அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கரிய பெரிய (பழநி)
காலன் வருமுன் திருவடி
தரிசனத்தைப் பெறவேணும்.
தனன
தனன தனன தனன
தனன தனன ...... தனதான
கரிய
பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி
யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி ...... யெழுகாலந்
திரியு
நரியு மெரியு முரிமை
தெரிய விரவி ...... யணுகாதே
செறிவு
மறிவு முறவு மனைய
திகழு மடிகள் ...... தரவேணும்
பரிய
வரையி னரிவை மருவு
பரம ரருளு ...... முருகோனே
பழன
முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி ...... யமர்வோனே
அரியு
மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை ...... யெறிவோனே
அயிலு
மயிலு மறமு நிறமும்
அழகு முடைய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கரிய
பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி
இறுகு கயிறொடு உயிர்கள்
கழிய முடுகி ...... எழுகாலம்,
திரியும்
நரியும் எரியும் உரிமை
தெரிய விரவி ...... அணுகாதே,
செறிவும்
அறிவும் உறவும் அனைய
திகழும் அடிகள் ...... தரவேணும்.
பரிய
வரையின் அரிவை மருவு
பரமர் அருளும் ...... முருகோனே!
பழனம்
உழவர் கொழுவில் எழுது
பழைய பழநி ...... அமர்வோனே!
அரியும்
அயனும் வெருவ உருவ
அரிய கிரியை ...... எறிவோனே!
அயிலும்
மயிலும் அறமும் நிறமும்
அழகும் உடைய ...... பெருமாளே.
பதவுரை
பரிய வரையின் அரிவை மருவு --- பருத்த
மலையாகிய இமவானுடைய புதல்வியாகிய உமாதேவியார் மணந்த,
பரமர் அருளும் --- சிவபெருமான் பெற்ற,
முருகோனே --- குழந்தையே!
பழனம் --- வயலில்,
உழவர் --- உழவுத் தொழிலாளர்,
கொழுவில் எழுது --- ஏர்க்கால் கொண்டு
அழுந்திப் பதியுமாறு உழுகின்ற,
பழைய பழநி அமர்வோனே --- பழமையான பழிநிப்
பதியில் வீற்றிருப்பவரே!
அரியும் --- திருமாலும்,
அயனும் --- பிரமதேவனும்,
வெருவ --- அஞ்சி நிற்க,
உருவ அரிய கிரியை --- ஊடுருவிச் செல்லும்படி
மாயைவல்ல கிரவுஞ்சமலையை,
எறிவோனே --- வேலால் எறிந்தவரே!
அயிலும் --- வேலும்,
மயிலும் --- மயில் வாகனமும்,
அறமும் --- தருமமும்,
நிறமும் --- ஒளியும்,
அழகும் உடைய --- நல்ல அழகும் படைத்த,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கரிய பெரிய --- கருமை நிறங் கொண்ட பெரிய
உருவமுடைய,
எருமை கடவு --- எருமையைச் செலுத்துகின்ற,
கடிய கொடிய --- கடுமையும் கொடுமையும் உடைய,
திரிசூலன் --- முத்தலைச் சூலத்தையேந்திய இயமன்,
கறுவி --- கோபித்து,
இறுகு கயிற்றொடு --- நெருக்கிப் பிடிக்கும்
பாசக்கயிற்றுடன்,
உயிர்கள் கழிய முடுகி எழுகாலம் --- உயிர்கள்
நீங்கும்படி வேகமாக எழுந்து வரும்போது,
திரியும் நரியும் --- திரிகின்ற நரியும்,
எரியும் --- நெருப்பும்,
உரிமை தெரிய விரவி அணுகாதே --- தமக்குள்ள
உரிமையைக் காட்டி நெருங்கி வராதபடி,
செறிவும் --- நிறைவும்,
அறிவும் --- அறிவும்,
உறவும் அனைய --- உறவும் போன்ற,
திகழும் அடிகள் --- உமது அழகிய திருவடிகளை,
தர வேணும் --- தந்தருள வேணும்.
பொழிப்புரை
பருத்த மலையாகிய இமவானுடைய புதல்வி
பார்வதியை மணந்த பரம்பொருளாகிய சிவபெருமான் பெற்ற முருகக் கடவுளே!
வயலில் உழுகின்றவர்கள் ஏர்க் காலில்
ஆழமாகப் பதித்து உழுகின்ற பழமையான பழநியம்பதியில் வீற்றிருப்பவரே!
