அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடலை பொரி அவரை
(பழநி)
பழநியப்பா, பழநியப்பா, பழநியப்பா
தனன
தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான
கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர ...... விபரீத
கரட
தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது ...... துணைவோனே
வடவ
ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத ...... மயில்வீரா
மகப
திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித ...... மணவாளா
அடல
சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்
அருண
கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண ...... பவலோலா
படல
வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி ...... அழகான
பழநி
மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடலை, பொரி, அவரை, பல கனி, கழை நுகர்
கடின குட உதர, ...... விபரீத
கரட
தட, முமத, நளின, சிறுநயன,
கரிணி முகவரது ...... துணைவோனே!
வட
வரையின் முகடு அதிர, ஒரு நொடியில்
வலம் வரு மரகத ...... மயில்வீரா!
மகபதி
தரு சுதை குறமினொடு, இருவரும்
மருவு சரசவித ...... மணவாளா!
அடல்
அசுரர்கள் குலம் முழுது மடிய, உயர்
அமரர் சிறையைவிட, ...... எழில்மீறும்
அருண
கிரண ஒளி ஒளிரும் அயிலைவிடும்
அரகர! சரவண ...... பவ! லோலா!
படல
உடுபதியை இதழி அணி சடில
பசுபதி வரநதி ...... அழகான,
பழ
நிமலை அருள்செய் மழலை, மொழிமதலை,
பழநி மலையில் வரு ...... பெருமாளே.
பதவுரை
கடலை --- கடலையையும்,
பொரி --- பொரியையும்,
அவரை --- அவரையையும்,
பல கனி --- பலவகையான பழங்களையும்
கழை --- கரும்பையும்,
நுகர் --- அருந்துகின்ற,
கடின குட உதர --- கடினமான குடம் போன்ற
வயிற்றையும்,
விபரீத கரட தட மும் மத --- அதிசயமான மதம்
பாய் சுவடுள்ள இடங்கொண்ட மும்மதத்தையும்,
நளின சிறு நயன --- தாமரையிதழ் போன்ற சிறிய
கண்களையும் உடைய,
கரிணி முகவரது துணைவோனே --- யானைமுகக்
கடவுளாகிய விநாயகப் பெருமானுடைய தம்பியே!
வடவரையின் முகடு அதிர --- வடமலையாகிய
மேருகிரியின் சிகரங்கள் அதிரும்படி,
ஒரு நொடியில் வலம் வரும் --- (எல்லா
உலகங்களையும்) ஒருநொடிப் பொழுதுக்குள் வலமாக வந்த,
மரகத மயில் வீர --- மரகதம் போன்ற மயிலையுடைய
வீரரே!
மகபதி தரு சுதை --- வேள்விகட்கு
அதிபனாகிய இந்திரன் தந்த மகளாகிய தெய்வயானை,
குறமின் --- குறவரிடம் வளர்ந்த வள்ளி நாயகி,
இருவரும் மருவு சரசவித மணவாளா --- இந்த இரு
தேவிமார்களையும் தழுவி இன்ப ஆடல் புரிகின்ற கணவரே!
அடல் அசுரர்கள் குல முழுது மடிய ---
வலிமை நிறைந்த அசுரர்களின் குலம் யாவும் அடியோடு அழியுமாறும்,
உயர் அமரர் சிறையை விட --- உயர்ந்த
தேவர்களுடைய சிறை நீங்கவும்,
எழில் மீறும் --- அழகு மிகுந்த,
அருண கிரண ஒளி ஒளிரும் --- சிவந்த கதிரொளியை
வீசும்,
அயிலை விடும் --- வேலாயுதத்தை விடுத்த,
அர அர --- பாவத்தை ஒழிப்பவரே!
சரவண பவ --- சரவணப் பொய்கையில்
தோன்றியவரே!
லோலா --- திருவிளையாடல் புரிகின்றவரே!
