அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடலைச் சிறை (பழநி)
மாதர் கண்கள் புரியும்
கலகம் தீர்த்து, ஆட்கொள்ள
தனனத்
தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
கடலைச்
சிறைவைத் துமலர்ப் பொழிலிற்
ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்
கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் ......
பவனூணாக்
கருதிச்
சருவிக் கயலைக் கயமுட்
படுவித் துழையைக் கவனத் தடைசிக்
கணையைக் கடைவித் துவடுத் தனையுப்
......பினின்மேவி
அடலைச்
செயல்சத் தியையக் கினியிற்
புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்
தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித்
...... தசகோரம்
அலறப்
பணிரத் நமணிக் குழையைச்
சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்
டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற்
...... படுவேனோ
சடிலத்
தவனிட் டவிசிட் டகுலத்
தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்
தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப்
...... பரிவாலே
சநகர்க்
குமகஸ்த் யபுலஸ்த் யசநற்
குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச்
சதுபத் துநவப் புலவர்க் கும்விபத்
...... தியில்ஞான
படலத்
துறுலக் கணலக் யதமிழ்த்
த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற்
...... குருநாதா
பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்
றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்
பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடலைச்
சிறை வைத்து, மலர்ப் பொழிலில்
ப்ரமரத்தை உடல் பொறி இட்டு, மடுக்
கமலத்தை மலர்த்தி, விடத்தை இரப் ......பவன்ஊணாக்
கருதி, சருவிக் கயலைக் கயமுள்
படுவித்து, உழையைக் கவனத்து அடைசி,
கணையைக் கடைவித்து, வடுத் தனை உப் ...... பினில்மேவி,
அடலைச்
செயல் சத்தியை அக்கினியில்
புகுவித்து, யமப் ப்ரபுவைத் துகைவித்து,
அரிகட்கம் விதிர்த்து, முறித்து, மதித்த ...... சகோரம்
அலறப்
பணி, ரத்ந மணிக் குழையைச்
சிலுகிட்டு, மை இட்டு, ஒளி விட்டு, மருட்-
டுதல் உற்ற பொறிச்சியர் கண் கடையில்
...... படுவேனோ?
சடிலத்
தவன் இட்ட விசிட்ட குலத்து
ஒரு செட்டியிடத்தின் உதித்து அருள் வித்-
தக, ருத்ரஜன்மப் பெயர் செப்பியிடப் ......
பரிவாலே,
சநகர்க்கும்
அகஸ்த்ய, புலஸ்த்ய. சநற்
குமரர்க்கும் அநுக் க்ரக மெய்ப் பலகைச்
சதுபத்து நவப் புலவர்க்கும் விபத்
...... திஇல்ஞான
படலத்துறு
இலக்கண இலக்ய தமிழ்த்
த்ரயம் அத் திலகப் பொருள் வ்ருத்தியினைப்
பழுதற்று உணர்வித்து அருள் வித்தக!சற் ....குருநாதா!
பவளக் கொடி சுற்றிய பொன் கமுகின்
தலையில் குலையில் பல முத்து உதிர்செய்ப்
பழநிப்பதி வெற்பினில் நில் குமரப்
...... பெருமாளே.
பதவுரை
சடிலத்தவன் இட்ட --- சடை முடியையுடைய
சிவபெருமான் ஆணையிட்டவாறு,
விசிட்ட குலத்து --- மேன்மையுடைய குலத்திலே,
ஒரு செட்டி இடத்தின் உதித்து --- ஒரு
செட்டியின்பால் தோன்றி,
அருள் வித்தக --- அருளும் ஞானமும் பூண்ட,
ருத்ர ஜன்மப் பெயர் செப்பியிட --- உருத்திர சன்மம்
என்று பெயர் சூட்ட,
பரிவாலே --- அன்புடனே,
சநகர்க்கும் --- சநகர் என்பவர்க்கும்,
அகஸ்த்ய --- அகத்தியருக்கும்,
புலஸ்திய --- புலத்தியருக்கும்,
சநற்குமரர்க்கும் --- சநற்குமரர் என்ற
முனிவருக்கும்,
அநுக்ரக –-- அருள் பாலித்தவரே.
