அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கரிய மேகமதோ (பழநி)
மாதர் ஆசையில் உழலாமல், திருவடியில் வந்து சேர அருள்வாய்
தனன
தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
கரிய
மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகோ லோஅயில் வேலது வோவிழி ..... யிதழ்பாகோ
கமுகு
தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை ...... மோழிதேனோ
கருணை
மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரோரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன் ......
மிகநாடி
கசட
னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் ......
புரிவாயே
திரிபு
ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய ......
தனயோனே
சினம
தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ......
முருகோனே
பரிவு
சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு ......
மருகோனே
பனக
மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கரிய
மேகம் அதோ? இருளோ குழல்?
அரிய பூரண மாமதியோ முகம்?
கணை கோலோ? அயில் வேல்அதுவோ, விழி? ..... இதழ்
பாகோ?
கமுகு
தான் நிகரோ? வளையோ களம்?
அரிய மாமலரோ? துளிரோ கரம்?
கனக மேரு அதுவோ? குடமோ முலை? ...... மொழி தேனோ?
கருணை
மால் துயில் ஆல் இலையோ வயிறு?
இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ? என
கனக மாமயில் போல் மடவாருடன் ......
மிகநாடி,
கசடனாய், வயதாய் ஒரு நூறுசெல்வு
அதனின் மேல் எனது ஆவியை நீ, இரு
கமல மீதினிலே வரவே அருள் ......
புரிவாயே.
திரிபுர
ஆதிகள் நீறு எழவே, மிக
மதனையே விழியால் விழவே செயும்,
சிவசொரூப மகேசுரன் நீடிய ......
தனயோனே!
சினம்
அதாய் வரு சூரர்கள் வேர் அற,
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவுமே, வடிவேல் விடு ...... முருகோனே!
பரிவு
சேர் கமலாலய சீ தனம்
மருவுவார், திருமால், அரி, நாரணர்,
பழைய மாயவர், மாதவனார் திரு ...... மருகோனே!
பனக
மாமணி! தேவி க்ருபாகரி
குமரனே! பதினாலு உலகோர் புகழ்
பழநி மாமலை மீதினிலே உறை ......
பெருமாளே.
பதவுரை
திரிபுராதிகள் மிக நீறு எழவே ---
முப்புரத்தில் உள்ளோர் வெந்து மிகவும் சாம்பராகுமாறும்,
மதனையே விழியால் விழவே செயும் --- மன்மதனை
திருக் கண்ணால் மாண்டு விழுமாறு செய்த,
சிவ சொரூப --- மங்கள வடிவுடைய,
மகேசுரன் நீட்டிய தனயோனே --- பெருந்தலைவருடைய
பெருமை மிக்க புதல்வரே!
சினமது ஆய் வரு சூரர்கள் வேர் அற ---
கோபத்துடன் வந்த சூரன் முதலிய அசுரர்கள் அடியோடு அழிந்து போகுமாறும்.
அமரர் --- அமுதம் உண்டு இறவாது வாழ்பவர்களும்,
வானவர் --- வானுலக வாசிகளும்,
வாடிடு தேவர்கள் --- வாட்டமுற்றிருந்த
தேவர்களும்,
சிறைகள மீளவும் --- சிறைச்சாலையிலிருந்து
விடுதலையடையுமாறும்.
வடிவேல் விடு முருகோனே --- கூரிய வேலாயுதத்தை
விடுத்த முருகப் பெருமானே!
பரிவு சேர் --- அன்பு பூண்டு,
கமல ஆலய சீதள மருவுவார் --- தாமரைக் கோயிலில்
வாழ்கின்ற இலக்குமியின் தனத்தைத் தழுவுகின்றவராம்,
திருமால் --- பெரிய பெருமையுடையவரும்,
அரி --- பாவங்களைப் போக்குபவரும்,
நாரணர் --- நாராயணரும்,
பழைய மாயவர் --- பழைமையான மாயையில் வல்லவரும்,
மாதவனார் --- பெரிய தவத்து உரியவரும் ஆகிய
விஷ்ணு மூர்த்தியின்,
திருமருகோனே --- அழகிய மருகரே!