மாலும் பிரமாவும் அஞ்சும்படி மாயை வல்ல
கிரவுஞ்ச மலை பிளக்குமாறு வேலாயுதத்தை விடுத்தவரே!
வேலும் மயிலும் அறமும் ஒளியும் அழகும்
படைத்த பெருமிதமுடையவரே!
கருமை நிறத்துடன் பெரிய வடிவுடைய எருமை
மீது ஏறி அதனைச் செலுத்துகின்ற,
கடுமையும்
கொடுமையும் உடைய முத்தலைச் சூலத்தை யேந்திய இயமன் கோபித்து இறுக்கிப் பிடிக்கின்ற பாசக்
கயிற்றினை எடுத்துக் கொண்டு, உயிர்கள் நீங்கும்படி
வேகமாக வரும்போது, திரிகின்ற நரியும்
நெருப்பும் தமது உரிமையைக் காட்டி என்பால் நெருங்கி வரா முன், நிறைவும் அறிவும் உறவும் உடைய உமது
அடிமலரைத் தந்தருளுவீர்.
விரிவுரை
கரிய
பெரிய எருமை ---
இயமனுடைய
வாகனமாகிய எருமை பல்லாயிரம் அமாவாசையை வடிகட்டிப் பிழிந்து பூசியது போன்ற நிறமும்
ஆலகால விஷத்தைத் திரட்டி நீட்டி வைத்தது போன்ற கொம்பும் பார்த்த மாத்திரத்தில்
பச்சை மரமும் தீப் பிடிக்கின்றபடி நெருப்பைப் பொழியும் கொடுமையான கண்களையும்
உடையது.
“தமர குரங்குகளும் காரிருட் பிழம்பு
மெழுகிய
அங்கமும் பார்வையில் கொளுத்தும்
தழலுமிழ்
கண்களும் காளமொத்த கொம்பும்
உளகதக்கட மாமேல்” --- திருப்புகழ்
உலகில்
உள்ள எருமைகள் மழை பொழிந்தாலும் அசையா; கார்
வந்தாலும் புகைவண்டி வந்தாலும் விலகா; பரம
தைரியமாக நிற்கும். இயமனுடைய எருமைக்கு எத்துணை தைரியம் இருக்கும்?
கடிய
கொடிய திரிசூலன் ---
இயமன்
முத்தலைச் சூலத்தை ஏந்தியவன்; சூரியனுடைய புதல்வன்!
சிவபெருமானுடைய அருளாணையைத் தாங்கி வினை முடிவில் வந்து உயிர்களைப் பற்றுபவன்.
அந்த வகையில் இளையர் என்றும், மணமகன் என்றும், அரசன் என்றும், ஒரு குடிக்கு ஒரு மகன் என்றும் தயவு
தாட்சண்யம் இன்றி கடுமையுடனும் கொடுமையுடனும் வந்து நிற்பவன்.
கறுவி
இறுகு கறிறொ உடுயிர்கள் கழிய முடுகி எழுகாலம் ---
இயமனார்
புண்ணியம் செய்பவரிடம் சாந்தம் உடையவராகவும், பாவிகளிடம் கோர வடிவினராகவும்
கோபத்துடனும் வருவார்.
பிராணவாயுவுடன் சேர்த்துப் பாசக் கயிற்றால் கட்டி உயிரை
இழுத்து உடம்பினின்று வேறு படுத்துவர். அதனால் “கூற்றுவன்” எனப்படுவார்.
எல்லாவற்றையும் அடக்குவதனால் “இயமன்” என்றும்
முடிவைச் செய்வதனால் “அந்தகன்”
என்றும்
வேகமுடையவராதலால் “சண்டகன்” என்றும் பேர் பெறுவர்.
உயிர்களின்
முடிவு காலத்தில் வந்து நிற்பர்.
“முதலவினை முடிவில்இரு பிறைஎயிறு கயிறு
கொடு
முதுவடவை விழிசுழல வருகாலதூதர்” ---
சீர்பாதவகுப்பு
சிறந்த
உயிர்களைப் பற்ற இயமனே வருவார். ஏனைய உயிர்களைப் பற்ற இயம தூதுவர் வருவர்.
சத்தியவானைப் பற்ற அறக்கடவுளே வந்தார். இன்றும் தகுதியுள்ளவர்களைப் பெரிய
அதிகாரிகளே நேரில் வந்து கைது செய்வர்.