மெய்ப்பலகை --- உண்மைப்புலமையை உணர்த்தும்
சங்கப்பலகை மீது வீற்றிருந்து,
சது பத்து நவப்புலவர்க்கும் --- நாற்பத்தொன்பது
புலவர்கட்கும்,
விபத்தி இல் --- வேறுபாடு இல்லாத முறையில்,
ஞான படலத்து உறு --- ஞானப் பகுதியின்
வழியேயுள்ள,
லக்கண லக்கிய தமிழ்த்ரயம் அத்தில் --- இலக்கண
இலக்கியங்களுடன் கூடிய முத்தமிழில்,
அகப்பொருள் வ்ருத்தியினை --- அகப்பொருள் என்ற
நூலுக்கு விளக்கத்தை,
பழுது அற்று உணர்வித்து அருள் --- குற்றம் அற
உணர்வித்து அருளிய,
வித்தக --- ஞானமூர்த்தியே!
சற்குருநாதா --- உண்மைக் குருநாதரே!
பவளக் கொடி சுற்றிய --- பவளக் கொடி
சுற்றிய,
பொன் கமுகின் தலையில் --- அழகிய பாக்கு
மரத்தின் உச்சியில்,
குலையில் பலமுத்து உதிர் செய் --- குலையில்
பல முத்துக்களைப் போன்ற அரும்புகள் உதிர்கின்ற,
பழநி பதி வெற்பினில் நில் ---
பழநியம்பதியாகிய மலைமீது நின்றருளிய,
குமர --- குமார மூர்த்தியே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கடலைச் சிறை வைத்து --- கடலை ஒரு
எல்லையைத் தாண்டாதவாறு சிறைப்படுத்தி,
மலர்ப் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு ---
பூஞ்சோலையில் வாழும் வண்டுகளின் உடம்பில் (தண்டனைக்கு அடையாளமாக) வரி ரேகைகளை
அமைத்து,
மடு கமலத்தை மலர்த்தி ---- மடுவிலேயுள்ள
தாமரையை மலரச் செய்து வாடுமாறு புரிந்து,
விடத்தை இரப்பவன் ஊணா கருதி --- நஞ்சை
பிச்சையெடுக்கும் சிவபிரானுக்கு உணவாக நினைத்து வைத்து,
சருவி கயலை கயம் உள்படுவித்து --- போராடுங்
கயல்மீனை குளத்துள் அடக்கி வைத்து,
உழையை கவனத்து அடைசி --- மானைக் காட்டில்
அடையச் செய்து,
கணையை கடைவித்து --- அம்பினை உலைக்களத்தில்
கடைய வைத்து,
வடுதனை உப்பினில் மேவி --- மாவடுவை உப்பினில்
ஊற வைத்து,
அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து ---
வெற்றிச் செயல் கொண்ட வேற்படையை நெருப்பில் காய்ச்சுமாறு செய்து,
யம ப்ரபுவை துகைவித்து --- இயமனாகிய தலைவனை
உதைபட்டு நசுங்கும்படி செய்து,
அரி கட்கம் விதிர்த்து முறித்து --- ஒளி
வீசும் வாளை ஆட்டமுற்று முறியவைத்து,
மதித்த சகோரம் அலற பணி --- மதித்தற்குரிய
சகோரம் என்ற பறவையை அலறுமாறு செய்தும் (இவ்வாறு இவ்வகைகளை வென்று அடக்கி)
ரத்னமணி குழையை சிலுகிட்டு ---
இரத்னமணியாலாகிய தோட்டினுடன் போர் புரிந்து,
மை இட்டு --- மையை அணிந்து,
ஒளி விட்டு --- ஒளிவீசி,
மருட்டுதல் உற்ற --- மருட்டுதலைச் செய்கின்ற,
பொறிச்சியர் --- இயந்திரம் போன்றவர்களாகிய
விலை மாதர்களின்,
கண்கடை படுவேனோ --- கடைக் கண்ணில் அடியேன்
அகப்பட்டு அழிந்து போவேனோ?
பொழிப்புரை
சடைமுடியை உடைய சிவபெருமான்
கட்டளையின்படி, மேன்மை பொருந்திய
வைசிய குலத்திலே ஒரு செட்டியின்பால் தோன்றி, உருத்திரசன்மன் என்ற பேர் தாங்கி, அருளும் ஞானமும் பூண்டு அன்பால் சநகர், அகத்தியர், புலத்தியர், சநற்குமாரர் என்ற முனிவர்களுக்கு அருள் புரிந்தவரே!