பனகமாம் அணி --- பாம்பாகிய அணிகலத்தை உடையவரும்,
தேவி --- ஒளிமயமானவரும்,
க்ருபை ஆகரி --- கருணைக்கு உறைவிடம் ஆனவரும்
ஆகிய பார்வதியம்மையாருடைய,
குமரனே --- திருக் குமாரரே!
பதினாலு உலகோர் புகழ் --- பதினான்கு
உலகங்களில் உள்ள எல்லோரும் புகழ்ந்து துதிக்கின்ற,
பழநி மாமலை மீதினிலே உறை --- பெருமையுடைய
பழநி மலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
குழல் கரிய மேகம் அதோ --- கூந்தலானது
கருமையான மேகந்தானோ?
இருளோ --- அல்லது இருட்படலமோ?
முகம் அரிய பூரண மாமதியோ --- முகமானது
அருமையான சிறந்த முழு சந்திரனோ?
விழி கணைகொலோ --- கண்களானது அம்போ?
அயில் வேல் அதுவோ --- அல்லது கூர்மையான
வேல்தானோ?
இதழ் பாகோ --- இதழானது சர்க்கரைப் பாகுதானோ?
களம் கமுகுதான் நிகரோ --- கழுத்தானது பாக்கு
மரமும் நிகராகாதோ?
வளையோ --- சங்குதானோ?
கரம் அரிய மாமலரோ --- கரங்களானது அருமையான
அழகிய மலரோ?
துளிரோ --- அல்லது இளந்தளிரோ?
முலை கனக மேரு அதுவோ --- முலைகள் பொன்மேரு
கிரியோ?
குடமோ --- பொற் குடமோ?
மொழி தேனோ --- சொல்லானது தேனோ?
வயிறு கருணைமால் துயில் ஆல் இலையோ ---
வயிறானது கருணை நிறைந்த திருமால் துயில்கின்ற ஆலின் இலையோ?
இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என --- இடையானது
ஈர்க்கோ? ஒரு நூல்தானோ? என்றெல்லாம் பேசி,
கனக மாமயில் போல் மடவார் உடன் ---
பொன்னிறமுடைய அழகிய மயில் போன்ற மாதர்களுடன்,
மிக நாடி --- அவர்களை மிகவும் விரும்பி,
கசடனாய் --- அறிவில்லாதவனாய்,
வயது ஆய் --- முதிர்ந்த வயதுடையவனாய்,
ஒருநூறு செல்வதனின் மேல் --- ஒரு நூறு
வருடத்திற்கு மேல் வாழ்கின்ற,
எனது ஆவியை --- அடியேனுடைய உயிரை,
இரு கமல மீதினிலே வரவே --- உமது தாமரை அனைய
திருவடியில் சேர,
நீ அருள் புரிவாயே --- தேவரீர் திருவருள்
புரிதல் வேண்டும்.
பொழிப்புரை
முப்புரத்தில் வாழ்ந்தவர் எரிந்து
மிகுந்த சாம்பர் ஆகுமாறும், மன்மதனை நெற்றிக்
கண்ணால் எரித்து மாளுமாறும் செய்த,
மங்கல
வடிவினரும் பெருந்தலைவரும் ஆகிய சிவபெருமானுடைய திருப்புதல்வரே!
கோபத்துடன் வந்த சூராதி அவுணர்கள்
அடியுடன் அழியுமாறும், அமரர்களும், வானவரும், வாட்டமுற்ற தேவர்களும்
சிறைச்சாலையிலிருந்து விடுதலை அடையுமாறும் கூர்மையான வேலாயுதத்தை விடுத்த முருகக்
கடவுளே!
அன்புடன் தாமரைக் கோயிலில்
வீற்றிருக்கும் இலக்குமிதேவியின் தனங்களைத் தழுவுகின்றவரும், அழகும், பெருமையும் உடையவரும், பாவங்களை நீக்குபவரும், நாராயணரும், பழைமையானவரும், மாயையில் வல்லவரும், மாதவத்திற்கு உரியவரும், ஆகிய விஷ்ணுமூர்த்தியின் திருமருகரே!
பாம்பை ஆபரணமாக அணிந்தவரும், ஒளியுருவம் உடையவரும், கருணைக்கு உறைவிடமானவரும் ஆகிய
உமாதேவியின் திருக்குமாரரே!