படல உடுபதியை --- கூட்டான நட்சத்திரங்கட்குத்
தலைவனான சந்திரனையும்,
இதழி --- கொன்றை மலரையும்,
அணி சடில --- தரித்திருக்கின்ற சடைமுடியுடைய,
பசுபதி --- சிவபெருமானும்,
வர நதி --- கங்கா நதியும்,
அழகு ஆன பழ நிமலை ---- அழகிய பழைமையான
பார்வதி தேவியும்,
அருள் செய் --- பெற்றருளிய,
மழலை மொழி மதலை --- மதலை மொழி புகலும்
குழந்தையே!
பழநி மலையில் வரு --- பழநி மலையில்
எழுந்தருளியிருக்கும்,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
பொழிப்புரை
அடியார்கள் அன்புடன் படைக்கும் சுடலை, பொரி, அவரை, பலவித பழங்கள், கரும்பு இவற்றை அருந்துகின்ற, குடம் போன்ற வயிற்றையும், அதிசயமான விசாலமான மும்மதங்களையும், தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும், யானைமுகத்தையும் உடைய
விநாயகமூர்த்தியின் தம்பியே!
வடமலை ஆய மேருகிரியின் சிகரங்கள்
அதிருமாறு உலகை ஒரு நொடியில் வலம் வருகின்ற பச்சை மயிலை வாகனமாகவுடைய வீரரே!
யாகபதியான இந்திரன் மகளான தேவயானை, குறமகளான வள்ளி நாயகி என்ற இருவரும்
தழுவி இன்ப ஆடல் புரிகின்ற மணவாளரே!
வலிமை நிறைந்த அசுரர் குலம் முற்றும்
அழியவும், உயர்ந்த தேவர்கள்
சிறை நீக்கவும், அழகு மிகுந்த சிவந்த
கதிரொளி வீசும் வேலை விடுத்தருளிய பாவத்தை நீக்குபவரே!
சரவணப் பொய்கையில் தோன்றியவரே!
திருவிளையாடல் புரிகின்றவரே!
கூட்டமான நட்சத்திரங்களின் தலைவனான
சந்திரனையும், கொன்றை மலரையும்
தரித்த சடைமுடியுடைய சிவபெருமானும்,
கங்கா
தேவியும், அழகிய பசுமையான
பார்வதியம்மையும் பெற்றருளிய மழலை பொழியுடைய குழந்தையே!
பழநி மலை மீது வாழும் பெருமிதம்
உடையவரே!
விரிவுரை
கடலை
பொரி அவரை பலகனி கழை நுகர் ---
மனிதனுக்குக்
குணங்கள் உணவினால் மாறுபடுகின்றன. விலங்குகட்கும் அப்படியேதான்.
கடலை, பொரி, அவல், பழங்கள், கரும்பு முதலியவை சத்துவ குணத்தை
உண்டாக்கும். உணவுகளின் பேதத்தாலேயே குண பேதங்கள் உண்டாகின்றன.
தழை, புல் முதலியவற்றை உண்ணுகின்ற ஆடு, மாடு, அணில், யானை முதலியவை சாந்தமாகவும், ஒற்றுமையாகவும், பிறர்க்குத் தீங்கு செய்யாமலும், உலாவுகின்றன.
மாமிச
உணவை உண்ணுகின்ற புலி, சிங்கம், கரடி, முதலிய பிராணிகள் மிகுந்த அச்சத்தை
உண்டாக்கி, துன்பத்தைச்
செய்துகொண்டு, சேர்ந்து வாழாமல், தனித்து வாழும்.
உணவுகளின்
வேற்றுமையாலேயே நற்குணமும் உண்டாகும். மாட்டு மந்தை ஆட்டு மந்தை என்று உண்டு.
புலிமந்தை, சிங்கமந்தை என்று
கிடையாது.
ஆகவே
விநாயகருக்கு அவருடைய அடியார்கள் சத்துவகுணப் பொருள் களை நிவேதிக்கின்றனர்.
அப்பெருமான் நமக்குள் மூலாதாரத்தில் எழுந்தருளி யிருப்பதால் சத்துவ குணப்பொருளை
ஏற்று நமக்கு சத்துவ குணங்களை வழங்குன்றார். விநாயகர் ஓங்கார முகம் உடையவர்.