உண்மைப் புலமையைத் தெரிவிக்கும் சங்கப்
பலகை மீது அமர்ந்து, நாற்பத்தொன்பது
புலவர்கட்கும் வேறுபாடு வரா வண்ணம் ஞானப் பகுதியின் வழியில் உள்ள இலக்கண
இலக்கியத்துடன் கூடிய முத்தமிழில் இறையனார் அகப்பொருள் என்ற நூலின் விளக்க உரையை
குற்றமற உணர்வித்தருளிய ஞானமூர்த்தியே!
உண்மையான குருபரனே!
பவளக் கொடியானது சுற்றிக்கொண்டுள்ள
அழகிய பாக்கு மரங்களின் உச்சியில் உள்ள குலைகளில், முத்துக்கள் பல உதிர்வனபோல் அரும்புகள்
உதிர்கின்ற பழநியம்பதி என்ற மலை மீது எழுந்தருளியுள்ள குமாரக்கடவுளே!
பெருமிதம் உடையவரே!
(தனக்கு இணையில்லாமையால்) கடலைச் சிறை
வைத்தும் மலர்ச்சோலையில் வாழும் வண்டுகளின் உடம்பில் தண்டனைக்கு அடையாளம் போன்ற
கோடுகளை இட்டும், மடுவில் உள்ள தாமரைகளை
மலர்த்தி வாடுமாறு செய்தும், பலியேற்கும்
சிவபெருமானுக்கு நஞ்சினை உணவாகச் செய்தும், போர் புரிகின்ற
கயல்மீனைக் குளங்களில் அமிழ்த்தியும், மானை
வனத்தில் திரியுமாறு செய்தும், பாணத்தைக் கடையச்
செய்தும் மாவடுவை உப்பினில் ஊறும்படிச் செய்தும் வீரச்செயலுடைய வேலை நெருப்பினில்
காய்ச்சுமாறு செய்தும், இயமனை சிவபிரான்
திருவடியால் உதைபட்டு நசுங்கச் செய்தும், ஒளிமிக்க
வாளாயுதத்தை நடுங்கி முறியும்படி செய்தும், மதிக்கப்படுகின்ற சகோர பறவையை அலறுமாறு
செய்தும் இரத்தின மணியாலாகிய தோட்டினுடன் போர் புரிந்து, மை இடப்பெற்று, ஒளிசெய்து, ஆடவரை மருளச் செய்கின்ற பொது மாதர்களின்
கடைக்கண்ணில் அடியேன் அகப்பட்டு அல்லலுறுவேனோ?
விரிவுரை
இந்தத்
திருப்புகழின் முற்பகுதி விசித்திரமானது.
நல்ல
ஆற்றலுடன் வியக்குமாறு அருணகிரியார் நயங்களை அமைத்திருக்கின்றனர்.
மாதர்களின்
கண்களுக்குப் புலவர்கள் எத்தனை உவமைப் பொருள்கள் கூறுவாரோ அத்தனை பொருள்களையும்
கூறி, அவைகட்கு ஒவ்வொரு
வகையில் உள்ள இழிவையும் கூறி, கண்களுக்கு
ஒவ்வாமையைக் காட்டித் தற்குறிப்பேற்றம் என்ற அணியை அழகு படுத்துகின்றனர்.
பெண்களின்
கண்களுக்கு, கடல், வண்டு, தாமரை, நஞ்சு, மீன், மான், அம்பு, மாவடு, வேல், யமன், வாள், சகோரப்பறவை இந்தப் பன்னிரண்டு
பொருள்களையும் உவமை கூறுவர். இவைகட்கு உள்ள குறைகளை மிக நயமாகச் சொல்லி, இவை கண்களுக்கு நிகராகமாட்டா எனக்
கண்டித்து ஒதுக்குகின்றார் நம் அருணை முனிவர்.
கடலைச்
சிறை வைத்து
---
கண்கள்
விசாலமாக இருத்தல் வேண்டும்; அது கண்ணுக்கு ஒரு
சிறப்பு. காசியில் எழுந்தருளியுள்ள அம்பிகைக்கு விசாலமான கண். அதனால் விசாலாட்சி
என்ற அருமைத் திருநாமம் பூண்டனர்.
விசாலாட்சி
கடல் உவமை பெறும்; கடல்போன்ற அகன்ற கண்
என்று புலவர்கள் புகழ்ந்து கூறுவர்.
கடல்
ஒரு எல்லைக்கு உட்பட்டு கரையால் தடைபட்டு சிறைபட்டுக் கிடக்கின்றது. அது
முற்றிலும் பொருந்தும் உவமையாகாது. தனக்கு நிகராகாத கடலைக் கண் தண்டித்துச்
சிறைபடுத்தியது என்று நயம் படக் கூறுகின்றார்.