பதினான்கு உலகில் வாழ்கின்ற எல்லாரும்
புகழ்கின்ற அழகிய பழநி மலைமீது எழுந்தருளியிருக்கின்ற பெருமிதம் உடையவரே!
(மாதர்களுடைய) கூந்தல் கரிய மேகமோ? இருட்குழம்போ? முகம் அருமையான அழகிய மழுமதியோ? கண்கள் அம்போ? கூரிய வேலோ? இதழ் சர்க்கரைப் பாகோ? கழுத்து பாக்கு மரமோ? சங்கமோ? கரங்கள் அருமையான அழகிய மலரோ? இளந்தளிரோ? தனங்கள் பொன் மேரு கிரியோ? பொற்குடமோ? பேச்சு தேனோ? வயிறு கருணை நிறைந்த நாராயணர்
துயில்கின்ற ஆலிலையோ? இடை ஈர்க்கோ? ஒரு நூலோ? என்றெல்லாம் புகழ்ந்து கூறி, அழகிய பெண் மயில் போன்ற மாதர்களை
மிகுதியாக விரும்பி மூடனாகி, வயது முதிர்ந்து ஒரு
நூறு ஆண்டுக்கு மேலும் ஆன அடியேனுடைய உயிர், உமது தாமரை போன்ற திருவடிகளில் சேருமாறு
தேவரீர் திருவருள் புரிதல்வேண்டும்.
விரிவுரை
இப்பாடலில்
முதல் மூன்றடிகளிலும் காமுகர் பெண்களின் அவயங்களைப் புகழ்ந்து கூறுவதைப் பற்றி
சுவாமிகள் கூறுகின்றனர்.
வயதாய்
ஒரு நூறு செல்வதனில் மேல் ---
அருணகிரிநாதர்
ஒவ்வொரு பாடலும் உலகத்தவர்கள் தத்தம் குறைகளை முருகனிடம் கூறி முறையிடுவதற்காகவே
பாடியருளினார். இந்தப் பாடல் நூறு வயதுக்கு மேல் வாழும் ஒருவர் முருகனிடம்
முறையிடும் முறையில் அமைந்தது.
“ஆண்டவனே! அடியேனுக்கு
ஒரு நூறு வயதுக்குமேல் ஆகிவிட்டது. இனியும் இப்புவியில் வாழ்ந்து என்ன பயன்!
எத்தனை காலம் வாழ்ந்தாலும் வாழ்வில் திருப்தி என்பது உண்டாவதில்லை. இந்த உடம்பு
நான்கு பேர் சிறிது நேரமே சுமக்குந் தன்மையானது, கனமானது; நாலுபேர் சுமையை நானே எத்தனை
நாள்கள்தான் சுமப்பேன்? வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம். நாறும் உடலை நான்
எத்தனை நாள்தான் தாங்குவேன்? தளர்ச்சியும் நரையும்
திரையும் வந்து வருத்துகின்றன. ஆதலால் பெருமானே! இனி மண்ணில் வாழ
விரும்புகின்றேனில்லை” என்று இறைவனிடம் முறையிட வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.
எனது
ஆவியை நீ இருகமல மீதினிலே வரவே அருள் புரிவாயே ---
ஆன்மா
எந்நாள் தொடங்கியதென்று வரையறுக்க முடியாத காலமாக, ஆணவக் கருவறையிலிருந்து வெளிப்பட்டு மாறிமாறி
உடல்களை எடுத்துப் பயணம் செய்த வண்ணமாகவே இருக்கின்றது. ஒருவன் பிரயாணம்
புரிவானாயின் அதற்கு முடிவு வேண்டாமோ? சென்று
சேருகின்ற இடம் ஒன்று இருக்க வேண்டாமோ? வண்டியிலோ, நடந்தோ சென்று கொண்டேயிருப்பது
எத்துணைத் துன்பம்? ஓர் இடம் போய்ச்
சேர்ந்தால்தானே இளைப்பாறலாம்.
அதுபோல்
இந்த உயிரும் பன்னெடுங்காலமாக வேறு உடம்புகளாகிய வண்டிகளில் ஏறி ஏறிப் பயணம் செய்த
வண்ணமாகவே இருக்கின்றது. இதற்கு முடிவிடம்-தங்குமிடம் இறைவன் திருவடி. அதுதான்
இளைப்பாறும் இடம்: இன்பம் விளைக்கின்ற நிழல். அங்கேதான் ஆனந்தத் தேனருவி இருக்கின்றது.
