல்கற்றிடுவோரும்
    .............................................................................
மாறிலாத மாகாலனூர்புக் கலைவாரே”     ---  திருப்புகழ்

ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள,
என்றது போலும் இருமுச் சமயமும்,
நன்று இது தீது இது என்று உரை ஆதர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.      ---  திருமந்திரம்.

சமயவாதிகள் தத்தம் மதங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்.            --- மணிவாசகம்.


ஒருகுண வழியுறாத பொறியாளர் ---

ஒரு குணமும், ஒருவழியில் நிலைத்து நிற்கும் உறுதியும் இல்லாத பலப்பல நெறி செல்லும் நானாவிகாரிகள்.

ஒன்றிலே உறுதியாக நிற்கவேண்டும். ஒருவன் நீர் வேண்டி நிலத்தில் பத்து அடி ஆழம் வெட்டினான். நீர் இல்லை என்று வேறு இடத்தில் பத்து அடி ஆழம் வெட்டினான். நீர் இல்லை. இப்படி இருபது இடத்தில் பத்துப் பத்து அடிகளாகக் குழிவெட்டி நீர் கிடைக்காது வருந்திச் சென்றான். ஒரே இடத்தில் ஐம்பது அறுபது அடி வெட்டியிருந்தால் நிச்சயமாக அவனுக்கு நீர் கிடைத் திருக்கும். இருபது இடங்களில் இருநூறு அடிகள் வெட்டியும் நீர் கிடைக்கப் பெறாது வருந்தினான். எனவே ஒரு மூர்த்தியை உறுதியாகப் பற்றி உபாசனை புரியவேண்டும்.

    தரையில் வெகுவழி சார்ந்த மூடனை” ---    திருப்புகழ்

உடலது சதமெனாடி ---

சதம் என நாடி என்று பதப் பிரிவு செய்துகொள்க. சதமில்லாத பொய்யுடலை மெய்யென்று எண்ணி இப்புலாலுடம்பை ஓம்புதற்கே வாழ்நாளை எல்லாம் செலவழிப்பர். சிலர் அருமையாக வீடுகட்டி சுண்ணாம்பு அடித்து வர்ணம் தடவி, தூண்களுக்கு உரைபோட்டு அழகு படுத்துவர். இந்த வீடு நமக்கே சொந்தம் என்று எண்ணி இறுமாந்திருப்பர். அதற்கு வரியுஞ் செலுத்துவார்கள். ஆனால் அந்த வீட்டில் வாழும் பல்லி, எட்டுக்கால் பூச்சி கரப்பான் பூச்சி முதலியவை இந்த வீடு நமக்குத் தான் சொந்தம் என்று கருதிக் கொண்டிருக்கின்றன. இவன் அந்த பிராணிகள் மீது வழக்குத் தொடர முடியுமா? அதுபோல், இந்த உடம்பு நமக்கே சொந்தம் என்று நாம் கருதுகின்றோம். இந்த உடம்பில் வாழும் புழுக்கள் தமக்குச் சொந்தம் என்று மகிழ்ந்திருக்கின்றன. அன்றியும் இவ் உடம்பை நெருப்பு தனக்குச் சொந்தம் என்று எண்ணியிருக்கின்றது. மயானத்தில் உள்ள பூமி இவ்வுடல் தனக்கே சொந்தம் என்று எண்ணுகின்றது. பருந்துகள் தமக்கு உரியதென்று உன்னி இருக்கின்றன. நரிகள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கின்றன; நாய் நமக்கே இது உரியது என்று எண்ணுகின்றது. இத்தனை பேர் தத்தமக்குச் சொந்தம் என்று எண்ணுகின்ற உடம்பை நாம் எழுந்தவுடன் சிவநாம்ம்ம கூறாமலும், பல் தேய்க்காமலும் கூட, உண்டு உடுத்து வளர்க்கின்றோம். என்னே மதியீனம்?