குட
உதர
---
சகல
உலகங்களும் சகல உயிர்களும் அவருடைய வயிற்றில் அடங்கி இருக்கின்றன என்னும் குறிப்பை
உணர்த்துகின்றது விநாயகருடைய பெருவயிறு. ஆதலின் அது கும்பம் போல் அழகாகவும்
பெரிதாகவும் அமைந்திருக்கிறது.
முமத ---
இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகளையும் மூன்று
மதங்களாக உடையவர்.
சிறு
நயன
---
யானைகளுக்குக்
கண் சிறியது, (விநாயகர்) யானை
முகமுடையவராதல் பற்றி “சிறுநயன” என்றார்.
வடவரையின்
முகடு அதிர ஒரு நொடியில்......மயில் வீரா ---
மேரு
மலையின் கொடு முடிகள் அதிருமாறு முருகப் பெருமான் கனி காரணமாக அகில உலகங்களையும்
ஒரு நொடியில் வலம் வந்த பச்சை மயிலை வாகனமாக உடையவர். மயிலும் ஓங்காரம்.
அரகர ---
சங்கரனே
ஷண்முகன்; சிவனுக்கும்
குகனுக்கும் பேதமில்லை. ஐம்முகச் சிவனாரது பழைய வடிவு ஆறுமுகம்; ஆதலால் அரன் எனும் திருநாமத்தால்
முருகனை அழைக்கின்றார்.
காங்கேயன்
கார்த்திகேயன் முதலிய திருப்பெயர்கட்குப் பரமேசுவரன் என்பது தான் பொருளென்பது
முனிச் சிரேட்டர் கொள்கை. மடவோர் தம் பேதம் பேசுவார் என்பது.
“சிவசிவ அரகர தேவா நமோ
நம
திரிபுரம் எரிசெய்த கோவே நமோ நம
ஜெய ஜெய அரகர தேவா சுர அதிபர் தம்பிரானே” --- (அவகுண) திருப்புகழ்
பசுபதி
வரநதி.......பழ நிமலை.......பழநிமலையில் வரு ---
சிவபெருமான்
ஒருவரே சகல லோகங்கட்கும் சகல உயிர்களுக்கும் பதியாவர். மூவர்களும் தேவர்களும்
பசுக்களேயாவர்.
பதி
அரன் பாசம் தன்னில் பட்டு உழல் பசு நாம் என்றே
விதியொடு
மறைகள் கூறும் மெய்ம்மையைத் தெரியவேண்டின்,
இது
என உரைப்பன், யாங்கள் இவ் அரசு இயற்ற ஈசன்
அதிர்கழல்
அருச்சித்து ஏத்தும் ஆலயம் பலவும் காண்டி...
--- கந்தபுராணம்
சிவபெருமான்
ஆன்மாக்களாகிய பசுக்களுக்குப் பதியாதலால் பசுபதி என்னும் திருநாமத்தை உடையவராயினர்.
முருகப்பெருமான்
சிவமூர்த்திக்கும், கங்கா தேவிக்கும்
பார்வதிதேவிக்கும் புதல்வராக இருந்து தமது மழலை மொழியால் அவர்களை
மகிழ்விக்கின்றார்.
“புரக்கும் சங்கு அரிக்கும்,
சங்
கரர்க்கும், சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் தம் சுதன் ஆனாய்” --- (கருப்பந்தங்) திருப்புகழ்
பழநிமலை
என்று இருமுறை கூறுகின்றார். பழநி மலை. பழ நிமலை. பழைமையான நிமலை-பார்வதி, அருணகிரிநாத சுவாமிகள் சொற்களை எடுத்து, ஆளுகின்ற அழகு மிக மிக ஆச்சரியமானது.
கருத்துரை
விநாயகமூர்த்தியின்
துணைவரே! உலகை ஒர நொடியில் வலம் வரும் மயில் வாகனரே! கஜவல்லி வனவல்லி சமேதரே!
அசுரரை அழித்து தேவர் சிறைமீட்ட வேற்படையினரே! சரவணபவ! சிவமூர்த்திக்கும், சுரநதிக்கும், கௌரியம்மைக்கும் திருப்புதல்வரே!
பழனாபுரிப் பெருமாளே!
(இத்திருப்புகழ் முழுவதும் துதியாகவே
அமைந்துள்ளது.)
No comments:
Post a Comment