திரியும்
நரியும் எரியும் தெரிய விரவி அணுகாதே ---
காட்டில்
தமது விருப்பம் போல் திரியும் இயல்புடயவை நரிகள். ஒருவருக்கும் அடங்காதவை. இறந்த
பிணங்களை பிரியமாக உண்ணும் இயல்புடையவை. வேளை தவறாமல் உண்டும் சற்றும் இளைக்கா
வண்ணம் பாதுகாத்தும் வந்த இந்த உடம்பு முடிவில் நெருப்புக்கு இரையாகி விடுகின்றது.
அந்தோ! என்ன என்ன வண்ணமாக வளர்த்த அருமையான உடம்பு; ஆ! ஆ! நெருப்பில் வெந்து பிடிசாம்பலாகி
விடுகின்றது. நாம் தினம் காலந் தவறாமலும் சுவையாகப் பார்த்தும் பிறருக்கு
ஈயாமலுங்கூட உண்டு வளர்க்கின்ற இந்த உடம்பை நாயும் நரியும் பார்த்து “ஏ மனிதனே!
நன்றாக இதனை வளர்ப்பாயாக; முடிவில் இது
எனக்குத்தானே?” என்று கூறி வாயூறி
நிற்கும்.
எரிஎனக்கு
என்னும், புழுவோ எனக்குஎனும், இந்த மண்ணும்
சரிஎனக்கு
என்னும், பருந்தோ எனக்குஎனும், தான் புசிக்க
நரிஎனக்கு
என்னும், புல்நாய் எனக்கு எனும் இந் நாறுஉடலைப்
பிரியமுடன்
வளர்த்தேன், இதனால் என்ன பேறுஎனக்கே. --- பட்டினத்தார்.
காட்டி
லேஇயல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉல ...... கங்கள் ஏசக்
காக்கை
நாய்நரி பேய்க் குழாம் உண
யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ... --- (ஏட்டிலே)
திருப்புகழ்.
காக
மோடு கழுகு அலகை நாய்நரிகள்
சுற்று சோறிடு துருத்தியை,
கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர்
காமவேள் நடன சாலையை,
போக ஆசை முறி இட்ட பெட்டியை,மும்
மலம் மிகுந்து ஒழுகு கேணியை,
மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,
முடங்க லார்கிடை சரக்கினை,
மாக இந்த்ரதனு மின்னை ஒத்து இலக
வேதம் ஓதியகு லாலனார்
வனைய, வெய்யதடி கார னானயமன்
வந்து அடிக்கும் ஒரு மட்கலத்
தேக மானபொய்யை, மெய்யெ னக்கருதி
ஐய வையமிசை வாடவோ,
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே. --- தாயுமானவர்.
“முருகா! நரியும்
எரியும் உரிமையுடன் என்பால் வருமுன் உமது திருவடியைத் தந்தருளும்” என்று
வேண்டுகின்றார்.
செறியும்
அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் ---
முருகப்
பெருமானுடைய திருவடியைப் பற்றி இந்த அடியில் சுவாமிகள் அழகாகக் கூறியுள்ளார்.
செறிவு-நிறைவு. இறைவனுடைய திருவடி எல்லா நலங்களும் நிறைந்தது. ஞானமே திருவடி என உணர்க.
“வள்ளல் தொழும் ஞானக் கழலோனே” என்று கூறும் அருமைத் திருவாக்கை இங்கு உன்னுக.
இறைவன் திருவடியில் சேர்தல் என்றால் ஆன்மா ஆன்மா ஞானத்துடன் கலந்து ஞானமயமாக
நிற்பது எனத் தெளிக. ஆன்மாக்களும் என்றும் அறாத உறவுடன் கூடுவதும் அத்திருவடியே ஆகும்.
எனவே, “செறிவு மறிவு முறவும்
அனைய அடிகள்” என்றார். கனியமுதம் அன்ன இனிய வாக்கு இது.
உழவர்
கொழுவில் எழுது பழைய பழநி ---
பயிரிடுவோர்
தமது ஏர்க் காலிலேயே அனேக சித்திரம் போல் வயலில் இனிது எழுதுகின்றார்களாம்.
பழநியம்பதியில் மிகவும் பழமையானது.
கருத்துரை
பழநியப்பா!
காலன் வருமுன் உமது பாதமலரைத் தந்தருளுவீர்.
No comments:
Post a Comment