எரி எனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும், இந்த மண்ணும்
சரி எனக்கு என்னும், பருந்தோ எனக்கு எனும், தான் புசிக்க
நரி எனக்கு என்னும், புன் நாய் எனக்கு எனும், இந்நாறுஉடலைப்
பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன பேறு எனக்கே.      --- பட்டினத்தார்.

காட்டி லேயியல் நாட்டி லேபயில்
     வீட்டி லேஉல ...... கங்களேசக்
காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
     யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ..        (ஏட்டிலே) திருப்புகழ்.
 

களவு ---

பிறருடைய பொன்னையும் பொருளையும் கவர்தல் பெரும் பாவம். ஐந்து மகா பாவங்களில் ஒன்று திருடு.

பிறருடைய பொருளைக் கவரவேண்டும் என்று மனத்தினால் எண்ணுதல் கூட பாவமாகும்.

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.                  --- திருக்குறள்.

பொய் ---

பொய்மை எல்லாத் தவங்களையும் அழித்துவிடும்.

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே” --- தாயுமானார்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.               --- திருக்குறள்

சூர்ப்பணகையைக் கொடியவள் என்று கூற வந்த கம்பநாடார், வடவைத் தீயினும் கொடியாள், பாலை வனத்தினும் கொடியாள், ஆலாலவிடத்தினும் கொடியாள் என்று கூறினாரில்லை.

பொய்தங்கும் நெஞ்சில் கொடியாள்” என்றார். (பொய் தங்குகின்ற நெஞ்சினும் கொடியவள்).

கொலை ---

முத்தி உலகிற்கு முதற்படி உயிர்க்கருணை, உயிர்களிடம் கருணை இல்லாதவன் இறைவனுடைய கருணையைப் பெறமாட்டான். ஆதலால் எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் கருதல் வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டேனும் உயிர்களைக் கொல்லுதல் கூடாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.                    --- திருக்குறள்

தருமங்கட்கெல்லாம் மிகப்பெரிய தருமம் கொல்லாமை; பாவங்கட்கெல்லாம் பெரிய பாவம் கொலை.

நல்லாறு எனப்படுவது யாதெனில், யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.                   ---  திருக்குறள்

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை.                ---  திருக்குறள்


ஆடி உற நமன் நரகில் வீழ்வர் ---

முன் கூறிய களவு பொய் கொலை முதலிய கொடுமைகளைச் செய்து வீணே மடிந்து நரகிலே அழுந்துவார்கள். இருளும், பொறுக்க முடியாத வெப்பமும் நாற்றமும் நிறைந்த வுலகம் நரகம்.

அரசாங்கத்தில் களவு முதலிய பாவம் புரிவார்க்குச் சிறைச்சாலையை அமைத்திருப்பது போல், பாவிகட்கு இறைவன் நிரையத்தை அமைத்திருக்கிறார் என அறிக.

கரப்பவர் தங்கட்கு எல்லாம்
 கடுநரகங்கள் வைத்தார்”                 ---  அப்பர்.

அதுபோய் பின்வருமொரு வடிவமேவி ---

இங்ஙனம் தீமை புரிந்தோர் நரகிடைக் கிடந்து துன்பத்தைத் துய்த்த பின், மிச்ர கருமங்களைஅநுபவிக்கும் பொருட்டு இருவினைப் பயனால் ஒரு உடம்பை எடுத்து உயிர் பிறக்கின்றது.

இப்படி வேறு வேறு பிறப்பை எடுத்து எடுத்து மாறி மாறிப் பிறந்து ஆன்மா எத்தனையோ உகாந்த காலமாக உழலுகின்றது.


இருவினை கடலுள் ஆடி மறைவர் ---

நல்வினை தீவினை என்ற இரு வினைதான் பிறவிக்குக் காரணம். வினையினால் வந்தது இந்த வுடம்பு.