மலர்ப்பொழிலிற்
ப்ரமரத்தை உடற்பொறியிட்டு ---
வண்டு
போன்ற கண் என்று கூறுவார்கள். வண்டு ஓயாமல் தேனை வேண்டி அலைந்து திரிந்து உழலும்
இயல்புடையது. ஆதலின் தனக்கு நிகர் இல்லையென்று கருதிய கண், வண்டைத் தண்டித்தது; தண்டித்ததற்கு அடையாளம்போல் அதன்
உடம்பில் வரிவரியாகச் சில கோடுகளையிட்டது.
இயல்பாகவுள்ள
கோடுகளைத் தற்குறிப்பேற்றமாக இங்ஙனம் கூறுகின்றனர். உடல்பொறி-உடலிலுள்ள கோடு.
மடுக்
கமலத்தை மலர்த்தியிட்டு ---
மடுவில்
உள்ள தாமரை மலர்ந்து உதிர்ந்துவிடுந் தன்மையுடையது. அதனால் அது கண்ணுக்குத் தக்க
உவமையாகாது. ஆகவே தாமரையை மலர்த்தி உதிர்த்து அழிக்கின்றன என்று உரைக்கின்றனர்.
விடத்தை
இரப்பவன் ஊணாகக் கருதி ---
கண்களுக்கு
விடத்தை உவமை கூறுவார். “விடம் உண்டவனை அழித்து விடும். கண்கள் வருந்த வைத்து
அடுத்தவனை இன்புறச் செய்யும். ஆதலின் நஞ்சு தனக்கு உவமையாகாது எனக் கருதி, அந்த நஞ்சினை பிச்சையேற்று உண்பவராகிய
சிவமூர்த்திக்கு உணவாகத் தந்து விட்டது” என்கிறார். என்ன அழகான தற்குறிப்பேற்றம்.
கயலைக்
கயம் உட்படுவித்து ---
கயல்
மீன் சதா உணவு நசையால் அலையும் தன்மை உடையது. தூண்டிலிலும் வீழ்ந்து மடியும்
தன்மையது; ஆதலின் தனக்கு மீன்
நிகராகாது எனக் கருதிக் குளத்தில் நீருக்குள் அமிழுமாறு செய்துவிட்டது.
உழையைக்
கவனத்து அடைசி
---
உழை-மான்.
மான் மிரண்டு பார்ப்பதனால் கண்ணுக்கு உவமை ஆயிற்று. ஆனால் மிரட்சியில் சிறந்த
குளிர்ச்சி இன்மையினால் தனக்கு நிகரில்லை எனக்கருதி மானைக் காட்டிற்கு ஓட்டியதாகச்
சொல்லுகின்றார்.
கணையைக்
கடைவித்து
---
கூர்மையை
நோக்கிக் கண்களுக்கு கணையை உவமை கூறுவர். ஆனால் கணை மிகவும் நீண்டிருப்பதனாலும், கொல்லுவதையே தொழிலாக வுடையதாலும் தனக்கு
உவமையாகாது எனக் கருதி, அக்கணையைக் கொல்லன்
பட்டறையில் கடைசல் படுமாறு தண்டித்தது.
வடுத்தனை
உப்பினின் மேவி ---
மாவடு
பெண்களின் கண்களுக்கு உவமையாவது. மாவடுவைப் பிளந்து விட்டுப் பார்த்தால் கண் போலவே
காட்சி தரும். ஆனால் அதில் கருமை இல்லாமையால் அம் மாவடுவை உப்பினில் ஊறுகாயாக
ஊறவைத்து விட்டதாம்.
அடலைச்
செயல் சக்தியை அக்கினியில் புகுவித்து ---
அடல்-வெற்றி.
வெற்றிச் செயலுடைய வேல் எதிர்த்தவர் யாவரையுங் கொல்லும் குணம் உடையது. கண்கள் இன்பம்
தரவல்லது. ஆதலின் நெருப்பில் புக வைத்தது. வேலைக் கொல்லர்கள் நெருப்பில் காய்ச்சி
ஒழுங்கு செய்வர்,
யம
ப்ரபுவைத் துகைவித்து ---
யமனையும்
கண்ணுக்கு உவமையாகக் கூறுவர். யமனைப் போல் கண்கள் சிலரை வருத்தும் தன்மை உடையன.
