அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கதியை விலக்கு (பழநி)
பழநியப்பா, உன்னை மறவேன்
தனன
தனத்த தாதத தனன தனத்த தானன
தனன தனத்த தானன ...... தனதான
கதியை
விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான
கவலை
மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு ...... முகமாறும்
அதிப
லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு ...... முலகேழும்
அதிர
வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிந வபத்ம பாதமு ...... மறவேனே
இரவி
குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய ...... குணமான
இளைய
வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமோ டளித்த ராகவன் ...... மருகோனே
பதினொ
ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக
பரிம
ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கதியை
விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனதன வெற்பு மேல் மிகு ...... மயலான
கவலை
மனத்தன் ஆகிலும், உனது ப்ரசித்தம் ஆகிய
கனதனம் ஒத்த மேனியும், ...... முகம் ஆறும்,
அதி
பல வஜ்ர வாகுவும், அயில் நுனைவெற்றி
வேல் அதும்,
அரவு பிடித்த தோகையும், ...... உலகேழும்
அதிர
அரற்று கோழியும், அடியர் வழுத்தி
வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமும் ...... மறவேனே.
இரவி
குலத்து இராசத மருவி எதிர்த்து வீழ்கடு
ரணமுக சுத்த வீரிய ...... குணமான
இளையவனுக்கு
நீள் முடி அரசது பெற்று வாழ்வுற,
இதமொடு அளித்த ராகவன் ...... மருகோனே!
பதினொரு
உருத்திர ஆதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொடு நிற்கும் ஈசுர ...... சுரலோக
பரிமள
கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர்
பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.
பதவுரை
இரவி குலத்து --- சூரியன் மகனாய்,
இராஜத மருவி --- ரசோகுணம் உடையவனாய்,
எதிர்த்து வீழ் --- வாலியை எதிர்த்துத்
தோல்வியுற்ற,
கடுரண முக சுத்த வீரிய குணம் ஆன --- கடுமையான
போர்க்களத்தில் தூய வீரம் வாய்ந்த குணம் படைத்தவனான,
இளையவனுக்கு --- சுக்ரீவனுக்கு,
நீள் முடி அரசு அது பெற்று வாழ்வு உற ---
பெரிய அரசாட்சியைப் பெற்று வாழுமாறு,
இதமொடு அளித்த ராகவன் --- இதமாக உதவி செய்த
இராமபிரானுடைய,
மருகோனே --- திருமருகரே!
பதினொரு ருத்திராதிகள் --- பதினொரு
உருத்ராதிகளினுடைய,
தபனம் விளக்கு மாளிகை --- ஒளி திகழும்
திருக்கோயிலில்,
பரிவோடு நிற்கும் ஈசுர --- அன்புடன்
எழுந்தருளியிருக்கும் தலைவரே!
சுர லோக --- தேவருலகில் இருக்கின்ற,
பரிமள கற்பக அடவி --- வாசனை வீசுகின்ற
கற்பகக் காட்டில்,
அரி அளி சுற்று பூ உதிர் --- வரிகளுடன் கூடிய
வண்டுகள் சூழ்ந்து மொய்ப்பதனால் மலர்கள் உதிர்கின்ற,
பழநி மலைக்குள் மேவிய – பழநிமலை மீது
வீற்றிருக்கின்ற, பெருமாளே பெருமையின்
மிகுந்தவரே!
கதியை விலக்கு மாதர்கள் --- நல்ல கதியை அடைய
முடியாதபடி தடுக்கின்ற பொதுமகளிரின்,
புதிய இரத்ன பூஷண --- புதிய இரத்தி மணிகள் பதித்த
ஆபரணங்களை அணிந்துள்ள,
கனதன வெற்பு மேல் --- பருத்த கொங்கைமீது,
மிகு மயல் ஆன --- மிகுந்த மயக்கம் வைத்தனால்
ஆகிய,
கவலை மனத்தன் ஆகிலும் --- வருத்தமுற்ற மனத்தை
உடையவனாயிருந்த போதிலும்,
உனது ப்ரசித்தம் ஆகிய --- தேவரீருடைய
புகழ்பெற்ற,
கனதனம் ஒத்த மேனியும் --- சிறந்த பொன் போன்ற
திருமேனியையும்,
முகம் ஆறும் --- ஆறு முகங்களையும்,
அதிபல வஜ்ர வாகும் --- வலிமை நிறைந்த வைரமணி
போன்ற தோள்களையும்,
அயில் நுனை வெற்றி வேலதும் --- கூரிய
நுனியுடைய வெற்றி வேலையும்,
அரவு பிடித்த தோகையும் --- பாம்பைப்
பிடித்துள்ள மயிலையும்,
உலகு ஏழும் அதிர அரற்று கோழியும் --- ஏழு
உலகங்களும் அதிரும்படி கூவுகின்ற சேவலையும்,
அடியவர் வழுத்தி வாழ்வு உறும் --- அடியார்கள்
துதி செய்து நல்வாழ்வைப் பெறுகின்ற,
அபிநவ பத்ம பாதமும் --- புதிய தாமரை போன்ற
திருவடியையும்,
மறவேனே --- அடியேன் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
சூரியன் மகனாய், ரசோகுணம் உடையவனாய், வாலியை எதிர்த்து தோற்று நின்றவனாய், கடுமையான போர்க்களத்தில் தூய வீரம்
படைத்தவனாய் நின்ற சுக்ரீவனுக்கு பெரிய அரசாட்சியைப் பெற்று வாழுமாறு அன்புடன்
உதவி புரிந்த ஸ்ரீராமரது திருமருகரே!
