பழநி - 0125. ஓடி ஓடி அழைத்து வர




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஓடி ஓடி (பழநி)

பொதுமாதர் உறவு தவிர அருள்

தான தான தனத்தன தத்தன
     தான தான தனத்தன தத்தன
          தான தான தனத்தன தத்தன ...... தனதான


ஓடி யோடி யழைத்துவ ரச்சில
     சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
          னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி

நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
     கோட மீது திமிர்த்தத னத்தினில்
          நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ

நாடி வாயும் வயற்றலை யிற்புன
     லோடை மீதி னிலத்ததி வட்கையி
          னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங்

கோடு லாவி யமுத்துநி ரைத்தவை
     காவுர் நாட தனிற்பழ நிப்பதி
          கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஓடி ஓடி அழைத்து வர, சில
     சேடி மார்கள் பசப்ப, அதற்குமுன்
          ஓதி கோதி முடித்த இலைச்சுருள் ...... அது கோதி,

நீடு வாச நிறைத்த அகில், புழு
     கோட மீது திமிர்த்த தனத்தினில்
          நேசம் ஆகி, அணைத்த சிறுக்கிகள் ......உறவு ஆமோ?

நாடி வாயும் வயல் தலையில் புனல்
     ஓடை மீதில் நிலத்த திவட்கையில்,
          நாத கீத மலர்த்துளி பெற்ற அளி ...... இசைபாடும்

கோடு உலாவிய முத்து நிரைத்த, வை-
     காவுர் நாடு அதனில் பழநிப்பதி
          கோது இலாத குறத்தி அணைத்தருள் ...... பெருமாளே.


பதவுரை


     நாடி வாயும் வயல் தலையில் --- தேடி வாய்த்த வயலிடத்தும்,

     புனல் ஒடை மீதில் --- நீரோடை மீதும்,

     நிலத்த திவட்கையில் --- நிலத்தில் திளைத்து இன்புறத் தக்க இடத்தும்,

     அளி --- வண்டுகள்,

     நாத கீத --- நாத கீதஞ் செய்து,

     மலர் துளி பெற்று --- மலரில் உள்ள தேனையுண்டு,

     இசை பாடும் --- இனிது ஒலிக்கும்,

     கோடு உலாவிய --- சங்குகள் அசைந்தும்,

     முத்து நிரைத்த --- முத்துக்கள் வரிசையாகவுள்ளதுமாகிய,

      வைகாவுர் நாடு அதனில் --- வைகாவூர் நாட்டினில்,

     பழநி பதியில் --- பழநியம்பதியில்,

     கோதிலாத குறத்தி அணைத்து அருள் --- குற்றமில்லாத வள்ளி பிராட்டியைத் தழுவியருள் புரிகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     ஓடி ஓடி அழைத்து வர --- ஓடி ஓடி இளைஞர்களை அழைத்து வரவும்,

     சில சேடிமார்கள் பசப்ப --- சில பாங்கிமார்கள் பசப்பு வார்த்தைகள் கூறி ஏமாற்றவும்,

     அதற்கு முன் ஓதி கோதி முடித்து --- அதற்கு முன் தலை மயிரைச் சிக்கெடுத்து முடித்தும்,

     அ இலை சுருள் அது கோதி --- அந்த வெற்றிலைச் சுருளை ஒழுங்கு படுத்தியும்,

     நீடுவாசம் நிறைத்த அகில் --- மிகுந்த வாசனை நிறைத்து சேர்க்கப்பட்ட அகில்,

     புழுகு ஓட மீது நிமிர்ந்த --- புனுகு சட்டம் முதலிய வாசனைகள் மிகுதியாகப் பூசப்பட்ட,

     தனத்தினில் நேசம் ஆகி --- தனங்களில் ஆசை வைத்து,

     அணைத்த சிறுக்கிகள் உறவு ஆமோ --- தழுவிக்கொள்ளும் பொது மகளிரது உறவு ஆகுமோ?

பொழிப்புரை


         வளமை அதுவே தேடி வந்து அமைந்த வயலிலும், நீரோடைகளிலும், இன்புறத் தக்க நிலப் பரப்பிலும், வண்டுகள் மலர்களில் உள்ள தேனை உண்டு, நாதகீதம் செய்து இசை பாடவும், சங்குகள் உலாவவும், வரிசையாக முத்துக்கள் விளங்கவும், திகழும் வைகாவூர் நாட்டினில் பழநித் தலத்தில், குற்றமில்லாத வள்ளிப் பிராட்டியைத் தழுவி யருள்புரிகின்ற, பெருமிதம் உடையவரே!

         இளைஞர்களை ஓடி ஓடி அழைத்து வரவும், சில தோழிகள் பசப்புரை கூறவும், அதற்கு கூந்தலை முன் அழகாக முடிக்கவும், வெற்றிலைச் சுருளைத் திருத்தவும், நிறைந்த வாசனையுடைய அகில், புனுகு, முதலிய நறுமணம் பூசப்பட்ட கொங்கைகளில் ஆசைப்பட்டு தழுவப்பட்ட பொது மாதருடைய நட்பு கூடுமோ? (கூடாது.)

விரிவுரை
  
ஓடி ஓடி அழைத்து வர ---

விலைமகளிருடைய பரிசனங்கள் பொருளாசையால் அங்கும் இங்கும் தனம் படைத்தவர்களை அழைத்துக்கொண்டு போய் விடுவார்கள்.

சில சேடிமார்கள் பசப்ப ---

அங்குள்ள சில தோழிமார்கள் “அம்மா உங்களைக் காணவேண்டும் என்று வெகு நாட்களாக ஆவல்பட்டுக் கொண்டிருந்தார். உங்கள் பாதம் பட்டதால் எங்கள் வீடு புனிதமாயிற்று, தங்கள் கை பட்டால் பட்ட மரம் துளிர்க்குமே? தாங்கள் அள்ளிக் கொடுக்கும் வள்ளல். உங்களைப் போன்ற ஒரு உத்தமர் உலகில் உண்டா? ஆ! ஆ! உங்கள் முகத்தில் என்ன களை? அழகு ஒழுகும் உங்கள் திருமுகத்தைக் கண்டால் பசி ஆறுமே! இதுமுதல் எங்கட்கு நல்ல காலம்” என்றெல்லாம் பசப்பு மொழிகளைக் கூறுவர்.

ஓதி கோதி முடித்து ---

ஓதி-பெண் மயிர்; பொதுமகளிர் தங்கள் கூந்தலை அடிக்கடி கோதி ஒழுங்கு செய்து, அலை வீசுவது போல் சுருட்டிச் சுருட்டி வைத்துப் பின்னி அழகு செய்வர்.

இலைச் சுருளது கோதி ---

இலைச் சுருள்-வெற்றிலைச் சுருள். வெற்றிலையில் பல வாசனைகள் கலந்தும் தம்மீது மீளாத ஆசை வைக்கும் மருந்துகளைத் தடவியும் தருவர்.

நாடி வாயும் வயல் தலை ---

வயல்களில் வளமை அதுவே நாடி வந்து அணைந்தது என்கிறார்.

அளி இசை பாடும் ---

வண்டுகள் இசைபாடுகின்றன. அடியார்கள் முருகனுடைய திருவடிக் கமலங்களில் உள்ள பேரின்பத் தேனைப் பருகி இறைவனுடைய புகழை இனிது பாடுவார்கள் என்பது குறிப்பு.


கருத்துரை


பழநியப்பா, மாதர் மயக்கமற அருள்புரிவாய்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...