ஆனால் யமன் காலம் முடிந்த போது மட்டுமே வருத்துந் தன்மை உடையவன். ஆதலின் தனக்கு
நிகராகான் எனக் கருதி, சிவபெருமான் பாதமலரால்
உதை பட்டு நொறுங்குமாறு செய்ததாம்.
அரி
கட்கம் விதிர்த்து முறித்து ---
அரி-ஒளி, கட்கம்-வாள், விதிர்ப்பு-நடுக்கம், வாளை நடுங்க வைத்து முறித்தது.
மதித்த
சகோரம் அலறப்பணி ---
சகோரம்
என்ற பறவை நிலாவின் அமுத கிரணங்களை உணவாகக் கொள்ளும் சிறப்புடையது. அப்பறவை வட்ட
வடிவானது. கண்ணுக்கு உவமை கூறப்படுவது. அப்புள் தனக்கு நிகரில்லை எனக் கருதி அதனை
அழ வைத்ததாம்.
இப்படி
ஒன்றுமே தனக்கு நிகரில்லாமையுடைய கண்களின் சிறப்பை இனிது எடுத்து விளக்குகின்றார்.
ரத்னமணிக்
குழையைச் சிலுகிட்டு ---
நவரத்தினத்தால்
ஆகிய காதணிவரை நீண்டு அக்குழையுடன் போர்புரிவது போல கண் காட்சி தருகின்றது.
மையிட்டு
ஒளிவிட்டு மருட்டுதல் உற்ற ---
அக்கண்கள், மை அணிந்தும், ஒளிவீசியும் மருளுமாறு செய்து காமுகரை
மயக்கும்.
கட்கடையில்
படுவேனோ
---
இத்தகைய
மாதரது கடைக்கண் பார்வையில் அடியேன் அகப்பட்டு அழியலாமோ? எனச் சுவாமிகள் முருகனிடம்
முறையிடுகின்றனர்.
சடிலத்தவன்
இட்ட
---
சடாமுடியுடைய
சிவபெருமான் கட்டளை இட்டவாறு, முருகன் மதுரையில்
செட்டி மகனாக வந்து, சங்கப் பலகைமீது
அமர்ந்து, சங்கப் புலவர்களது
கலகந் தீர்த்து அருள்புரிந்தார்.
சநகர் ---
பிரம
புத்திரர்களாகிய நால்வரில் ஒருவர்.
சநற்குமரர் ---
இவரும்
பிரமபுத்திரர். தட்சிணாமூர்த்தியிடமும் முருகனிடமும் அருள் பெற்றவர்.
மெய்ப்பலகை
---
சங்கப்பலகை:
பொற்றாமரையில் தெய்வத்தன்மையுடன் மிதக்கும் ஆற்றல் உடையது. சிறந்த புலவரைத்
தன்பால் ஏற்கும். ஏனையர் அதன்மீது அமர்ந்தால் குளத்தில் தள்ளிவிடும்.
ஞானப்படலம் ---
தமிழ்
ஞானமயமானது. இது கடவுள் புலவராகிய சிவபெருமானே அகத்தியருக்கு உபதேசித்தது. ஆகவே
சிவமொழி எனப்படும். சிவபெருமானும் முருகப்பெருமானும் வளம்பெறச் செய்தது தமிழ்.
தெய்வநலங் கனிந்தது தமிழ்.
“ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க்கு உணர்த்திய
மாதொரு கூறனை வழுத்துதூஉம்,
போதமெய்ஞ் ஞான நலம்பெறல் பொருட்டே” --- தொல்காப்பியம்
(பாயிரம்)
உருத்திர சன்மர்
வரலாறு
காலக்
கோட்பாட்டினால் தமிழில் இருந்த பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்தது. அது கண்டு
பாண்டியன் வருந்தினான். சோமசுந்தரக் கடவுள் அவனுடைய அலக்கண் தீர்ப்பான் வேண்டி
பொருள் இலக்கணமாக இறையனார் அகப்பொருள் என்ற அறுபது சூத்திரங்கள் அடங்கிய அரிய நூலை
அருளிச்செய்து வழங்கினார்.
அந்நூலுக்குச்
சங்கப் புலவர்கள் வேறு வேறு உரைகள் செய்தார்கள். தாம் தாம் செய்த உரையே உயர்ந்தது
என அவர்கட்குள்ளேயே கலகம் பிறந்தது. எல்லோரும் சோமசுந்தரப் பெருமான் திருமுன்
சென்று “ஐயனே! எங்கள் கலகந் தீர்த்து உலகமுய்ய அருள் செய்வாய்” என்று வேண்டி
நின்றார்கள்.