பதினொரு உருத்ராதிகளின் ஒளிவீசும்
திருக்கோயிலில் அன்புடன் எழுந்தருளியிருக்கும் தலைவரே!
(தேவருலகில் உள்ள) நறுமணம் வீசும்
கற்பகக் காட்டில் வரிவண்டுகள் சூழ்ந்து மொய்ப்பதனால் மலர்கள் உதிர்கின்ற பழநி
மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமிதமுடையவரே!
நற் கதியை அடைய முடியாது விலக்கும் பொது
மாதர்களின் புதிய இரத்தின மணிகள் பதித்த ஆபரணங்கள் தரித்த பருத்த தனங்களின் மேல்
மிகுந்த மயக்கத்தால் உண்டான, கவலை கொண்ட மனத்தை உடையவனாக
அடியேன் இருந்த போதிலும், தேவரீருடைய
புகழ்பெற்ற சிறந்த பொன் போன்ற திருமேனியையும் ஆறுமுகங்களையும், நிரம்ப வலிமையான வயிரமணி போன்ற
தோள்களையும், கூர்மையான முனையுடைய
வெற்றிவேலையும், பாம்பைப் பிடித்த
மயிலையும், ஏழு உலகங்களும்
அதிருமாறு கூவுகின்ற சேவலையும்,
அடியார்கள்
துதித்து நல்வாழ்வு பெறுகின்ற புதிய தாமரை மலர்போன்ற திருவடியையும், அடியேன் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
விரிவுரை
கதியை
விலக்கு மாதர்கள் ---
முத்தியை
விரும்புவார்க்கு ஆசை தடையாகும். ஆசையை விளைவிப்பவர் மாதர்கள். மேலும் பொது மகளிர்
தங்கள் ஆடை அணிகலன், அலங்காரம், ஆடல் பாடல் இவற்றால் ஆடவரை மயக்கி
மேன்மேலும் ஆசைத் தீயை மூட்டுவார்கள்.
கவலை
மனத்தனாகிலும்............மறவேனே ---
“மாதராசையால் மனக்
கவலை உடையவனாய் இருப்பினும் இறைவனே உனது திருவடி முதலியவற்றை மறவேன்” என்று
சுவாமிகள் இப்பாடலில் கூறுகின்றார்.
நோயினால்
வேதனை எவ்வளவு அடைந்தாலும், மருந்து உண்பதை
மறவாத ஒரு நோயாளன் போல் என உணர்க.
ப்ரசித்தமாகிய
கனதனம் ஒத்த மேனியும் ---
முருகப்
பெருமானுடைய திருமேனி அருளே ஓர் உருவமானது. அத் திருமேனி கருணையின் மிகுதியால்
அப்பெருமான் தானே எடுத்துக் கொண்டது. எங்கும் புகழ் பெற்றது; பொன் போன்ற ஒளியுடையது. “பொன்னார்
மேனியனே” என்கின்றார் சுந்தரும். "பொன்
போல மிளிர்வது ஓர் மேனியினீர்" என்றார் அப்பர் பெருமான்.
முகம்
ஆறும்
---
ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்களுடன்
அதோ முகமும் சேர்ந்து ஆறுமுகங்களாயின. சிவமூர்த்தியின் தொன்மை வடிவு ஆறுமுகம்.
ஆகாயம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, பாதாளம் என்ற ஆறு திசைகளையும்
ஆறுமுகங்களும் நோக்குகின்றன. எத்திசை நோக்கினும் அத்திசையில் எம்பெருமான்
திருமுகங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆறுமுகம் அன்றி அருள்புரிகின்ற வேறு
முகம் ஏது?
அதிபல
வஜ்ர வாகுவும்
---
வாகு-தோள்.
ஒரு மனிதனுக்கு முக்கியமான அங்கம் தோள். தோள் வலிமையாகத் திகழ்தல் வேண்டும்.
“அலகி லவுணரைக் கொன்ற
தோளென” --- திருப்புகழ்
அதனால்தான்
வாழ்த்துகின்ற போது முதலில் “ஆறிரு தடந்தோள்” என்கிறார் கச்சியப்பர்.
அயில்
நுனி வெற்றி வேலதும் ---
வேல-ஞானம்.
அறிவு கூர்மை உடையது; வெற்றியைத் தருவது.
ஆதலால் “அயில் நுனி வெற்றிவேல்” என்கின்றார்.
அரவு
பிடித்த தோகையும் ---
தோகையுடையது
மயில்; இது சினையாகு பெயர்.