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி”  ---  சிவபுராணம்

இருவினையின் இடர்கலியொடாடி நொந்து நொந்து”
                                                                  ---  (ஒருவரையும்) திருப்புகழ்

மருவிய பரம ஞான சிவகதி பெறுக ---

திருவருள் மருவிய உயர் ஞானமாகிய சிவகதியை எனக்குத் தந்தருள வேண்டும்” என்று இறைவனிடம் யாசிக்கின்றார்.


நீறு வடிவுற அருளி ---

ஞான வடிவு பெறும் பொருட்டு திருநீற்றினைத் தருவாய்” என்கின்றார்.


வேழ சிலை மதன் எரிய மூரல் திருவிழி அருள் ---

வேழம்-கரும்பு. கரும்பை வில்லாகவும், சுரும்பை நாணாகவும், அரும்பைக் கணையாகவும் கொண்டு இரும்பையும் உருகச் செய்வான் மன்மதன். மதனைச் சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்தனர்.

ஆசையை விளைவிக்கின்ற தேவதை மன்மதன். ஆசையை வலிமையால் அடக்கமுடியாது; ஆசையை அறிவினால் தான் அழிக்கமுடியும். இந்த நுட்பத்தை இது நமக்கு தெளிவாகத் தெரிவிக்கின்றது.

சிரித்தார்-புரத்தை எரித்தார். பார்த்தார்-மதனைத் தீர்த்தார்.

மெய்ஞ்ஞான குருநாதர் ---

சிவபெருமான் சனகாதிகட்குக் கல்லாலின் புடை அமர்ந்து, சின் முத்திரை காட்டி எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்ன குருநாதர்.

திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ---

அலைமகள், கலைமகள், மலைமகள் என்ற மூன்று தேவிகளின் கணவர்கள் அரி, அயன், அரன்.

இந்த மூவர்கட்கும் அப்பாற்பட்டவர் சிவ பெருமான். அதனால் வேதம் சிவபிரானை சதுர்த்த சப்தத்தால் துதிக்கின்றது.

ப்ரஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம்”
                                                                           -மாண்டூக்ய உபநிடதம்

மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்? .....திருவாசகம்

திருநடம் அருளுநாதன் ---

மூவரும் தேவரும் துதிக்கவும், சகல உலகங்களும் உயிர்களும் உய்யும் பொருட்டு சிவபெருமான் பொதுவில் இன்ப நடனம் புரிந்தருளுகின்றார்.

சுரர்பதி அயனுமாலு முறையிட ---

சூரபன்மனுடைய கொடுமைக்கு ஆற்றாத இந்திரனும் நான்முகனும் நாரணனும் “முருகா, முருகா” என்று முறையிட்டுத் துதி செய்தார்கள்.

அரியும் அயனோடு அபயம் எனவே
  அயிலை இருள்மேல் விடுவோனே”         --- (இருவர் மயலோ) திருப்புகழ்

அசுரர் கோடி துகளெழ விடுமெய்ஞ் ஞான அயிலோனே ---

கோடிக்கணக்கான அசுரர்கள் மாண்டு தூளாகுமாறு ஞானமே ஆய வேலை இறைவன் விடுத்தருளினார்.

சுககுற மகள் மணாளன் என மறை பலவு மோதி தொழ ---

வள்ளி இன்பரச சக்தி. ஆன்மாக்களுக்கு சுக நலத்தை வழங்குகின்றவள்.

அதனால் வேதங்கள் வள்ளிமணாளன் என்று துதி செய்து தொழுகின்றன.
  
 
முது பழநி ---

முது-பழைமை. பழநி-பழைமையான திருத்தலம்.

பழமையான மலை பழமலை இது. முதுகுன்றம் என்ற சிவத்தலம். இதனை வடமொழியில் மொழி பெயர்க்கத் தெரியாதவர்கள் விருத்தாசலம் என்று பேர் அமைத்து விட்டார்கள். விருத்தாசலம் என்றால் கிழமலை என்று பொருள். பழமலை கிழமலையாகி விட்டது.

கருத்துரை

பழனாபுரி ஆண்டவரே! சிவகதியும் திருநீறும் திருவடியும் தந்தருள வேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...