சொக்கலிங்கத்தினின்று
இறைவன் ஒரு புலவர் வடிவில் தோன்றி,
” புலவர்களே!
நீவிர் வருந்தற்க. இம்மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் தனபதி என்பானுக்கும்
குணசாலினிக்கும் தவத்தால் தோன்றிய ஒரு தெய்வப் புதல்வன் இருக்கின்றான். அவன் ஊமை.
அத் திருமகன்பால் உமது உரைகளை உரைமின்; அவன்
எது உயர்ந்தது என உறுதியாக அறுதியிட்டு அறிவிப்பான்” என்று அருளிச் செய்தனர்.
புலவர்கள், “பெருமானே! ஊமை மகன் எங்ஙனம் உரைப்பான்?” என்று ஐயுற்று வினவினார்கள். இறைவன், “புலவீர்காள்! நீவிர் சென்று கேண்மின்
அவன் சொல்லாழமும் பொருளாழமும் நன்குணர்ந்து நிறுத்து நுனித்து உணர்த்துவான்”
என்றருளிச் செய்தனர். சங்கப் புலவர்கள் மேளம் தாளம் குடை விருது சாமரை பல்லக்கு
முதலிய வரிசைப் பொருள்களுடன் சென்று உருத்திரசன்மர் என்ற அந்த செட்டிக் குமரனைப்
பணிந்து, செஞ்சந்தனம் பூசி, செம்பட்டு ஆடையும், செம்மலர் மாலையும் புனைவித்து, பல்லக்கில் ஏற்றிக் கொணர்ந்து சங்கப்
பலகைமீது எழுந்தருளச் செய்து, சுற்றிலும் அமர்ந்து, தத்தம் உரைகளை உரைப்பாராயினார்கள்.
சிலர்
கூறும் உரைகளைக் கேட்டு அந்த ஊமைச் சிறுவன் முகத்தைச் சுளித்தனன்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு உதட்டை
அசைத்தனன்; சிலர் கூறும்
உரைகளைச் சில இடத்தில் ஆமோதிப்பான் போல் சிறிது தலையை அசைத்தான்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு கண்
மலர்ந்து பார்த்தனன்.
நக்கீரன், கபிலன், பரணன் என்ற முப்பெரும் புலவர்களது
உரைகளைக் கேட்டு அடிமுதல் முடிவரை உடல் புளகிதமுற்று, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, சிரம் அசைத்து கரந்தட்டி மகிழ்ச்சியைத்
தெரிவித்து ஆமோதித்தானன்.
நுழைந்தான் பொருள்
தொறும் சொல்தொறும், நுண் தீஞ்சுவை உண்டே
தழைந்தான்
உடல், புலன் ஐந்தினும்
தனித்தான்,சிரம் பணித்தான்,
குழைந்தான்விழி,
வழிவேலையுள் குளித்தான்,தனை அளித்தான்,
விழைந்தான்
தவபேற்றினை, விளைத்தான்,களி திளைத்தான்.
இவ்வாறு
அப் புலவர்கள்பால் விளைந்த கலகந் தீர்த்து உலகம் உய்ய அருள் புரிந்தான். முருகவேள்
பிறப்பும் இறப்பும் இல்லாத பெருந்தகை, `பெம்மான்
முருகன் பிறவான் இறவான்ழு என்கின்றார் அருணகிரிநாதர்.
சுப்பிரமணிய
சாரூபம் பெற்றவர்கள் பலர்; அவர்கள் அபர
சுப்ரமண்யர் எனப்படுவர். அவருள் ஒருவர் உருத்திரஜன்மராக வந்தனர். முருகவேளது அருள்
தாங்கி வந்தபடியால் முருகனே வந்ததாக அருணகிரியார் கூறுகின்றார் எனத்தெளிக.
“ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடு ஆய ஊமர்போல வணிகரில்
ஊடு ஆடி, ஆலவாயில் விதிசெய்த
லீலா விசார தீர வரதர குருநாதா” --- (சீரான) திருப்புகழ்
கருத்துரை
சங்கப் புலவர் கலகந் தீர்த்த
பழநிப்பதிப் பரம நாயகனே! மாதர் கண்கள் புரியும் கலகத்தையும் தீர்த்து அடியேனைக்
காத்தள்வீர்.
No comments:
Post a Comment