மயில்-விந்து; பாம்பு-மூல ப்ருகிருதி. விந்து மூல ப்ருகிருதியை
அடக்கும். பூமியைத் தாங்குவது ஆதிசேஷன் என்ற பாம்பு என்ற குறிப்பையும் இதனல்
உணர்க.
உலகேழும்
அதிர அரற்று கோழியும் ---
கோழி
என்பது நாத தத்துவம். சேவல் ‘கொக்கறுகோ’ என்று கூவினால் அப் பேரோசை கேட்டு ஏழு
உலகங்களும் அதிர்ச்சி அடைகின்றன. பறவைகளில் அதிக வீரமுடையது சேவல்.
வீரமூர்த்தியாகிய வேலன் வீரமுடைய சேவலைத் துவஜமாக வைத்திருக்கின்றான்.
அடியவர்
வழுத்தி வாழ்வுறும் அபிநவபத்ம பாதமும் ---
இறைவனுடைய
திருவடி, தாமரை போன்றது
என்கின்றார். தாமரையில் தேன் துளிர்க்கும்; திருவடியில் கருணை துளிர்க்கும்.
தாமரையில்
வண்டுகள் மொய்க்கும். இறைவன் திருவடியில் அடியவர்கள் மொய்க்கின்றார்கள்.
தாமரையில்
நறுமணம் வீசுகின்றது. திருவடியில் மெய்ஞான வாசனை வீசுகின்றது;
தாமரை
சிவப்பாகத் திகழ்கின்றது. திருவடி செம்மைப் பண்புடன் திகழ்கின்றது.
அடியார்கள்
இளம்பூரணனுடைய இணையடியை வாழ்த்தி நல்வாழ்வு பெறுகின்றார்கள்.
முருகனுடைய
திருவடியின் பெருமையைச் சீர்பாத வகுப்பினால் அறிக.
இரவி
குலத்து.........இளையவனுக்கு நீண்முடி.........ராகவன் ---
கதியை
விலக்கு என்பது முதலடி. இரவி என வந்தது எதுகை வழு. இருடிகள் வாக்கு ஆரிடம்
எனப்படும். ஆரிடம் என்பதில் எதுகைக்கு முதன்மை இல்லையென உணர்க.
சூரியன்
குமாரன் சுக்ரீவன், க்ரீவம்-கழுத்து.
க-அழகு. அழகிய கழுத்து உள்ளவன். சுக்ரீவம். இவன் வாலியிடம் தோல்வியுற்றவனாய் இருப்பினும்
சுத்த வீரன். நன்றி உள்ளவன். நட்புக்கு உரியவன். இராமரிடம் மிக்க அன்பாக நடந்தவன்.
இவன் முதன்முதலாக இராவணனைக் கண்டான்.
கண்டவுடன் சீற்றம் கொதித்து எழுந்தது. உடனே விட்டில் பூச்சியைப் போல் பாய்ந்தான்.
இராவணனுடன் கடும் போர் புரிந்தான். அவனுடைய பத்துத் தலைகளையும் பிடித்துத்
திருகித் திருப்பினான். இராமர் திருவடியில் வைத்து வணங்கினான். ஆனால் இராவணனுடைய
தலைகள் இல்லை. மணிமகுடங்கள் தான் இருந்தன. இராவணனுக்குத் தலைக்கு வந்தது
தலைப்பாகையுடன் போயிற்று.
சுக்ரீவன்
நாணினான். “பெருமானே! நாட்டிலே குகப்பெருமான் செய்த நன்மையைப் போலவும் அடியேன்
செய்திலேன்; காட்டிலே சடாயு
வேந்தன் செய்த தியாகத்தையும் செய்திலேன்; இராவணனை
நேரில் கண்டேன்; கண்டும் எம்பிராட்டியை
மீட்டிலேன். அவனுடைய தலைகளையும் கொணர்ந்தேனில்லை” என்று கூறி தனது நன்றியறிவினை
நனி புலப்படுத்தினான்.
காட்டிலே
கழுகின் வேந்தன் செய்தன காட்டமாட்டேன்,
நாட்டிலே
குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்,
கேட்டிலேன்
இன்றுகண்டும் கிளிமொழி மாதராளை
மீட்டிலேன், தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன்.
அடுத்து
“கால் வலிகாட்டிப் பரந்தேன்” என்று கூறுகின்றதனால் அவனுடைய ரசோகுணம் வெளியாகின்றது.
இராமர்
கிட்கிந்தைக்கு அரசனாக சுக்ரீவனுக்கு முடி சூட்டினார். ஒருவராலும் கொல்ல முடியாத
வாலியைக் கொன்று அவனை வாழ வைத்தருளினார்.
பதினொரு
ருத்திராதிகள்
பர---
பதினொரு
ருத்திரர்கள். ஏகாதச உருத்திரர் என்பர். வடமொழியில். மாதேவன், அரன், உருத்திரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், காபாலி, சௌமியன்.
கருத்துரை
திருமால் மருகரே!
பழநியாண்டவேர! உம்மை மறவேன்.
No comments:
Post a Comment