இறைவன் திருவடி சேர்ந்தார் மீளவும் பிறந்திருந்து உழலமாட்டார். ஆதலால் “ஆண்டவரே!
அடியனேுடைய உயிராகிய வண்டு உமது பாதமாகிய தாமரையில் ஊறுகின்ற பேரின்பமாகிய
தெளிதேனை உண்டு இன்புற்றிருக்கத் திருவருள் புரிவாய்” என்று அருணையடிகள்
வேண்டுகிறார்.
திரிபுராதிகள்
நீறெழவே மிக
---
திரிபுராதிகள்
என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில்
வசிக்கின்றவர்கள் ஆகும். அந்த மும்மலங்களையும் சிவபெருமான் எரித்து நீறாக்கி
விடுகின்றார்.
மதனையே
விழியால் விழவே செயும் ---
மன்மதன்
ஆசையை விளைவிக்கும் அதிதேவதை. ஆசையை ஞானத்தால் தான் அழிக்கவேண்டும். ஆதலால் இறைவன்
ஞான விழியிலிருந்து வெளிப் பட்ட ஞானத் தீயால் ஆசையின் அதிதேவதையை எரித்தருளினார்.
சிவ
சொரூப மகேசுரன் ---
சிவம்-மங்கலம்.
இறைவன் மங்கல வடிவானவர்.
ஈச்சுரன்-எப்பொருட்கும்
தலைவர். மகேச்சுவரன்-மிகப் பெருந் தவைர்.
அமரர்
வானவர் வாடிடு தேவர்கள் ---
அமரர், வானவர், தேவர், என்ற சொற்கள் பொதுவாக விண்ணுலக
வாசிகளைக் குறிக்கும். எனினும் இதில் சிறு பிரிவுகள் உண்டு.
அமரர்-அமுதம்
உண்டு சாவா நிலை பெற்றவர்கள். வானவர்-புண்ணிய மிகுதியால் வான வுலகில் வாழ்பவர்கள்.
தேவர்-எட்டு வசுக்கள், பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு உருத்திரர்கள், அச்வினிகள் என்ற முப்பத்து
முத்தேவர்கள்.
“அண்ட வானவர் அமரரும்
பணி” --- திருஞானசம்பந்தர்
திருமால் ---
மால்-பெருமை.
சிறந்த பெருமை உடையவர் திருமால்.
அரி ---
அரி-பாவத்தைப்
போக்குபவர், சிவ சக்திகளில்
ஒருவர் திருமால்.
அருட்சக்தி-பார்வதி; கோப சக்தி-துர்க்கை; போர் சக்தி-காளி; புருஷ சக்தி- திருமால்.
உத்தமன்
என்பதன் பெண்பால் உத்தமி. முக்கண்ணன்-முக்கண்ணி. சங்கரன்-சங்கரி; வீரன்-வீரி; அரன்-அரி.
வருக்கைத்
தட்பொழிலா மாதை ஐயர்க்கு மாசொன்றில்லா
முருக்கொத்தா
மேனி அழகிய நாதர்க்கு மூச்சவரத்
திருக்கைக்
கமல அரனார்க் கரி திருத் தேவியன்றேல்
அரிக்குப்
பொருள் உரையீர் கெடுவீர் நும் அறிவின்மையே.
--- இரட்டையர் (திருவாமாத்தூர்க் கலம்பகம்)
நாரணர் ---
நாராயணர்
என்பது நாரணர் எனக் குறுகியது. நாரம் அன்பு. அயனம்- உறைவிடம். அன்புக்கு
உடைவிடமானவர் நாராயணர்.
பதினாலுலகோர்
புகழ் பழநி
---
உலகங்கள்
பதினான்கும் புகழ்கின்ற பெருமையுடையது பழநி.
“காசியின் மீறிய
பழனாபுரி” --- (விதமிசைத்தினி) திருப்புகழ்
கருத்துரை
சிவகுமாரா!
பழநிவேலா! உன் திருவடியில் சேர்த்து அருள் புரிவாய்.
No comments:
Post a Comment